ஞாயிறு, 6 நவம்பர், 2016

நெடில் முதலான .......... குறில் முதலாகி

நெடில் முதலான சில சொற்கள் விகுதி ஏற்றபின்  குறில் முதலாகி
விடுகின்றன. அப்படிச் சில சொற்களை நாம் முன்பு கண்டோம்.  அந்த‌
விதியை மீண்டும் நினைவு கூர்ந்து அவ்வறிவைத் திறப்படுத்திக்
கொள்வோம்.

சாவு என்பது வினைச்சொல். இதனோடு அம் விகுதி வந்திணைந்தால்
சாவு+ அம் =  சவம் என்றாகிறது. அது இறந்த உடலைக் குறிக்கிறது.

தாவு என்பது வினைச்சொல். தாவுதல்.  இதனோடு விகுதி சேருமாயின்
தாவு+ அளை =  தவளை ஆகிறது.  தாவளை என்னாது தவளை என்றே
வரும்.  அளை என்பது கலக்குதல் என்றும் பொருள்படும்.  தாவிச் சேற்றினைக் கலக்கும் தவளைக்கு இது ஏற்ற விகுதியாகிறது.

வாய்ப்பக்கம் கூம்பியும் அடி சற்று அகலமாகவும் இருப்பது குவளை,
கூ+ வளை = குவளை ஆயிற்று.  கூ > கூம்பு. குவளையின்  உரு இப்போது மாறி யுள்ளது.

இதேபோல்  கூம்பு + அம் =  கும்பம் ஆனது.  கூ> கு ஆனது.

கூடி வாழ்வதே குடும்பம்,   கூடு+ பு + அம் =  குடும்பம். கூடு என்பது
குடு ஆகி, மகர ஒற்று புணர்ச்சியில் தோன்றி, பு விகுதிக்கு முன்னின்று
இன்னோசை தந்தது.  விரு+பு ‍> விரும்பு போல. வினையிலும் பெயரிலும் இன்னோசை விளைக்க இது தோன்றும். இது பரவலாகக்
காணப்படுவதாகும்.  கொடு+ பு = கொடும்பு போல.  இங்ஙனம் பலவாகும்.

கருத்துகள் இல்லை: