வியாழன், 23 செப்டம்பர், 2021

மகிமை - மகவுத் தொடர்புக் கருத்து.

மகிமை என்ற சொல்லை இப்போது பார்ப்போம்.  ஒரு சிவலிங்கப் பதிமை மண்ணுக்கடியிலிருந்து எடுக்கப்பட்டதன் தொடர்பில் வரைந்த இடுகையில் யாமும் மகிமை என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தோம்.  மகிமை என்பது ஓர் அருஞ்சொல் என்று சொல்வதற்கில்லை.  இயல்பாகவே இது தமிழகச் சிற்றூர்களில் அறியப்பட்ட சொல் தான்.  

மக்கள் வழக்கு, எழுத்து வழக்கு இரண்டிலும் இச்சொல் உளது. 

மகி  (  மக ) என்ற சொல்  மா என்னும் அளவு குறிக்கும் சொல்லுடன் தொடர்பு உடையது.  இதை வாத்தியார் சொல்லாமலே தமிழர் பலர் அறிவர்.   மகா என்ற பெருமை குறிக்கும் சொல்லுடனும் இது உறவுடையதாக அறியப்படும்.

தமிழ் வாத்தியார்கள் இதனை ஒரு "வட சொல்" என்று கொள்வர்.  ஏனென்றால் மகிமை என்பதைச் சிலர் மஹிமை என்று எழுதுவதால் நாளடைவில் அது அத்தகுதி அல்லது வகைப்பாடு அடைந்துவிட்டதென்று தோன்றுகிறது.  வடசொல் என்றால் அது மரத்தடிச் சொல் என்று பொருள்படும் என்றும்,  வடம் என்று கயிறு என்றும் பொருள்படும் என்றும் திரு.வி.க. அவர்கள் சொன்னதுண்டு.

தமிழ் என்பது இல்லமொழி  ( தம் இல் மொழி) என்பதால் அதற்கு அப்பெயர் ஏற்பட்டது என்று தமிழ் ஆய்வாளர் கமில் சுவலபெல் கூறியுள்ளார்.  தமிழ் இல்லமொழியாகவே,  மரத்தடிகளில்  ( ஆல்> ஆல அ அம் > ஆலயம் , ஆலமரத்தடிக் கோயில்கள் )  பேசப்பட்டு உருப்பெற்றுக்கொண்டிருந்த மொழியே வடமொழி எனப்பட்டது.   இப்படி மரத்தடிகளில் சற்றுத் திரித்துப் பேசியவர்கள், அவர்கள் தங்கள் இல்லங்களில் தம் இல் ( தமிழ் மொழி)யையே பேசினர் என்பது கூறாமலே புரியும்.  பின்னாளில் வெள்ளையர்கள் தமக்கு ஒரு பழைய மொழியில் தொடர்பு தேவைப்பட்டமையால், வடமொழியை  ( அல்லது சமத்கிருதத்தை ) இந்தோ ஐரோப்பிய மொழியாக வைத்துக்கொண்டனர். இவர்கள் இந்தியாவிற்கு வந்தபின்புதான் இதை இவ்வாறு மேற்கொண்டனர். வருமுன்பு அவர்கள் அதனைப் பற்றி  குறிப்பிடத்தக்க அளவு அறிந்திருக்கவில்லை என்றே தெரிகிறது. சீனமொழியும் பழையானதே ஆனாலும் ஆங்குத் தொடர்பு கற்பித்துக்கொள்ள அவர்களால் இயல்வில்லை.

சமஸ்கிருதம் என்பது இந்திய மொழியே ஆதலால், ஆங்கும் தமிழ்ச்சொற்கள் உண்டென்பது ஒரு வியப்புக்குரியதன்று.

ஆதலால்  வடமொழி சமஸ்கிருதம் என்பவற்றைக் கருதாமலே மகிமை என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

மனிதன் இவ்வுலகில் வாழுங்காலங்களில் அவன் திருமணம் செய்து பிள்ளைகளை உடையவனாய் இருந்தாலே அவன் தேவருலகை அல்லது சொர்க்கத்தை எட்டமுடியும் என்று நம் முன்னோர் நம்பினர்.  இதற்கு இலக்கிய ஆதாரங்கள் எண்ணிறந்தவை. பெண்ணும் தாயென்று பெருமையை அடையவேண்டும்.  இதன் தொடர்பில்தான்  மக + இம்மை > மக + இமை> மகிமை என்ற சொல் ஏற்பட்டது.  பிள்ளைகள் இல்லாவிட்டால் மகிமை இல்லை.  மகவு என்பது இல்லாவிட்டால் நரகம்தான்.  இது அக்காலக் கொள்கை.

இம்மை ( இவ்வுலக வாழ்வில் )( மக - பிள்ளை வேண்டும் ).  மறுமை அதனால் கிட்டுமென்பது.

இந்தக் கொள்கை சரியானதா என்பதன்று கருதவேண்டியது. இதை நம் முன்னோர் கடைப்பிடித்துக்கொண்டிருந்தனர். அவர்களின் சொல்லான மகிமை என்பதும் அதையே காட்டுகிறது.

இதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள்ளாத வள்ளுவனார்,  " அறிவறிந்த  மக்கள்" என்று அடைதந்து சொன்னார். பரிமேலழகரோ,  பெண்மக்களை விலக்கி, " புதல்வரைப் பெறுதல்"  என்று குறித்தார் என்ப.  இலக்கிய நோட்டம் எழுத நேர்ந்தால் இதனை விரித்தெழுதுவோம்.

இன்னொரு சந்திப்பில் சொல் திரிந்த விதத்தை ஆழ்ந்து சிந்திப்போம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.




கருத்துகள் இல்லை: