சனி, 23 மே, 2026

மவுனம், மௌனம்

எண்ணங்களில் சிறியவை என்று பழிக்கப்படுவன பல. பெரியன என்று போற்றப்படுவனவும் உள.  இவற்றை இவ்வாறு சிறியன, பெரியன என்னாமல்,  உயர்வன,  தாழ்வன என்றும் பிரிக்கலாம். தெய்வப் புலவர் இதை, '' உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்,  மற்றது  தள்ளினும் தள்ளாமை நீர்த்து''  என்று அருளுதல் காண்க. மனவுணர்வின் அடிப்படையில் எழுவனவற்றை, இத்தகு சொற்களால் அளவிட்டுச் சொல்லும் தன்மை,  பல மனித இனத்தாரிடத்தும் காணப்படுவது.

மனிதன் அதிகச் சிந்தனையில் ஈடுபடுகையில்,  பெரிய கருத்துக்களை உணர்வதுடன்,  அதிகம்  பேசுவதோ  அலட்டிக்கொள்வதோ குறைந்துவிடுவதைக் காணலாம். ஏன் அதிகம் பேசுவதில்லை?  பெரிதானதை, உயர்வானதை எண்ணுவதால்தான். இவ்வாறே, கணக்கில் ஈடுபட்டிருக்கும் போதும் அதிகம் பேசுவது குறைந்துவிடுகிறது.

மா என்ற சொல், தமிழில் பெரிதைக் குறிக்கிறது.  இது மஹா என்று சமஸ்கிருதத்தில் வரும். இதுவே மகா என்றும் எழுதப்பெறுவது ஆகும்.ஆதிகாலத்தில் கண்ணாடி பளிங்கு முதலியவை இல்லாதிருந்தன. பிறகு அவை கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்தகாலத்தில்,  மகுரம் என்ற சொல் உண்டானது.  மக+ உரு+ அம் >  மகுரம் என்று திரிந்தது காண்க. பிள்ளை என்று பொருள்படும்  மகன், மகள் என்ற சொற்களும் இவ்வாறு தோன்றின. மகு+ உடு+ அம் >  மகுடம் என்று இன்னொரு சொல்லையும் காண்க. ஊதப்பட்டு மயக்குவதும் ''மகுடி''  ஆகிறது. இது மகு+உடு+ இ   >  மகுடி ஆகிறது.  பூவின் மொட்டும்  ஒரு மகவுதான்,  பிறப்பது.

முகு>மிகு> மகு  என்பன தொடர்புடைய அடிச்சொற்கள்.

முகு> முகுர்த்தம் என்றிருந்த சொல் நாளடைவில் முகூர்த்தம்  ஆனது.

முகு> முகு_+ உருத்தம்> முகுர்த்தம்> முகு+ ஊர்த்தம் > முகூர்த்தம் என்பது காண்க.

உரு> உருத்து= உருவினை உடையது.  உருத்தம் என்பதில் அம் விகுதி.  அமைவு குறித்தது.

உரு > ஊர் என்பது,  ஓர் அமைப்பினை அல்லது உருவினை அடைந்த இடம்.  மனிதனுக்கு உரு இருப்பதுபோல ஊருக்கும் ஓர் அமைப்பு அல்லது உரு உள்ளது.

மா என்பதிலிருந்து திரிந்த சொற்களின் வளர்ச்சி காட்டினோம்.

மகுடம் என்பது அரசன் உடுத்துக்கொள்ளும் தலையுடை.   பெரிய உடை என்றும் சொல்லவேண்டும்.

மவுனம் என்பது சிந்தனை ஆழ்வினால் பேசாமை.  உனம் என்பது உன்னுதல்> உன்னு> உன்னம்> உனம் ஆகிறது.   மா+ உனம்> மவுனம் ஆகும். மௌனம் என்பதும் அது.  உன்னுதல் சிந்தித்தல். உன்னித்தல் என்பதுமாம்.

அறிக மகிழ்வு

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை











புதன், 20 மே, 2026

வாசித்தல்.

 இது வந்தவிதம்:

வாய்>  வாயித்தல்> வாசித்தல்.  வாயினால் வெளிப்படுத்துதல்.

யகர சகரத் திரிபு.   இது போலித் திரிபு.  அதாவது போல இருக்கும் திரிபு.

இன்னொரு சொல் காணொப்புக்கு:

பாய்  -  ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு வேகமாச் செல். 

நீர் பாய்கிறது.

வேகமாக இடம்பற்றிக்கொள்ளும் அன்பு:  பாய்>  (பாயம்) > பாசம்

வேகமாகப் படர்வது பச்சை:  பாய்> பாசி.  ( பாய்> பாயி என்று  யி வந்து சொல் முடிவதில்லை.  அதற்குப் பதில் சி வரும்.)

அன்பாய் வழங்குவது ஆசி.    இது  ஆதல்>  ஆய்>  ஆசு  >  ஆசி.

ஆ> ஆய் என்ற எச்சவினையே இதன் உண்மையான அடிச்சொல்.  ஆனால் இப்படி சொல்வது தவிர்ப்பர்.  பாலி மொழிபோல் எச்சத்திலிருந்து சொல்லாக்கம் செய்வதைத் தமிழ்ப்புலவர்கள் விரும்பார்.  ஆகவே ஆய் என்பது தவிர்ப்பர்.

அறிக மகிழ்வு

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

திங்கள், 18 மே, 2026

விஞ்ஞாபனம்

 இச்சொல்லை  (விஞ்ஞாபனம்)  இன்று தெரிந்துகொள்வோம்.

இந்தச் சொல்லைக் கேட்டவுடன்,  இது ஏதோ புரிந்துகொள்ளக் கடினமான ஒரு பொருளுடையது என்று எண்ணிவிடவேண்டாம்.  இது தமிழில் வழக்குடைய சொல்லே ஆகும்.

வியன் என்ற சொல் நல்ல வழக்குடைய சொல். வழக்கு என்று நாம் சொல்வது,  வழங்குதல் என்பதுதான். இன்னொரு வகையில் சொல்வதானால்  பயன்பாடு அல்லது உபயோகம் உடையது  என்பதுதான்.

அடிச்சொற்களைக் காண்போம்.

வியன்  -  விரிவு.  '' விரிநீர் வியனுலகம்''  என்ற குறள் பயன்பாட்டினைக் காண்க. ( விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலத்து உள்நின்று உடற்றும் பசி என்னும் குறளில் வருகிறது. தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரின் குறள் நூலைப் பார்த்து எழுதவில்லை ஆதலான் குறள் எண் மறதி ).

விர்> விய் என்று திரியும். விர்> விரி.  விர்> விய்> வியன்.  விய்> விஞ்.

விய் > வியம்> வியங்கோள்.   ( வியங்கோள் வினைமுற்று).

விய் > விய> விய+ ஆ > வியா.  விரிவாகும் என்று பொருள்.  பர> பார்> பாரி.  சேர்த்தால்  ' 'வியாபாரி''.    விரிந்து பரவலாகப் போய்ப் பொருளை விற்பவன் அல்லது பரப்புவன்.  One who goes round distributing or selling goods.  விய -  விரிந்து.  இப்போது விற்பவன் என்ற பொருளே உள்ளது.  சிறப்புப் பொருள் தொலைந்தது.

வியப்பு என்பது, கண்கள் விரியும்படி,  மனம் விரியும் படி அமையும் நிகழ்வு அல்லது நிலை.

இனி ஞாபனம் என்பது:

பகவுகள்:

நாவு > நாபு>  ஞாபு.

அண் > அன் (  அணுகிச் சொல்லுதலைக் குறித்தது).

அமை>  அம்.   அமைவு என்று பொருள்.>

வியன்> இடைக்குறைந்து,  வின்> விண்.

வாய்> வார் > வார்த்தை என்பதில்  ர்>ய் மாற்றம்.

வியன்> விய்.    விர்> விய்,  ர் >ய்  காண்க.

விய> வியர்> வியர்.  (  பரவலாக [ வெப்பத்தினால்] நீர் வெளிப்படுதல்.)

வின்> வினி> வினியோகம்> விநியோகம்.  பரப்புதல்.

ஒன்றைச் செய்பவனும் அதைப் பரப்புகிறான் அல்லது பிறர்காணச் செய்கிறான்.   வின்> வினை ( செயல், தீயவை பரப்புதல் முதலியவை).

வின்> வினா.  பிறரிடம் அறிந்துகொள்ள ஒன்றைக் கேட்டல்.  இதுவும் பரவுதல்தான்.

விண்(வியன், விஞ்),  நாவு> நாபு.   அண்> அன்  ( அணுகுதல்),  அம்..அமைதல்..

விரிவு என்பதே விண், வியன், விஞ்,  விந் என்றெல்லாம் வந்தன.

பிறரிடம் சென்று சொல்வது,  தெரிவிப்பது,  தெரிவித்தல்.

இலக்கணம்ப்படி எழுதிக் குழப்பாமல் எப்படி புரியவைப்பது என்று எண்ணி, இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. 

முறைப்படுத்தி  வாசித்துக்கொள்க.


அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை













வியாழன், 14 மே, 2026

கந்தமூலம்

 மூலம் என்ற சொல்லுக்குக் கிழங்கு  என்ற பொருள் இருக்கிறது.  இந்தச் சொல்லில்  ''கந்த'' என்ற சொல்லைச் சேர்க்காமலே இந்தப் பொருள் கிடைக்கிறது.

கந்தம் என்ற சொல்லுக்கும் கிழங்கு என்ற பொருள் இருக்கின்றது.   கந்த மூலம் என்ற இரண்டையும் சேர்த்தால்  அதற்குக் கிழங்கு கிழங்கு என்று இரண்டுமுறை சொன்னதுபோலும் பொருள் வருகிறது.  அப்படி வருவது கூறியது கூறலாகிவிடும். கந்தம் என்ற சொல்லுக்கு வாசனை என்ற பொருளும் இருப்பதால் '' கந்தமூலம்'' என்ற இருபெயரொட்டுச் சொல்லுக்கு  வாசனைக் கிழங்கு என்று பொருள் கூறலாம் என்றாலும்,  இந்தக் கவிதையில் அப்படிப் பொருள் கொள்ளலாமோ என்று எண்ணித் துணிய வேண்டும்.. இந்தப் பாட்டில் அவ்வாறு பொருள்கொள்ளுதல் நேரிது என்று எண்ணமுடியவில்லை.

'' கந்தமூலமே புசிக்க நேரினும் 

கடமை தவறவே மாட்டான் தமிழன்''  1

என்று கவிஞர்  C.A. அய்யாமுத்து  பாடியுள்ளார். இவர்தாம் இப்படத்திற்குப் பாடல்களை எழுதியுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பாடல் தொடங்குவது:  ''இந்த உலகினில் இருக்கும் மாந்தரில் எழிலுடையோர் எங்கள் தமிழன் ''  என்றபடியாம். இப்பாடலின் பதிவுகள் இப்போது இல்லை என்று தெரிகிறது. 

இந்தப் பாடல்,  ஏழ்மையினால் கிழங்கு புசித்தலைக் குறிப்பதால்,  இதற்கு மேல்குறித்தபடி பொருண்மை காணுதல் தவறுதலாகத் தெரிகிறது.

கண்டம் என்பது துண்டு என்று பொருள்தருவதால்,  "முழுக்கிழங்கும் கிட்டாமல்  துண்டுக் கிழங்கே கிட்டினாலும்" என்0று பொருள்கொள்ளவேண்டும்.

கண்டு என்ற சொல் நூல்கண்டு என்ற வழக்கிலும் உள்ளது.  சேலையில் வண்டு கடித்து  கண்டு கண்டாக உள்ளது என்று கேள்விப்பட்டுள்ளோம்.   கண்டுகண்டாகத் தடித்துவிட்டது என்ற வழக்கும் உள்ளது.

கண்ட >  கந்த  திரிபு.  கண்டு>  கண்+ து.  கண்து அம் > கண்டம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை.

அடிக்குறிப்பு:  கஞ்சன் என்ற திரைப்படத்தில் வந்த பாடல்.










செவ்வாய், 12 மே, 2026

சந்தோஷம் என்ற சொல்லுரு

 இதைச் சுருக்கமாகவே பார்த்துவிடுவோம்..

சன்+ தோ  + ஷம் என்பது சந்தோஷம் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். உண்மையில்,  இது ''அன்பு தோய்ந்த அமைவு'' என்ற ஒரு வாக்கியத்தின் சுருக்கக் கருத்தே ஆகும்.   அன்பு என்ற சொல்லின் முதற்பகவு ஆகிய  அன் என்பது,  சன் என்று திரிந்தது.  இது எப்படி என்றால்,  அமணர் என்ற சொல்,  சமணர் என்று திரிந்தது அல்லவா.  அதுவே போலும் ஒரு திரிபுதான் இது. அன்> சன் என்பதற்குப் பின்,  தோய் என்பது தோய்தல் குறிக்கும் வினைச்சொல் ஆகும்.  இதில் இறுதி எழுத்தாகிய ய் தவிர,  தோய் அப்படியே சந்தோஷம் என்ற சொல்லில் இருப்பதைக் காணலாம். தோய்தல் > தோய> தோஷ என்பது அங்குள்ளது காணலாம். அம் விகுதி அமைப்புக் குறிப்பது.   அது அம் என்றே ஈற்றில் அடிச்சொல் போல் வந்து விகுதியாய் உள்ளது.

அன்பிலிருந்து விளைவதுதான் சந்தோஷம் என்பதை இச்சொல் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருப்பது இதன் சிறப்பு ஆகும்.

இவ்வாறு இச்சொல்லில் தமிழ் உதவி இருத்தலுக்கு நாம் மகிழ்வு கொள்வோம்.

இதை வேறுவகையிலும் பிரித்துச் சொல்வார்கள். ஆகவே இது இருபிறப்பிச் சொல் என்று கொள்க.  எனினும் இதுவே இதன் உண்மை வடிவாக்கம் ஆகும்.

அறிக மகிழ்க்.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை

சனி, 9 மே, 2026

வார்த்தை என்னும் சொல்.

 இந்தச் சொல்லை இன்று கவனிப்போம்.

சொல் என்பது தமிழில் பயன்பாடு மிக்குள்ள ஒரு வார்த்தை.  வார்த்தை வாயிலிருந்து வருவது என்னும் பொருளுடையது.   வரு(தல்) >  வார் > வாருங்கள், மற்றும் வாரும்,  வாரான், வாராய் என்றெல்லாம் திரிதல் காண்க.   ஆகவே  வார்த்தை என்பதில்  வார் என்பது பகுதி.   தை என்பது விகுதி.  தைத்தல் என்பது வந்து இணைவதையும் குறிக்குமாதலால்,  இந்தத் தை என்ற விகுதி, பொருளுடன் கூடிய ஒன்று எனவும் கொள்ளற்கு இடனுண்டு என்க.   இனி,  வாய் > வாய்த்தை> வார்த்தை என்று திரிந்திருத்தலும் ஏற்புடையதே ஆகும்.  ரகரம் யகரமாகும் இடங்களும் உண்டு.  இது வருங்கால் குறித்துக்கொள்க. ஆர் என்ற விகுதி  வந்தார் என்பதில் பலர்பாலில் வர,  வந்தாய் என்பது முன்னிலை ஒருமையில் வருவதால்,  இவை தொடர்புடையவை என்றும் தெரிந்துகொள்க.   இவற்றின் தொடர்புகளைத் தனியாக  ஆராயவேண்டும்.  மரி(த்தல்) என்னும் சொல்,  அதே பொருளுடன் மாய்தல் என்னும்போது,  யகரம் கொண்டு முடிந்ததும் காண்க.  சார்(தல்) என்ற சொல்,  சாய்(தல்) என்று வந்து தொடர்புள்ள பொருள்குறித்தலும் காண்க.  ஆய்தல் என்பது உள்புகுந்து நோக்கி அறிதல் குறிக்க,  ஆர்தல் என்பது நிறைவு குறிக்கவருகிறது.   இது பொருள் தொடர்பு ஆகும்.

ஒர்தல் என்பதும் ஓய்தல்  ( ஆய்ந்து ஓய்ந்து பார்த்தல்  என்பது வழக்கு)  என்பதும் தொடர்புடையவை.

வார்த்தை என்பது தமிழ்ச்சொல்.  இணைமொழியான சமஸ்கிருதத்தில் வழங்கவும்  ஏற்புடைய சொல்லே  ஆகும்.

மலாய் மொழியில் வார்த்த பெரித்த  என்றால் செய்தி அறிக்கை. இலக்கிய வழக்கும் உடையது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.







புதன், 6 மே, 2026

சுலோகம் என்ற சொல்.

 சொல்லானது வாயிலிருந்து புறப்பட்டாலும்,  அது கேட்போனின் காதுகளில் சென்று அடைதல் வேண்டும்.   சொல்  என்பது  வு என்னும் விகுதி பெற்று,  சொலவு என்றுமாகும்.  அது செவிகளைச் சென்றடைந்து பின்னரே அறியப்படுதலால்,  சொலவடை  ( சொலவு + அடை) என்றும் வந்தது.  இனிச் சொலவு என்பது, அம் விகுதி பெற்று,  சுலவம் என்றும் வந்தது.

இதிலிருந்து,  சுலவம்>  ( சுலோவம்) >  சுலோகம்  என்று வந்ததில் ஏதும் வியப்பில்லை.   வகரம் ககரத்துக்கு மாற்றீடாக வரும் சொற்களைத் திரிபுகளின் பட்டியலில்  சென்று கண்டு இன்புறுக.  சிலவற்றை யாம் பழைய இடுகைகளில்  விவரித்துள்ளேம்.  வாய்ப்பேச்சிலும் இந்தத் திரிபு காணலாம்.  ஆகும் என்பதை ஆவும் என்போர் பலர்.  வேகாது >  வேவாது!!  நாக்கு என்ற சொல், நாவு என்று திரிதல் காணின், ககர வகரத் தொடர்பு எளிதில் புரியும்.  இதில் புரியவேண்டியது என்னெவென்றால் நாக்கு என்பது நாவ்வு என்று வருவதில்லை,   நாவு என்றே வரவேண்டும்.  ஒற்றுக்கு ஒற்று வரவேண்டுமென்பதில்லை.

இதை,  சொல் > சுல்,  சுல்+ ஓகம் >  சுலோகம் என்றும் காட்டலாம்.   ஓகம் என்பது,  ஓங்கு,  இடைக்குறைந்து  ஓகு, பின் ஓகு+ அம்  > ஓகம் என்றாகி,  சுல்+ஓகம்> சுலோகம் என்றுமாகும்.   ஆதலின்,  இது பல்பிறப்பிச் சொல் என்று உணர்க.

தமிழும் சமஸ்கிருதமும் உறவுடைய மொழிகள்..

திராவிட மொழிகள் என்ற பட்டியலில் சமஸ்கிருதத்தை விட்டு ஆய்ந்தது,  ஒரு வகையில் பொருத்தமற்றது ஆகும்.

வெள்ளைக்காரர்கள் சமஸ்கிருதத்தை எடுத்து உறவாடிக்கொள்ள எண்ணியதையே இது காட்டுகிறது.  கிருதம் என்பது கதம் என்பதன் திரிபு.  கதம் என்பது கத்து> கது> கதம் என்று வந்த சொல்.   கது என்பது நீண்டு காது என்றும் வந்து சொல்லானது காண்க. கத்து> கது> கதை.  வாயால் சொல்வது என்று பொருள்.  காதை, - சொல்லும் கதை..  பண்டை நாட்களில் இதைப் பாடினார்கள்  ( இசையுடன்).  சிலம்பு, மேகலை முதலிய இலக்கியங்களை இப்போது பாடுவதற்கு  (வாயினால் பாட),   வெட்கப் படுகிறார்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


ஞாயிறு, 3 மே, 2026

சத்தியம் என்ற சொல்லின் தமிழ்மூலம்.

 சத்தியம் என்ற சொல்,  தமிழ்நாட்டின் சிற்றூர்களில் இன்றும் நன்றாகவே வழங்கி வருகிறது.  இதன் தமிழ் மூலங்களை இன்று விளக்கிப் பதிவு செய்வோம்.

சத்தியம் என்பது உண்மையில் உண்மை பற்றிய மனத்திலிருந்து  எழும் உறுதிபற்றிய எண்ணப்பான்மை ஆகும்.  மனத்தில் எழுவது ஆகையினால் அகம் இங்கு பங்குபெறுகிறது.  அகத்தில் உண்மை நிலவுகிறது என்பதே நிகழ்வதாகும். இதுவே நடந்தது என்று மனம் நினைக்கின்றது.  இதை அகத்தில் இயங்குகிறது என்று நாம் சொல்வோம்.  அகத்து  (  அதாவது அகத்தில் );   இயங்குகிறது :  இதற்குரிய சொல் சுருக்கிச் சொன்னால் '' இயம்'' என்பது ஆகும். இந்த இரண்டு சொற்களையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  சேர்த்துச் சொன்னால்:  அகத்து இயம் >  அகத்தியம்.  அகத்தியம் என்று ஓர் இலக்கண நூல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.  அது இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள்.  அந்த நூலுக்கும் இப்பெயர் இருப்பது, ஒரு உயர்வான செய்தியே ஆகும்.  அது இருக்கட்டும்.

அகத்தியம் என்ற சொல்,  அத்தியம் என்று இடைக்குறைந்து.  இதில் உள்ள ககரம் மறையும்.   இனி,  அகரம் சகரமாகும்   ஆதலால்,  அத்தியம் என்பது சத்தியம் ஆகும்.   அமணர் என்ற சொல் சமணர் என்று ஆனது போலுமே இது.  ஆடு>  ஆடி> சாடி என்று சகர வருக்கத்தில் சொல் அமைந்தது போலுமே இதுவும்.  இது போன்ற திரிபுகளை பல் இடங்களில் எடுத்துக்காட்டியுள்ளோம்.

இதுவே சத்தியம் என்ற சொல்லின் பிறப்பு ஆகும்.   அகத்தியம் என்ற நூலின் பெயரே சத்தியம் என்று திரிந்துள்ளது என்று கூறினாம் இதற்கு முரண் ஆகாது என்பது உணர்க. அகக்களத்தி> சகக்களத்தி> சக்களத்தி என்ற சொல்லையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

இது பின் தமிழ்நாட்டுச் சிற்றூர்களில் வழங்கி,  சமஸ்கிருதத்தில் உண்மை குறிக்கும் சொல்லாக மாறியிருப்பது,  தமிழருக்குப் பெருமை சேர்க்கும்  வரலாறு ஆகும்.

அண்முதல்:  அண்( மூலச்சொல்)> சண்>  சம்> சந்தை என்பதும் காண்க.  பொருள்களை வாங்கப் பலர் அண்மிச் செல்வது சந்தை ஆகும்.

சத்தியம் என்பது ஒரு பல்பிறப்பிச் சொல். பல்வேறு சொல்தரவுகள் உள்ளன.  இவற்றுள் இங்கு காட்டப்பெறுவது சிறந்தது :  ஏனென்றால்,  இது பெரிதும் போற்றப்பட்ட அகத்தியம் என்னும் இலக்கண நூலின் பெயருடன் தளத்திலிருந்தே தோன்றியுள்ளதைக் காட்டுவதுதான். தமிழின் இலக்கண முதனூலுக்கு உண்டான பெயருக்கும் உண்மைக் குறிப்புக்கும் ஒரே எழுகளம் தோன்றக் காண்பதுதான்.

அறிக மகிழ்க

மேலும் அறிய:

https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_18.html

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை



  


வெள்ளி, 1 மே, 2026

தமிழ்ச் சொல்லாக்கத்தில் ஒலியமைப்பு. சொற்கள்: அன்பு அனுக்கிரகம்.

 இந்தத் தலைப்பு  ஒரு நூலாக்கத்திற்கு ஏற்ற தலைப்பு  என்னில் மிகையாகது. இங்கு ஓர் இடுகையாகப் பதிவேற்றம் செய்வதால், இரண்டு சொற்களை விளக்குவதன் வாயிலாகத் தமிழ் சொற்களின் ஒலியமைப்பினை இங்கு விளக்குவேம். வேறு இடுகைகளிலும் இதனைத் தொட்டு விளக்கியிருத்தல் கூடும்.  அவற்றைக் காணின், அவற்றையும் கருத்தில் கொள்ளுமாறு விழைகின்றனம்.

அண் என்ற அடிச்சொல்லினின்றே அனுக்கிரகம் என்ற சொல் அமைகிறது என்பதை விளக்கியுள்ளோம். இதைச் சங்கதம் என்னும் சமஸ்கிருதத்தில் மூலமாகவும் விளக்கலாம்.  அவ் வாறு பிறர் விளக்கியுள்ளனர். பல சொற்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்குறத் தக்கவையாக இருக்கலாம்.  மெத்த இனிய விளக்கம் எவ்வழி வருகிறதோ, அதுவே மிக்கப் பயனுள்ள விளக்கம் என்று கொள்ளுதல் வெண்டும். மொழியின் பண்புகளை நன்கு விளக்குவதே என்றும் நனறென நீங்கள் கொள்ளவேண்டும்.

இனி ஒலியமைப்பைச் சொல்வோம்.  அணுக்கிரகம் என்று சொல் அமைவுற்றால் முச்சுழி ணகரம் சற்று  வன்மையுடைய ஒலியே  ஆகும். னகரமும் ணகரமும் மெல்லினமே ஆனாலும் இஃது உண்மையாம்.  மேலும் முச்சுழி ணகரமாயின் பொருளில் வேறு கருத்துகள் புகுதலும் கூடும்.   ஆதலால்  அணு என்பது அனு என்று மாற்றப்பட்டது என்பதை நாம் ஒப்புதலுடன் எடுத்துக்கொள்ளவேண்டும்.

அண் > அண்பு என்று சொல்லமைந்தால் மென்மை தவழும் அன்புக்கு ஏலாமை உணர்ந்துகொள்க.  ஆகவே அன்பு என்று அமைதலே ஒலிப்பொருத்தம் உடையது என்பதும் உணர்க.

பொருட் பொருத்தம் இருப்பினும் அத்துடன் ஒலிப்பொருத்தமும் சொல்லுக்கு வேண்டுமென்பதைத் தமிழ்ச் சொல்லமைப்பு எடுத்துக் காட்டுகின்றது அறிக.

அன்பு என்பதற்கு னகரம் பயன்பாடு கண்டபடியே,  அனுக்கிரகம் என்பதற்கும் அதுவே பின்பற்றப்பட்டுள்ளது போற்றற்குரியது ஆகும்.

அனுசரணை,  அனுகூலம், அனுதுரிதம், அனுபோகம்,  அனுபவம், அனுப்பு ( வினைச்சொல்) என்பவற்றிலும் இம்முறை பயன்பாடு கண்டுள்ளது.  பிறவற்றிலும் ஒலியமைப்பு இணக்கம் கண்டு தெளிக.

 அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது