திங்கள், 7 நவம்பர், 2016

ஆவல் ஆவா. அவா

பல மொழிகளில் குறில் நெடில் என்பன இல்லை. அவை அங்ஙனம்
உணரப்படவில்லையே தவிர, பேசுகையில் குறில் நெடில் ஓசைகள் இயல்பாகப் பலுக்கப்படுகின்றன. மாய், தாய், லோங் என்று நெடில்
முதலாக வரும், சிலவற்றில் குறில் தனியாகக் குறிக்கப்படுவதில்லை.
எனினும் பேசுகையில் குறில் நெடில் இருக்கும்.

நெடில் குறிலாகிய சொற்களை முன் இடுகையில் கண்டோம்.  அறிந்து
இன்புற்றிருப்பீர்கள் என்பது எம் துணிபு ஆகும்.


இனி ஆவல், அவா என்பனவற்றைக் கவனிப்போம். இவ்விரண்டும் ஒருபொருளன என்பது நீங்கள் அறிந்ததே/

இதன் வினைச்சொல்  ஆவு என்பதாகும்,  இப் பகுதி இதுகால தனியாக‌
வழங்கவில்லை. நீ தொலைக்காட்சி பார்க்க  ஆவுகிறாயா என்று யாரும்
பேசுவதைச் செவிமடுத்ததில்லை. இப்படி ஒரு காலத்தில் தமிழர் பேசினர்
என்று தீர்மானிப்பதில் தடையேதுமில்லை.

ஆவு + அல் = ஆவல் ஆகிறது. ஆவலென்பது இன்னும் வழக்கில் உள்ளது.
ஆவினான், ஆவுகின்றான், ஆவுவான் என்பன காணக்கிடைத்தில. இவற்றை நாம் எழுத்திலும் பேச்சிலும் மறந்தோம். அதனால் இல்லை. ஆவுதல்  நிகண்டுகளில் மாத்திரம் உள

சொல்லிறுதியில் வரும் விகுதிகளில்  ஆ என்பதும் ஒன்று.

நில் >  நிலா.
உல் > உலா.
கல் > கலா ( கற்றல்).
பல் > பலா  ( பல சுளைகள் உடைய பழம் ).

விழை >  விழா.
புழை > புழா. (மலையாளம்)
 கடு >  கடா.
துல் > துலா.

இங்ஙனம் வினை பெயர்ச் சொற்களிலும்  ஆ விகுதி வரும்.

சொல்லிறுதியில் வரும் விகுதிகளில்  ஆ என்பதும் ஒன்று.


ஆவு + அல் =  ஆவல்.
ஆவு + தல் =  ஆவுதல்.
ஆவு + ஆ =  ஆவா.  இது பின் அவா என்று குறுக அழகுபெறும்.

ஆ விகுதி பெற்றுக் குறுகியதே  அவா என்று முடிக்க.

சில ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்கம்பெற மொழியில் வசதிகள்
இருப்பினும், இவ்வாறு முடித்தல் போதுமானது.





கருத்துகள் இல்லை: