சனி, 30 மே, 2026

ஜனாதிபதி

 மக்கள் தலைவர்,   (குடியரசுத் தலைவர்) என்னும் பொருளில் ''ஜனாதிபதி'' என்ற சொல் இப்போது வழங்கி வருகிறது. இதில் சிலருக்கு  மறுப்பு இயல்வதற்குக் காரணம், குடி என்ற சொல் மக்களையும்  குடிபானத்தையும் குறித்தலாகும். குடிமகன் என்ற சொல் குடித்துத் திரிகிறவனைக் குறிக்கிறது என்பது இன்னொரு தொடர்புடைய மறுப்பாகும். சனாதிபதி என்ற வடவெழுத்து நீங்கிய சொல் பலருக்குப் பிடிக்கவில்லை.

மனிதனிறந்த பின்பு,  அவனது உயிர்,  மீண்டும் இன்னோர் உடலில் புகுந்து மறுபிறவி உண்டாகின்றது என்ற கருத்தின் காரணமாக,  சா(தல்)> ஜா> ஜன்> ஜனி என்று ஒரு சொல் உண்டாகி,  அதுவே பிறத்தல் என்ற பொருளுடைய சொல் (ஜனித்தல்)  ஏற்படக் காரணமானது என்ற கருத்து,  புலவர் சிலரிடைத் தோன்றலானது என்று எழுதப்படாத கருத்தாக ஆசிரியரிடையே வழங்கி வந்தது என்று அறிகிறோம்.

இதன் மூலம், ஜனி(த்தல்) என்ற சொல் பின்னர் உண்டாகி பிறப்பு  குறிப்பதாக‌ இனறு உணரப்படுகிறது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. கருவினுள் பின்னர் உயிர் செல்கிறது என்பதால்,  செல்> செல்நீ>  செனி> செனித்தல் > ஜெனித்தல் என்று சொல் உண்டானது என்றும்  பொருந்துகிற இன்னொரு கருத்து உள்ளது.  பழம்நீ என்ற முருகனின் பெயர் பழனி என்று சுருங்கி அமைந்தது போலும் ஓர் ஒப்புமையே இதுவாகும்.  வயல்களின் நடுவில் உள்ள குளம்,  நீரினால் வயல்களைக் கழுவிச் செழுமை அடையச் செய்கிறது  என்ற கருத்தால்,   கழுநீர்> கழனி என்ற சொல் சரியாகிறது.  தமிழாயினும் எந்த வேறு மொழியாயினும், இலட்சக் கணக்கான சொற்களுடன் உடனே உண்டாகிவிடவில்லை.   கழிபல வூழிகளாக வளர்ந்துதான் மொழிகள் நம்மிடையே வந்து எட்டியுள்ளன. மொழிநூல் (philology) (கருத்தும்) அதுவே ஆகும்.

ஆகவே இச்சொல்  ( ஜெனி, ஜனி)  ஒரு பல்பிறப்பிச் சொல் ஆகும். இதற்கு வேறு மூலங்களும் கூறப்படுதல் உண்டு.  சமஸ்கிருதம் என்பது தமிழுடன் வழங்கி வளர்ந்த இணைமொழி ஆகும். இரண்டு மொழிகளிலும் ஒன்றை மற்றொன்று வளப்படுத்திய சொற்கள் பல.

சமஸ்கிருதம்  (  சம + கதம் >  சம+ கிருதம் > சம ஸ் கிருதம்  [ ஸ் என்பது இந்த இரண்டு சொற்களையும் இணைத்து ஒன்றாக்கி,  க் என்ற வல்லெழுத்து வராமல் மென்மையாக்கி, ஒருசொன்னீர்மையை உண்டாக்கி இணைப்புறுத்துகிறது என்று அறிக.  ]  > சமஸ்கிருதம்  என்ற சொல் பிறந்தது.  சமஸ்கிருதப் புணரியல்  ( சந்தி இலக்கணம் ) வேறு சொல்லிணைப்புக் கூறினாலும் யாம் கூறும் காரணத்துக்காகவே  ஸ் என்ற ஒலி எழுகிறது.  பாணினி என்ற இலக்கண ஆசிரியன் இதற்குக் கூறும் முறையை யாம் இங்கு கூறவில்லை.  அதனை அவர்தம் நூலில் கண்டு தெளிக.   பாணினி என்பவர் வட இந்தியாவில் சமஸ்கிருத மொழிக்குச் சிறந்த இலக்கணம் இயற்றிய ஒரு பாணர் வழிவந்த பெரும் புலவர்  ஆவார்.  பாணர் என்பது குடிப்பெயர்.   இது வள்ளுவர், காப்பியர் ( தொல் காப்பியர்) என்பன போலும் குடிப்பெயர்.

குத்துச் சண்டை வகைக்குக் குஸ்தி என்று பெயர்.    குத்து> குத்தி > குஸ்தி என்று சொல் மென்மைப்பட்டது.  விரி தருதல் > விரிதாரம் (விரிவாக அமைவது),  >  விஸ்தாரம் என்று திரிந்தது  சம ஒலிச்சொல்.  அதாவது சமஸ்+ கிருதம்.    கிருதம் என்பது,  கத்து (ஒலித்தல்), >  கத்து > கது  (இடைக்குறை)> கது+ அம் > கதம்> கிருதம்.  சமஸ் கிருதம் என்றால் சம ஒலி  உடைய மொழி.  தமிழுக்குச் சமமான ஒலிகளை உடைய மொழி.  இந்தோ ஐரோப்பியம் என்பது பிற்காலத்து வெள்ளையன் தந்த பாகுபாட்டு மொழியியல். கத்து என்பதே, தமிழிலும் கத்து> கது> (நீண்டு) காது என்று வந்து செவி என்று பொருள்படும்.  அறிக.

தேவநேயப் பாவாணரும் பல தமிழ்ச்சொற்கள் சமஸ்கிருதத்திலும் ; இதற்கு எதிர்மாறு செய்யும் வளர்ச்சிகளும் இருமொழிகளிலும்,  இருப்பன என்பதையும் கண்டு,  எழுதியுள்ளார்.  ( முதல் தாய்மொழி என்னும் நூல்).  ஆனால் சமஸ்கிருதம் என்பது இந்திய மொழிதான்.  அது ஆரியன் மொழி என்பது சரியான கருத்து அன்று.  அதை வெள்ளைக்காரன் மேற்கொண்டு தம் ஐரோப்பிய மொழிகளை வளப்படுத்திக் கொண்டான். தேவைக்கு ஏற்ப எதையும் பயன்படுத்திக்கொள்வது உலக வரலாற்றில் ஒன்றும் புதிது அன்று.  நாடு, மொழி எதுவும் பிறர் மேற்கொள்ளக் கூடியதுதான். கணவன், மனைவி உட்பட எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வது கடமை  ஆகும்.

ஜனம் என்ற மக்களைக் குறிக்கும் சொல்லும் இவ்வாறுதான் முளைத்தது.  அதிபதி என்பதும் தமிழ்தான்.  இதை இடுகை இன்னொன்றில் கூறுவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை










 

கருத்துகள் இல்லை: