ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

"ரெடி" தயார் கோவில் ஓமம் 12.8.2018

சிங்க்ப்பூர் துர்க்காதேவியின் ஆலயம்: ஓமம் தயார்நிலையில் இருக்கிறது. அமரவேண்டியவர்கள் வந்த சற்று  நேரத்தில்  தொடங்க உள்ள நிலை.


இப்போதெல்லாம்  "நான் ரெடி  நீங்கள் ரெடியா "  என்று  கேட்பது ஒரு வாடிக்கையாகிவிட்டது.  நான்  தயார் நீங்கள் தயாரா?"  என்று தமிழில் கேட்பதில்லை.

தயார் தமிழில்லை  என்பது ஒரு வாதம். அது உருது என்கிறார்கள்.  உருது என்பது பிற்காலத்து மொழி . முன்னிருந்த பல மொழிச் சொற்கள் அதனுள் புகுந்து  அதை ஒரு மொழி  ஆக்கின.  அரபி  தமிழ் சமஸ்கிருதம் எனப் பல மொழிகள் புகுந்துள்ளன .

தயார் என்பதன் அடிச்சொல் தய  என்பது.  இதிலிருந்து:

தய ---  தயக்கம்;
தய ---தயங்கு

என்ற சொற்கள் வந்துள்ளன.

ஓர் குற்றவாளியை உடனே கழுத்தை வெட்டிவிடாமல் மன்றாடி அரசு ஆணையை நிறுத்திவைத்தால் அங்கு அரசன்  தயை காட்டிவிட்டான் என்று பொருள். அது ஒருவிதமான தயக்கம். தயக்கம் என்பது தொடராமல் தானே நிறுத்துவது.  தயை என்பது உடனே தண்டித்து ( ஒறுத்து) விடாமல் நிறுத்துவது. தண்டனை என்பது தலைக்குமேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்தி போன்று இருந்து அது கழுத்தில் விழுந்தால் ஏற்படுவது,  விழாமல் நிறுத்தக் காரணமாயது  தய + ஐ = தயை. உலகில் எல்லாம் காலத்தின் அடிப்படையிலே நிகழ்கிறது.

எல்லா உயிர்களும் அழிவது என்றுமுள்ள நிலை. அழிவை அல்லது வலியை அல்லது வேறுபட்ட ஒரு நிலையை உடனே உண்டாக்காமல் தானே அழியுமாறு அல்லது வலி வரும் சூழ்நிலையில் வருமாறு  அல்லது எதுவும் நிகழுமாறு  விட்டுவிடுவது தயை. தயவு என்பதும் அது.

தயார் என்பது உடனே செயலில் புகுந்துவிடாமல் காரணத்தோடு தயங்கி நிற்பது. ஆர்தல் என்பது நிறைதல்.

தய >  தய+ ஆர் = தயார்.

பெரும்பாலும் படைகள் முதலியவை போருக்கு எல்லா ஆயுதங்களும் தோள்வலிமையும் இருந்தாலும் காலம் அல்லது வேறு எதிர்நிலைகள் தீரும்வரை தயங்கி நிற்கும்.  தய ஆர்.

சொற்களின் உண்மை நிலை உணராமல் மக்களிருப்பதால் அதை உணரவைக்க எழுதுகிறோம். ஒரு சொல் எந்த மொழியினுடையது என்பது முக்கியமன்று; அதை எப்படிப் பொருள் உணர்கிறீர் என்பதே முக்கியம்.

இப்போது படம்:  இது இன்று காலை  12/8/2018  --  துர்க்கையம்மன் கோவிலில் ஓமத்துக்கு பூசாரிகள் எல்லாம் தயார் நிலையில் இருந்ததைக் காட்டுகிறது,



கருத்துகள் இல்லை: