வியாழன், 25 ஆகஸ்ட், 2016

அடிச்சொல்: கள் (பன்மை விகுதி).

தற்காலத் தமிழில் "கள்" விகுதி பன்மை குறிக்க மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. தொல்காப்பியர் காலத்தில், கள் என்னும் பன்மை விகுதி அஃறிணைப் பொருள்களுக்கே பயன்படுத்தப்பட்டது. அதுவும் மிக அருகியே பயன்படுத்தப்பட்டது என்று சொல்லவேண்டும்.
ஒருமை பன்மை (ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்) என்னும் பால் இருந்தது என்றாலும் கள் விகுதி அஃறிணைக் குரியதாய்க் கருதப்பட்டது. ஆகவே தொல்காப்பியரிடத்துப் போய் "அவர்கள்" என்றால் அது தவறு, இலக்கணம் பிழைத்தது என்று கூறிவிடுவார். அவர் என்பதே பன்மை. அவர்கள் என்பது அஃறிணைக் குரிய கள் விகுதி உயர்திணையிற் புணர்த்த இலக்கண வழு. இந்த இலக்கணத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுக் கள் விகுதி உயர்திணையிலும் சற்றே   பரவிவிட்ட காலத்தில் திருவள்ளுவர் வாழ்ந்தார். ஏனென்றால்"பூரியர்கள் ஆழும் அளறு" என்பதுபோலும் கள் விகுதி உயர்திணையில் புணர்த்திப் பாடினார். முதலாவது "பூரியர்" என்றாலே பன்மை. அதற்குக் கள் விகுதி தேவை இல்லை என்பது ஒன்று. இரண்டாவதாக பூரியர் என்பது உயர்திணை. அதற்கு அஃறிணை விகுதி பொருத்துதல் ஆகாது என்பது. தொல்காப்பியர் காலத்திலேயே இவ்விதிகள் நெகிழத் தொடங்கிவிட்டன என்பதை மொழிவரலாற்றின் மூலம் அறியலாம்.
சில சொற்களின் பயன்பாடுகள் நூலின் காலம் அறிய உதவுக்கூடுமென்பதனை அறிந்தின்புறுக. இது பற்றி பின் கூடுதலாக‌ அறிந்துகொள்வோம்.









கருத்துகள் இல்லை: