புதன், 30 மே, 2018

மாநாடு - மகாநாடு. அமைப்பும் பொருளும்.

மகாநாடு,  மாநாடு  என்ற சொல்வடிவங்கள் இப்போது
பலரும் தாளிகைகளில் கண்டு நினைவுறுத்திக்
கொள்ளுவன ஆகும்.

தமிழில் மா என்றால் பெரிய என்று பொருள். இந்த மா
என்னும் சொல்லுக்கு வேறு பொருள்களும்
உள்ளனவென்றாலும் அவை நம் இன்றைய
உரையாடலுக்குத் தொடர்புடையனவல்ல.

நாடு என்பது பல்பொருளோருசொல்.  அதாவது பல
பொருள்களையுடைய ஒருபதம்.  நாடு என்பதன்
பொருளாவன:

இடம்
உலகம்
ஊர்
பக்கம்
பூமி
தேசம்
நாட்டுப்புறம்
இடப்பரப்பு
மருதநிலம்

இவற்றுள் எதுவும் மக்கள் கூட்டத்தைக் குறிக்கவில்லை
. ஆனால் நாம் மாநாடு என்று  அல்லது மகாநாடு என்று
கூறினால் மக்களின் கூட்டத்தையே குறிக்கின்றோம்.

எனவே இடம். உலகம், தேசம், பூமி என்பவற்றில்  எதுவாயினும்,  ஆகுபெயராய் நின்று ஆங்குக் கூடும் மக்களைக் குறிக்கவே,   மா என்பதும் பெரிய என்று பொருள்தர,  இறுதிப்பொருளாய் வருவது:  பெரிய மக்கள் கூட்டம் என்பதே ஆகும்.

"ஊரே சொன்னது, நாமிருவரும்தாம் பொருத்தமான மணமக்கள் என்று "  என்பதாக வரும் உரையாடலில்,  ஊர் என்பது ஊர்மக்களைக் குறித்தது.  உயிருள்ளனவும் இல்லாதனவாகிய பிறவற்றையோ கட்டிடங்களையோ குறிக்கவில்லை.  வணிக வளாகம் விலையை ஏற்றியிருக்கிறது என்றால் அங்குள்ள கட்டிடம் விலையை ஏற்றவில்லை;  அதை நடத்தும் முதலாளியோ  குழும்பின் ஆட்சிக்குழுவினரோ ஏற்றிவிட்டனர் என்று பொருள்.  பெட்ரோல் ( கல்லெண்ணெய்)  விலை ஏறிவிட்டதென்றால் தானே எப்படி ஏறும்?   இது ஒரு பேச்சு வழுவமைதியாகும்.

இப்போதைக்கு இவ்வாறு புரிந்துகொள்வோம்.  மகா, மா என்பன எப்படி வந்தன, பெரிய என்ற பொருள் எப்படி ஏற்பட்டது,  மா என்ற மரத்தினாலா?
அதை இன்னோரெழுத்தில் அறிந்தின்புறுவோம். 

பிழைத்திருத்தம் பின்னர்.

கருத்துகள் இல்லை: