செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

பிரச்சினை.

இன்று பிரச்சினை என்ற சொல்லினையும் அறிந்து இன்புறுவோம்.

சினை என்பது தமிழில் உறுப்பு அல்லது உள்ளடங்கிய பகுதி என்று பொருள்தரக்கூடிய சொல். ஒரு மீனில் அதன் குஞ்சுகளைப் பிறப்பிக்கும் சிறுசிறு முட்டைகள் உள்ளன. இதனை உயிரியல் வகுப்பிலோ அல்லது மீன் வெட்டி எடுக்கும் இடங்களிலோ கண்டிருப்பீர்கள். இது மீனில் உள்ளிருக்கும் ஒரு பகுதி.  மீன் குஞ்சுகளைப் பொரித்தவுடன் இது மாறிவிடும். அப்புறம் மீன் மீண்டும் சினைப்பட்டாலே இவ்வுறுப்பு அங்கு உண்டாகியிருக்கும்.


சினை என்பது அது மட்டுமன்று; நம் கைகால்களும் உறுப்புகளே ஆதலால், இலக்கணத்தில் இவையும் சினைப்பெயர் என்றே குறிக்கப்பெறும்.  அதாவது கை கால் என்பன உறுப்பின் பெயர்கள்.

ஒரு நிகழ்வில் பிற சினை உண்டாவதென்றால்,  முன்னில்லாத புதிய ஒரு பகுதியோ உறுப்போ முளைத்துவிட்டது அல்லது தோன்றிவிட்டது என்று பொருள்.  இப்படித் தோன்றிய புத்துருவினால், நன்மையும் இருக்கலாம்; தீமையும் இருக்கலாம்; பெரும்பாலும் தீமை ஏற்பட்டாலே பிற சினை தோன்றிவிட்டது என்று கூறுவோம்.

இது பழந்தமிழ் வழக்கு.  இந்த பிற சினை என்பது பிற்காலத்தில் ஒரு சொல்லாகி "பிறச்சினை"  என்ற புதிய சொல் உருவானது.   பிற சினை என்ற இரு  சொற்களும் ஒரு வாக்கியத்தில் இரு சொற்களாக இருக்குமானால் அங்கு சகர ஒற்று (ச்) தோன்றாது.  அது ஒரு சொன்னீர்மைப்பட்டு புதுக்கிளவி ஆனபடியால் ச் என்ற ஒற்று உள் நுழைந்து "பிறச்சினை"  என்று ஒலிக்கப்பட்டது.  அப்புறம் தெரியாதவர்கள் இதனை பிரச்சினை என்று எழுதி றகரத்துக்கு ரகரம் மாற்றீடு ஆனது.  அவ்வாறு ஆனவுடன் அதன் பிறப்பு புலவராலும் கூட மறக்கப்படுவதாயிற்று.

பிற சினை > பிறச்சினை > பிரச்சினை > பிரச்னை!

இனிப் பிரஸ்னம் என்றும் ஒலிக்கப்பட்டு அயற்பூச்சு மேற்கொண்டது.

இந்தச் சொல் வரலாறு அறிய மகிழ்வு தருமே.

கருத்துகள் இல்லை: