ஞாயிறு, 27 நவம்பர், 2016

தள் தாள் தளபதி. தாளம் இராவணன்

தாள் என்ற சொல்லுக்குப் பல பொருளுண்டு. எனவே வாக்கியத்தில் அது
எப்படிப் பயன்பாடு காண்கிறது என்பதை யறிந்து என்ன பொருள் என்று
தெரிந்துகொள்ளுதல் வேண்டும்.  "தாள் பணிந்தேன்" என்று பாடலில்
வந்தால், கடுதாசியைப் பணிந்தேன் என்ற பொருள் கொள்ள வாய்ப்பு இல்லை.


பூண்டுத் தோலையும் கூடத் தாள் என்னலாம். வளரும்போதே ஒன்றிலிருந்து தனியாக வெளிப்பட்டு நீண்டு  அதை மூடிக்கொண்டிருப்பது தாள் என்றும் சொல்லப்படும். சோளத்திலும் தாள் மூடிக்கொண்டிருக்கும். வாழைக்குலையிலிருந்து தனியாகி அதை மூடிக்கொண்டிருப்பது தாள் ஆகும்.

சொல் : தள்ளுதல் .
தள் (அடிச்சொல்).   > தள்ளு.  (உகரச் சாரியை).
தள்ளுதல் ‍ :  தள் என்பதினின்று தோன்றிய வினைச்சொல்.   தல்: விகுதி.
தள் > தள்ளல்.  ( அல் விகுதி).

தள் > தாள். ( ஓர் இடத்தினின்றும்  தள்ளப்படுவது.  என்றால் வெளிப்பட்டு நீண்டு வளர்ந்தது என்று பொருள் ).

தொடையினின்று நீண்டு சென்று இறுதியில் வெளித்தள்ளியது  தாள்.
தள்> தாள்.  கணுக்காலுக்குக் கீழுள்ள உறுப்பு,

தள் > தள்ளை:  தாய்.  வளர்ச்சி பெற்ற கருவை வெளித்தள்ளும் தாய்.
வெளித்தள்ளுதலே இதில் மூலக்கருத்து.

தள் > தாள் > தாளம்.

உடலில் ஏற்பட்டு உணரப்படும்  இசையசைவு, கால் (தாள்) மூலமோ. கைகள் மூலமோ வெளித்தள்ளப்படுகின்றது.  அளவசைவுக்கு ஏற்ப கையோ காலோ மற்றொரு பொருளில் மோதித்  தாளம் உண்டாகிறது.  மோதுதல் here means coming in contact. Not necessarily a violent contact or collision. Please note to understand.
தாள்கள் தரையில் மோதுவதும் விரல்கள் மதங்கத்தின்மேல்  (மிருதங்கம்) மோதுவதும் தாளம் என்ப்படுகிறது.

மோதுதலே தட்டுதல்.

தள் + து = தட்டு > தட்டுதல்.  இது தள் என்பதில் தோன்றிய இன்னொரு வினைச்சொல். தள் என்பது வினையும் பெயரும் ஆகும். ஆனால் கால நீட்டத்தினால் (தொன்மையினால்)  அது இன்று தன்
வினைச் செய்கையையும் பெயர்ச் செய்கையையும் (functions ) வெளிப்படுத்தவில்லை.

யாப்பியலில் வரும் தளை என்பதும் தள் என்பதன் விரிவுப்பொருளே. இதைப் பின் காண்போம் .

யாம் சொல்ல விழைந்தது தளம் என்ற சொல்.

தள் > தளம்.  (அம் விகுதி).
தள் > தாள் > தாள்+ அம் = தளம். ( தா  என்ற முதல் எழுத்து  "த "  என்று குறிலானது .)

இரு வழிகளிலும் இதை விளக்கலாம். தள் என்ற அடிச்சொல்லுக்கே சென்று அம் விகுதி சேர்த்துத் தளம் என்பதை அறியலாம். சாவு+அம் = சவம் என்று குறுகியதுபோல், தாள்> தள்  = தள் + அம் > தளம் என்றும்
காணலாம். பல சொற்கள், அதிலும் அடிச்சொற்கள், தேவைக்கேற்ப‌
குறுகுதலும் நீளலும் இயல்பு ஆகும்.

ஒரு பெரும்படை தளம் அமைத்துக்கொள்கிறது. பல தளங்களையும்
அமைத்துக்கொள்கிறது. இது / இவை, படை அமைப்பின் வெளித்தள்ளுதல்கள், அல்லது வெளிப்பாடுகள். படையின் வளர்ச்சி காலில் வெளிப்பட்ட தாள் போன்ற வெளிப்பாடு.   மிக்கப் பொருத்தமான சொல். இதைவிடப் பொருத்தமான ஒன்றை இப்போது நீங்கள் அமைத்துப் பார்த்து வெற்றிகண்டால், அது சரியில்லை என்று சொல்லும் தகுதி உங்களுக்கு உண்டாகிவிடலாம்.  தாள் என்பது  base (பேஸ்) என்பதால், தளம் பேஸ் ஆகிவிடுவது கன பொருத்தம் .பேஸ்   base =  அடியாகும்.

தளத்தில் பதிந்துகொண்டு, பொதிந்துகொண்டு, உள்ளிருந்துகொண்டு,
நடவடிக்கைகளைச் செலுத்துபவன் தளபதி.  அவன் செலுத்திய அதிகாரச் செயல்களின் தாக்கத்தால், பதி என்பதற்கு அதிகாரப் பொருளடைவு உண்டாயிற்று என்று அறிக.

ஒரு படைத்தளம் ஒரு பெருங் கட்டிடக்  கோவை  (building complex location) யாகவும் இருக்கலாம் .  கூடாரங்களாகவும் இருக்கலாம்;  திறந்த வெளியாகவும் இருக்கலாம்.  படை மறவர் அங்கிருப்பது கொண்டே அது தளம் ஆகிறது.

பத்துத் தளங்கள் கொண்ட படைப்  பெரியோன் இராவணன்.  தளம்  தலம்  ஆகி தலம்  தலையாகி  கற்பனைவாதி  அதைப்  பத்துத்தலை இராவணன்  ஆக்கிவிட்டான்.

இராவணன் பற்றுதல் -  பெண் பற்றுதல் உடைய தலை (மண்டை) உடையவன் பற்று > பத்து.   பத்துத் தலை  என்று  இரு பொருள்..

பற்றுதல் > பற்றுதலை > பத்துதலை (பேச்சுவழக்கு) > பத்துத்தலை (திரிபு)> பத்துத்  தலை (பிறழ்பிரிப்பு).

அதாவது பற்றுதலை என்பது பத்துத் தலை ஆகிவிட்டது.

பற்றுதலை என்பது   விடுதலை என்பதுபோன்ற சொல்.  இறுதி தலை என்பது தல் + ஐ.  இரண்டும் விகுதிகள்.  தலை என்ற உறுப்பு அன்று.


தளபதி > தள்பதி > தள்பத்  (பின்னவை வெளித்திரிபுகள் )

LAST EDITED ON 9 OCT 2017.









3 கருத்துகள்:

Muthuvel சொன்னது…

பூங்கதவே தாழ் திறவாய்...

இதில் தாழ் சரியா தாள் சரியா.

வெளியே தள்ளித் திற என்பது சரியா??

SIVAMALA சொன்னது…

இங்கு தாழ் என்பது தாழ்ப்பாளைக் குறிக்கிறது: கதவு திறப்பது பற்றிப் பேசுகையில் தாழ் திறவாய் என்று சொல்லலாம்; தாள் திறவாய் என்றும் சொல்லலாம். வெளியே திறக்கும் கதவாயின் வெளியே தள்ளித் திற என்று சொல்லலாம்: கதவு திறக்க முயல்பவருக்குத் தடுமாற்றமாய் இருக்குமாயின்.

பூங்கதவே தாழ் திறவாய் என்பது தாழ்ப்பாளைப் பற்றிய பாட்டு அன்று. பூ மலர்தல் தாழ் திறத்தலுக்கு உவமை.

பூ விரிதலைத் தாழ் திறப்பதற்கு ஒப்பிட்டுப் பாடியுள்ளனர்.

கேட்டமைக்கு நன்றி. மேலும் கேள்விகளை வரவேற்கிறோம். மற்ற நேயர்களும்
பதிலோ விளக்கமோ அளிக்கலாம். தடை ஏதும் இல்லை.

இதைத்தான் அறிந்துகொள்ள விரும்பினீர்களா?

SIVAMALA சொன்னது…

தாழ் திறத்தல் பூ மலர்தலுக்கு உவமை என்று வாசிக்கவும். நன்றி.