ஒரு பெண்ணிற்குப் பரிமளா என்று பெயர் வைத்திருந்தால் அது அருமையான பெயர் என்பது உங்களுக்குத் தெரியுமே! பரிமாளம் என்றால் தாமரை என்று பொருளாவதால் இது பொருளிலும் அழைப்பதற்கும் நல்லது ஆகும். இது எப்படித் தாமரையைக் குறிக்க எழுந்தது என்பதை இப்போது பார்த்துவிடுவோம்.
வடுப்பரியும் நாணுடையான் என்று குறளில் வருகிறது. இங்கு அஞ்சுதல் என்பது பொருள். பையிலிருந்து காற்றுப் பரிகிறது என்பது காற்று வெளிப்படுகிறது என்று பொருளாகும். இன்னும் பலவாதலின் இது பல்பொருளொரு சொல்.
பரவுதற் கருத்தின் அடிச்சொல்லாகிய பர என்பதினின்று பர> பரி என்று இச்சொல் அமைந்தது தெளிவாகும். பரவுதல் ஓரிடத்திருந்து இன்னோரிடம் சென்று வைகுதல் அல்லது இல்லாததாதல் என்று பொருளாம் என்பதால், பரி என்பதிலும் அப்பொருள் உள்ளது. அஞ்சுபவன் தன் திடநிலையிலிருந்து மாறியே அச்சநிலையை அடைவதால் அங்கும் மாறுதற் கருத்து உள்ளது.
தாமரை இதழ்கள் மூடியிருந்த மொட்டு நிலையிலிருந்து விரிநிலை எய்துவதால் இதுவும் இடமாற்றமே காட்டுகிறது. ஆகவே பரிதல் என்பது ஈண்டும் பொருந்துவதாகும். ஆகவே பரிமளம் என்பதில் பரி என்பது பொருந்திவிட்டது.
இனி மளம் என்பது. மள்குதல் என்ற வினைச்சொல் குறைதல் என்று பொருள் படும். பின் தாமரை இதழ் தன் விரிவு குறைந்து மூடிக்கொள்வதால் மள் > மளம் ஆகிறது. மள்குதல் என்ற வினைச்சொல்லில் மள் என்பதே அடிச்சொல். கு என்பது வினையாக்க விகுதி. மள் என்பது மட்டம், மட்டுறல் என்பவற்றிலும் அடிச்சொல் என்பது காண்க.
விரிதலும் (பரிதலும் ) குறைதலும் உடையது அவ்விதழ்கள். ஆதலின் பரிமளம் என்பது தமரைக்குப் பொருத்தமான பெயராகிவிட்டது.
இவ்வாறு தாமரைக்கு மொழியில் ஏற்பட்ட இன்னொரு பெயர், அதனின்று பரியும் மணத்தைக் குறித்து, பின்னர் பொதுவான மணமென்னும் பொருளில் வழங்கிவருகிறது. தாமரையைக் குறிப்பது சொல்லாய்வில் போந்த தெளிவு ஆகும். எல்லாவகை மணங்களும் முதலில் விரிந்து பரவி பின்னர்ச் சுருங்கி ஒழிதலுண்மையின், அது மணத்திற்குப் பெயராகிவிட்டது. இதழ் விரித்தலும் சுருங்குதலும் மணம் விரித்தலும் சுருங்குதலும் ஒப்புமை உடைமையினால் இது நிகழ்ந்தது.
வேறு வகைகளில் விளக்கம் தருவதாயின் பின்னூட்டம் செய்க.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக