திங்கள், 6 ஆகஸ்ட், 2018

சவம் தொண்டை நுண்மாண் நுழைபுலம்


கட்புலம் கொண்டு நம் எதிரில் இருப்பதைக் கண்டுகொள்கின்றோம். நுழைபுலம் கொண்டு ஐம்புலங்களாலும் அறிந்துகொள்ள வியலாதவற்றிலும் உட்புகுந்து இது எப்பொருள், எத்தன்மைத்து, எப்பயனது என்று கண்டு அவ்வாறு கண்டதனை இருளிலிருந்து ஒளிப்பக்கத்துக்குக் கொணர்கின்றோம், பேரறிவாளர்கள் இப்படிச் செய்வதை நுண்மாண் நுழைபுலம் என்று சொல்வர்.

ஒரு மாந்தப் பிறவி தனக்குத் தானே இத்தகு நுண் மாண்  நுழைபுலம் இருப்பதாகக் கூறிக்கொள்ளலாகாது. ஆயினும் எப்பொருளையும் நுழைபுலம் கொண்டு அலசுதல் கடமையாகும். காரணம் எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்டல் அறிவன்றோ? நுழைபுலத்துடன் நுண்மாண் என்ற அடைமொழியையும் இணைத்துக்கொள்ளுதல் தற்புகழ்ச்சியாகி விடும். அதைப் பிறர் கூறலாம்.

சவத்தல் என்பதொரு வினைச்சொல்.  ஒரு பொருள் சவத்துப் போய்விட்டதென்றால் அதுதன் திடத்தன்மையை இழந்துவிட்டதென்று பொருள். இறந்துவிட்ட உடலொன்று தொடக்கத்தில் சவத்துப்போன நிலையிலே இருக்கும். அதற்கான நேரம் கடந்தபின் தான் அது விறைத்துப் போகும். இதனை அறிவியலார் ரிகோர் மோர்ட்டிஸ்  அல்லது மார்ட்டிஸ் என்பர். இது ஆங்கிலத்தில் பயன்பெறும் இலத்தீன் தொடர். ஆகவே இறந்தோனைக் குறிக்கும் சவம் என்ற சொல் உடல் விறைக்கும் வரை உள்ள நிலையைச் சிறப்பாகவும் பின்னர் அவனடையும் உடல் நிலையைப் பொதுவாகவும் குறிக்கின்றது, இப்போதுள்ள மொழிநிலையில் இது பொதுப்பொருளிலே வழங்குகிறது.  முன்னர் அது சிறப்புப் பொருளில் வழங்கியதென்பது அதன் வினைச்சொல்லினோடு தொடர்பு  படுத்திக் காண்கையில் நன்`கு புலப்படுகின்றது.  பல கிளவிகள் இதுபோது தம் சிறப்புப் பொருளை இழந்துவிட்டன.

சவ என்ற வினையோ சா என்ற இன்னொரு வினையுடன் சொற்பிறப்பில் தொடர்பு உடையது ஆகும். அதனால் சா > சாவு > சாவம் > சவம் என்று குறுகிற்று என்றும் இதனை நன்`கு எடுத்துக்காட்டலாகும்.  எனவே சா என்ற வினை குறுகி சவம் என்ற தொழிற்பெயர் அமைகின்றது என்பது இன்னொரு சாலைவழியே அம்மைய இலக்கை அடைதலாகும்,

இதுவேபோல் தொண்டை என்பதும் தோண்டு > தொண்டை என்று குறுகித் தொழிற்பெயர் அமைந்தது என்று முடிக்க இயலும் ஒரு சொல்லாம். ஆனால் தோண்டு என்ற சொற்கும் தொண்டை என்ற சொற்கும் பொதுவான முன் அடி வடிவமொன்று சொல்லியலில் உளது.  அது தொள் என்பது. தொள்> தொளை> துளை என்ற சொல்லைப் பிறப்பிக்கிறது. ஒகரம் உகரமாதல் இதுவாகும். பின் தொள் > தொள்+து > தொள் து ஐ > தொண்டை என்றும் முடியும்.  எனினும் தொள்ளுதல் தொண்டுதல் என்ற வினைகள் இன்று மொழியில் காணப்படவில்லை. இவை இருந்திருந்தால் மறைந்துவிட்டன என்றே கொள்க. இவற்றை மீட்க வழியிலது.  இவை பழையன கழிதற் பாற்பட்டவை யாகும். தொள் என்பது தொடு என்று திரியும்.  தொடுதலாவது தோண்டுதல். இச்சொல் தொட்டனைத் தூறும் மணற்கேணி என்ற குறளில் உளது. இது முதனிலை நீண்டு தோடு என்று இன்றும் தொழிற்பெயராய் உள்ளது. பெயரானபின் மீண்டும் வினையாவதைப் புலவர்கள் இயல்பாகக் கொள்வதில்லை. முயல் > முயற்சி > முயற்சித்தல்  என்ற வடிவத்துக்கு எதிர்ப்பு தென்படுகின்றது. தோடு என்று பெயரானபின் தோண்டு என்று நடுவில் ஒரு ணகர ஒற்றுப் பெற்று வினையாவது மொழியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது என்று அறிக. ஆகவே தொடு(வினை)> தோடு (பெயர்) > தோண்டு (வினை) > தொண்டை ( குறுகி விகுதி பெற்று பெயர்) என்று வரும். இப்படிப் பெயரானபின் வினையானவற்றையும் தம் வினைத்திறம் இழந்த சொற்களையும்  ஒரு பட்டியலிடலாம்.

அப்போது முயற்சித்தலுக்கு உள்ள எதிர்ப்பு குறைவாகுமா என்று தெரியவில்லை.



கருத்துகள் இல்லை: