வியாழன், 4 ஆகஸ்ட், 2016

ஊண் பித்தையார் பாடலை....

ஊண் பித்தையார் என்ற சங்கத்து நற்புலவர் பாடிய பாடலை இப்போது நாடியும் பாடியும் மகிழ்வோம். இவர் பெயர் சாப்பாட்டின் மேல் இவர் மிகுந்த ஆர்வமுள்ளவர் என்று காட்டுகிறது. பித்தை என்பது விருப்பம் என்று பொருள்படுமாதலாலும் பித்தை என்பதிலிருந்து திரிந்த பிச்சை என்பது பிறருக்கிடுதலைக் குறித்தலாலும், இவர் பிறருக்கு ஊண் வழங்கற்குப் பெரிதும் விரும்பியவர் என்று நாம் கொள்ளலாம்.

இவர் பெயர் பிறர் இவர்க்கு இட்டு வழங்கிய பெயர், ஊண் பிச்சை வழங்கிய காரணத்தாலென்று கொள்க. இயற்பெயர் அறியோம்.


பிச்சை  பித்தர் முதலிய சொற்கள் பற்றி அறிய:



பாடல் வருமாறு:

உள்ளார் கொல்லோ தோழி உள்ளியும்
வாய்ப்புணர் வின்மையின் வாரார் கொல்லோ
மரல் புகா அருந்திய மா எருத்து இரலை
உரற்கால் யானை ஒடித்துண்டு எஞ்சிய‌
யாஅ வரி நிழல் துஞ்சும்
மாயிருஞ் சோலை மலை இறந்தோரே.

உள்ளார் கொல்லோ தோழி ‍: தோழியே, நம் தலைவர் நம்மை நினைத்துப் பார்க்கமாட்டாரோ? என்ற தலைவிக்கு;


தோழி உரைத்தது:

(நினைத்து இருப்பார்!)

உள்ளியும் வாய்ப்பு உணர்வு இன்மையின் : நினைத்தும் வருவதற்கான வாய்ப்பு அவர் மேற்கொண்ட தொழிலால் இல்லாமையினால்,

வாரார் கொல்லோ : இன்னும் வரவில்லை; அவ்வளவுதான்,

மரற் புகா அருந்திய : மரலென்னும் (மான்கள் வழக்கமாக உண்ணும்) கொடியைத் தின்ற;

எருத்து இரலை : ஆண் கலை மான்;

உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய : உரல்போலும் காலை யுடைய யானை துண்டுபடுத்தித் தின்று மீதமாகிய;

யா வரி நிழல் துஞ்சும் : யா மரத்தின் நிழலிலே படுத்து (ஆண்மான் )உறங்கும்;

மா இருஞ் சோலை மலை இறந்தோர் : இருள் கூடிய பெருஞ் சோலையை உடைய மலையினைக் கடந்து சொன்றோர்.

என்பது தோழி தலைவிக்களித்த பதில்.

எப்போது மீண்டும் ஊர் திரும்ப வேண்டுமென்பது தலைவன் தான் மேற்கொண்ட வேலையில் ஏற்படும் ஓய்வுகொள்ளும் இடைவேளைகளை உணர்ந்து அவனே நோக்கினாலே அறியலாகும். அவன் திரும்புவான். அதுவரை பொறுத்திரு என்கிறாள் தோழி. அவன் அவ்வேலைக்குச் செல்லும் பயணத் தொடக்கம் அவ்வளவு எளிதாய் இருந்திடவில்லை.
சோலைகள் மலைகள் இவற்றைக் கடந்து சென்றவன். இடர்ப்பட்டு அங்கு சென்று சேர்ந்தவன், வேலையை முடிக்கவேண்டுமே. அந்த வாய்ப்பு ஏற்படுங்கால் அவன் உணர்ந்து திரும்புவான் என்றபடி. இது "பொறுமை மேற்கொள்க" என்ற அறிவுரை.


குறுந்தொகை 232.  

கருத்துகள் இல்லை: