வியாழன், 18 ஜூன், 2026

இரகசியம் (ரகஸ்யம், ரகசியம்)

 இரகசியம் என்ற சொல். தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டில் வழங்கிவரும் சொல்லே ஆகும்.

ஏகாந்தம் என்ற சொல்லும்  இரகசியம் என்பதனோடு ஒத்த பொருளுடையதாய்க் கருதப்படுதல் கூடும். எனினும் இவ்விரு சொற்களும் தமிழறிந்தாரிடை ஒத்த பொருளுடையதாய் நாட்டில் வழங்கவில்லை. ஏகாந்தம் என்பது ஒருவன் தனித்திருக்குமிடத்தைக் குறித்ததென்பதும் தெரிகிறது.  அறிஞர் கதிர்வேலுப் பிள்ளை (  அகரவரிசைத் தொகுப்பாளர்) , தனியிடம், ஒருவந்தம், தீனியிடம், வேறிடம் என்றும் பொருள் கூறுவாo

ஒருவந்தம் என்ற சொல்

வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்  (குறள் 563)

என்ற குறளில்  ஒருவந்தம் என்பது திண்ணமாக என்ற பொருளுடைத்தாகிறது. இங்கு ஒருவந்தம் என்பது ஏகாந்தம்  அல்லது இரகசியம் என்ற பொருளின் வேறுபடுவதாகத் தெரிகிறது.  வெறு (த்தல்) என்ற சொல் கூட்டுச்சொல்லாய் வந்தவிடத்து,  இதிலுள்ள றுகரம்  ருகரமாகிவிடும் என்ற எம் கண்டுபிடிப்பு சரியாகவே  உள்ளது.  இதைப் பிறரும் கூறியிருத்தல் கூடும். விரித்துணர்ந்துகொள்க.  ஒருவந்தம் எனின் ஒரேமுடிபாய் உள்ளது அல்லது உள்ளவை. ஒரு+ வன் + தம்  :  ஒரு -  ஒரே.  வல்> வன் > வன்+து> வந்து>  வந்து+ அம்> வந்தம்.  வன்- வன்மையானவாய் அமைவது,  அமைபவை.  முடிபு.  கெடுவது மிக்கத் திண்ணமானது என்பது இக்குறள் கூறுவது.  இது தமிழ்ச்சொல், வடசொல், கலப்புச் சொல் என்றெல்லாம் அலைவு தேவையற்றது.  சரியான பொருளே காண  வேண்டுமென்க. ஏகாந்தம் என்பது வேறு.  ஏகாந்தம் என்பது, ஒற்றைப்பொருள், ஏகும் பொருள் என்று இருவிதமாய்  வரவும் கூடும்.  ஒன்று ஏகின், இன்னொன்று வலிவாகும் என்பன போலும் கருத்துக்கள்.

பல்பொருள் ஒருசொல் என்றிருப்பவற்றில், ஒருசொல்லை இன்னொன்றுக்கு ஒத்த பொருளுடையது என்று சொல்ல முடிவதில்லை.  பயன்பாடு கருதியவிடத்து மட்டும் அவ்வாறு உரைத்தல் ஏற்புடைத்தாகலாம்.

இரகசியம் என்பது.

சிலர், சங்க இலக்கியங்களில் பயன்படுத்தவை மட்டுமே தமிழ்ச்சொற்கள் என்ற பெயருக்குத் தகுதி உடையவை  என்று கருதுவர்.  அவ்வாறு கருதுவதாயின் ''சங்கத் தமிழ்ச் சொற்கள்''  என்று விதந்து  அவற்றை உரைக்க வேண்டும்.  அல்லது கழக இலக்கியச் சொற்கள்  என்று கூறவேண்டும். தமிழ் என்பது சங்க காலத்தையும் முந்தி இருந்த சொற்கள்.  அக்காலத்துக்கும் முன்னே சென்றால், பண்டைத் தமிழ் என்றோ, மற்ற பொருத்தம் நோக்கியோ சொல்லவேண்டும்.

இனி, இரகசியம். இச்சொல் ஆனது இவ்வாறு:

இரு +  அகம் + சி + அம் >  இரகசியம்.

நிகழ்வதைப் பற்றிய ஒரு கருத்து,   அகத்தில் இருப்பதாய்,  வெளியிடப் படாத சிறப்பு (சி)  உடையதாய்  அமைந்திருக்குமாயின்,  அது இரகசியம் என்பது சொல்லில் உட்பகவுகள் மூலமாய் தெளிவாய்த் தெரிகிறது.  அகத்தினுள் மறைந்து வெளிவராமைச் சிறப்புடன் இருப்பது இரகசியம்.  அதை வெளிப்படுத்துவோனே  '' இதுதான் இதன் இரகசியம்;  வெளிப்படுத்துகிறேன்'' என்று அதற்குப் பெயரிடத் தக்கவன். அதை முன் அறியாமல் கேட்ட பின்பே அறிந்துகொள்பவனும் அதை அவ்வாறு பெயரிட்டுக் குறிக்கலாம்.  ஒன்று ''தனிமைப் பண்பு''  உடைமையால் அவ்வாறு தகுதியுற்றதாகுமா எனின், அஃது அகத்திலிருத்தல், வெளிவராமை ஆகிய குணநலன்கள் இல்லாதவை ஆயின், இரகசியம் ஆகமாட்டா.  தனிமை என்பது வேறு , அகத்தினுள் மறைவாய் இருப்பது வேறு என்று முடிக்கவேண்டும்.

இச்சொல்லின் உள்ளிருப்பனவற்றால், இரகசியம் என்பது ஒரு தனிச்சிறப்புற்ற சொல்லாகிறது என்பது அறிக. இதை ஒரு பொதுச்சொல் என்று கொள்க. அதாவது இருமொழிக்கும் உரியவை,  ஆயின் தமிழ் மூலங்கள் உடையவை என்று விரிக்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

கருத்துகள் இல்லை: