சனி, 20 ஜூன், 2026

விமானம்தாங்கி (க் கப்பல்)

 வி என்பது சிறப்புடைய என்று பொருள்தரும் ஒரு முன்னொட்டு. வியன், விழுமிய, விரி(தல்)  முதலிய சொற்கள், விரிவு, சிறப்பு என்றெல்லாம் பொருள்தருவன.  இதைச் சுருக்கித்தான் வி- என்பது முன்னொட்டாக ஏற்படுத்தப் பட்டதென்பது உணர்க.

மானுதல் எனின் ஒத்திருத்தல். மன் என்ற சொல்லும் மன்னுதல் என்று வினையாகும். மன் - மன்+ இது+ அன் >  மனிதன்.  து என்பது அஃறிணை ஒருமை என்றாலும்,  பல சொல்லாக்கங்களில் ஆக்கத்துணைச்சொல்லாகப் பயன்பாடு கண்டுள்ளது. அழிதல், ஒழிதல் என்பனவில்  தல் என்பது  து+அல் >தல் என்பதே ஆகும். நரி ஓடியது என்பதில்  து என்பது அஃறினை ஒருமை காட்டினால்,  தல் என்பதில் அது  வினைச்சொல் என்று குறிக்கவந்து,  தொழிற்பெயராய்த் தெளிவிக்கிறது. எழுது என்பதில் அது வினையாக்க விகுதியாய் நிற்கிறது. எழுதல் வேறு, எழுதுதல் வேறு.  பொருது என்பதில் அது வினையாக்கம் செய்கிறது.  பொருந்து என்பதிலும் அது இன்னொரு சொல்லைப் பிறப்பிக்கிறது. தல் என்பது து+அல் இணைந்த நிலை அறிக.  து என்பது என்னவெனில், அதன் தொழில் அல்லது செயல் யாது என்பதைக் கணித்தே அதற்குப் பெயர் கூறவேண்டும்.

மான என்பது ஒரு உவமவுருபும்  ஆகும்.

மானம் என்றால் ஒப்பாகச் செய்யப்பட்டது என்று பொருள் கொள்ளவேண்டும்.

விழு+ மானம் >  விமானம்.  எல்லாம் தமிழ்தான்..   குறுகி ( வி என்பது விழு என்பதன் குறுகிய முன்னொட்டாக ) விமானம் என்ற சொல் ஆகின்றது.

சம+ கதம் > சம+ கிருதம் >  சமஸ்கிருதம் என்றால் சம ஒலி உடைய மொழி.  எதற்குச் சமம் என்றால், தமிழுக்குச் சமமான ஒலியை உடைய மொழி. இங்கு ஸ் வந்தது ஒரு மென்மையாக்கம். சமக்கிருதம் எனில் கடினமாக இருக்கும்.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.  1>

குறளை மனத்தில் இருத்துக.

சமம் > சமன் , இது  அறம் > அறன் போலும் திரிபு.

தமிழ் மொழியின் சொற்கள் உலகெங்கும் எல்லா மொழிகளிலும் உள.  And என்பது  அண்டு(தல்) என்ற வினைச்சொல்லின் திரிபுதான். எட் என்ற இலத்தீன், அடு(த்தல்) என்பதன் குறுக்கம்தான்.  தா என்ற சீனச்சொல்,  தாக்கு என்பதன் வினையாக்கவிகுதி நீங்கிய வினைதான்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


1>சமம் என்பது ஒப்பு என்று பொருள்படும்  தமிழ்ச்சொல்.  

வியாழன், 18 ஜூன், 2026

இரகசியம் (ரகஸ்யம், ரகசியம்)

 இரகசியம் என்ற சொல். தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டில் வழங்கிவரும் சொல்லே ஆகும்.

ஏகாந்தம் என்ற சொல்லும்  இரகசியம் என்பதனோடு ஒத்த பொருளுடையதாய்க் கருதப்படுதல் கூடும். எனினும் இவ்விரு சொற்களும் தமிழறிந்தாரிடை ஒத்த பொருளுடையனவாய் நாட்டில் வழங்கவில்லை. ஏகாந்தம் என்பது ஒருவன் தனித்திருக்குமிடத்தைக் குறித்ததென்பதும் தெரிகிறது.  அறிஞர் கதிர்வேலுப் பிள்ளை (  அகரவரிசைத் தொகுப்பாளர்) , தனியிடம், ஒருவந்தம், தீனியிடம், வேறிடம் என்றும் பொருள் கூறுவார்.

ஒருவந்தம் என்ற சொல்

வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்  (குறள் 563)

என்ற குறளில்  ஒருவந்தம் என்பது திண்ணமாக என்ற பொருளுடைத்தாகிறது. இங்கு ஒருவந்தம் என்பது ஏகாந்தம்  அல்லது இரகசியம் என்ற பொருளின் வேறுபடுவதாகத் தெரிகிறது.  வெறு (த்தல்) என்ற சொல் கூட்டுச்சொல்லாய் வந்தவிடத்து,  இதிலுள்ள றுகரம்  ருகரமாகிவிடும் என்ற எம் கண்டுபிடிப்பு சரியாகவே  உள்ளது.  இதைப் பிறரும் கூறியிருத்தல் கூடும். விரித்துணர்ந்துகொள்க.  ஒருவந்தம் எனின் ஒரேமுடிபாய் உள்ளது அல்லது உள்ளவை. ஒரு+ வன் + தம்  :  ஒரு -  ஒரே.  வல்> வன் > வன்+து> வந்து>  வந்து+ அம்> வந்தம்.  வன்- வன்மையானவாய் அமைவது,  அமைபவை.  முடிபு.  கெடுவது மிக்கத் திண்ணமானது என்பது இக்குறள் கூறுவது.  இது தமிழ்ச்சொல், வடசொல், கலப்புச் சொல் என்றெல்லாம் அலைவு தேவையற்றது.  சரியான பொருளே காண  வேண்டுமென்க. ஏகாந்தம் என்பது வேறு.  ஏகாந்தம் என்பது, ஒற்றைப்பொருள், ஏகும் பொருள் என்று இருவிதமாய்  வரவும் கூடும்.  ஒன்று ஏகின், இன்னொன்று வலிவாகும் என்பன போலும் கருத்துக்கள்.

பல்பொருள் ஒருசொல் என்றிருப்பவற்றில், ஒருசொல்லை இன்னொன்றுக்கு ஒத்த பொருளுடையது என்று சொல்ல முடிவதில்லை.  பயன்பாடு கருதியவிடத்து மட்டும் அவ்வாறு உரைத்தல் ஏற்புடைத்தாகலாம்.

இரகசியம் என்பது.

சிலர், சங்க இலக்கியங்களில் பயன்படுத்தியவை மட்டுமே தமிழ்ச்சொற்கள் என்ற பெயருக்குத் தகுதி உடையவை  என்று கருதுவர்.  அவ்வாறு கருதுவதாயின் ''சங்கத் தமிழ்ச் சொற்கள்''  என்று விதந்து  அவற்றை உரைக்க வேண்டும்.  அல்லது கழக இலக்கியச் சொற்கள்  என்று கூறவேண்டும். தமிழ் என்பது சங்க காலத்தையும் முந்தி இருந்த சொற்கள்.  அக்காலத்துக்கும் முன்னே சென்றால், பண்டைத் தமிழ் என்றோ, மற்ற பொருத்தம் நோக்கியோ சொல்லவேண்டும்.

இனி, இரகசியம். இச்சொல் ஆனது இவ்வாறு:

இரு +  அகம் + சி + அம் >  இரகசியம்.

நிகழ்வதைப் பற்றிய ஒரு கருத்து,   அகத்தில் இருப்பதாய்,  வெளியிடப் படாத சிறப்பு (சி)  உடையதாய்  அமைந்திருக்குமாயின்,  அது இரகசியம் என்பது சொல்லில் உட்பகவுகள் மூலமாய்த் தெளிவாய்த் தெரிகிறது.  அகத்தினுள் மறைந்து வெளிவராமைச் சிறப்புடன் இருப்பது இரகசியம்.  அதை வெளிப்படுத்துவோனே  '' இதுதான் இதன் இரகசியம்;  வெளிப்படுத்துகிறேன்'' என்று அதற்குப் பெயரிடத் தக்கவன். அதை முன் அறியாமல் கேட்ட பின்பே அறிந்துகொள்பவனும் அதை அவ்வாறு பெயரிட்டுக் குறிக்கலாம்.  ஒன்று ''தனிமைப் பண்பு''  உடைமையால் அவ்வாறு தகுதியுற்றதாகுமா எனின், அஃது அகத்திலிருத்தல், வெளிவராமை ஆகிய குணநலன்கள் இல்லாதவை ஆயின், இரகசியம் ஆகமாட்டா.  தனிமை என்பது வேறு , அகத்தினுள் மறைவாய் இருப்பது வேறு என்று முடிக்கவேண்டும்.

இச்சொல்லின் உள்ளிருப்பனவற்றால், இரகசியம் என்பது ஒரு தனிச்சிறப்புற்ற சொல்லாகிறது என்பது அறிக. இதை ஒரு பொதுச்சொல் என்று கொள்க. அதாவது இருமொழிக்கும் உரியவை,  ஆயின் தமிழ் மூலங்கள் உடையவை என்று விரிக்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

திங்கள், 15 ஜூன், 2026

சீக்கிரம்

 இச்சொல்லை இன்று அறிவோம்.

முன்னர் வெளியிட்டது இதுவாகும்:

https://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_72.html

முன் எழுதியது இவ்வாறாயினும்,  அப்போது ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கம் ஒரு சொல்லுக்கு எழுதினால் குழப்பம் உண்டாகுமென்பதனால்,  ஒன்றே வெளியிட்டோம்.  சில சொற்கள் உண்மையில் பலபிறப்பிகளாக இருப்பனவாதலால்,  யாம் சிறந்தது என்று கருதும் இன்னொரு கருத்தையும் இன்று வெளியிடுகிறோம்.

இது சீர்க்கு + இறும் >  சீர்க்கிறும் >  சீக்கிறம் என்றாகி,  சீக்கிரம்  என்பதாகும்.

இச்சொல்லில் ரகர ஒற்று மறைந்தது.

இன்னொரு சொல்லமைப்பில் புகுந்த காலை,  றகர மாவது,  ரகரம்  ஆகிவிடும்.

இத்தகைய திரிபு பல சொல்லாக்கங்களில் வந்துள்ளது.  அதை வேறு சில இடுகைகளில் யாம் சுட்டிக்காட்டி யுள்ளோம்.  கண்டு தெளிக.

சீர்க்கு இறும் என்னில்,   சீரை அடைந்து முடியும் என்பதுதான்.  இதில் வரும் இறும் என்ற சொல்  முடியும் என்ற வினைமுற்று.  இங்கு இது  புதிய சொல்லின் இறுதிப் பகவாக வருகிறது.  பகவு என்றால் சொல்லமைப்பின்  இன்னொரு பகுதி என்ற பொருளில் எழுதுகிறோம் என்பதறிக.

இரும்> இரம் என்று திரிவதாகக் காட்டினும்,  இருக்கும் என்ற பொருளில் சரியாகவே வரும் என்பதறிக.

முன் செய்த ஆய்வில், கிறங்குதல் என்ற வினைச்சொல் கவனம் பெற்றது.  சீர்க் + கிறம் -->  என்றால்,  சீரான எதிர்பார்ப்புக்குரிய வேகத்துடன் முடித்திடு என்பதே பொருள். முன் இடுகையில் நோக்கி அறிக. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

பகிர்வு




வியாழன், 11 ஜூன், 2026

பிரபலம் திரிபுச்சொல்.

 இன்று பிரபலம் என்ற திரிபுச்சொல்லைக் காண்போம்.. இதைத் திரிசொல் என்று சொன்னாலும், திரிபுச்சொல் என்றாலும் பொருள் ஒன்றுதான்.

சிலர் தம் குடுப்பத்திலே நன்கு மதிக்கப்பட்டு, சிறப்புடன் வாழ்வர்.  வெளியாரில் பலரும் இத்தகையோரை அறிந்திருப்பர்.  பலர் அகத்தும் புறத்தும் மிக்க அரிய புகழை அடைந்து,  நாடறிந்த நல்லவராக இருப்பர்.  இவரை மிக்கப் பிரபலமானவர் என்று சொல்வர்.

அறிமுக நிலை மிக்க விரிவடைந்து,  மிக்கப் பகழுடன் இருத்தலே பிரபலம்  என்பதறிந்தோம்.   இத்தகையோரின் பின்பு, பெருந்திரளாக மக்கள் இருப்பர். இந்தச் சொல்லும் நம் ஆய்வில் தமிழே  ஆகும்.   'பிறர்' , 'பலர்' என்ற சொற்களின் அடிப்படையில் அமைந்ததே இது.

'பிறர்' + 'பலர்' >  பிரபலம்.

குடும்பத்திலிருந்தோர் இருப்போர் மட்டுமின்றிப்  பிறர் பலரும் அறிந்த  நபர் என்று வரையறை செய்யவேண்டும்.

திரிசொற்களை அவை தமிழ் மூலமுடையன வாயினும்  சமஸ்கிருதம் என்று வகைப்படுத்தியது சரியென்றே சொல்க.  இதற்குக் காரணம் திரிசொற்கள் சமஸ்கிருத்திலிருந்தால் அதைத் தமிழ்ப்புலவர் எவரும் இலக்கணம் பேசி மறுக்கமாட்டார்,  தொல்லையும் குறைந்தது .  பாணினி  என்ற பாணர், இதற்குத் தனியாக இலக்கணம் வகுத்துவிட்டதால், அந்தத் தொல்லை ஒழிந்தது. தமிழ்ச் சொல்லமைப்பில்,  ஆதியில் எவ்வாறு தமிழ் வளர்ந்திருந்தாலும், அகத்தியர் தொல்காப்பியர் ஆகியோருக்குப் பின்வந்த காலத்தில்,  தமிழறிவு மேம்பட்டமையினால் இலக்கம் எழுதியோரும் பேசியோரும்  கவிதைப் புலமையைக் கொண்டு, சரிதவறு சொல்வோர் கூட்டம் விரிந்துவிட்டது.  இவர்களிடம்  இரண்டும் இருகண்கள் என்றோ, சமஸ்கிருதமே முந்தியது  என்றோ சொல்லிவிட்டால் வாய்மூடவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். வடக்கே  தோன்றிய முந்தைய மொழி என்று சொல்வதை வாதம் செய்ய இவர்கள் போன்று கேட்போர் சொல்லாய்வு நிபுணர்களா என்ன?

உண்மையில் இவ்வாறு சொல்வதிலும்  உண்மை உள்ளது.  உங்கள் வீட்டுச் சட்டியில் பழைய  மற்றும் ஓரளவே பழகிய சட்டி பழம்பெருமை உடையதா,  போனவாரம் வாங்கியது பழம்பெருமை உடையதா என்றால்  பழம் பெருமை உடையது பழையதே ஆகும்.    ஆனால் சொற்களில் இது எளிதில் அறியத் தக்கதாய் இல்லை.  எது திரிசொல், எது இயற்சொல் என்பது சாதாரணப் பண்டிதனுக்குத் தெரிவதில்லை.  அவன் சில பட்டங்கள் பெற்றிருந்தாலும் தெரிவதில்லை. எப்படியாயினும், சொற்களைப் பயன்படுத்திப் பொருளை அறிவிப்பதுதான் பேசுவதன் நோக்கம்.

தொல்காப்பியம் நூற்பா சொல் 394:

மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா

தெரியவேண்டுமே!

மொழியைப் பயன்படுத்துகையில் சில கலந்து பேசினாலும் மரணம் ஏற்பட்டுவிடாது.  

ஆனால் கவிதை, உரைநடை ஆகியவற்றைக் கையாளும்போது,  கவனமாக இருக்கவேண்டும் என்பதே உண்மை.

ஆனால் தமிழும் சமஸ்கிருதமும் மிகப் பழையவை. ஒரு திரிசொல், திரிவதற்குப் பலகாலம் ஆகவேண்டும். இயற்சொற்கள் திரிந்துதான் திரிசொற்கள் உண்டாகின்றன.  ஒன்று இயற்சொல்லாய் இருந்து பின்னர்தான் திரிகிறது. அதனால் ஒவ்வொரு சொல்லையும் ஆராய்ந்துதான் சொல்லவேண்டும்.  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.

மெய்ப்பு பார்க்கப்பட்டது:  12.06.2026

























செவ்வாய், 9 ஜூன், 2026

துருவாச முனிவர் பெயர்

 இவர் பெயரைச் சற்று சிந்திப்போம்.

இவர் மகாயோகி என்று போற்றப்படுபவர்.  விரதங்களின் மேன்மையை அடிப்படையிலிருந்தே நன்கு அறிந்து போற்றுபவர் அவரென்று இறைநூல்களிலிருந்து அறிகிறோம். துருவாச முனிவர் என்பதைத் தமிழால் பொருள் கூறவியலுமா என்பதைப் பார்ப்போம்.

இவர் பெயரைத் துரு(வுதல்) +  ஆசு + ( அ )  ;  முனிவர்.

நிகழ்வு,  வரலாறு,  இறைநிலை  ஆகியன நல்லபடி உணர்ந்தும்  துருவிப் பற்றுக்கோடு கண்டும், ஆனபடி நடப்பவர் என்ற அவர்பெயர்,   நல்ல காரணம் தருவதாக அமைந்துள்ளது.  ஆசு என்றால் ஆதாரம்,  சிறந்தவை கைக்கொள்ளுதல்  என்றெல்லாம் சொல்லலாம்.

ஆசு+ இரு+ இ + அர் >  ஆசிரியர் என்பது கற்கும் மாணவர்க்குப்  பக்கபலமாக இருப்பவர் என்பதைக் கோடிட்டுக் காட்டும்.  ஆசு+ ஆன் > ஆசான் என்பதும் ஏறத்தாழ அப்பொருளதே. ஆசி ( ஆசு+ இ)   ஒருவனின் வாழ்வில் நன்மை சென்று பற்றுக என்ற வாழ்த்துதலைத் தெரிவிப்பதாக இருக்கும்.  ஆக்கம் என்ற சொல்லும் ஆதல் என்பதன் அடியாகத் தோன்றிய சொல்லே ஆகும். ஆ என்பது வினைப்பகுதி.  சு என்பது விகுதி. முனிவர் என்ற பெயருடன் இணைய,  துருவாசு என்பது துருவாச என்று வந்தது,

முன்னரும் பாரதச் சொற்கள் சிலவற்றைத் தமிழில் தந்துள்ளோம்.  அவற்றையும் நோக்குக.

அறிக மகிழ்வு

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.














சனி, 6 ஜூன், 2026

ஆமைக்கு வந்த அருமையான பெயர்.

 தமிழில் பெருவாரியான சொற்கட்கு மூலம் கண்ட பெருமை, தேவநேயப் பாவாணர்க்கு உரியது என்பதே உண்மை.  இவர்தம் பெருமையை பிற பல அறிஞர்கள் கண்டு வியந்துள்ளனர்.  ஆமைக்கு அந்தப் பெயர் எவ்வாறு ஏற்பட்டது என்று ஆய்வு செய்கையில்,  அஃது  ஏமம் என்ற தமிழ்ச்சொல்லினின்று வந்தது என்று தேவநேயர் கூறினார்.  இது எனக்குச் சரியாகவே தோன்றுகிறது. அறிஞர் அப்பாத்துரை அவர்களும் இவரை புகழ்ந்துள்ளார். தேவநேயனாரால், தமிழ்ச் சொல்லாய்வு மிக்க வளர்ச்சி பெற்றது.

ஏம் என்றால் பாதுகாப்பு.  அமணர் என்பது சமணர் என்று திரிந்ததுபோலவே, ஏமம் என்பதும் சேமம் என்று திரிந்தது. ஆடி என்ற ஏனப்பெயர்,  சாடி என்று திரிந்தபின்,  ஜாடி என்றும் திரிந்தது. ஆடியில் இருக்கும் நீர் சற்று ஆடினால், சாடியிலும் ஆடுமாதலின், அதற்கு இதன் மூலம் பெயர் வந்தது பொருத்தமே ஆகும். சாடுதல் என்பது அடித்தலையும் குறிப்பதுதான். சாடியைத் தட்டினால் உள்ளே நீரும் ஆடுவதால் அந்தப் பெயர் வந்தது என்று கூறினும் அதனால் இப்பொருள் தொய்வுறாது என்னலாம்.

எம் பொருளை யாம் எப்போதும் காத்துக்கொள்வோம்.  ஆகையினால் எம்- ஏம் என்பதிலிருந்து பாதுகாவல் என்ற பொருள் வந்தது பொருந்துவது. அவர் பிறன் பொருளையும் அவ்வாறே காப்பதற்கு ஏதேனும் கூடுதல் காரணமிருக்க வேண்டும்.  இச்சூழ்நிலையில் பாதுகாவலைச் சிந்தனை செய்யுங்கால் இதனை மேற்கொண்டு ஆராயலாம்.  இப்போது ஏமம்  சேமம் எல்லாம் தமிழில் ஆழ்ந்த கற்காலத்துக்கும் முன்பு உண்டான பொருள் உடையன என்பதை மட்டும் கவனித்துக்கொள்வோம்.

ஆகையினால் ஆமைக்கு இப்பெயர் ஏற்பட்டது என்ற கருத்தை ஏற்றுக்கொள்வோம்.

ஆனால் சொற்களை ஆய்வு செய்கையில்,  ஒன்றுக்கு  மேற்பட்ட காரணங்களால் பெயர்கள் ஏற்படக்கூடும் என்பதை நாம் மறந்துவிடலாகாது. சிலேடை முதலிய மேற்பட்ட அலங்காரங்கள் தவழணி செய்யும் தமிழ்மொழியில்,  ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் இயல்பானவை  ஆகும். ஒன்றுக்கு ஒரே பொருள் என்பது தமிழறியாதவனுக்கு ஏற்புடையதாய் இருக்கலாம்.  ஒரு பொருளில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் அணிசெய்வது,  மிக்க இயல்பானது ஆகும். வேறுமொழிகளிலும் உள.  ஆனால் குறைவு ஆகும்.

இனி ஆமை.   ஆமை என்பது ஓர் ஓட்டினகத்துத் தன் மெய்யை ( உடலை) ஒளித்து வைத்துக்கொண்டு வாழும்  ஓர் உயிரி  ஆகும்.  ஆகையினால்,   அகத்து மெய் >  அகமெய் > ஆமெய்>  ஆமை என்றும் பெயர் விளைந்திருத்தல் கூடும். சங்கு என்ற உயிரியும் இவ்வாறு வாழ்வது  ஆயினும்,  இது இடுகுறியாக வந்து சங்கு முதலியவற்றைக் குறியாது என்று வரையறுத்துக்கொள்ளலாகும்.

சங்கு ஓட்டை அண்மி வாழ்வது.   அண்> சண்> சம்+கு> சங்கு  ஆகும்.  சம் என்பது தமிழிலும் சமஸ்கிருதத்திலும்  சேர்ந்திருத்தலைக் குறிக்கும்.  தமிழில் இணைமொழி யாகித் தமிழரால் வளர்க்கப்பட்டது சம ஒலி மொழியாகிய சமஸ்கிருதம்.  பாணனாகிய பாணினியாலே இலக்கணமும் கூறப்பட்டது.. இந்திய மொழி.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது

















புதன், 3 ஜூன், 2026

கந்தல் என்பதற்கு விளக்கம்

 கந்தல் என்ற சொல்லுக்கு விளக்கம் அளிப்பதாகக் கூறினோம். இந்த முன்பகுதி இங்கு உள்ளது.

கிழிந்த /  கழிந்த என்ற வினை எச்சங்கள்:

கிழிந்த >  கழிந்த + அல் (விகுதி) >  கழிந்தல்.

கழிந்தல் என்பது இடைக்குறைகிறது.

கழிந்தல் >  க(ழி)ந்தல்>  கந்தல்.

கந்தல் >  கந்தை.

கழித்த என்ற எச்சத்துடன் அல் என்பதை இணைப்பது  வழக்கமில்லை. கழி என்ற வினை ஏவல்வினையே இதற்கு ஏற்றதாகக் கொள்வர்.  ஆதலால் இதை வேறுவழிகளில் காட்ட முனைதல் இயல்பே.  கிழி> கழி > கழிதல்>( கதல்)> கந்தல் என்று காட்டலாம். இங்கு ஒரு விகாரம் தோன்றிற்று.  கிழிதல்>  கழிதல்  என்றதில்,  ஒரு மெய்தோன்றிற்று என்பதை மறைக்கமுடியாது.  பாலி மொழிபோல் எச்சத்திலிருந்தும்  சொற்கள் தோன்றக்கூடும் என்பதை மறைத்தலாகாது. தேவை என்பதே ஆக்கத்தின் தாய் என்பது முற்றிலும் உண்மை.

ஒப்பு நோக்குக:

ஆண்டு  > (ஆண்டுகொண்டிருப்பவன்)  எச்சவினை.

ஆண்டு >  ஆண்டவன்.

பண்டு என்பது கவனிக்கவும்:

பண்டு நம்மைக் காத்தவன்.

பண்டு>பண்டு + இ+ அன்> பாண்டியன்.

இதில்  பண் எனற முதலசை பாண் என்று முதல் நீண்டது.  

பல சொற்கள் நீண்டாலும் பொருள் தொடர்பு அற மாட்டா.  வினைகளில் தரு என்பது  திரிபு பலவுடைத்து.

பாண்டவர் என்பதும் இவ்வாறு அமைந்த சொல்லே ஆகும்

இதைப் பண்டு>பாண்டு>பாண்டியன் என்றும் காட்டுவர். 

வேறுபாடு ஒனறுமில்லை.

கிழிந்தல் - கழிந்தல் :  கிழிந்ததாக இருந்தது பின்னர் பயன்பாடு குன்றி, கழிந்ததாகிவிடுகிறது.  இன்னொரு சொல்லைக் காட்டுகிறோம்.   இடித்தல் - அடித்தல். இரண்டும் ஏற்படும் மோதுதலைக் குறிக்கிறது.  இணைத்தல் - அணைத்தல், இரண்டுக்கும் உள்ள தொடர்பைக் கவனத்தில் கொண்டால், தொடர்பு புரிதலை அடைகிறது.  பழைய இடுகைகளில்  யாம் காட்டியிருப்போம்.  எனினும் தொகுத்து வழங்க நேரமில்லை ஆதலால்,  படிக்கும் நீங்கள் தொகுத்து எடுத்து உணர்ந்து கொள்ளுங்கள்.

அறிக மகிழ்க.  

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை