ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

சுந்தரம் செட்டி சட்டி முதலிய சொற்கள்


அழகில்லாதார் பலர்.  அழகில்லாதாரிடத்தும் ஓர் அழகிருக்கும். அதைக் கண்டுபிடிக்கும் திறமுடையாரிடத்து அவ்வழகு வெளிப்பட்டு நிற்கும். அழகென்பது தோலளவுதான் என்பதும் ஓர் ஆங்கிலப் பழமொழி. அழகென்பது காண்பாருள் ஏற்புடையாரைப் பொருந்துவது என்றும் கூறுவதுண்டு.

உண்மையில் நாம் காணும் எல்லாரையும் அழகுடையார் என்று நாம் கொள்வதில்லை. சிலரைப் பிடிக்கும். சிலரைப் பிடிப்பதில்லை. ஒருவன் அல்லது ஒருத்தியின் மன அழகே அழகு என்பாருமுண்டு. ஆனால் அத்தகு தத்துவம் செயல்பாட்டில் இல்லாதது ஆகும்.

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.  அப்படிப் பிறந்திட்ட காலையும் ,மயக்கும் அழகுடையாராய்ப் பிறத்தல் அரிது  பெண்ணைக் குறிக்கும் அரிவை என்ற சொல் அரு என்ற அடியினின்று தோன்றியதில் எந்த வியப்பும் இல்லையே.  அரு >  அரி > அரிவை.   இ, வை என்பன விகுதிகள். சொல்லில் மிகுதி காட்டுவது விகுதி.  மிஞ்சு விஞ்சு என்பது போல.

சில அழகுகள் உங்களைச் சும்மா இருக்கவிடாது.   அழகுக்குச் சொந்தக்காரனிடமோ சொந்தக்காரியிடமோ ஒரு வார்த்தையாவது பேசுமாறு உங்களை உந்திவிடும். அழகுக்கு உந்து ஆற்றல் இல்லையோ?

உந்திவிடும் அரியது அழகு.
உந்து + அரு + அ =  உந்தரம் >  சுந்தரம்.
உந்து அரு அன் :  உந்தரன் > சுந்தரன்.
உந்து  அரு இ  :  உந்தரி > சுந்தரி.

உந்துதல் சுண்டுதல் என்பன சுட்டடிச் சொற்கள். தொடர்புடையவை.

சுண்டு அரு இ > சுந்து அரு இ “ சுண்டி அருகில் இழுப்பது" என்பாரும் ஒரு மாற்றுப் பகர்பவர் ஆவார்.

இதன் மூல அடிகள் உல் சுல் என்பன சுட்டடிகள்.

இதை அறிஞர் உரைத்துள்ளனர்.

இனி அகர வருக்கங்கள் ஏற்ற சகர வருக்கங்களாகத் திரிவன ஆகும்,  அமணர் > சமணர் என்பது பலமுறை சொல்லப்பட்ட பழைய எடுத்துக்காட்டு, புதியவை எம் முன் இடுகைகளிற் காண்க.

சமையலுக்குதவும் சட்டியை மறக்கலாமோ?  அடு > சடு > சட்டி. (சடு இ )
அடுதலாவது : சுடுதல் ,  சமைத்தல்.  
அடு > அடுப்பு.
அடுசில் > அடிசில் :  உணவு,  சோறு.
அடிசிற்சாலை,  அடிசிற்பள்ளி.

எட்டி > செட்டி, எட்டிப்பூ சூடி அரசர்முன் தோன்றும் வணிகர்,

சந்திப்போம்,


கருத்துகள் இல்லை: