திங்கள், 28 மே, 2018

தீபகற்பம்: தீவகம் அல்லாதது (முக்கரைத்தொடர்)

தமிழ்மொழிக்குரிய நிலப்பகுதி இந்தியாவின் தென்பகுதி என்று நாமறிவோம், அதிலும் ஒரு பகுதியே இப்போது தமிழ் வழங்கும் நாடு,  இதைத் தீபகற்ப இந்தியா என்று நாம் சொல்லலாம்,  இன்னும் துல்லியமாகச் சொல்லவேண்டுமாகில், தீபகற்பத்தின் ஒரு பகுதி எனலாம்.

தீபகற்பம் என்ற சொல்லையும் ஆய்வோம்.

தீபகற்பம் என்ற சொல் தமிழ் அகரவரிசைகளில் இல்லை என்று தெரிகிறது.  யாம் வைத்திருக்கும் சில அகரவரிசைகளில் இல்லை. ஆனால் எம்  சமஸ்கிருத அகராதியில் அது உள்ளது.

தீபகல்பம் என்பது சமஸ்கிருதத்தில் தீவையும் குறிக்கும். முப்புறம் கடல் சூழ்ந்த தீவு அல்லாத பகுதியையும் குறிக்கும்.

ஆனால் பிராமணர் என்போர் கடல்தாண்டிப் போகக்கூடாது என்று சாத்திரங்கள் சொல்கின்றன.  இப்போது யாரும் இதைக் கடைப்பிடிக்கவில்லை என்றாலும்  தீவுக்கும் தீபகற்பங்களுக்கும் பெயரிட்ட மிகப் பழங்காலத்தில் அவர்கள் அங்கெல்லாம் சென்றிருக்கமாட்டார்கள் என்பது தெளிவு.  தீவுபக்கம் போனால் அன்றோ அதைத் தீவு என்று பெயரிடுவார்கள்.  முப்புறம் கடல் சூழ்ந்த குமரிக்கண்டத்தினன் தமிழன் ஆதலாலும் உலகின் பல பகுதிகட்கும்  சென்றுவந்தவன் அவன் ஆதலினாலும் அவன் அதற்குப் பெயர்களை இட்டிருப்பான் என்று நாம் நன்றாக நம்பலாம்.

தீவு தீபகற்பம் முதலிய சொற்களைத் தமிழர்கள் படைத்திருந்தாலும் அவர்கள் இவற்றைப் பதிந்த நூல்கள் இல்லாதொழிந்தமையால், நாம் இவற்றைச் சங்கத நூல்களின் துணைகொண்டு கண்டுகொள்கிறோம்.

தீவு என்ற சொல் முன்னர் இங்கு விளக்கப்பட்டது.  அதனைக் காண
அன்புகூர்ந்து சொடுக்கவும்:

http://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_47.html

 அதைப் படித்துவிட்டீர்கள். இப்போது தீபகற்பம் என்ற சொல்லைப் பார்ப்போம்:

தீவு என்ற சொல் தீவகம் என்றும் வரும்.  தீபகற்பம் என்பது முழுதும் நீரால் சூழப்படாமல் உள்ள நிலம்.  தீவு அல்லாதது.  தீவகம் அல்லாதது.

தீவகம்+ அல் +( பு+  அம்).
அல் என்பது அல்லாதது. ( பு,  அம் விகுதிகள். )
தீவ(க + அல்) + பு + அம். :    ஓர் அம் கெட்டது,   அம் என்பது நிலைமொழியின் ஈறு,
தீவ(கல்)+பு+ அம்.  (மீண்டும் ஓர் அ  கெட்டது.)
தீவகற்பம்.
வகரம் பகரமாய்த் திரியும்.
எனவே  தீபகற்பம்.

உண்மையில் இது தீவகற்பம் என்றே இருப்பது தக்கது.

தீவக அல் பு அம் =  தீவகற்பம்  : பொருள் தீவகம் அல்லாதது,  தீவு அல்லாதது,

தீவு என்பது தீர்வு என்பதன் திரிபு அன்றோ?  ஆதலால்  "தீவக அல்லாதது" "என்றால் தீர்வாகச் சூழப்படாதது என்று பொருள் சரியாக வருகிறது.

தீவகற்பத்துக்கு இன்னும் கற்பம் ஏற்படவில்லை,  காரணம் எல்லாம் தமிழ்ச் சொற் பகுதிகளாகவும் விகுதிகளாகவும் இருப்பதால்.

தீவகற்பமென்பது உண்மையில் முக்கரை நிலத்தொடர்  ஆகும்.  தீபகற்பம் என்ற சொல் பிடிக்காதபோது இதை "முக்கரைத்தொடர்"  என்று குறிப்பிடுதல் ஏற்புடைத்தாகும்.
 

கருத்துகள் இல்லை: