சனி, 4 ஆகஸ்ட், 2018

என் வீட்டுக்குப் பின் பத்து நாய்கள் போன துன்பம்

பத்துநாய்கள் பின் தெருவில் நத்து நாட்கள்
பறந்தனவே வாராவோ  எங்கே  எங்கே;
ஒத்திருந்த காலமதை உன்னு கின்றேன்;
ஓய்ந்திடாத குரைப்புக்குள் ஊறிப்  போன
அத்திருந்து செவிகட்க  மைதி தானோ
ஆகவிது வேறுலகும் ஆயிற்  றம்மோய்!
மெத்தையிலே கிடந்தாலும் மேவு நெஞ்சில்
மீண்டுமொரு மகிழ்வில்லை யாண்டும் துன்பே.

இங்கு பத்து நாய்களோ அதற்கு மேலோ இருந்தன. பின் வீட்டு சீனப் புண்ணியவான் பகலில் இறைச்சி கோழி உணவுகள் விற்கும் கடைகட்குப் போய் வாடிக்கையாக அவற்றுக்கு  எலும்பு இறைச்சி கலந்த சோறு கொண்டுவந்து போட்டார். தெம்பாகக் குலைத்துக் கொண்டிருந்தன.
அந்த வீட்டுச் சீன அம்மையார் சொன்னார்: புதிதாக இங்கு குடிவந்தவர்கள் போட்ட புகார் மனுவின் காரணமாக எல்லாவற்றையும் அப்புறப்படுத்தும்படி நகர அவை உத்தரவிட்டுவிட்டது. எல்லாம் போயிற்று என்றார்.

பாவம், எங்கே போய் என்ன பாடுபடுகின்றனவோ! சிலவற்றை மீளா உறக்கத்துக்குக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டார்களாம்.

இந்தக் கவி அது பற்றியது.

12  12 12 12 12 12 12 12

பின் தெரு -  என் வீட்டின் பின்னால் உள்ள தெரு.
நத்து(ம்)  -   பின்செல்லும்; சோற்றுக்காகப் பின்னால் போகும்.
ஒத்திருந்த - (குலைத்தாலும் வாடை கொடுத்தாலும் ) சம்மதித்திருந்த;
உன்னுகின்றேன் = சிந்திக்கின்றேன்;
குரைப்பு - நாய் குலைத்தல்.
திருந்து செவிகள் - நல்ல செவிகள்; இசை தெய்வநாமம் முதலிய கேட்கத்
தகுதியுடைய காதுகள்;
மேவும் - பொருந்தும் (நெஞ்சில்)
யாண்டும் -  எப்போதும்


கருத்துகள் இல்லை: