வியாழன், 9 ஆகஸ்ட், 2018

பூசைக்குமுன் துர்க்கையம்மனுக்கு



வந்தருள் தேவிதுர்க்கா---எம்
சிந்தையிற் செம்மையைச் சேர்ப்பவளே;
நந்தாத நல்விளக்கே--- எந்த
நாளும் எமக்கருள் நல்கிடுவாய்.  1

ஆயிரம் கண்களினால் --- பல்
லாயிரம் அன்பரைக் காப்பவளே
போயின காலவினை--- தமைப்
போக்கிடு வாய்வலம் ஊக்கிடுவாய்.  2

நாயெனக் குன்றிடாமல் --- சிவ
நாயகன் நல்லருள் நல்கிடவே
நீயே துணைபுரிவாய் --- இந்த
நீணிலத் தில்லையே ஓர்புகலே  3

கனவிலும் நனவிலுமே--- எம்
மனம்மற  வாமல்  தினம்நிறைந்தே
வனம்வளர் வாசமலர் ---  போல
வாழ்வு வளம்பெற   வாவிரைந்தே. 4

இல்லைஎன் பார்நாவினால் --- வரும்
சொல்லைப் புறம்தவிர்த் துள்ளில்பயன்
கொள்ளும் கனிதருவாய் ---  அந்தக்
கோலநிலை இன்று நனிதருவாய். 5

இணைபிரி யாமலும்நீ ---  சிவத்தொடு
இன்றுமன் றும்மினி என்றும்நின்றாய்
புணையுனை நாங்களுமே --- உன்
போலும் இணைந்திடப் புரிந்திடுவாய். 6

அன்னையும் தந்தையுமாய் -- வந்து
ஆழ்கடல் துன்பினில் வீழுறாமல்
முன்னைஉன் காவலைப்போல் --- இனி
இன்னும் அருள்புரி இன்னொளியே.  7

நீதா  னிலையென்னிலோ  --- இங்கு
ஆதார மென்பதும் யாதுமுண்டோ
மாதா வெனக்கூப்புகை --- எதிர்
மறைகள் இலாமல்  குறைதவிர்ப்பாய்.  8

ஆண்டருள் அம்மைநீயே --- யாம்
அகதிகள் அன்பொடு காத்திடுவாய்;
நீண்டிருள் ஈண்டிடுமுன் --  துணை
பூண்டெமைச்  சூழ்புயல் தாண்டிடவே.   9





கருத்துகள் இல்லை: