ஞாயிறு, 20 நவம்பர், 2016

நடப்பு , நிற்பு நிபுணத்துவம்

சில வேளைகளில்  சில காரியங்கள் நடக்கின்றன.  வேறு சில  வேளைகளில் அக்காரியங்கள் நிற்கின்றன. காரியங்கள் நடக்குங்கால் அவற்றை நடப்புகள்  என்கிறோம்.  அவை நிற்குங்கால் அவற்றை நிலை ,நிலைமை என்று குறிக்கிறோம்.  நாய், பூனை  மனிதன் ஏனை விலங்குகள் நடத்தலும் நிற்றலும் போல் காரியங்களும் நடக்கவும் நிற்கவும் செய்கின்றன . நடக்குங்கால்  நிற்குங்கால் என்று எழுதும்போதே காரியங்களுக்கும் கால் முளைத்து விட்டனவோ என்று எண்ணத்தோன்றுகிறது. (  கால் =  காலம் )  .ஆனால் எல்லா மொழிகளிலும் இதுபோன்ற சொற் பயன்பாடுகளும்  சொல்லாக்கங்களும் உள்ளன.  Situation  என்ற சொல்லைக் கேட்கும்போது காரியங்கள் உட்காருவதும் உண்டுபோலும்  என்று எண்ணத்  தோன்றுகிறதா ?   ஆனால் situare என்ற இலத்தீன்  சொல்  ஓரிடத்தில்  வைத்தல் , இடுதல் என்ற பொருளில்  situation என்ற சொல்லைப் பிறப்பித்தது.  Status என்பது  நிற்பது  stare  என்பதிலிருந்து வருவதால் அதை நிலை , நிலைமை என்று மொழி பெயர்த்தால் சொல் அமைப்புப்படி சரியாக இருக்கும் என்றாலும்  பொருந்துவதாகவும்  இருக்கவேண்டும். . Legal standing, standing in society  ஆகிய வழக்குகளிலிருந்து  என்ன உணர்கிறோம்.?

மலாய் மொழியில் நிலைமையைக் குறிக்க keadadaan என்பது வழங்குகிறது.ada
என்பது  இரு(த்தல்)  என்று பொருள்படும்.  keadadaan இருப்பு  என்பது சொல்லமைப்புப் பொருள் எனினும் அதை நிலை என்றே கூறவேண்டும்.
நிலைமை என்பதைக் குறிக்க பல சொற்களைச்  சீன  மொழி கையாளுகிறது. அவற்றுள்  இருக்கை  seat  场所 [chǎngsuǒ] {noun} என்பதும் ஒன்றாகும்.

நடப்பும்  நிலையும் தொடர்பு உள்ளவை.  இளைஞன்  ஒருவன் உவதி (யுவதி)(உவப்புத்  தருபவள் )  ஒருத்தியைக்  காதலிக்கும்போது  அது நடப்பு. காதல் மாறாமல் இருந்தால் அது நிலை அல்லது நிலைமை ஆகிவிடுகிறது.   மேலும் ஒரு மாற்றம் அடையாமல் காதல் நிற்கிறது.  நட  > நடப்பு.   நில் > நிலை.  நிலை + மை = நிலைமை.   நிலமை என்று பேச்சில் வந்தாலும் அதைப்  பிழை என்பார் தமிழாசிரியர்.  கவிதையில் ஏற்ற இடத்தில் எதுகை நோக்கி ஐகாரக் குறுக்கமாகக் கையாளலாம் என்றாலும் அது கவிஞன்  தீர்மானிப்பது.

நடப்பு, நிலை ,நிலைமை  என்பவற்றை  நடப்பு , நிற்பு  என்றும் சொல்லலாம்.
ஆனால் நிலை, நிலைமை  என்பவற்றை நிற்பு  எனல்  பேச்சு வழக்கில் இல்லை.  என்றாலும்  நிலை என்பது நிற்பு  என்பதே ஆகும்.

இனி நிபுணன் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.    நிற்பு  எனற்பாலது
நிபு  என்று இடைக்குறைந்து இயலும்.   நிபு உணர்ந்தவரே  நிபுணர்.
நிபு + உணர் .  நிலை உணர்ந்தோர்.   உணர்வு குறித்த இச்சொல் அவ்வுணர்வு உடையோனைக்  குறித்தல்  ஆகுபெயர்.  நிபுணர் என்பதே  அர்  என்று முடிந்ததனால் அதன்மேல் இன்னோர்  -அர்  புணர்த்தப் படவில்லை.  அர்  இன்றியே  அர்  உள்ளதுபோல் இயன்று பணிவுப் பன்மைபோல்  பேச்சில்
வழங்கியது.

அதுபின்  நிபுண என்று செதுக்கப் பட்டு,  நிபுணன், நிபுணர்  என்று ஒருமை பன்மையாய்  இயன்றமை  உணர்க. நிற்பு  உணர்ந்தோனே நிபுணன்  ஆவான்.  நிபுண + அத்து + அம்  =  நிபுணத்துவம்.

 செந்தமிழ் இயற்கை கெடாமல் வரவேண்டின் நிற்புணர்நன் > நிபுணர்நன் என்று வந்திருக்கலாம்.  அப்படி வந்தாலும்  நாளடைவில்  ர், ந  என்ற அடர்வுகள்  தொலைந்து  நிபுணன் என்றே  திரிந்திருக்கும் .ர் , ந   தங்கி  ஆகப்போவது ஒன்றுமில்லை. சொல்லொழுக்குத் தடையே மிஞ்சும் .

சிலர்  நி + புண்  என்று பிரித்து,  பொருள் கூறுவர் . எனின்  புண் என்பது புண்ணியம் என்பதன் பகுதி.. மேலும் புண் எனற்பாலது  புள் என்பதன் திரிபு. புள்ளியம்  என்பதே புண்ணியம் என்று திரிந்தது. Something that is capable of
good points. இதிலும் நி  என்பது நில்  என்பதன் கடைக்குறைதான் . ஒரு நிபுணனுக்குப் புள்ளி கொடுப்பான் அவனினும் பெரியவன்  ஆதல்வேண்டும்.
சிலர் இதை விரும்பலாம் . எனினும் புண்ணியத்திற்குப் புள்ளி கொடுப்பான்
இறைவன் . நிபுணனுக்கு ?
புள்ளி கொடுப்போனே நிபுணன் ! பெறுவோன்  அல்லன் எனல் கூடும் .

நிபுணர் பலராதலும் உலகில் உண்டு.
  







சனி, 19 நவம்பர், 2016

செல் > ஜென்

நாமிருக்கும் இப் பூமியில் பிறந்தவுடன் இறந்துவிட்டால்  எடுத்த சென்மத்துக்கு ஒரு பொருளில்லாமல் போகிறது. நிறை அகவையுடன் வாழ்ந்து இருந்தாலே அது ஒரு சென்மம் என்று  சிறப்பிக்கப் படும். ஆகவே
இது ஒரு பயணம்  ஒரு செலவு  ஆகும். இறுதியில்  சென்றுவிடுகிறோம் .

ஆகவே  செல்லும் அம் > செல்லுமம் >  செல்மம்  >  சென்மம்  ஆகும்.

சென்மங்கள்  மாறி மாறி  வரும். இது இந்து மதத்தின் கொள்கை .நம்பாதவர் என்றால்  அவர் இறப்பில் முடிந்துபோகிறார்  அல்லது அப்படி நினைக்கிறார்.
ஒரு சென்மம் முடிந்து மறு  சென்மம் தொடங்குமுன்  அம்மாவின் கருப்பத் துள்    சென்று உயிர் புக்கு நிற்கிறது. புக்கு  =  புகுந்து .. கருவினுள் செல்வதாலும்  அது சென்மம்  ஆகிறது.

ஆகவே  ஆதிக்கருத்து  செல் என்பதே  ஆகும்.

செல் என்பதே  செ  > ஜ (ஜா ) என்று  ஏனை மொழிகளில் திரிந்தது.

இந்தோ ஐரோப்பியத்தில்  ஜென்  என்றே  இச்சொல் ஒலிக்கிறது

செல் >  ஜென் .   லகர னகரப்  போலி.

எல்லா வகையிலும் பொருத்தமான அடிச்சொல்  செல் என்பதே.

சினை  என்ற சொல்லும்  ஆய்விற்குரியது ஆகும் .

மாமாதா

அம்மா + அம்மா  +  ஆத்தா
இதில் இறுதியில் உள்ள பாகத்தை மட்டும் அதாவது வால்களை மட்டும் எடுத்துக்கொள்ளவும்
மா + மா + தா
= மாமாதா.
இதைச் சுருக்கவும்
மம்தா

சொல்லமைப்பு: மகத்தான

மகன் என்ற சொல்லைப் பிரித்தால் மக+ அன் = மகன்  என்று அறியலாம்.  இச்சொல்லில் மக என்பதே பகுதி.  அன் என்பது
இறுதிநிலை அல்லது விகுதி. விகுதி என்ற சொல் மிகுதி என்பதன்
திரிபு ஆகும். ம‍~வ போலி. மக என்பதே சொல். அது  மிகுந்து  ( விகுதி பெற்று நீண்டு ) மகன்,மகள், மக்கள், மகார்,  என்றெல்லாம் வந்தன.

விகுதி என்பது விகுருதி அல்லது விக்ருதி என்ற  அயற் சொல்லுடன் ஓலியொப்புமை  உள்ளதாகும். அச்சொல் மாற்றம் என்று பொருட்படும் .

ஆனால் விகுதி  சேர்வதால் பகுதி  வேறொரு சொல் ஆவதில்லை. இவ்விகுதியும்  பகுதியில் தோன்றுவதில்லை. பொருள் வேறு பட்டது கா3ட்ட
இணைக்கப் படுவதே.  மகன் என்பதில் வரும்  ஆண் பால்  அன்   அகற்றப் பட்டுப்  பெண்பால் காட்ட  அள் புணர்த்தப் படுகிறது.     பகுதி  மக  என்பதுதான்.

மேலும் மகவு, மகவான் (பிள்ளைகுட்டிக் காரன் ) மகவாட்டி  (பிள்ளை குட்டிக் காரி ), மகப்பேறு,  மகம்> மிருகம்,  மகவின்கோள்,    முதலிய சொற்களுமுள.

மக என்பது அங்குதான் உள்ளது. மகள் எனப் பெண்ணை உணர்த்துகையில்  அள் என்ற விகுதி இணைந்து சொல் வேறுபடுகிறது. அள் என்பது அவள் என்பதன் சுருக்கமாகக் கருதினும் பிழையில்லை. குகைமாந்தர் காலத்தில் அ = அந்த என்றும் ள் = பெண் என்றும் பொருள்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் மொழியை நாம் அறிய வாய்ப்பில்லை. அ = அந்த;  வ்= உடம்படுமெய். அ= அந்த.(இரண்டாவது முறையாகச் சுட்டுச் சொல் வந்தது). ள் ‍= பெண்.
அ+ வ்+ அ+ ள் = அவள். சுட்டு இருமுறை வருவது தேவை இல்லை என்று குகைக்குப் போய் அந்த முந்தியல் மாந்தனிடம் சொல்லுங்கள்.
இலக்கணம் வந்தது பண்பாடு அடைந்தபின்.

இராசராச சோழனின் ஆட்சியின் பிற்பகுதியில் அவன் மகன் இராசேந்திர சோழன் படைநடாத்தினான். மகனும் தானுமாய்ப் போர்க்களங்களில் வெற்றியை ஈட்டினர். அதனால் அவன் மகத்தான மன்னன் ஆனான். மக  எனின் மகன்; தான = தான் பிறவும் உடையோன். இதில் பிற ஆவன படைகள். இது மகத்தான = பெரிய என்ற பொருளையும் தழுவி நின்றது
காண்க.

மோடி தானும் தம் அமைச்சர்களும் ( அவர் வழிகாட்டுதலில் நடக்கும் அமைச்சர்கள் )  இணைந்து செயல்படுதலால் மகத்தான என்ற வரணனைக்குப் பொருத்தமானவராகிறார். அமைச்சர்கள் மக போன்றோரே.


வெள்ளி, 18 நவம்பர், 2016

மகத்தான அரசியல் வீரர் மோடி

மோடி என்பவர்.  இந்தியாவின் தலைமை அமைச்சர்.  ஆனால் நான் இந்தியாவில் இல்லை.  ஆனால் அவர் செய்வது என்னையும் பாதித்துவிட்டது. நான் வைத்திருந்த ரூபாய் நோட்டுகள்  செல்லாமல் போய்விட்டன. முறைப்படி பார்த்தால்  எனக்கு அவர்மேல் கோபம் வந்திருக்க வேண்டும்.  அப்படி இருக்க அவரை மகத்தான வீரர் என்று நான் புகழ்வேனா ?

பாக்கிஸ்தானி டம்  பழைய இந்திய ரூபாய் நோட்டுகள் மட்டும் 500 கோடி உள்ளன என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.   இவை எல்லாம் நல்ல நோட்டுகள் என்று நாம் நினைக்க முடியாது.  அதேசமயம் அவர்கள்
அச்சடித்து வைத்திருக்கும் கள்ள நோட்டுகள் எவ்வளவு என்று முன்வந்த
செய்திகள் கூறின.  எல்லாம் கோடிக்கணக்கில் இருக்கலாம் ,  எல்லாம் பொய்யாகவும் இருக்கலாம்.  பொய்யென்று வைத்துக்கொள்ளுங்கள்.  இந்த  மோடி அறிவிப்புக்குப் பின்  இந்திய பாக்கிஸ்தான் எல்லையில் அமைதி நிலவுகிறது. கடுமையாக ஓடிக்கொண்டிருந்த துப்பாக்கிகளும் சுடும் இயந்திரங்களும் ஓய்ந்துவிட்டன . எதனால் ஓய்ந்தன ? வேறு காரணம் ஏதும்
இல்லாத  அல்லது கூற  முடியாத  போது   தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளே உற்ற காரணமாக இருக்கலாம்.  எல்லாப் புகழும் மோடிக்கே போய்ச்  சேர்கிறது .  இனிப் புதிதாக நடவடிக்கைகளைப்  பாக்கிஸ்தான்  தொடங்கினாலே உண்டு.  அதுவரை போர் ஓய்வைத்  தருகிறது  இது.

அணுவாயுதப் போர்வரை  போகும்படி விரிந்துவிடக் கூடிய  தாய்ப் போருக்கு  ஒரு நிறுத்தம் தந்த மோடி மகத்தான வீரர்.

இனி மகத்தான என்ற சொல்லை ஆய்ந்து அது இங்கு  பொருத்தமா என்று பார்ப்போம்.. அதாவது  தற்குறிக் காரணங்களைக் கைவிட்டு விடாமலே இந்த  ஆய்வினை மேற்கொள்வோம் .

Read also:

http://www.fakingnews.firstpost.com/world/pak-used-100-usd-to-print-a-fake-500-rupee-indian-note-musharraf-172   Gen Musharaff.



https://www.google.com.sg/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=3&cad=rja&uact=8&ved=0ahUKEwjFwaCusLXQAhUGNY8KHRlYCKAQFggpMAI&url=https%3A%2F%2Fwww.quora.com%2FCan-Pakistan-still-print-Indian-currency-after-the-scraping-of-old-currency-notes&usg=AFQjCNGadr85LKYgqrctBNBAzGYNsXUqJQ&sig2=itd2BjvZrXOry3288z9AZg

https://www.google.com.sg/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=2&cad=rja&uact=8&ved=0ahUKEwjFwaCusLXQAhUGNY8KHRlYCKAQFggiMAE&url=http%3A%2F%2Feconomictimes.indiatimes.com%2Fnews%2Fdefence%2Ffake-currency-worth-rs-167-crore-seized-by-government-in-five-years-pakistan-a-big-contributor-to-it%2Farticleshow%2F55355933.cms&usg=AFQjCNEbW8JdKn93T4zc3mbnDZm5OFv91g&sig2=adVxcFlW9NCHYgKD_3ttIg


will  review and edit

ஆசீர்வாதம்

ஆசீர்வாதம் என்ற சொல்லின் தென்றமிழ்ப் பிறப்பை முன் யாம் விவரித்த‌துண்டு.  ஆனாலும் இங்குக் கிடைக்கவில்லை.\

ஆகூழ் போகூழ், மற்றும் ஆகாயம் முதலிய சொற்களிற் போல  ஆ= ஆதல் என்ற முன்னொட்டுப்பெற்ற  சொல் இதுவாகும்.  ஆசீர் என்பது
சீராவது என்று பொருள்தரும்.

வாயில் தோன்றி விரிவது வாதம் ஆகும்.  பின் எழுத்திலும் வாதங்கள் வந்தன. ஆனால்  வாதம் என்று இச்சொல்லின் விதந்து சு ட்டப் படுவது  இருவருக்கு அல்லது அதனின் மேற்பட்ட ந(ண் )பருக்கிடையில் ஏற்படும் சொல்லாடல்  அன்று.   தம் வாயினின்று அல்லது பிறர் வாயினின்று புறப்படும் "சீர்  ஆகுக"  என்னும் வாய்மொழியையே குறிப்பது இது.   ஆ - சீர் - வா- தம்  என்று இயைந்து வந்திருப்பது காண்க. வழக்கில் பொருள் விரியும். 

ஆசீர் என்பது தமிழ் வழக்கே ஆகும். தோன்றியதும் தமிழரிடத்தே.







வியாழன், 17 நவம்பர், 2016

மோகம்

மோகம்  என்பது முன்னர் விரிவாக ஆய்வு செய்யப்பட்ட சொல்லே.
ஆனால் அதற்குரிய பழைய இடுகைகள் இங்குக் கிடைக்கவில்லை.
அவை அழிக்கப்பட்டுள்ளன.


நினைவிலிருந்து மீட்டு எழுதுகிறோம்.

விலங்குகள் மோப்பம் பிடித்தே பாலியல் அணுக்கம் கொள்கின்றன.
யாரும் போய்த் தெரிவிக்காமலே உணர்ந்து நெருங்குகின்றன. ஆகையால்
மோகம் என்ற சொல் மோத்தல் என்ற மோ விலிருந்து பிறந்தது.

மோ+கு+ அம் =  மோகம்.  இங்கு கு என்பது சொல்லாக்க  இடைநிலை.  மோப்பம் என்பதில் மோ+பு+அம் ‍= மோப்பம் என்று பு இடைநிலை ஆனது போல.  இதில் பு இடைநிலை என்னாமல் "விகுதி"   ',இன்னொரு 'விகுதி " என்றும் சொல்லலாம்.

மோகித்தல் என்பதில்  இகரம் இறுதியில் நின்று வினையானது. மோ +கு+ இ = மோகி.   இடை  நின்ற கு=  க் +உ.  .  இதிலுள்ள உகரம்  கெட்டது .  மோ +க் +இ = மோகி .ஆயிற்று.

மோகப் பற்று :  இது பின் மோகபத்  ஆனது.





புதன், 16 நவம்பர், 2016

நாணயச் செல்லொழிப்பு நடவடிக்கைகள்


நாணயச் செல்லொழிப்பு   demonetization .

வெளி நாடொன்றிலிருந்து அச்சடிக்கப்பட்டு இந்தியாவிற்குள் புகுத்தப்பெறும் கள்ளக் காசுத்தாள்கள், ஆண்டுக்கு 70 கோடிக்கு
மேலிருக்கும் என்று வல்லுநர் கூறுகின்றனர். இது தீவிரவாத நடவடிக்கைகட்கும் பிற அரசியல் நடவடிக்கைகட்கும் கூடப் பயன்படுத்தப் படுகின்றன என்று கூறுகிறார்கள்.


இந்திய நாட்டுக்குள் புகும் இந்த காசு, ஏழைகள் பணம்படைத்தோர் என்று வேறுபாடின்றி யாவர் கைகளிலும் தவழ்கின்றன.

இவற்றில் சில தோற்றுருக்களை ( டினோமினேஷன்)  செல்லாதவை
ஆக்கியது மோடி அரசின் திறமைதான்.


ஆயிரம் நூறைந்து நூறென்ப
அடிக்கடி புழங்கிவரு நாணயங்கள்
நோயினைப் போல்முளைத்த தீவிரர்கள்
நோட்டமிட நுழைந்தழிக்கச் சுட்டெரிக்க‌
நேயரைப்  போல்நடித்தும் ஊடுருவி
நெடும்பயன் பெற்றுப்போர் வெற்றிபெற‌
ஓய்விலா தச்சடித்து வெளியிட்டார்
உழலுமோர் இந்தியர்க்குள் புகுத்திவிட்டார்.


கலந்துறை காசுப்பொய் உருக்களையே
கட்சிகள் கலைத்துறையார் நாட்டினரும்
விரைந்தணைத் தவராகப் பயன்படுத்தி
வேண்டிய நலம்பலவும் கொண்டனரோ
விளங்குதல் இலரதனில் வீழ்ந்தனரோ
வினைவகை அறிந்திலாத சூழ்நிலையே
நிலங்கவர் நினைப்புடைய தீவிரர்க்கு
நேர்விடுத் தவர்பாணம்  மோடியவர்.

எளிதலாப் பெரும்போரே தலையமைச்சர்
ஈடுற‌  லானாரே என்றுசொல்வோம்!
ஒளிவிலா வெளிப்படையில் திட்டமிட்டால்
ஒருதுளி  கரும்பணத்தில் கைவாராதே!
நெளிசுளி வெல்லாமும் நெட்டுணர்ந்தார்
நின்றவ ரோடுழைக்கக் காசகத்தார்
அளியரே  இயலாமல் தவித்திடவும்
அவண்பணம் எடுப்பார்தத் தளிப்பவரே

எதுயாது நிகழ்ந்துருவே எட்டினாலும்
இதுநிகர் நடவடிக்கை துணிச்சலாகும்;
மெதுவாய்ச் சிந்தித்துத் திட்டமிட்டு
மேற்செல  உரிதருணம் அன்றிதுவே.
புதிதாய் முதன்முதலில் இதுசெய்தார்
புனிதர் மோடியிவர் வாழ்கவாழ்க.
விதியாய் நாமுறுமோர் தீவிரமே
வீழ்ந்திட எவ்விலையும் நல்விலையே.

(அறு  சீர்  கழிநெடிலடி  ஆசிரிய விருத்தம் .  ஈரசை ~  மூவசை - மூவசை  என்று  வரத்  தொடுத்தது,  சிலவிடத்தில் அசைகள்  மிக்குவர விடப்பட்டது.
ஒருபோன்மை  monotony தவிர்த்தல் நோக்கமாகும் .)










திங்கள், 14 நவம்பர், 2016

ஊழல் உளை

ஊழல் உளைக்குள் ஆழப் பதிந்தன‌
உழலும் நாடுகள் உலகிற் பலவாம்
ஆழப் பதிந்தபின் வீழலும் அழிவும்
ஈழைப் படுதலும் இயல்பே ஆகும்;
மீண்டு மேல்வர ஈண்டி முயல்வன‌
ஈண்டு பலவே; இரும்பெரு வேர்விரல்
நோண்டிப் பெயர்த்தல் நொய்ம்மைப் பயனே;
முயலும் காலையும் முட்டுக் கட்டைகள்
அயலும் உள்ளும் மிகலே இயல்பே;
முயலும் நல்லரை நிலைபெயர்த் தெறிதல்
இயலும் எல்லா நாட்டிலும் காணீர்;
எனினும் ஊழற்கு இயையார்
நனிநின்று தாங்குதல் நானிலம் போற்றுமே.


உளை  -  சேறு .
பதிந்தன - பதிந்து.  (முற்றெச்சம்)
ஈழை  -  இழிவு .
ஈண்டி  -  மிகவும் 
இரும்பெரு  -  மிகப் பெரிய .
மிகலே  -  அதிகம் ஆகுதலே
நல்லரை -  நல்லவரை .

சனி, 12 நவம்பர், 2016

கமல், கமலா.



நீரால் தான் இருக்கும் காலத்தில் கழுவித் தூய்மையாகத் தன்னை  வைத்துக்கொள்ளும் மலர் கழுநீர்மலர்.   சிவப்பானது
செங்கழுநீர்மலர். இடையில் சில எழுத்துக்களை நீக்கிவிட்டால்
செங் ~ க ~ மல  (செங்கமல)  ஆகிவிடுகிறது.  இது ஒரு சொற்சுருக்கம்.  நாளடைவில் தனிச்சொல்லாக ஏற்றம்பெற்று
உலாவரலாயிற்று. பல ஆண்டுகட்குமுன் யாம் இதை எழுதியிருந்தோம்.
அது இங்கு உள்ளதா என்று தெரியவில்லை. தமிழில் சுருக்கச் சொற்கள்
பல. இதுவும் அவற்றுள் ஒன்று. தெரியாதவன் இது தமிழ் அன்று என்று
வாதாடுவான்.

கழுநீர்மலர் >  கழுமலர் > கமல.
கமல > கமலம் > கமலா.
கமல > கமல்.
கமலி > கமலினி.

எப்படியும் மாறும். -  மனித மூளை  வளத்திற்  கேற்ப ,

செந்தமிழில் சொற்களை வெட்டி ஒட்டிக் கட்டிப் பயன்படுத்தும்
முறைகளை ஆதிநாளில் ஆசிரியர்கள்  மறுத்தனர். செந்தமிழ்
இயற்கை சிவணிய நிலத்தினரான அவர்கள் கவனமாய் இருந்தனர்

இப்போது ஏனோ ‍ தமிழ் வாத்தியார்களுக்குக் குமுகத்தில் எடுபடா
நிலை நிலவுகின்றது. அவர்கள் மறுத்தவை, அக்கரை சென்று திரும்பி வந்து அவர்களை மருட்டுவது வேடிக்கைதான்.

அவர்கள் சொற்கள் பிறரிடம் சென்று ஒளிர்கின்றன.


ஒளஷதம் அவிடதம்


ஒளடதம் என்ற சொல் முன் இங்கு விளக்கப்பட்டு, அணிசெய்துகொண்டிருந்தது.  ஆனால் இப்போது அது கிடைக்கவில்லை.

2014 நவம்பர் மாதம் இடுகைகள் பல மூன்றாம் நபர்களால் அழிக்கப்பட்டன.
இவற்றுள் ஒளடதம் என்பதுமொன்று.

இது அவி என்பதிலிருந்து புனையப்பெற்ற சொல்.  அவி+இடு+அது+அம்
என்று இச்சொல் பிளவுறும். வேர் முதலியவற்றை நீரிலிட்டு அவித்து அதிலிருந்து கிடைக்கும் சாறே அவிடதம் ஆம்.  அவி > ஒள.  ட= ஷ.
இது மிக்க எளிமையான ஆக்கமே ஆகும்.

அவி > ஒள > அவு .   அவுடதம்  என்றும் எழுதுவர் .

இதனை யாரும் மறு  வெளியீடு செய்ததாகத் தகவல் இல்லை.

வெள்ளி, 11 நவம்பர், 2016

வந்தே மாதரம்!!

வாழ்த்து  (வாழ்த்துதல் ) என்ற சொல் வழுத்து என்றும் வரும். ஒரு கவிதை எழுதும்போது முதலடி முதற்சீர் எழுத்து என்று தொடங்கினால்
அடுத்த அடியை வழுத்து என்று தொடங்கிக்கொள்ள இது நல்ல வசதியே
ஆகும்.  ஆனால் எழுத்து என்பது பெயர்ச்சொல்; வழுத்து என்பது
வினைச்சொல்; எனின், முதனிலைத் தொழிற் பெயர்ச்சொல்லாகவும்
ஆளப்படுதல் கூடும்.

வழுத்து என்பது வல்லோசைச் சொல். இதை மென்மையாக்க, வழுந்து
என்று மாற்றிக்கொள்வர்.  செம்மை + தமிழ் = செம்+ தமிழ் = செந்தமிழ்
என்றுதான் வரும். செ  என்றாலே சிவப்பு, செம்மை என்று பொருள்.  நேரானது என்றும் பொருள்.  அதாவது கடுந்திரிபுகள் அற்றது என்று
அர்த்தம்.  செ+ தமிழ் = செத்தமிழ் என்று வருதல் இல்லை. வரின்
அது இன்னா ஓசை பயந்ததாய்விடும்.  ஏற்ற இடங்களில் த்து என்று
வரின் ந்து என்று மாற்றம் செய்யப்படுதல் மொழிமரபு.  மெலித்தல்  விகாரம்..
ஒலியை  மென்மைப்  படுத்துதல்.

இப்போது மீண்டும் வழுத்து என்பதற்கு வருவோம்.  இதை மெலித்தால்
வழுந்து என்று வரும். வழுந்து என்ற மெலிப்பைக் காண இயலவில்லை. இது வசதியாகப் போய்விட்டது.

வழுந்து என்பதைத் தமிழுக்குரிய ழு‍~வை  எடுத்துவிட்டால் வந்து ஆகிறது.  இது  இடைக்குறை .

வந்து > வந்தே.....

வந்தித்தல் = புகழ்தல்  வாழ்த்துதல்.

வந்தி + அனை =  வந்தனை.  ( அன்+ ஐ)

வந்தே மாதரம்!!
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை.......

வந்தனை  வந்தித்தல் என்பன தமிழ் வழக்கில் உள்ளவை.  ஆனால்  வந்தே என்பது  வாழ்த்தினைக் குறிக்கையில்  வட இந்திய வழக்கு  ஆகும். இவற்றுக்கெல்லாம்  மூலமாவது  வாழ் என்னும் வினைச்சொல்லே ஆகும் .

எச்சத்திலிருந்தும்  ஒரு சொல் பிறக்கலாம் என்பது சில அறிஞர்  கருத்து.  எ - டு :  ஆண்டு >  ஆண்டவர் . அல்லது:  ஆண்ட >  ஆண்டவர் .
இதைப்  பின்பற்றினால்  வாழ்ந்து >   வாந்து >  வந்து > வந்தே .
வினை எச்சங்கள் பிற மொழிகளில் ஒரு முன்மை இடத்தினவாய் உள . 




திகதி: தேதி.

தேதி என்பது திகைந்த நாள் என்று பொருள்படுவதாகும்.  அல்லது
திகைந்தது.

இது பற்றிய விளக்கம் இங்குக் காணலாம்.
திகைதல்  =   determine.
Dates are days determined by humans.

https://sivamaalaa.blogspot.sg/2011/10/tamil-word-for-date-thethi_11.html


திகை >  திகைதி .    தி : விகுதி .
திகைதி  >  திகதி:  (ஐகாரக் குறுக்கம்)
திகதி  >  தேதி.   பகுதி  > பாதி  போன்ற திரிபு.

வியாழன், 10 நவம்பர், 2016

Trump: திருத்தி வாசிப்பார்

எந்த மதமிருந்   தாலும்  ‍‍‍=== மக்கள்
இணைந்து செயல்பட வேண்டும்!
சொந்த மதமகத்  துள்ளே  === வீட்டில்
சோராது செல்லதன் பின்னே.

திரம்பும் அதிபராய் வந்தார் ‍‍=== முன்
தேராச் சிலபல சொன்னார்.
உரம்பெற உட்கார்ந்த பின்போ ‍=== நாடு
உய்யத் திருத்திவா சிப்பார்.



பொருள் :

அகத்துள்ளே :   மனத்தினுள் .
சோராது:   இடையீடின்றி. 
திரம்பு  -  அதிபர் திறம்ப்
உய்ய -   முன்னேற. 

யோகம்

தன்பாலிருந்து பிறர்பால் அனுப்பினாலும் தபால். தன்பால் என்பதில்  ன்  
ஒற்றை (மெய்  எழுத்து ) எடுத்துவிட்டால் தபால்.
பிறர்பாலிருந்து தன்பால் வந்தாலும் தபால். இங்கும் அதுவே. அதே!
தான் இல்லாவிட்டால் தபால் இல்லை.

தன்பால் என்பதைத் தபால் என்று சுருக்கியவன் அறிஞன். அவன்
யாரென்று தெரியவில்லை.

இந்த முறையைக் கையாண்டு பல சொற்கள் படைக்கலாம்.

இப்போது ஓங்குதலைக் கவனிப்போம்.  ஓங்கு என்றால் அதிகமாவது, மிகுவது.

மிகுவது பணமாகவோ, வீடுவாசல்களாகவோ இருக்கலாம்.

ஓங்கு என்பதில் ங் எடுபட்டால்  ஓகு.(இலக்கணத்தில் இடைக்குறை.)
ஓகு என்பதில் அம் சேர்த்தால் ஓகம்.(ஓங்குதல், மிகுதல்)
உயிர் முதலான சொல் யகர வருக்க முதலாக வரும்.  ஆனை> யானை.
அதுபோல்,  ஓகம் > யோகம். ( பணம், பொருள் ஓங்கிய நிலை).
உங்களுக்கும் ஒரு யோகம் வருகிறது.

இச்சொல் ஓகம் என்பதிலிருந்து வந்தது என்பதை மறைத்துவிட்டால்
அப்புறம் யோக் என்பதிலிருந்து வந்தது என்று கதை சொல்பவனே
அறிஞர்க்குத்  தலைவன் .





முண்டாசு உறுமாலை உறுமால்

முண்டாசு

முண்டாசு என்ற சொல்லை ஆய்ந்து யாம் எழுதியவை வெளியாரால்
அழிக்கப்பட்டுவிட்டன. அதைக் கண்டுபிடிக்க இயலவில்லை.

இப்படி அழிப்பவர்கள், அதனையோ பிறவற்றையோ தமிழெனக் காட்டுதலை விரும்பாதவராகவும் இருக்கலாம். மூலத்தை அழித்துவிட்டு
தமவாக்கிக்கொள்ள எண்ணிய கள்ள ஆய்வாளராகவுமிருக்கலாம். நிற்க.
கடவுச் சொல்லைக் கூடத் திருடக் கூடிய திறவோர் இவராவர்.

அது கிடக்கட்டும். இப்போது முண்டாசு என்னும் சொல் ஆய்வோம்.

முண்டு =  துண்டு. துணி. மலையாளத்தில் இது வழங்குகிறது.
ஆசு :  பற்றிக்கொள்தல். இங்கு அணிந்திருத்தல்.

ஆகவே: துண்டு அணிதல். தலையிலணிதலைக் குறிக்கிறது.

உறுமாலை என்ற சொல்லும் உளது.

உறு:  அணிதல்.( தலையில்) பொருத்துதல்.

மாலை: மாலைபோல் சுற்றப்படுவது.  கழுத்தில் அணிவதுபோல் தலையில் சுற்றுதல்.

இது மால் என்றும் கடைக்குறைந்து வரும்.  "உறுமால்"

இங்கு மாலை:  ஒப்பீட்டு அமைப்பு.

இதுவே முன் எழுதியதன் சுருக்கம்.

சுமையடை , சுமையடி, சும்மாடு  என்பனவும்  காண்க.   தலையில் வைக்கப் படும்  சுமை அழுத்தாமல்  தலையில் சுற்றப்படும்  அடைத்துணி .

சும்மை  >சுமை   இடைக்குறையாகக் கருதலாம் .  சுமத்தல் : வினைச்சொல்.

சும்மை  > சும்மையா(க)  > சும்மா(க)  >  சும்மா.

சுமையாக ,  வீணாக ,   பணம் இல்லாமல்.




புதன், 9 நவம்பர், 2016

அயல்திசை மக்கள்

அயல்திசை மக்கள்  வந்தார்
அதிகமாய் அமர்ந்து கொண்டார்
மறலியை வழியில் வேலை
மாதொழில் வளம்க வர்ந்தார்
எனலொரு மனந்தி ரிந்த
எழுச்சியில் திறம்பு கூவிக்
கனல்பெறத் தேர்தல் வென்றார்
காரிகை இலரி வீழ்ந்தார்.


தன் நிலம் தன் தன் வீடு
தன் தொழில் இவற்றைப் பேணும்
பின் படைக் கொள்கை மேவிப்
பேரம ரிக்கர்  செல்ல;
பன்முகத் தொழில்வ ளர்த்துப்
பார்பரி மாறிக் கொள்ளும்
பண்புறு ஞாலக் கூட்டுப்
பாழ்படும் வருங்கா லத்தே.

அயலுறு திறம்ப ழிக்கும்
அகலுறு அமெரிக் காவில்
பெயல்வரப் பயிர்கள் நாணிப்
பேணுமோ  தம்மைத் தாமே?
கயல்தமைக் கடல்க ழித்தே
அயலென்று வெறுக்க லாமோ?
உயல்பெற உகக்கும் ஞாலம்
தொழில்துறைத் திறப்ப கிர்வே!






மறலியை வழி  -  முன்னைக் கொள்கைகளை மறுத்தலோடு இயைபுடைய வழிகள்  right leaning policies  contrary to those established before.
பின்படை    - retrogressive.
பெயல் = மழை
உயல் -  பிழைப்பு முன்னேற்றம்

திறம்பு:   இற்றை அதிபர் டொனால்டு டிரம்ப்.
இலரி :  ஹிலரி கிளின்டன்.
திறப்  பகிர்வு  -  share of talents

திங்கள், 7 நவம்பர், 2016

வெ வேறு; வே வேறு

ஒரு சொல் "வெ" என்னுமெழுத்தில் தொடங்குகிறது. இன்னொன்று
"வே" என்று நெடிலில் தொடங்குகிறது.  வெ என்பது வேறு, வே என்று
நெடிலில் சொல்வது வேறு.  அதற்கும் இதற்கும் தொடர்பில்லை!!

இப்படி நம் வாத்தியார் சொல்லிக்கொடுப்பார், அதுவும் உங்கள் ஒன்றாம்
வகுப்பில். ஐம்பது ஆனாலும் அறுபது ஆனாலும் பலரும் இந்தப் பாடத்தை
மறக்கமாட்டார்கள். இவர்கள் நல்ல மாணவர்கள். வாத்தியார் சொன்னபடியே எதையும் உணர்ந்துகொள்பவர்கள். இவர்கள் கூட்டத்தில்
நீங்களும் இருக்கலாம்.

நீங்கள் சொல்வீர்.  வெ வேறு; வே வேறு.

எந்தக் காலத்திலும் இவை ஒன்றாக மாட்டா.

அலசி ஆய்ந்து உங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஆவல் ஆவா. அவா

பல மொழிகளில் குறில் நெடில் என்பன இல்லை. அவை அங்ஙனம்
உணரப்படவில்லையே தவிர, பேசுகையில் குறில் நெடில் ஓசைகள் இயல்பாகப் பலுக்கப்படுகின்றன. மாய், தாய், லோங் என்று நெடில்
முதலாக வரும், சிலவற்றில் குறில் தனியாகக் குறிக்கப்படுவதில்லை.
எனினும் பேசுகையில் குறில் நெடில் இருக்கும்.

நெடில் குறிலாகிய சொற்களை முன் இடுகையில் கண்டோம்.  அறிந்து
இன்புற்றிருப்பீர்கள் என்பது எம் துணிபு ஆகும்.


இனி ஆவல், அவா என்பனவற்றைக் கவனிப்போம். இவ்விரண்டும் ஒருபொருளன என்பது நீங்கள் அறிந்ததே/

இதன் வினைச்சொல்  ஆவு என்பதாகும்,  இப் பகுதி இதுகால தனியாக‌
வழங்கவில்லை. நீ தொலைக்காட்சி பார்க்க  ஆவுகிறாயா என்று யாரும்
பேசுவதைச் செவிமடுத்ததில்லை. இப்படி ஒரு காலத்தில் தமிழர் பேசினர்
என்று தீர்மானிப்பதில் தடையேதுமில்லை.

ஆவு + அல் = ஆவல் ஆகிறது. ஆவலென்பது இன்னும் வழக்கில் உள்ளது.
ஆவினான், ஆவுகின்றான், ஆவுவான் என்பன காணக்கிடைத்தில. இவற்றை நாம் எழுத்திலும் பேச்சிலும் மறந்தோம். அதனால் இல்லை. ஆவுதல்  நிகண்டுகளில் மாத்திரம் உள

சொல்லிறுதியில் வரும் விகுதிகளில்  ஆ என்பதும் ஒன்று.

நில் >  நிலா.
உல் > உலா.
கல் > கலா ( கற்றல்).
பல் > பலா  ( பல சுளைகள் உடைய பழம் ).

விழை >  விழா.
புழை > புழா. (மலையாளம்)
 கடு >  கடா.
துல் > துலா.

இங்ஙனம் வினை பெயர்ச் சொற்களிலும்  ஆ விகுதி வரும்.

சொல்லிறுதியில் வரும் விகுதிகளில்  ஆ என்பதும் ஒன்று.


ஆவு + அல் =  ஆவல்.
ஆவு + தல் =  ஆவுதல்.
ஆவு + ஆ =  ஆவா.  இது பின் அவா என்று குறுக அழகுபெறும்.

ஆ விகுதி பெற்றுக் குறுகியதே  அவா என்று முடிக்க.

சில ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்கம்பெற மொழியில் வசதிகள்
இருப்பினும், இவ்வாறு முடித்தல் போதுமானது.





ஞாயிறு, 6 நவம்பர், 2016

நெடில் முதலான .......... குறில் முதலாகி

நெடில் முதலான சில சொற்கள் விகுதி ஏற்றபின்  குறில் முதலாகி
விடுகின்றன. அப்படிச் சில சொற்களை நாம் முன்பு கண்டோம்.  அந்த‌
விதியை மீண்டும் நினைவு கூர்ந்து அவ்வறிவைத் திறப்படுத்திக்
கொள்வோம்.

சாவு என்பது வினைச்சொல். இதனோடு அம் விகுதி வந்திணைந்தால்
சாவு+ அம் =  சவம் என்றாகிறது. அது இறந்த உடலைக் குறிக்கிறது.

தாவு என்பது வினைச்சொல். தாவுதல்.  இதனோடு விகுதி சேருமாயின்
தாவு+ அளை =  தவளை ஆகிறது.  தாவளை என்னாது தவளை என்றே
வரும்.  அளை என்பது கலக்குதல் என்றும் பொருள்படும்.  தாவிச் சேற்றினைக் கலக்கும் தவளைக்கு இது ஏற்ற விகுதியாகிறது.

வாய்ப்பக்கம் கூம்பியும் அடி சற்று அகலமாகவும் இருப்பது குவளை,
கூ+ வளை = குவளை ஆயிற்று.  கூ > கூம்பு. குவளையின்  உரு இப்போது மாறி யுள்ளது.

இதேபோல்  கூம்பு + அம் =  கும்பம் ஆனது.  கூ> கு ஆனது.

கூடி வாழ்வதே குடும்பம்,   கூடு+ பு + அம் =  குடும்பம். கூடு என்பது
குடு ஆகி, மகர ஒற்று புணர்ச்சியில் தோன்றி, பு விகுதிக்கு முன்னின்று
இன்னோசை தந்தது.  விரு+பு ‍> விரும்பு போல. வினையிலும் பெயரிலும் இன்னோசை விளைக்க இது தோன்றும். இது பரவலாகக்
காணப்படுவதாகும்.  கொடு+ பு = கொடும்பு போல.  இங்ஙனம் பலவாகும்.

Hilary or Trump?

மாயிரு ஞால மீதில்
மாகடல் இரண்ட  ணைக்கும்
தாயொடு தந்தை போலும்
தன்னிகர் இலாத நாடே
சாயிலா அரசு வல்ல‌
சாதனை அமெரிக் காவில்
தோயுற மக்கள் கொள்ளும்
துலையிலாத் தேர்தல் கண்டீர்.

பெண்மணி ஒருவேட் பாளர்
பீடுடைச் செல்வர் மற்றார்
தண்ணுறு பொழிவு செய்து
தகவினை முகந்த ணிந்தார்;
ஒண்பெறு மிகுதி வாக்கில்
ஓங்கிட நிற்பார்  யாரோ?
பெண்மிகை பெற்றால் ஞாலம்
பெருமிதம் மிளிரும் அன்றே!




சனி, 5 நவம்பர், 2016

அரிதாரம் பூச்சு

இன்று "அரிதாரம்"  என்ற சொல்லினை ஆய்வு செய்வோம்.  இந்தச் சொல்லிலிருந்து ஒரு வரலாற்று உண்மை வெளிப்படக்கூடும்.
சீரை என்ற சொல்லிலிருந்து  சேலை வந்தமை நீங்கள் அறிந்திருந்தால்
இதுவும் அதுபோன்ற ஒரு பின்னணி கொண்ட சொல் என்பதை அறிந்து
மகிழலாம்,

அரி என்பது அரிசி.  இதில் சி என்பது விகுதி.  அரி என்பதே பகுதியாகும்,
பழங்காலத்தில் நடித்தவர்கள் அரிசி மாவினை முகத்தில் பூசிக்கொண்டனர். இது முகத்தைப் பார்க்கும் மக்கட்கு விளக்கமாகக் காட்டுவதற்குப் பயன்பட்டது. நாளடைவில் மருந்துச் சரக்குகள் சேர்த்து அரிதாரம் செய்யப்பட்டு மேற்பூச்சாகப் பயன்பட்டது.  இந்தப் புதுமைக் காலத்தில் இன்னும் நல்ல பூச்சுக்கள் பயன்படுத்தப் படுகின்றன. தாரம் என்பது  தருதல் எனற்பொருட்டு.  தரு+ அம் ‍=  தாரம்.  தருதலாவது
இங்குப் பூசுதல் என்று பொருள் தரும்.

வெள்ளை  மஞ்சள்  நிற மக்களும் பூச்சுகள் பயன்படுத்தியே நாடக மேடையில்
தோன்றுகின்றனர்.  இயற்கை நிறம் நாடகங்களுக்குப் போதுமானவை  அல்ல .

ஒப்பனை  (மேக் அப் ) இப்போது  மிகப் பெரிய  கலை யாகிவிட்டது.  அரிதாரம் என்ற சொல்  இப்போது பெரிதும்  வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை .





 ‍

மாநில மேல் மீண்டு வந்தீர்

மக்கள் நலமே கருதி ===  இந்த
மாநில மேல் மீண்டு  வந்தீர் ‍‍‍=== மருத்துவர்
தக்க சிகிச்சைகள் செய்தார் ‍‍===  இங்குத்
தமிழர் உலகினர் போற்ற. (மக்கள் )

வியாழன், 3 நவம்பர், 2016


உல் பல பொருளுடைய ஒரு மூலச்சொல்

உல் என்பது பல பொருள்களை உடைய ஓர் மூலம்.

உல் >  உரு:  (  உல்: தோன்றுதல்.)    உரு >  உருத்தல் .
உல் >  உலவு   (உல்: தோன்றிச் அங்குமிங்கும் பெயர்தல்.)
உல் >  உரு > உருள். ( உல்: சுற்றுதல்.)
உல் >  உலகு. (  உல்: சுற்றுவது; இயங்குவது; உருண்டை.)
உல் > உலக்கை. சுற்றாக உள்ள தடி.  ( உல் : நெட்டாகவும் சுற்றாகவும் இருப்பது.)
உல் > உரி. உரிதல்.   தோன்றிய இடத்திலிருந்து அல்லது பொருளிலிருந்து வேறாதல். ( உல்: வேறாதல்.)
உல் > உன்.  ( தோன்றி முன்னிலையாவது).
உல் > உறு > உறுதல் > உறுத்தல். உல் : தோன்றியதுணர்தல், உண்டாக்குதல்.
உல் >  உரு > உரை:  வாயில் தோன்றிச் செவிக்குச் செல்வது,   ( உல் : புறப் பாட்டுக் கருத்து, )  உரை>  உரைத்தல் ,

இங்ஙனம் உல் பல பொருளுடைய ஒரு மூலச்சொல். இது மிக விரிந்த‌
மூலமாதலால் ஒரு சில உணர்த்தப்பட்டது,
இதனை அறிஞர் விரித்துரைத்துள்ளனர் என்பதறிக.

சொற்கள்  விகுதி பெற்றும் நீண்டும்  நீண்டு  விகுதி பெற்றும் விகாரம்  அடைந்தும் மருவியும் பலவாறு வேறுபட்டும் மொழி  வளம் அடைந்தது.
இதை ஒரே இடுகையில் உணர்த்தல் கடினம்.  அறியத்  தொடர்க .

will edit. some inherent problem.  If  not readable please highlight to read.

உறுப்பத்தி உற்பத்தி

https://sivamaalaa.blogspot.sg/2013/11/blog-post_20.html


உற்பத்தி என்ற சொல்லை முன்னர் ஆய்வு செய்துள்ளோம்.

அது மேற்குறித்த இடுகையில் இன்னும் இங்கு உள்ளது.

இப்போது இன்னும் சற்று விரிவாகச் சிந்தித்து அறியலாம்.

படிப்பறிவு இல்லாதவர்கள் பெரும்பாலும் சிற்றூர்களில் வாழ்வோர் உலுப்பத்தி அல்லது உறுப்பத்தி என்பர். பெரும்பாலான வழக்குச் சொற்களுக்கு இவர்களே உற்பத்தியாளர் எனலாம்.  இவர்கள் பேச்சினை
ஆய்வதற்குச் சில முயற்சிகள் நடைபெற்றனவாகத் தெரிகிறது. எனினும்
இவ் ஆய்வுகள் முழுமை அடைந்துவிட்டனவாக  யாம் நினைக்கவில்லை.

உல் என்ற அடிச்சொல்லிலிருந்து உறு என்பது தோன்றியது.  உல் என்ற அடியே பின் உள் என்றும் திரிந்தது. இவையெல்லாம்  தொடர்பு உடைய‌
கருத்துக்கள். இவற்றைப் பின் ஓர் இடுகையில் விளக்குவோம்.

உல் > உலு > உலுப்பத்தி.  (பேச்சு வழக்கு).
உல் > உள் > உட்பத்தி , திரிந்து : உத்பத்தி.
உல் > உறு > உறுத்தல்.

உறுத்தல் எனின் உண்டாக்குதல்; ஏற்படுத்துதல்.

தெளிவுறுத்தல்.
அறிவுறுத்தல்

என்னும் வழக்குகளில், உறுத்தல் : உண்டாக்குதல், ஏற்படுத்தல்.

இனி, உல் > உறு >  உறுப்பற்றி.>உறுப்பத்தி.

இவையெல்லாம் உல் என்ற அடியினின்று தோன்றிப் பல்வேறு வகைகளில்
வெளிப்பாடு காணினும்,  உண்மையில் ஒன்றேயாம்.இந்த வெளிப்பாடுகளில்
ஒருமை காண்டல் ஆய்வறிவு உடையார்க்கு எளிதேயாகும்.

உலுப்பத்தி உறுப்பத்தி என்பன கொச்சை என நினைத்து,  உற்பத்தி என்று
திருத்திக்கொண்டனர். அதுபின் பிறமொழிகளிலும் தாவி வழக்குப்பெற்றது.
உட்பத்தி >  உத்பத்தி > உற்பத்தி எனினும் அதேயாம். மூலம் உல் தான்.

எழுத்துக்கும் செய்யுட்கும் மூலம் பேச்சே ஆகும்.சரசுவதி பேச்சாயி என‌
சங்ககாலத்தில் வழக்குப் பெற்றதும் மிகப் பொருத்தமே.








புதன், 2 நவம்பர், 2016

சிங்கப்பூர்த் தீ .

பத்தி  கொளுத்தினால்
      பறறேன்  எனும்   தீயே !
பட்டறையில் எப்படிப் பற்றினாய் ?
கெட்ட  குறு

நேரம்     இடனொடு
நேர் பொருளும்  காரணமோ ?
சோர்ந்த நட்  சத்தி ரமோ  தான் .

இது  சிங்கப்பூரில் நடந்த ஒரு நிகழ்வு பற்றிய  கவி .  எப்படிப் பற்றிற்று?
இதை வாசித்து அறியலாமே .


http://www.channelnewsasia.com/news/singapore/fire-engulfs-sungei-kadut-warehouse-7-rescued/3254108.html
.



செவ்வாய், 1 நவம்பர், 2016

அமோகம் என்ற சொல்லை

எமது  கட்சித் தொண்டர்களுக்கு ஊர்மக்கள் அமோக வரவேற்பை அளித்தார்கள் என்றார் ஒருவர். நாம் கடுமையான இலக்கணங்களை
இக்காலத்தில் கைக்கொள்வதில்லை.  எமது  என்பதில்  அது என்பது
அஃறிணை ஒருமை. தொண்டர்கள் உயர்திணைப் பன்மை.  ஆகவே சங்க கால இலக்கணப்படி, பிழை ஆகிறது. எம் தொண்டர்கள் என்றுதான்
சொல்லவேண்டும்.

ஆனால் நாம் சொல்லவந்தது அதுவன்று. அமோகம் என்ற  சொல்லை
ஆய்வு செய்ய உங்களை அழைக்கவே இங்கு வந்தோம்

மோகம் என்பது  விருப்பம், காதல், மோகப் பற்று >  மொகபத் . நீ தி  X  அநீதி  என்று  அமைந்துள்ள எதிர்ச் சொல்லை நோக்கினால்,  அமோகம் என்பது
விருப்பமின்மை   என்று அன்றோ பொருள்தர  வேண்டும் ?

அப்படியானால்  அமோக வரவேற்பு என்பது விருப்பமில்லா வரவேற்பு  எனலாமா? அதை எப்படித்தான் விளக்குவது?

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

பதிலைப் பிறகு சொல்கிறோம்.


திங்கள், 31 அக்டோபர், 2016

தீபஒளி மகிழ்ச்சி எல்லை தொட்டதுவே............

வாயிலுக்கு வந்தாரை வருக என்றோம்
வந்துணவு பெறுகமனம் மகிழ்க என்றோம்
போய்வருவீர் வந்தெமக்குப் பெருமை தந்தீர்;
புகன்றிட்டோம் நிறைந்துளமே நன்றி என்றே.
தோய்நறுந்தேன் தீபஒளி மகிழ்ச்சி எல்லை
தொட்டதுவே இருநாட்கள் தொடரும் கொஞ்சம்
ஆய்வினுக்கும் அரும்பணிக்கும் ஓய்வு கண்டோம்
அகமகிழ்வுத் தீபஒளி மலர்ச்சி யாமே.

சதிபதி என்ற தொடரில்..................

சத்தி அல்லது சக்தி என்பது பார்வதி தேவிக்கும் பெயர்.
சக்தி அல்லது சத்திக்குச் சிவனே பதி என்பது
சிவமதத்தார் கொள்கையாகும்,

சத்தி ( சக்தி ) என்பது இடைக்குறைந்தால் சதி என்று வரும்,
சதி என்பது பார்வதியையும் குறிக்கும்.  மனைவி என்றும்
பொருள் படும்.

சதிபதி என்ற தொடரில், கணவன்‍ மனைவி என்பது
பொருளாம் எனல் நீங்கள் அறிந்தது.

மனைவி அல்லது பெண்ணே ஆற்றலுடையாள்
 என்பது இதிலிருந்து பெறப்படுகிறது.  சதிபதி
 என்பதில் சதியே முன்வருதல் காண்க..


அசைவும் இயக்கமும் சத்தி ஆகும்.  இருப்பு
அல்லது அசைவற்ற நிலை சிவமென்பதும் கணவர்
- ஆடவர் என்பதும் இதிலிருந்து பெறப்படும்.

சதி என்ற சொல்லும் பிறவும் குடும்பத்துக்குப் பெண்
தலைமைகொண்ட‌ மிகப்பழங்காலத்தையே  
முன் கொணர்ந்து நிறுத்துகின்றன.

இதனைப் பதி  என்பதனுடன் ஒப்பிட்டு நோக்கவும்.

https://sivamaalaa.blogspot.sg/2016/10/blog-post_38.html  செல்க .

The world is made up of dynamic  and static forces.  Dynamic is சக்தி
 , சத்தி  அல்லது சதி .

வெள்ளி, 28 அக்டோபர், 2016

சுரர் என்போர் அறிவின் ஊற்றுக்கள்.

http://sivamaalaa.blogspot.com/2014/10/blog-post_22.html

நீரகத்துத் தோன்றிய சூறாவளியை நீரின் அமைப்பாகவும் (அம்ஸம்)  கடலாகவும் விண்ணாகவும் இலங்கும்  கண்ணன்
அடக்கினான். நீரக சூறா என்பதே நரகாசூறா > நரகாசுரா என்றானதை மேற்கண்ட இடுகையில் விளக்கி யிருந்தோம்.
.

இதில் வரும் அசுரன் என்ற  சொல் பிறழ்பிரிப்பு.
நல்லோர் என்று பொருள்படும் சுரன் என்பது  வேறு. அதன்
எதிர்ச்சொல் அசுரன்

இதனை அடுத்து விளக்குவோம்,

சுரர் என்போர்  அறிவின் ஊற்றுக்கள்.   அவர்களிடமிருந்து  அறிவு சுரந்து
மனித குலத்துக்குப் பயன்படுகிறது.    சுரர் அல்லாதோர்  அசுரர் ஆவர். ( which means "A  non-Sura or non-Suran  is Asuran:  suran - antonym : Asuran) 
ஆரிய என்ற சொல்லும்  அறிவாளிகள் என்றே பொருள் பட்டதுபோல்
இதுவும் அங்ஙனம் ( likewise )  அமைந்தது.

சொல் அமைப்பைப் பின் விரித்துரைப்போம்.

வியாழன், 27 அக்டோபர், 2016

தேன் வந்து பாயுது காதினிலே - மது


மது  என்பது ஒரு சொல்லின் இடைச்சுருக்கம்,  அதாவது:   ம ‍  து.
மயக்குவது,  மயங்குவது என்ற இரண்டில் எதிலும்  இடைநிற்கும் எழுத்துக்களை எடுத்துவிட்டால்  மது கிடைக்கின்றது;  பூவின் இடை
நிற்கும்  சாற்றை எடுத்து தேனீக்கள் மதுவைத் தருவது போல.

மது என்பது கள்ளையும் குறிக்கும்.  ஏனை மயக்குத் தேறல்களையும்
குறிக்கும்.  தேனையும் குறிக்கும்.

மதுவுண்ட வண்டானேன் எனின் ,  வண்டு  கள் குடித்தது என்று பொருள் ஆகாது.  வண்டு தேனை உண்டது என்பதே பொருள்.

மது  என்பது பொதுப் பொருளினது  ஆதலின் " பூமது "  " மது மலர்"  என்றெல்லாம் வரணனைகள்  ஏற்றப்  படுவதுண்டு.

"தேன்  வந்து பாயுது  காதினிலே" என்று பாடலில் வந்தால்,  தேன்  நாவிற் பட்டால்  ஆங்கு  உணரப்  படும் இனிமை போலும் ஓர் இனிமை,  செவிக்குள் சென்று பாய்கிறது  ,  என்பதே பொருள்.  தேனின் இனிமை `செவி உணராது
என்று குற்றம் காணலாகாது.  ஒரு சிறு கைக்குழந்தையைப் பார்த்து, Sweet   
என்று  நாம் மட்டுமா சொல்கிறோம் ?  சீனர்  மலாய்க்காரர்கள், ஏனை  மக்களாலும் சொல்லப்படுகிறதே;  குழ்ந்தை என்ன சீனியா  வெல்லமா ?  மொழிகளின் இயல்பும் மனிதனின் பொருள் உணர்ந்து உணர்த்தும் தன்மையும் அப்படி .எல்லா மொழிகளிலும் இவ்வகை ஒப்பீடு  உள்ளது  அறிக.

மயங்குவது என்பதை  ம - து  என்று சுருக்குவது  அதனை வெளிப்படையாகச் சுட்டாமையினால் ஏற்பட்டது,   இது  இடக்கர் அடக்கல் போன்ற ஒரு தேவையாகவோ  விரைந்து வணிகம் செய்தற்பொருட்டோ  ஏற்பட்டிருக்கக் கூடும்.  நாளடைவில் இது ஒரு தனிச் சொல்லானது,

இது பற்றி மேலும் அறிய:

https://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_2.html

மது என்பது மலாய் மொழியிலும் வழங்குகிறது.  அது  மா - டு  என்று  ஒலிக்கப்  பெறும் .தமிழ் மூலங்களிலிருந்து பிறந்த சொல்  பல வேறு திரிபுகளால், பிற மொழிகட்கும்  சென்று வழங்குதல் தமிழின் பெருமையே ஆகும்,  

செவ்வாய், 25 அக்டோபர், 2016

பதி பெண் வீட்டில் சென்று பதிந்து வாழ்பவனை............

பதி என்பது பலபொருளொரு சொல்.

இது அழுந்துதல், ஒடுங்குதல், கீழ்ப்படிதல். பணிதல்,பள்ளமாதல், ஊன்றுதல்,  ஆழ்தல், தங்குதல், நிலையாதல், எழுதல். ‍ என்று பல‌
பொருளுடைத்து.

பதி என்பது, உண்மையில் பெண் வீட்டில் சென்று பதிந்து வாழ்பவனைக்
குறிக்கிறது. அவனே கணவன்.( கண்போன்றவன்).  புருடன் ( புருவம் போன்று கண்ணாகிய பெண்ணைக் காப்பவன்.)

கண்  புருவம் என்பவை உடலிற்  பதிந்து பயன் தரும் உறுப்புகள்.

பழங்காலத்தில் பெண்களே தலைமை தாங்கினர். பெண்வழிக் குடும்பங்களே
நடைபெற்றன.  matrilineal.   இன்றும் உலகில் சில மக்கள் கூட்டத்தினர், பெண்மைத் தலைமையே போற்றுகின்றனர்.

பெண் வீட்டிற் சென்று ஆண் பதிந்து (புகுந்து) நின்ற படியால் அவன்
பதியானான். சொத்துரிமை உடையவர்களும் பெண்களே யாவர்.

பதிதல் என்பதன் பொருளைப்  பாருங்கள். அப்போது இது நன்கு தெளிவுறும்.

ஆணின் பெயர் அல்லது ஆணின் குடும்பப் பெயரைப் பிள்ளைகள்
தாங்கியதன் காரணம், பதிந்து நின்றவனை அடையாளம் தெரிவிக்கவே
ஆகும். பெண் நிலையாக வீடு நடாத்தியதால் அவள் பெயர் இடுதல்
வேண்டாமை உணரப்படும்.

கடவுள்  சீனிவாசனும் ஸ்ரீ  என்னும்  பெண்ணில் வசித்தவனே ஆவான் .

மனிதன் ஆரம்பமானது பெண்ணுக்குள்ளே  என்ற பட்டுக்கோட்டையின்  பாட்டும்  பொருள் பொதிந்தது ஆகும்.

பெண் அடிமை  பிற்கால நிகழ்வு.

அனைவர்க்கும் தீப ஒளி நல்வாழ்த்தே!

இனிதான தீபஓளிப் பண்டிகையே
இன்புதரும் பலகாரம் பலவகையே!
கனிவாகப் பெரியோர்முன் பிள்ளைகளும்
களிப்புடனே ஓடியாடி விளையாடும்.

தனியாக இருப்போர்க்கும் பெருமகிழ்வே
தமிழாலே தெய்வத்தை வாழ்த்திடுவீர்
பனியோடும் பகலோனைக் கண்டுவிடில்
பாரினிலே அதுபோலப் பயன்பெறுவீர்.

அனைவர்க்கும் தீப ஒளி நல்வாழ்த்தே
அகிலமெலாம் தீவினையின்  நீங்கிடுக!
மனையாளும் மக்களுடன் மகிழ்நனுடன்
மனம்போலே வாழ்வுபெறும் மங்கலமே

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

மரணமும் உடல் விறைப்பும்

ஒரு மனிதனோ அன்றி விலங்கோ இறந்து இயல்பான இயற்கைச் சூழ் நிலைகளில் ஏறத்தாழ நான்கு மணி நேரத்துக்குள் உடல் விறைப்பு ஏற்படுவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதனை ரிகோர் மார்ட்டிஸ்
 என்று  கூறுவர். பின்பு நேரம் செல்லச் செல்ல, அவ் வுடல் தளர்ந்து, பின்
அழுகிவிடத் தொடங்குகிறது.

இந்த இலத்தீன் தொடர்,மருத்துவத் துறையில் இறப்பு ஆய்வில் பயன்படுகிறது.

ரிக்கோர் மார்ட்டிஸ்:      

இறுகு  >  இறுகு ஊர் >  றுகூர்  >  rigor.


மரி தீர்  >   mortis

மரித்தல்  தீர்ந்ததும்  இறுகுதல்  ஊர்ந்தது .


ரகர  றகர  முதலாய சொற்கள் தம் இகர உகர  முதலெழுத்தை இழப்பவை .

இங்ஙனம் தமிழ்  இலத்தீனுக்குச் சொற்கொடை வழங்கியுள்ளது.

மரித்தல்  மடிதல்  என்பதன் திரிபு . இது முன் தந்த விளக்கம்.

மரணமும்  உடல்  விறைப்பும்

சனி, 22 அக்டோபர், 2016

சொல்: புரட்டாசி

பழைய நலமற்ற நிலைமைகளை மாற்றி, புதிய பற்றுக்கோட்டினைத்
தருவது புரட்டாசி  ஆகும்.

புரட்டிப் போடுவது என்ற பொருளில்  "புரட்டு"  என்ற சொல் வருகிறது.
புரட்டுவது  எனில் முழுதும் மாற்றிவைப்பது.

ஆசு என்பது பற்றுக்கோடு; ஆதரவு; சார்பு தருதல்.

இரண்டு சொற்களும் சேர்ந்து புரட்டாசி ஆயிற்று.  இறுதி இகரம்
விகுதியாகும்.

சகரத்துக்குத் தகரம் போலி யாதலின், புரட்டாதி எனவும் படும்.

இம்மாதம் விரத மாதமும்  ஆகும்.   விரதத்தினால் தீமைகள் விலகி நன்மை
உருவாகும்  என்பதும் மக்கள் நம்பிக்கை,

சொல்:  புரட்டாசி 

வெள்ளி, 21 அக்டோபர், 2016

சாறாயம் and arrack.


சாராயம் என்ற சொல்லை ஆய்ந்து முன் எழுதியுள்ளேன். எனினும்
அதற்குரிய இடுகையை இங்குக் காண இயலவில்லை.

அதை மீண்டும் பதிவு செய்வோம்.

சாராயம் என்பது உண்மையில் சாறாயம் ஆகும். பேச்சு வழக்குச்
சொல்லாகிய இதனை எழுத்தால் வரைந்தவர். றா என்ற எழுத்துக்குப்
பதிலாக ரா என்பதை இட்டு எழுதியதே இதில் கோளாறு ஆகும்.

என்றாலும், சார் என்பதிலிருந்தே சாறு என்ற சொல் தோன்றிற்று. ஒரு
காயைச் சார்ந்துள்ளதே அதன் சாறு ஆகும்.

ஆயம் என்பது ஆயது, ஆனது என்று பொருள்படும் ஒரு  பின்னொட்டு
ஆகும்.

சாறாயம் பல பொருள்களிலிருந்து எடுக்கப்படுகிறது. அரிசியிலிருந்து
எடுக்கப்படுவது உண்டு.

அராக் என்பதும் அர் : அரிசி;  ஆக் : ஆக்கு என்ற இரு சொற்களின்
சிதைவே ஆகும். இத்  தேறல்  பின் பிற பொருள்களினின்றும்   Molasses பெறப்பட்டது. இச்  சொல்லைப்
புனைந்தோர் திறமைசாலிகள்   ஆவார்.


சாற்றாயம் என்று வருதல் வேண்டுமன்றோ எனின், சொல்லமைப்பில்
இங்ஙனம் வருதல் கட்டாயமில்லை, இது சொற்கள் பல ஆய்ந்தபின்
அடைந்த தெளிவு ஆகும்.  அன்றியும் இடைக்குறை றகர ஒற்று எனினும்
ஆம்.

சாராயம் என்பது இவ்வாதத்தை ஒருவாறு போக்குவது ஆகும்.




புதன், 19 அக்டோபர், 2016

சாரணர் சொல்லமைப்பு

சாரணர்  என்பது நன்கு அமைந்த நற்றமிழ்ச் சொல்.

சார்தல் என்பதனடிப் பிறந்த இச்சொல், இவர்கள் ஒரு இயக்கத்தையோ, தலைவனையோ, ஒரு கூட்டத்தையோ சார்ந்திருப்போர் என்பதைத் தெளியக்காட்டுகிறது.

அணர் என்பது, பொருந்தி நிற்போர் என்பதைத் தெரிவிக்கிறது.

அண் + அர் =  அணர்

அண் > அணவுதல்,
அண் >அண்டுதல்.
அண் > அண்முதல் 
முதலிய சொற்களின் பொருளைக் காண்க.

சார்ந்து அணவுவோர்,  சார்ந்து அண்டி வினைசெய்வோர் என்பது
பொருளாம்.

மணிமேகலையில்  "நக்க சாரணர்  நயமிலர் "  என்ற தொடர்,   கள்ளும்  மனித ஊனும் உண்ணும் தீவு மக்களுக்கு  வழங்கப்பட்டது.


நகுதல் பல பொருளொரு சொல்.  சிரித்தல், ஒளிவீசுதல், மிக்க‌
மகிழ்வுடன் பாவச் செயல்களில் ஈடுபடுதலையும் குறிக்கும்.

நகு > நக்க. (பெயரெச்சம்)  தகு > தக்க  என்பதுபோல .

நக்குதல் ( நாவால் நக்குதல் என்பது வேறு)

பள்ளிகளில் சாரணர் இயக்கம்  scouts movement  உள்ளது.  நீங்கள் அறிந்தது இதுவாகும்.

நல்ல தமிழ்ச் சொல் இதுவாம்.

அணம்  விகுதி  பெற்ற  சொற்கள் ,   விகுதியின்  அமைப்பும்  பொருளும்::-

https://sivamaalaa.blogspot.sg/2015/09/suffix-anam.html


மற்றும் :  https://sivamaalaa.blogspot.sg/2016/02/blog-post_52.html  வாரணம் .

செவ்வாய், 18 அக்டோபர், 2016

திரிந்த பின் தம் வழி ஏகும் சொற்கள்

பேச்சு வழக்குத் திரிபுகளையும் எழுத்தில் உள்ள அவற்றுக்கான சொல் வடிவங்களையும் ஒப்பீடு செய்து, அவற்றைப் போலி என்று சொல்வதில்லை. பேச்சு வழக்கில் வருவனவற்றை இழிசனர் வழக்கு
என்று ஒதுக்கிவந்துள்ளனர்.

எழுத்துமொழியில் ஒரு கருத்தைக் குறிக்கச் சரியான சொல்லை அறிய இயலாமல் ஒருவரிருக்க, அவரே பேச்சில் அதைத் தொல்லை ஏதுமின்றி உரிய சொல்லைப் பயன்படுத்திக் கருத்தை அறிவித்துவிடுதலையும் ஊன்றிக் கவனித்தறியலாம்.

ஓவர்சியர் என்ற ஆங்கிலத்துக்குப் படித்தவர்கள் உரிய தமிழை மொழிபெயர்த்துக் கூற கடின முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, பேச்சுத் தமிழ் அதைக் கங்காணி என்று எளிதில் கூறிவிட்டது. பண்டிதன்மார் பின் அதனைக் கண்காணி என்று திருத்திக்கொண்டு ஏற்றுக்கொண்டனர். இப்படிப்பட்ட திருத்தங்கள் தமிழுக்குப் பெரிய‌ ஊதியம் எதையும் கொண்டுவந்துவிட்டது என்று கூறுவதற்கில்லை.

பிடித்து என்ற எச்சம், பேச்சில் பிடிச்சு என்றே இதுவரை வழங்கிவருகிறது.  மலையாளமும் பிடிச்சு என்றே வழங்குகிறது.  ஆனால்
த ‍ > ச பரிமாற்றம் எழுத்திலும் உள்ளது.

இன்னும், டகரத்துக்கு ரகரம் வருவது குறைவாகவே உணரப்படுகின்றது.
பிடித்திடுவாள் என்பது பிடிச்சிருவாள் என்று வருகையில் டு> ரு திரிபு
கண்டுகொள்ளப்படாலும் போய்விடும்.

சில உணவுகளை, அல்லது ஊணையே கொஞ்சம் விலக்கிவைப்பது
உண்மையில் விடதம் ஆகும். டு> ரு போல. ட> ர ஆகி, விடதம்
விரதம் ஆனது பலர் அறியார்.

விடு+ அது + அம் = விடதம்.
விடதம் > விரதம்.

மடிதல் சொல்லில் மடி > மரி என்று திரிதலை, புலவர் சிலர் அறிந்துள்ளனர்.  இங்கு டகர ரகரப் பரிமாற்றம்.

விடு >  விடி  >  விரி >  விரித்தல் .  விரிதல்  

ஒன்றானது விடுபட்டு  விரியும்.

சில வேளைகளில்  டகரம் ரகரமாய் மாறிப், பொருளும் சற்று வேறு நிலைக்குத் தாவிவிடும். இடும் பொருள், இருக்கும்.  இட்ட இடத்தில்
இருக்கும். ஒன்று செயல், மற்றொன்று செயலின் விளைவு.  ஆக.
இடு இரு என்பதன் முன் வடிவம் என்று அறிக.

மரி என்பது மடி என்பதன் திரிபு எனினும், மடிதல் மரிதல் என்று ஆகாது.
மரித்தல் என்று த‌கரம் இரட்டித்தே வரும். மரி என்பதனோடு அணம் விகுதி சேர்ந்து, மரணம்  ஆவ‌துபோல், மடி > மடணம் ஆவதில்லை.
சொற்கள் திரிந்தபின் தம் வழிப்  போய்விடுகின்றன. என்பது உணர்க.


புலவு  என்பது இறைச்சி.  எனினும் புலவர் என்பது பெரும்பாலும் இறைச்சி உண்பவரைக் குறிப்பதில்லை. ஒரு விகுதி மட்டும்தானே
மாற்றம். ஏன் இத்துணை பொருள்மாற்றம்?

புலையர் என்போரும் புலவு உண்டவர் என்பர், எனினும் புலவு உண்போர்
பலர், அவர்கள் எல்லோரும் புலையரல்லர். பொருள் பொருத்தமாக‌
இல்லை. இவர்கள் முன் காலத்தில் ஐயர்கள் போலும் சில  மந்திரங்கள் சொல்லி, இறைச்சி முதலியன இட்டுப் படைத்துச் சடங்குகள் செயதனர்
என்று தெரிகிறது.  ஆகவே சிறிய ஐயர்கள். புன்மை = சிறியது.
புல்+ஐயர் >  புல்லையர் > புலையர் (இடைக்குறை)  புல்லையா என்றபெயர் உள்ளோரும் உளர். இவர்கள் வரலாறு ஆய்வுக்குரித்து.








  

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

தாமதம்

தாமதம் என்ற சொல் பற்றிப் பத்தாண்டுகட்குமுன்னரே எழுதியிருந்தது
இன்னும் நினைவிலுள்ளது. ஆனால் அது இங்கு கிடைக்கவில்லை. எழுதி வெளியிடும்போதே அதை அழித்துவிடும் ஒட்டு மென்பொருள் கள்ளத்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தபடியினால், அது அழிந்திருக்கக் கூடும்.

இப்போது அதை மீண்டும் காண்போம்.

செய்ய ஒதுக்கப்படும் நேரத்தை மதிப்பிடும்போது, உரிய அளவிலான நேரத்தை ஒதுக்காமல் தாழ்த்தி மதிப்பிட்டு, குறைந்த நேரத்தையே ஒதுக்குவோமாயின், வேலையைத் தொடங்கிப் பார்க்குங்கால், நேரம்
போதாமையினால், ஒரு தாமதம் ஏற்படுகிறது.  நாலு நாள் வேலைக்கு
இரண்டு நாள் ஒதுக்கினால், இரண்டு நாட்களில் வேலைமுடியாமல்
தாமதம் ஏற்படுகிறது.

இதுவே தாழ்மதித்தல் ஆகும்.  இதிலுள்ள ழகர ஒற்று மறைந்து   தாமதித்தல்
தாமதம் என்றானது.   தாழ் மதி >  தாமதி >  தாமதி + அம்  =  தாமதம் .

நேர அளவீடும்  வேலைச் செயல் அளவீடும்  ஒத்து இயலாமைதான்  தாமதம் என்பது.  இங்கு மதி என்பது அளவிடுதல் குறித்தது.

ஆங்கிலத்தில்  டிலே என்பதற்கு என்ன பொருள் ?  டி  என்பதென்ன?  லே
என்பதென்ன ?  டி =  கீழே?   லே = வைத்தல் ?  இச்சொல்லையும்  ஆய்ந்து
அறிதல்  நலம்.

தாழ  என்பதையே  "டி " -யும் குறிக்கும்.

இதுபின் எவ்வகையான காலத் தாழ்த்தையும் குறிக்கலாயிற்று. 

  



சனி, 15 அக்டோபர், 2016

கடாட்சம்

மனிதனாய்ப் பிறந்தவன் தன் வாணாளில் பல துன்பங்களை அடைகிறான். துன்பம் தாங்கொணாத போது, அவன் இறைவனைப் பலகாலும் வேண்டுகின்றான். இறைவன் உடனே வந்து அருள்புரிதல்
கதைகளில்கூட பெரும்பாலும் வருவதில்லை. இறுதியிலேயே வருகிறான்; துன்பத்தை நீக்கி அருள்கிறான்.

ஒருவர் மலையினின்று விழப்போகுங்காலைதான் அவன் வந்தான்;
இன்னொருவர் கண்ணைப் பெயர்த்து அவன் கண்ணிலப்பினபின் தான்
வந்தான்! இனி வாழேன்; இனித் தாளேன் என்று அலறியபின் தான் வந்து
அஞ்சேல் என்று அருள்புரிந்தான்.

கடைசியில் ஆள்வோன் அவன்!

அது கடாட்சம் எனப்பட்டது.

கடை +  ஆள் + சு +  அம்  =  கடாட்சம்   ஆனது.

கடை  என்பதன்  ஐகாரம் கெட்டது    கட  என்று நின்றது.

எவ்வளவு  தொலைவிலும் கடந்து வருவோன் ;  மலைகளும் காடுகளும்
அவனுக்கு   ஒரு பொருட்டல்ல . கட  என்பதற்கு இப்படிப் பொருள்கூறினும்
அமையும்.

கட  + ஆள் + சு + அம் =  கடாட்சம் . கடந்தும் வந்தாள்வோன் தந்த அருள் .

கடாட்சம் தமிழ்.

வெள்ளி, 14 அக்டோபர், 2016

சிகிச்சை


புகழ்ப்பெற்ற முதலமைச்சர் அம்மா அவர்களின் சிகிச்சை பற்றிப் பலரும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.  காணொளிப் படங்களும்
வெளிவந்துள்ளன.  இதுகாலை,சிகிச்சை என்ற சொல்லைப் பற்றி எழுதியதைத் தேடிப் பார்த்தேன். எழுதியது அழிக்கப்பட்டுவிட வில்லை. இன்னும் உள்ளது.

அதனை இங்குக் காணலாம்.

http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_14.html

கள்ள ஊடுருவிகளால் அழிபடாதிருக்கும் அதைப் படித்து இன்புறுங்கள்


வியாழன், 13 அக்டோபர், 2016

பசுமதி மணமுள்ள அரிசி

பசுமதி என்ற  சொல்லை ஆய்வோம்.

இது நல்ல மணமுள்ள அரிசி வகையாதலால் இப்பெயர் பெற்றது என்று
எண்ணுகின்றனர். வாசம் என்ற சொல்லிலிருந்து இது பிறந்ததென்பர்
வாசித்தல் நீண்டு செல்லும் வழி என்று பொருள்படும் வாய் (வாய்க்கால்)
என்பதிலிருந்து அமைந்தது. இது சமஸ்கிருதத்திலும் சென்று தங்கியுள்ள படியால், அம்மொழி அகரவரிசையை மட்டும் தேடிப்பார்த்தவர் அதைச் சமஸ்கிருதம் என்று முடிவுசெய்வது இயல்பு.   வாசம்  அல்லது மணம் ( பலவும் ) என்பவை புறப்பட்ட இடத்திலிருந்து  நீண்டு  பரவும் தன்மை உடையவை தான்.

வாய் >  வாயித்தல்
வாயி  > வாசி > வாசித்தல்.

ஆனால் வாசம் என்ற சொல்லினின்று வாசமதி என்று அமைந்து பின்பு அது வசுமதி ஆகி பின்னர் பசுமதி ‍> பஸ்மதி என்றானது என்பது "இருக்கலாம்" என்று சொல்லத்தக்கது என்றாலும், அது பசுமை+ மதி என்ற இரு சொற்களின் புனைவு என்பதே பொருத்தம் என்று முடிக்கலாம்.

பசுமையானது, புதியது, வாசமுள்ளது.  பசுமை மாறிய பொருட்களே
தீய நாற்றமெடுப்பவை. ஆகையால் பசுமை என்பது  வாசம் என்பதையும் உள்ளடக்கி, புதிது என்றும் பொருள்படுவது.மதி என்பது எங்கும் விரும்பப்படுவது என்றும் மதிக்கப்படுவது என்றும் பொருள்படும்.

எனவே,

பசுமை+ மதி = பசுமதி என்பதே உண்மையான சொல்லமைப்பு ஆகும்,

இது வட இந்தியா, பாக்கிஸ்தான் முதலிய இடங்களில் விளைந்தாலும்,
இவர்கள் இதை விற்பனைப் பொருட்டு விளைவிப்பவர்கள். அரிசி இவர்களின்  நிலைத்த உணவன்று. கோதுமையே இவர்கள் உணவு.
இது அங்கிருந்த தமிழர்களால் புகுத்தப்பட்டது.

முருங்கைக்காய்  வேம்பு முதலியவை மலாய்க்காரர்கள் அறிந்துகொண்டது போன்ற நிலையே.  ஒரு மலாய் நண்பர் முருங்கை மரத்தை வெட்டு என்கிறார்.  அதைப்  பற்றிய நன்மைகளைப்  பத்து நிமிடம் யானெடுத்துக் கூறின பின்
இப்போது முருங்கைச் சாறு சாப்பிடுகிறார்.    ( rebus  பண்ணுகிறார். )   இது என் வட்டாரத்தில் பரவி , ஒரு நாள் நான்  வீடு  சென்று சேர்ந்த காலை  முன்புறத்திருந்த  மரத்திலிருந்து சில கிளைகளை ஒடித்துக் கொண்டிருந்தார்கள்.  நல்லன பரவும்.

பசுமதி  -   நெல் விளைத்த தமிழர் இட்ட பெயராக வேண்டும். பசுமை மணம்  பரப்பும்  நெல் வகை.

புதன், 12 அக்டோபர், 2016

சளிபிடித்து மூன்றுநாள்

மூக்குச் சளிபிடித்து மூன்றுநாள் யானிளைக்க‌
நாக்கும் சுவையுணவு நாணிற்றே ‍‍‍=== பார்க்குமோர்
தேக்கினைப் போலும் திடத்தினர் என்றாலும்
ஊக்கம் இழப்பரே உண்டு.

திங்கள், 10 அக்டோபர், 2016

பொத்தகம், book

புத்தகம் என்ற சொல்லுக்கு நேரானதாக , ஆங்கிலத்தில் "புக்" எனப்படுகிறது.

புத்தகம் என்பதினும் பொத்தகம் என்பதே சரியானது என்று தமிழ் ஆர்வலர் கூறுவர்.

பொதி + அகம் ‍=  பொத்தகம்  எனின் ஏடுகள் ஒன்றாக சேர்க்கப்பட்ட கட்டு என்று பொருளாகும்.  பொதி என்பது பொதிதல். உள் வைத்துக்
கட்டுதல்.  இதில் ஒரு இகரம்  கெட்டது;  பொதி < பொத்+ இ.
பொதி என்பது கட்டுச்சோறு என்றும்  பொருள்படும்.

பொத் > பொது.  ( பலர் ஒன்று சேர்தல், சேர்ந்திருத்தல்).
பொத் > பொதி.  (கட்டு)

பொத் > பொத்+ அகம் = பொத்தகம்,  ஏட்டுக்கட்டு. கட்டேடு.  கட்டோலை.

பொத்துதல் : இது கட்டுதல் என்றும் பொருள்.

பொத் என்பது ஒரு அடியன்று . விளக்கும்பொருட்டு   , இவ்வடிவு
காட்டப்பட்டது.

புதை என்பது பேச்சில் பொ தை   என்று வடிவு  கொள்ளும்.   புதைப்பதும்  ஒரு துளை  செய்து.  மண்கட்டுக்குள் ஒன்றை இடுவது ஆகும்.   இங்கு வரும் கட்டுப் பொருளைக்  கவனிக்கவும் .

பொத்துதல் = கட்டுதல்.
பொத்து + அகம்  எனினும் அதுவே ஆகும்.   = பொத்தகம் .

புத்தகம் எனின் புதிய அகம்  ஆகும்!!

பொத்தகம்  என்பதைச் சமஸ்கிருதம் புஸ்தகம்  ஆக்கிற்று.  அது பின் தமிழில்
புத்தகம்  ஆனது.

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

சுட்டடிச் சொற்கள் : உ முதல் துதித்தல் வரை

உகரம் முன்னிருப்பதைக் குறிக்கிறது என்பதைப் பல இடுகைகளில் அவ்வப்போது சுட்டிக் காட்டியுள்ளோம்.

உவன் :  முன் இருப்பவன்.
உன்:   முன் இருப்போனுக்கு உரிய.  (எடுத்துக்காட்டு: உன் புத்தகம். உன் வீடு என்பன ).
உது:  முன் இருப்பது.

உதி:
உது என்ற முன் இருப்பது என்னும் க‌ருத்தினின்று உதி என்ற சொல் தோன்றிற்று என்பதைக் கூர்ந்துணர்க. உதி > உதித்தல்

உது > உதை:  கால் முன் சென்று ( பிறிது ஒன்றை அல்லது ஒருவனைத் )தொடுதல்.

உ > உய் > உய்தல்.    முன் செல்லுதல்  முன்னேறுதல்.
உ > உது > உந்துதல்.   முன்செலவுறுத்துதல்.

உ > உது > உது + அ + அம் =  உதயம்.  முன் தோன்றி அங்கு
செல்லுதல்.  அ = அங்கு. யகரம் : உடம்படுமெய்.  (  எழுதல் .)

உதையம் > உதயம் எனினுமாம். ஐகாரக் குறுக்கம்.

உது >  நுது > நுதல்.  முன்னிருக்கும் நெற்றி.

உயிரின் முன்  ஒரு நகர மெய் தோன்றிற்று.

நுது > நுதி : புகழ்தல்.

--

நுது > நுதல் > நுதலுதல் ,  ஏதேனும் சொல்லும்போது ஒரு கருத்தை
முன் வைத்தல். விடையம் ‍ > விடயம் > விஷயம். விடுக்கும் செய்தி.
நுதலுதல் : விடயம் உரைத்தல்.

நுது > நுந்து > நுந்தல்.  கொட்டுதல், முன் இறைத்தல், பொழிதல்.
 (உது > உந்தல் போல).

உ> நு > நுவலல்  : சொல்லுதல். முன்னாக மொழிதல்.

நுவலம் > நுவனம்:  நூல்.     ஒ நோ: கவல் > கவலம்> கவனம்.

உ > து >  துப்பு:  முன் உமிழும் எச்சில்.

உ > து > துப்பு: முன்மை உடையதாகிய உணவு.
உ > து > தூவு:  முன் தெளித்தல்.

உ >  து  > துய் .  துய்த்தல் .  முன் சென்று அடைந்து அதில்  மகிழ்தல்

உ> து> துதி.   முன்வைத்துப் புகழ்தல்.  துதி > ஸ்துதி.

துதிக்கை .

உ >  ஊ

ஊகம் .  யூகம்   அறியாததை மனத்தால் எண்ணி அறிவது.  நேரடியாய் அறியுமுன்  எண்ணி அறிவது.


ஊங்கு:  விட.

அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை. (குறள்.)


உ > ஊ > தூ > தூவு   தூவுதல்.

தூவு > தூவம் > தூபம் :  பொடி தூவிப் புகை கூட்டுதல்.   வ> ப .

எல்லாம் விளக்க நேரம் போதாது. இவற்றினின்று பலவற்றை நீங்கள்
தெரிந்துகொள்ளலாம்.

இவற்றைத் தமிழ்ப்புலவன்மாரும் கூறியுள்ளனர்.

ஆய்ந்து  விரித்துணர்க .



சனி, 8 அக்டோபர், 2016

மதியும் அறிவும்

மதி என்பது அறிவு குறிக்கும் தமிழ்ச்சொல்.  இதற்குரிய வினைச்சொல்
மதித்தல் என்பது. மதித்தல் என்ற வினைச்சொல் தமிழிலிருப்பதனால்
மதி என்பது தமிழ்தான். அறிவு என்பது அறிந்துகொள்ளும் செயல் அல்லது திறன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

திருக்குறளில் உள்ள ஒரு சிறந்த பா இதுவாகும்.

மதியும் அறிவும்  இப்போது ஒப்பாக வழங்கப் படுவதுண்டு;   இது காலப் போக்கில் பொருளிழப்பு  ஆகும்.

முயலுக்கு மூன்று கால்கள் என்று யாராவது சொல்லி அதை ஒருவன்
நம்பினால் அவனுக்கு அறிதிறன் தேவைப்படுகிறது என்றுதான் கொள்ளவேண்டும். ஒருகாலை இழந்துவிட்ட  முயலானால்   அதுவும்
முயல்தான்;  அதை மாற்றுத் திறனுடை முயல் எனலாமா ?

மதி என்பது ஒப்பிட்டும் அளவிட்டும்  அறியும்  மேலான  திறனைக் குறிக்கிறது.
ஆகவே  அறிவு  மதி ஆகிய சொற்களிடையே  ஒரு சிறு வேறுபாடு உள்ளது.
நிலவு  காலத்தை அளவிடுவதால்  அதற்கு  மதி  என்பது பெயராயிற்று .


மதியைக் கொண்டு அளவிட்ட காலம்  மாதம் எனப்பட்டது. மதி +  அம் = மாதம்.  இது முதனிலை நீண்டு விகுதி பெற்று, இடைநின்ற இகரம் கெட்ட பெயர்.  இதைப் போன்ற இன்னொரு சொல் படி+ அம் =  பாடம் ஆகும்,

சுடு+ அம் = சூடம்  என்ற சொல்லில்  முதனிலை நீண்டு உகரம் கெட்டு விகுதி பெற்றது. அறு >  ஆறு  என்பதில்  முதனிலை நீண்டு பெயரானது,  ஏனை விகாரங்கள் யாவையும் இல்லை .

இவற்றை நன்கு மனத்திலிருத்திக் கொள்க.

நுதி  என்பதும்  அறிவின் கூர்மை குறிக்கும் பழஞ் சொல்லே.




வியாழன், 6 அக்டோபர், 2016

காய்ச்சலென்றால்

காய்ச்சலெனில்  மாத்திரையைப் போட்டுக் கொள்வாய்
கடைகளிலே பலவிதங்கள் கிட்டும் கேட்பாய்!
நாயுறக்கம் கொண்டாலும் தேக நன்மை
நாடுவது கடனன்றோ நாளும் நாளும்.
போய்க்கிடந்து மருந்துண்ண மாட்டே  னென்று
புலம்புவதாற் பயனுண்டோ இன்றேல் சென்றே
நோயகற்று மருத்துவரின் நுட்ப  ஆய்வில்
நுவல்மருந்து பெற்றருந்தி நூறு  காண்பாய் .



நுறு :  நூறாண்டு .