வியாழன், 16 ஆகஸ்ட், 2018

விகுதி இன்றிச் சொற்களை அமைத்தல்.

ஒவ்வொரு சொல்லையும் ஒரு விகுதி சேர்த்துத்தான் முடித்து அமைக்கவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை;  தமிழ் மொழியில் வழங்கும் பல சொற்களையும் ஆராயுங்கால் இது நன்`கு புலப்படுகின்றது.

இன்று சில சொற்களைக் கொண்டு இந்தக் கட்டின்மையை உணர்ந்துகொள்வோம்.

இரவிக்கை என்ற சொல் இப்போது பெரும்பாலும் வழங்கவில்லை. தையல்காரர்களும் அவர்களிடம் இரவிக்கை தைக்கக் கொடுப்போரும் பிளவுஸ் என்ற ஆங்கிலச் சொல்லின் மூலம் இதைக் குறிப்பிடுகின்றனர்.

ஒரு நூற்றைம்பது ஆண்டுகட்கு முன் தமிழ்ப் பெண்கள் சிற்றூர்களில் இரவிக்கை அல்லது பளவுஸ் அணிந்திருக்கவில்லை.  இன்னமும் பழைய முறைப்படி இரவிக்கை அணியாமல் தான்  மணப்பெண் கோவிலுக்குள் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற விதிகள் உள்ள கோயில்களும் கேரள மாநிலத்தில் உள்ளன.  சேலையில் வேண்டிய நீட்டமிருப்பதால் அதைக்கொண்டே உடலைப் போர்த்திக் கொண்டனர்.  ஆனால் இன்று இரவிக்கை அல்லது பளவுஸ் இல்லாமல் சிற்றூர்களில் கூடப் பெண்களைக் காணவியலாது.

இரவிக்கை சட்டை முதலியவை ஆங்கிலேயனிடமிருந்து நாம் கற்றுக்கொண்டவை ஆகும்.

 இரவிக்கை என்பது இருபக்கமும்  கையிருக்க அவிழ்த்து எடுக்கும் வசதியுள்ள பெண்ணின் சட்டையைக் குறிக்கிறது. இரு+ அவிழ் + கை என்பது இரவிழ்க்கை என்றாகி ழகர ஒற்றிழந்து இரவிக்கை ஆயிற்று.

ழகர ஒற்று (ழ்)  ஒழிவது பல சொற்களிலும் காட்டியிருக்கின்றோம்.

எடுத்துக்காட்டு:

வாழ்த்து + இயம் =  வாழ்த்தியம் >  வாத்தியம்.

இரவிக்கை என்பது திரிசொல். இதில் மூன்று துண்டுச்சொற்கள் உள்ளன.  இரு ; அவிழ் (வினைச்சொல் ); கை ( உடலுறுப்பு குறிக்கும் சொல்).  இரு என்பதும் அவிழ் என்பதும் கையென்ற சொல்லுக்கு அடைகளாக வருவதால்  இச்சொல் ஓர் உறுப்பைக் குறிப்பதுபோல் உள்ளது. அது இரவிக்கையை (பெண்டிரின்மேல்சட்டையைக் ) குறிப்பது பொருள் திரிபு ஆகும்.  கையைக் குறித்தது கையுள்ள ஆடையைக் குறிப்பது ஆகுபெயரென்றும் சொல்லலாம். ழகர ஒற்றும் ஒழிந்ததால் அதுவும் திரிபே. பேச்சில் இகரமும் ஒழிந்தது. எத்துணைத் திரிபுகள்!!  முன்னாளில் இருந்த இரவிக்கைகள் எங்கும் பார்க்கக் கிட்டவில்லை. அவை கையிடத்து  ( தோள் ) அவிழ்க்கும் கயிறுகள் உடையனவாய் இருந்திருக்கக்கூடும்,  200 ஆண்டுகட்கு முன் வாழ்ந்த தையல்காரர்கள் யாரும் எழுதிவைக்கவும் இல்லை; அவற்றைப்பற்றிய நூல்களும் கிட்டவும் இல்லை.  ஆகவே எப்படி அவிழ்த்தனர் என்பது இப்போது கூறமுடியவில்லை.  ஆனால் இரவிழ்க்கையே இரவிக்கை ரவிக்கை ஆயின.

இச்சொல்லில் விகுதிகள் இடைநிலைகள் எவையும்    இல.

இரு+ அகம் + சு + இயம்  என்பன இரு+ அக + சியம் ஆகி இரகசியம் ஆயிற்று.
அகத்திலிருந்து வெளியிடப்படாததே ரகசியம் ஆம். சு என்பதும் இயம் என்பதும் இடைநிலை-- விகுதிகள் ஆகின. இரு என்பது இருத்தல் என்னும் வினைச்சொல்.  இச்சொல்லில் விகுதிகள் வந்துள்ள படியால் இது  முறைமாற்றுடன் விகுதிகளும் வந்த சொல். முறை மாற்றாவது  அகம் இரு என்று வரற்குரியது  இரு அகம் என்று முறைமாறி அமைக்கப்பட்டுள்ளது.

சு -  பரிசு என்ற சொல்லில் விகுதியாய்க் காண்க.
இயம் - தொல்காப்பியம் என்பதில் இயம் விகுதி ( இ+ அம் ) காண்க.  ஓவியம் என்பதிலும் அது.

இலாகா என்பதில் விகுதி எதுவும் இல்லை.  செயலகம் அல்லது துறை என்பது இதன் பொருள்.   இல் - இல்லம்;   கா -  காப்பது;   ஆ - ஆவது.  காப்பதான இல்லம் என்பது முறைமாறி அமைந்து விகுதி எதுவும் இல்லாமல் திறமையாக வெளிப்பட்டுள்ளது. சில மொழிகளில் இப்படிச் சொற்கள் முறைமாறி நிற்பதே இயல்பு.  சோறு சாப்பிடு என்பது மலாய் மொழியில் மாக்கான் நாசி என்று அமையும்.  மாக்கான் -  சாப்பிடு;  நாசி - சோறு.    " சாப்பிடு சோறு "  என்பதே  மலாய் மொழிக்கு இயல்பு.  தமிழில் அல்லாவின் தூதர் என்பர் அரபியில் ரஸூல் அல்லா என்றே வரும், அம்மொழிக்கு அதுவே இயல்பு.  ஆனால் சமத்கிருதத்தில் தமிழின் இயல்பே வருகிறது:  கஜ வதனா;  யானை முகன்; வதனா கஜ என்பதில்லை. முகன் யானை என்பதாகாது.

தமிழ் மொழியின் மூலங்களை முறைமாற்றிச் சொல் அமைப்பது அயற்பாங்கு போல் இருக்கிறது.. இதுவும் பெரிதும் பயன்படுத்தப் படாத  தந்திரமே. எனினும் விகுதிகள் இல்லாமல் இச்சொல் அமைந்துள்ளது.  முறைமாற்றி இப்படிச் சொல்லமைப்பது தமிழில் தொல்காப்பியனாரால் கடைப்பிடிக்கப்பட்டதுமுண்டு:  இந்தச் சொல்லை அறிந்துகொள்ளுங்கள்;   "தபுதார நிலை"   முன் இடுகைகள் காண்க.

வினைத்தொகையில் சொற்கள் முறைமாறிச் சொல் அமையும்.  இத்தகு முறைமாற்றுச் சொற்களுக்கும் வினைத்தொகை உந்துமாற்றலாக இருந்திருத்தல் கூடும்.

சிலவிடத்துச் சொல் முறைமாறினால் பொருள் மாறிவிடும்; எ-டு:

கடிநாய் :  கடிக்கும் தன்மைகொண்ட நாய்.
நாய்கடி  என்பது வேறு. (  இது கொசுக்கடி அன்று, நாய் கடித்த புண் என்றபடி).

வேறுபாடு உண்டோ?  கெடுமதி;  மதிகேடு.

 லாவண்யம் லாவகம்   எப்படி அமைந்தன?

திருத்தம் பின் கவனிக்கப்படும்.

கருத்துகள் இல்லை: