ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

மக்கள் தொண்டு, கிருமித் தொல்லை

 இங்கு யாம் தருவன  இரண்டு  சிறு கவித் துளிகள்.  வாசித்து மகிழ்வீர்.  வாசித்தல் என்ற சொல்லே மிக்க அழகான சொல்.  இது மலையாள மொழியில் "வாயித்தல்" என்றே வழங்குகிறது.  வாய் என்பது சினைப்பெயர்  அல்லது ஓர் உறுப்பின் பெயர்.  இ~த்தல் என்னும் வினையாக்கத்தை இணைக்க வாயித்தல் ஆகிறது.  யகர சகரப் போலியில் வாயித்தல் > வாசித்தல் ஆகிவிடுகிறது. நீங்கள் வாயித்து மகிழுங்கள்,  இல்லாவிட்டால் வாசித்து மகிழுங்கள்.  ஆனால் வாசித்தல் என்பதற்கு மணம் வீசுதல் என்ற பொருளும் இருக்கிறது . அது வாய் என்னும் நீட்சிக் கருத்தினடிப்படையில் எழுகிறது.  இதன் ஆக்கத்தினை "கால்வாய்",  "வாய்க்கால்" என்னும் சொற்களில் கண்டு மகிழலாம்.

இப்போது கவிதைகள்:


மக்கள் தொண்டு


மக்களுக்குத் தொண்டுசெயும்

தக்கஉன்ன  தத்தொழிலே

எக்கணமும் வருமிடரே

பக்கமிலை ஓர்துணையே

நக்கசார  ணர்கள்வந்து

நலமிலவை தாம்செயினும்

ஒக்குமொரு  நிலையறிந்த

உயர்ந்தனவே  செயுமிவரே.


உன்னதத்தொழிலே  -  சிறப்புக்குரிய வேலையாகும்.

எக்கணமும்  -  எந்த நேரத்திலும்

இடரே  --- துன்பமே

பக்கமிலை  ---   அருகில் இல்லை

துணையே  -  ஆதரவு செய்வோரே,

நக்கசாரணர்  --  நகைக்கத் தக்க நிலையைச் சார்ந்தவர்கள்

நலமிலவை  -  நல்லன அல்லாதவற்றை;

ஒக்குமொரு - எல்லோருக்கும் ஒப்பமுடிந்த,

நிலை -   உள்ளுறைவு, சுற்றுச்சார்பு முதலியவை

அறிந்த -  தெரிந்துகொண்டு;

உயர்ந்தன - மேலானவற்றை

செயும் - செய்யும்.

( இது மருத்துவத்துறையில் மக்களுக்குத் தொண்டு செய்யும் நல்ல உள்ளங்கள்

அண்மையில் அடைந்த தாக்குதல் முதலிய துன்பங்களைக் கருத்தில் கொண்டு

பாடியது )



கிருமிகள் தொல்லை


காற்றினிலே கீதங்கள் வருதல் உளதே

காற்றினிலே நோய்நுண்மி வருதல் நிலவின்

ஏற்றனரோ,    ஏமாந்து விழலின் மக்கள்

தோற்றனரோ,  யாமாழ்ந்தோம் உழந்ததே துன்பம்.


உளதே -   இருக்கிறதே,

நிலவின்  -  நடைபெறுமானால்

ஏற்றனரோ -  அவ்வாறு வருமென்று ஒத்துக்கொண்டனரோ;

ஏமாந்து -  அவ்வாறு வராது என்று எண்ணி,

விழலின் -  வாழ்க்கையை முறையற்று நடாத்தி,

மக்கள் தோற்றனரோ  -  மக்கள் நோயினை வெற்றிகொள்ளவில்லையோ,

யாமாழ்ந்தோம் உழந்ததே துன்பம். --  நாம் துன்பம் அனுபவித்து

உள்ளிறங்கிவிட்டோம்.


கவிதையில் ஓர்துன்பம் என்று வரும். உரைநடையில் ஒரு துன்பம்

என்றே வரும்.  இவ்விலக்கணம் மாறி எங்காவது இவ்வலைப்பூவில்

அமைந்திருந்தால் அதனைத் திருத்தி வாசித்துக்கொள்ளுங்கள்.  

திருவுள்ளம் இருக்குமாயின் பின்னூட்டமிட்டு உதவி செய்யுங்கள்.



மகிழ்க.

மறுபார்வை செய்வோம்.  இப்போது தட்டச்சுப் பிழைகள்

உளவாகத் தெரியவில்லை.









கருத்துகள் இல்லை: