ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

சமுத்திரம்: முன் ஆய்வாளர்கள் குழப்பங்கள்

சமுத்திரம் என்ற சொல்லின் ஆய்வுகளில் ஏற்பட்ட சில குழப்பங்களையும் அறிந்துகொள்வோம்.

திரை என்பது தமிழில் அலை என்றும் பொருள்படும்.  அலையெனப் பட்டது  ஒருமை ஆயினும் பன்மையும் குறித்து   அவ்வலைகள் வீசும் கடலை ஆகுபெயராக வந்து குறிக்கும்.  இங்கனம் கடலெனப் பொருள்படவே முத்திரை என்பது மூன்று கடல்கள் என்று பொருள்தரும். மூன்று கடல்கள் என்று பொருள்பட்டால் அதற்கப்புறம் அவை ஒன்று கூடுதலைக் குறிக்க சம் என்ற முன்னொட்டினைப் பெற்று  சம் முத்திரை >  சம் முத்திரை அம் >  சம் முத்திர அம் .> சமுத்திரம் என்று ஆனது என்பது  ஓர் ஆய்வின் ஓட்டமாகும்.சம் என்பது சமை என்பதன் திரிபாக ஒன்றுக்கு மேற்பட்டவை கூடுதலைக் குறிக்கும். சமையல் முதலிய காரியங்களில் பல் பொருள்கள் கூட்டியே ஆக்கம் பெறுகின்றன எனப்படுவது சரியே ஆகும். சமை என்பதில் ஐ குறைந்த நிலையில் சம் என்ற முன்னொட்டு கிட்டுகின்றது.  சமை என்பதன் முன்னோடி வடிவங்களுக்குள் செல்லவேண்டியதில்லை.

ஐகாரம் வீழ்ச்சி அல்லது கெடுவது தொல்காப்பியனாராலும் உரைக்கப்பட்ட நிகழ்வே ஆகும்.  இதைப் பண்டை நாட்களிலே ஆய்வாளர்கள் அறிந்திருந்தனர்.   திரை என்பது திர் என்று குறைவதும் சமை என்பது சம் என்று குறைவதும் சொல்லமைப்புகளில் இயல்பானதே.

சமுத்திரம் என்பதும் சிற்றூர்களில் வழங்கும் சொல்லே ஆகும். திர என்பதைத் த்ர என்று ஒலிப்பதாலேதான் அது அயல்போல் தெரிகிறது. திர என்பதைத் த்ர என்பது தமிழரல்லாதார் செய்த  குறுக்கமே.  அதனால் அவ்வாறொலிக்கும் சொல் அயலாகிவிடாது.

மூன்று கடல்கள் கூடாத நிலையில் அவற்றை முத்திரம் என்று இணைத்துக் கூறவேண்டிய தேவை ஏற்படவில்லை. அவை தனிக்கடல்களே.  அதனால் கூட்டு என்று பொருள்படும் சம் தேவையற்ற கூடுதல் சொல் ஆகிறது.

முத்தரையர் என்ற சொல்லை ஆய்ந்தவர்கள் அவர்கள் தரையரா அல்லது திரையரா என்று குழம்பியுள்ளனர்.  தரையர் என்றால் தரையில் வலிமையாய் ஆண்டவர்கள் என்றும் திரையர் என்றால் கடலில் வலிமையாய் ஆட்சி செலுத்தியவர்கள் என்றும் பொருள்படும்.   திரையர் என்பதில் உள்ள இகரம் அகரமாதல் சொல்லியலில் இயல்பானதே.

இதைக் கடலாட்சி என்று கூறுவதற்கு அவர்கள் கடலில் செய்த வீரதீரச் செயல்களின் வரலாறு தேவைப்படும்.  இவற்றை அறிந்து இதனை முடிக்கலாம்,  இதை அவர்களின் முடிவிற்கு விட்டுவிடுவோம்.

சா முத்திரை அம் என்பது  ச முத்திர் அம் என்று குறுகிற்று எனினும் இது சிந்திக்கத் தக்கதே ஆகும்.


கருத்துகள் இல்லை: