சனி, 10 மே, 2014

தூவானம்

பல சொற்கள் தம் அமைப்பில் முன் பின்னாக அமைக்கப்பட்டுள்ள என்பதைக் கண்டறிந்து முன்பு கூறியுள்ளேன்.  சரியான ஆய்வின்மையால் அவை பெரும்பாலும் கண்டறியப்  படாமல் இருந்தன. அல்லது  கண்டவர்  விண்டதில்லை என்று அடைபட்டுக் கிடந்தன.
இத்தகையவற்றில் ரவிக்கை என்பதொன்று என்பதை முன்பு வெளியிட்டுள்ளேன் .

இரு+அவிழ் +கை  =  இரு+ அவிக்கை = இரவிக்கை >  ரவிக்கை.

நடுவில் நெஞ்சுப் பகுதியில் அவிழ்க்கவும் பக்கங்களில் இரு கைகளும்  உடைய ஒரு "பெண்கள்" சட்டை.  இது  நன்றாகப் புனையப் பட்ட ஒரு சொல்.இத்தகு  புனைதிறன் இக்காலத்துப் புலவர்க்கு உண்டாவென்பது ஐயத்துக்குரியது.

இல்லத்தின் வாய்,   இல்வாய் என்று வழங்காமல், வாய்+இல் = வாயில் என்று அமைந்ததும் அது பின் வாசல் என்று திரிந்ததும் கண்டீரோ? இல்லத்து  நுழைவு என்று சொல்லலாம். இங்கு நுழைவு என்பது ஆகு பெயராய் நுழைவிடம் குறிக்கும்.

தூவானம் என்பதும் இங்ஙனம் முறைமாற்றாக அமைந்ததே. வானம் தூவல் எனின் அது வாக்கியமாய் நிற்கத் தகுவதன்றி ஒரு சொன்னீர்மைப் படுவதன்று.  அதை முன்பின்னாக்கி, தூவானம்,  தூவானை என்றெல்லாம் சொல்வதே சொல்லாக்கத் திறன்.

இந்த உத்திகளையெல்லாம் கையாளாமல்  இருந்திருந்தால், தமிழ் காலத்துக்கேற்பச் சொற்களைப் புனைந்துகொள்ள இயலாமல் தமிழர் ஒரு கடன்படு கூட்டமாக அன்றோ வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும்?

சீனம் மலாய் முதலியவையும் சொந்தச் சொற்களை  வேண்டுங்கால் படைத்துக் கொள்கின்றன.

பொன்மொழி:

தெரிந்ததைத் தெரியும் என்று சொல். தெரியாததைத் தெரியாது என்று சொல்.
அதுவே உண்மையான அறிவு என்றார் சீன அறிஞர்  கன்பூஷியஸ் 


edit reserved

கருத்துகள் இல்லை: