வியாழன், 23 ஆகஸ்ட், 2018

விடைதெரியாத சொற்கள்.

சில சொற்கள் குழூஉக்குறிகளாகத் தொடங்கி  அதன்பின் மொழியில் பலரால் பேச்சில் பயன் கொள்ளுவன ஆகிவிட்டால் அப்புறம் அவற்றைக் குழூஉ க்குறிகள் என்ற நிலையில் அழுத்தி வைத்திருப்பதி   லொரு பொருளில்லை.  அவைபோல்வனவும் மக்கள் சொற்றொகுதியில்  (vocabulary, that is "community vocabulary") இடம்பிடித்துக் கொள்ளுமாறு  விட்டுவிடவேண்டும்.

உலகம் ஒருமுறை அழியும்.  அப்புறம் எல்லா உயிர்களும் அழியும். பின்னர் அழிந்தோரும் உயிர் பெற்று எழுவர்.  இப்போது அழிந்தோரும்  இதற்குமுன் அழிந்து கல்லறை வாசஞ்செய்வோரும் ஒன்றித்து எழுவர்.  அப்புறம்  கடவுள் நீதியை வழங்குவார்.

உலகம் அழியும். அழிந்தபின் அப்படியே போய்விடாது,  மீண்டும் மறு உருவாக்கம் பெற்று உயிர்கள் மீண்டும் உறபத்தி ஆகும்.

உலகம் அழிந்து மீண்டும் எழுமோ இல்லையோ நீதி விசாரணை வருவது நல்லதுதான்.  என்னிடம் கடன் வாங்கிக் கொண்டு இல்லையென்று சொன்னவர்களுக்கு இறைவன் நல்ல தண்டனை கொடுப்பார். என் காசு எனக்குத் திருப்பிக் கிடைத்துவிடும்.  அட பைத்தியமே

செகுத்தல் என்றால் அழித்தல்.  இதனுடன் உலகம் என்ற சொல்லின் இறுதியை இணைத்தால் செகு+ கம் என்று வந்து,  இதில் வந்துள்ள வினையாக்க விகுதியாகிய கு வெட்டுப்பட்டு,   செ+கம் = செகம் ஆகிவிடும்.    ஏன் கு என்பதை வெட்டவேண்டும் என்று கொஞ்சம் ஆர்ப்பட்டம் செய்யமாட்டீரோ?  ஏனென்றால் கு என்பது ஒரு வினையாக்க விகுதி. ஒரு சொல்லைப் புனையும்போது விகுதிகளை வீசிவிட்டு  அப்புறம் புதிய விகுதிகளைப் போட்டுக்கொள்ளலாம்;  விகுதி இல்லாமலே சொல் நன்றாக அமைந்துவிட்டால் அப்புறம் விகுதி எதற்கு?

விகுதி சேர்ப்பதே ஒரு  புதிய பொருண்மையை உண்டாக்குவதற்குத்தான். அதை  வேறு வழியில் புகுத்தற்கு வசதி ஏற்படும்போது பழைய விகுதி தேவை இல்லை. பழைய விகுதியால் கருத்தோட்டம் தடைபடலாம். ஒலி நயம் கெடலாம்.

மிகுதி >  விகுதி .  ஓ.நோ: மிஞ்சு > விஞ்சு .

அமைப்புச் சொல்:

செகு+ கம் =  செ + கம் =  செகம்=  ஜெகம்.

அழிந்து அழிந்து தோன்றுவது இந்த உலகம்.  அழியும் தோன்றும் அழியும் தோன்றும்  அப்பப்பா!

சாதல் என்பது அழிதல்.  இது செத்துப்போதல் என்றும் சொல்லப்படும்.  சா செ சீ ஸி.    இந்தக் கடைச் சொல் சீன மொழியில் இறந்துவிடுதலைக் குறிக்கும். இதிலோர் ஒற்றுமை பாருங்கள்.

இந்த ஜெகம் செகம் என்ற சொல் ஒரு போர்ட்மென்டோ ( portmanteau) ஆகும்.  பகவொட்டுச் சொல். இப்போது தமிழ்த் தட்டச்சு செய்துகொண்டிருப்பதால் ஆங்கில எழுத்துக்களில் முன் குறித்த சொல்லைக் காட்ட இயல்வில்லை. பின்பு குறிப்பேம் யாம். (done).

இகபரம் இரண்டிலும் எங்கும் நிறைவான ஜோதியே
இணையில்லா இன்ப ரசமான சேதியே
செம்பொன்னணி நவமணியே
செல்வமெனும் திருவுருவே
சேம நலம் யாவும் உந்தன் செயலாலே.

இது உடுமலை நாராயணக் கவியின் பாடற் பகுதி.

இகபரம்.  இகம் என்பது   இந்த உலகம்,    இ=  இந்த;   கம்=  உலகம்.  இவற்றை இணைக்க இகம் என்ற சொல் கிடைக்கிறது. இது ஒரு பகவொட்டு.  போர்ட்மென்டோ ஆகும்.

காலையில் பிரக்ஃபஸ்ட் breakfast எடுத்து அப்புறம் ஒரு மணிக்கு லஞ்ச் lunch எடுத்தால் காசு நட்டம், ஒரு பிரஞ்ச்  brunch  எடுங்கள்.  காசு மிச்சம்.  ஆங்கிலத்தில் பிரஞ்ச் என்பது ஒரு போர்ட்மென்டோ.  பகவொட்டு.    

கடையில் போய்  துப்பரு கப்பரு உப்பரு மூன்றையும் வாங்கி வைத்துவிடுங்கள், ஞாயிற்றுக்கிழமை தோசை போட்டுச் சாம்பார் சட்டினி எல்லாம் போட்டுப் பசியாறலாம் ( பசி ஆரலாம்).  நீரினும் ஆரளவில்லா காதற் கணவனிடம் மனைவி இப்படிச் சொல்கிறாள்.

அடு+இன் +இ =  அட்டினி > சட்டினி > சட்னி !! அடுதற் கருத்து மாறியுள்ளது. இப்போது அட்டுச் செய்யாத சட்டினியும் உண்டு . 


துப்பரு கப்பரு உப்பரு மூன்றையும் கண்டுபிடியுங்கள்.  நிலத்துக்கு வாய்தா அப்புறம் கட்டலாம்.

விடை தெரிந்தால் பின்னூட்டம் செய்யவும். வணக்கம்.

கருத்துகள் இல்லை: