புதன், 16 நவம்பர், 2016

நாணயச் செல்லொழிப்பு நடவடிக்கைகள்


நாணயச் செல்லொழிப்பு   demonetization .

வெளி நாடொன்றிலிருந்து அச்சடிக்கப்பட்டு இந்தியாவிற்குள் புகுத்தப்பெறும் கள்ளக் காசுத்தாள்கள், ஆண்டுக்கு 70 கோடிக்கு
மேலிருக்கும் என்று வல்லுநர் கூறுகின்றனர். இது தீவிரவாத நடவடிக்கைகட்கும் பிற அரசியல் நடவடிக்கைகட்கும் கூடப் பயன்படுத்தப் படுகின்றன என்று கூறுகிறார்கள்.


இந்திய நாட்டுக்குள் புகும் இந்த காசு, ஏழைகள் பணம்படைத்தோர் என்று வேறுபாடின்றி யாவர் கைகளிலும் தவழ்கின்றன.

இவற்றில் சில தோற்றுருக்களை ( டினோமினேஷன்)  செல்லாதவை
ஆக்கியது மோடி அரசின் திறமைதான்.


ஆயிரம் நூறைந்து நூறென்ப
அடிக்கடி புழங்கிவரு நாணயங்கள்
நோயினைப் போல்முளைத்த தீவிரர்கள்
நோட்டமிட நுழைந்தழிக்கச் சுட்டெரிக்க‌
நேயரைப்  போல்நடித்தும் ஊடுருவி
நெடும்பயன் பெற்றுப்போர் வெற்றிபெற‌
ஓய்விலா தச்சடித்து வெளியிட்டார்
உழலுமோர் இந்தியர்க்குள் புகுத்திவிட்டார்.


கலந்துறை காசுப்பொய் உருக்களையே
கட்சிகள் கலைத்துறையார் நாட்டினரும்
விரைந்தணைத் தவராகப் பயன்படுத்தி
வேண்டிய நலம்பலவும் கொண்டனரோ
விளங்குதல் இலரதனில் வீழ்ந்தனரோ
வினைவகை அறிந்திலாத சூழ்நிலையே
நிலங்கவர் நினைப்புடைய தீவிரர்க்கு
நேர்விடுத் தவர்பாணம்  மோடியவர்.

எளிதலாப் பெரும்போரே தலையமைச்சர்
ஈடுற‌  லானாரே என்றுசொல்வோம்!
ஒளிவிலா வெளிப்படையில் திட்டமிட்டால்
ஒருதுளி  கரும்பணத்தில் கைவாராதே!
நெளிசுளி வெல்லாமும் நெட்டுணர்ந்தார்
நின்றவ ரோடுழைக்கக் காசகத்தார்
அளியரே  இயலாமல் தவித்திடவும்
அவண்பணம் எடுப்பார்தத் தளிப்பவரே

எதுயாது நிகழ்ந்துருவே எட்டினாலும்
இதுநிகர் நடவடிக்கை துணிச்சலாகும்;
மெதுவாய்ச் சிந்தித்துத் திட்டமிட்டு
மேற்செல  உரிதருணம் அன்றிதுவே.
புதிதாய் முதன்முதலில் இதுசெய்தார்
புனிதர் மோடியிவர் வாழ்கவாழ்க.
விதியாய் நாமுறுமோர் தீவிரமே
வீழ்ந்திட எவ்விலையும் நல்விலையே.

(அறு  சீர்  கழிநெடிலடி  ஆசிரிய விருத்தம் .  ஈரசை ~  மூவசை - மூவசை  என்று  வரத்  தொடுத்தது,  சிலவிடத்தில் அசைகள்  மிக்குவர விடப்பட்டது.
ஒருபோன்மை  monotony தவிர்த்தல் நோக்கமாகும் .)










கருத்துகள் இல்லை: