இன்று ஒரு சொல்லை ஆராய்வதன் மூலம் ஒரு கொள்கையை உருவாக்குவோம்.
இது எப்படி? ஆளுக்கொரு கொள்கை ஏற்பட விடலாமா என்று நீங்கள் கடாவலாம். நீங்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் ஆளுக்கொரு கொள்கை இருப்பதை உலகத்தில் போக்கிவிடுதல் இயலாததாகும். இது மிதிவண்டி ( சைக்கிள் ஓட்டுவது போல). என்னதான் சட்டங்கள் இயற்றினாலும் எந்த எந்த இடத்தில் எப்படி ஓட்டுவதென்பதை ஓட்டுகிறவன் தீர்மானிக்கிறான். ஓட்டுவதற்குமுன் எங்கே எங்கே மிதிக்கவேண்டும், எங்கே எங்கே எல்லாம் திருப்பவேண்டும், எங்கெங்கு முழுதும் திருப்பவேண்டும், எப்படி எப்படி வருமிடங்களில் பாதி திருப்பவேண்டும் , எப்படி மிதிக்காமலே மிதிவண்டியை உருட்டிக்கொண்டு ஓட்டவேண்டும் என்று என்னென்ன எழுதிவைத்தாலும் இறுதியில் செயல்பாட்டில் ஓட்டுகிறவனே பலவற்றை வீதியில் தீர்மானிக்கிறான். அவனுடைய தீர்மானம் எழுதில் இல்லாததாக இருக்கலாம்; வரைவு இல்லாததாக இருக்கலாம்; கலந்தாய்வு இல்லாததாக இருக்கலாம். என்றாலும் அதுவும் தீர்மானமே. அதுதான் அவனைக் கொண்டு சேர்க்கிறது. பல்லாயிரம் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறைகளில் பலவற்றை அவர்களே தீர்மானிக்கிறார்கள். இந்தத் தீர்மானச் செயல்வாய்ப்பினை அவர்களிடமிருந்து யாரும் பறித்துவிடமுடியாது. இப்படி ஓர் அமெரிக்கப் பேராசிரியர் என்னிடம் சொன்னார் . பகுத்தறிவுடன் பட்ட கருத்தன்றோ? நான் ஒன்றைச் சொன்னால் நீ பத்தை உணர்ந்துகொள் என்று சப்பானியப் பேராசிரியர் வகுப்பில் கூறினார். ஆம் , உண்மைதான். மாணவ மாண்பினர் அப்படித்தான் இருக்கவேண்டும். பிறர்கொள்கை அவர்களுக்கு. நமக்கும் கொள்கை இருக்கலாம். அதுதான் உலக இயல்பு.
இப்போது விடயத்துக்கு வருவோம். எம்முன் இருப்பது வாடை என்னும் சொல்.
வாடை என்று இரு சொற்கள் உள்ளன. ஒன்று வடக்கு என்று நாம் சொல்லும் திசைப்பெயரிலிருந்து வந்த சொல்.
இன்னொன்று வாடுதல் ( நீர்வற்றி உலர்தல் ) என்னும் வினையினின்று புறப்பட்ட சொல்.
வட > வடக்கு.
வட > வாடை. (வடதிசையிலிருந்து வீசும் காற்று).
வட + ஐ = வாடை என்பதில் வகரம் வா என்று நீட்சி பெற்றுத் திரிகிறது.
இதில் டகரத்தில் உள்ள இறுதி அகரம் கெடுகிறது. எனவே இருதிரிபுகளும் கூடி வாட் என்று ஆகிறது, வாட் என்பது ஒரு சொல் என்று சேர்க்கமாட்டார்கள். புணர்ச்சியில் தோன்றும் இடையுருவம் இதுவாகும்.
கருவில் உள்ள உருவம்போலும் பிறவாமுன் உள்ளதோர் உருவம். கருவுரு
என்னலும் ஆகும்.
வாட் + ஐ என்று விகுதியை இணைத்தவுடன் வாடை என்ற சொல் கிடைக்கிறது.
இப்படி அலச, வடக்கிலிருந்து வீசும் காற்று என்னும் விளக்கத்திற்கு இயைந்து நிற்கின்றது.
இனி, மரம் செடி கொடிகள் உள்ள இடத்தில் இலைகள் தழைகள் வாடுவதால் ஒரு வீச்சம் உண்டாகிறது. இது கரியமில வாயு அல்லது வளி என்பர். இது வாடுதலால் அல்லது உலர்தலால் உண்டாகிறது. வாடு + ஐ = வாடை.
இப்போது இதுபற்றிய நம் கொள்கைக்கு வருவோம். வட (வடக்கு) என்ற திசையைக் குறிக்கும் சொல்லில் நின்று உருவாகிய வாடை என்பது ஒரு சொல்.
வாடுதல் என்ற வினையடியாய்ப் பிறந்த தொழிற்பெயரான வாடை என்பது இன்னொரு சொல்.
இவை ஓரொலியனவாகிய இருவேறு அடிகளில் தோன்றிய சொற்கள்.
இனி வடத்தல் என்றொரு வினைச்சொல் இல்லை. ஆனால் வட என்பது பெயர்ச்சொல்லுக்கு அடையாய் நிற்கிறது. எடுத்துக்காட்டு : வட > வட நாடு; வட கலை முதலியன. இவ்வாறு உரிமை பூண்டு நிற்பதால் உரிச்சொல் ஆகும்.
முடிவு: வட என்ற உரிச்சொல்லிலிருந்து உண்டான வாடை என்பது வேறு. வாடுதல் என்ற வினையடிப் பிறந்த தொழிற்பெயரான வாடை என்பது வேறு.
அறிந்து மகிழ்வீர்.
திருத்தம் பின்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக