இன்று நாம் சிரம், சிரசு என்ற இருசொற்களையும் அலசுவோம்.
சொற்களை அலசுவதென்பது நாம் நெடுங்காலமாகச் செய்துவரும் செயலாகும். இது நம் அறிமுயற்சியாகவும் அகமகிழ்ச்சியாகவும் நாமே செய்துவரும் ஓர் ஆய்வு ஆகும். நாம் பணத்துக்காகச் செய்வதன்று இது. ஆர்பயன் கண்டு "ஓர்படி" நின்று செய்வதொன்றாகும். இம்முயற்சி நெடுந்தொலைவு செல்ல நீங்களும் உடன்வரவேண்டும். வந்துகொண்டிருக்கிறீர்கள். மகிழ்கிறோம்.
அலைகள் சுருண்டு அருகில்வரும் இடந்தனில் ஆடைகளைக் கசக்கிக் கொள்ளுதலை ( அல்லது வேறு கழுவற்குரிய பொருளை கழுவிக்கொள்ளுதலை) அலசுதல் என்பர். இப்போது நாம் நீர்க்குழாய்கள் பொருத்தப்பட்ட செயற்கைச் சூழல் நிறைந்த ஒரு வீட்டிலிருந்தால் இவ்வாறு அலச நமக்குக் கிடைக்கும் வாய்ப்பு மிக்கக் குறைவே ஆகும். இருப்பினும் அத்தகு ஒத்த பயன் ஒன்றினைத் தரு செயலில் நாம் ஈடுபடுவோம்.
நாம் பலகாலும் முன்னறிந்துகொண்டுள்ள படி, ஒரு சொல்லமைவானது முதனிலை குறுகியும் அமைவுறும். இதற்குப் பல்வேறு உதாரணங்களை நாம் பழைய இடுகைகளில் தந்துள்ளோம். அவற்றில் நாம் அடிக்கடி கண்ட மீள்தரவாய்ப் போந்த எடுத்துக்காட்டு: சா > சா+ அம் > சவம் என்பதாகும்.. இது ஒரு பெயர்ச்சொல் அடிப்படையிலும் எழும்; ஒரு வினைப்பகுதியினின்றும் எழும்.
சீர் என்பது ஓர் உன்னத நிலையைக் குறிக்கிறது. இந்தச் சொல்லிலிருந்து சிரம் என்ற சொல் அமைந்துள்ளது. சிரம் எனின் தலை ஆகும். சிரசு என்பதும் அதுவே.
சீர் + அம் = சிரம். முதலெழுத்துக் குறுகி அம் விகுதி பெற்று இச்சொல் அமைந்தது.
மனித மற்றும் விலங்கின் இயக்கத்துக்கு முக்கியச் சீரைத் தரும் அனைத்து செயல்வசதிகளும் தலையிலே அமைந்துள்ளன. மூளை அங்குத்தான் உள்ளது. மூளையே சிந்திப்புக்குரிய உறுப்பு ஆகும். மற்றும் செவிப்புலன், காட்சிப்புலன், நுகர்வு எனச் சிலவும் ஈண்டு அமைந்துள்ளன. அத்தகு இயக்கத்து ஆளுமை உடைய தலையை, சீர் > சிரம் என்று அமைத்துக்கொண்டது ஒரு நுண்மாண் நுழைபுலத்தின் விளைவே ஆகும்.
விரிவு, பரவல் ஆகிய கருத்துக்கள் உள்ளுறைந்த பார் என்னும் சொல்லும் அம் விகுதி பெறப் பரம் என்று அமைந்ததும் கண்டுணரற் குரியதாகும். பார் என்பதன் முந்துவடிவம் பர என்பதே. ( பரத்தல்,பரவல்).
அர் > அரசு என்ற சொல்லைப்போன்ற முறையிலே சு விகுதி பெற்று அமைந்தது சிரசு என்ற சொல். சீர் என்பது சிர் என்று குறுகியபின், அது அரசு என்ற சொல் போன்ற அமைப்புநடையையே பின்பற்றி முடிந்துள்ளது. சு என்பது ஒரு சொல்லமைப்பு விகுதி. பரிசு என்ற சொல்லிலும் இதை அறியலாகும்.
இங்கு, சிரம், சிரசு என்ற சொல்லமைப்பை அறிந்தீர்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
குறிப்புகள்:
சிரம் சிரசு அரசு
சீர் அம் > சிரம்
சிரம் முதனிலைக் குறுக்கப் பெயர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக