சனி, 19 மே, 2018

ளகர லகர ஒற்றுக்கள் விடுபடல்.

ஆள் என்ற சொல்லை நாம் இங்கு சிலமுறை ஆய்வு செய்துள்ளோம்.  இன்று அதை வேறு கோணத்தில் ஆய்கிறோம்.

கண்டாள். வந்தாள்,  சென்றாள் என்று வருவன அனைத்தையும் வாழ்மொழியாய் உதிர்க்கும்போது  கண்டா.  வந்தா,  சென்றா என்று பலர் பேசுகின்றனர். அவ  ஆடுவா,   ஆனா நல்லா இல்ல என்கின்றனர்.

இதில் நாம் காண்பது யாதெனில்  இறுதியில் வரும் ளகர ஒற்றினைப் பலரும் உச்சரிப்பதில்லை. இப்படிப் பேசுதல் தமிழருக்கு இயல்பாகும்,  வேறு மொழிகளைப் பேசும்போது இறுதியில் வரும் ரகர ஒற்றினை விட்டுப் பேசுதல் என்பது சீனர்களிடையே இயல்பாக உள்ளது.

இப்படி இறுதி ஒற்றினை விட்டுப் பேசினாலும்  (   எ-டு:  அவள்  - அவ),  ஆள் என்ற சொல்லைத் தனியாக உச்சரிக்கும்போது  ஆள் என்பதை ஓர் உகரம் சேர்த்து ஆளு என்று நீட்டிக்கொள்வது பழக்கம். ஆக ளு என்பதில் இறுதி உகரம் சாரியையாக நிற்கிறது.

ஆள் என்பது பெண்பால் விகுதியாய் வருவது ஒருகாலத்தில் பெண்கள் குடும்பங்களில் மேலாண்மை செலுத்தியதைக் காட்டுவது என்பதை யாம் முன்பே கூறியுள்ளோம்.

அவாள் இவாள் என்பது  அவ்  ஆள்  இவ் ஆள் என்பதன் குறுக்கம்.  சிலர் இங்கும் ளகர ஒற்றினை விட்டுவிடுவது இயல்பு.

முட்டாள் என்ற சொல்லிலும் ளகரத்தை விட்டுப் பேசுதல் இயல்பு.

முட்டாப் பயலையெல்லாம் தாண்டவ ராயா காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவராயா

என்று பாடலில் வரும்.

முட்டாப் பயலே மூளை இருக்கா
என்று ஏழை மேலே
துட்டுப் படைச்ச சீமான் அள்ளிக்
கொட்டுற வார்த்தை போலே

என்ற கண்ணதாசனின் வரியிலும் ளகர ஒற்று விடப்பட்டுள்ளது.

லகர ஒற்றும் இவ்வாறே விடுபட்டுப்  போவதைக் காணலாம்.

அத விட்டா வேறே  வழி என்று பேசும்போது  விட்டால் என்பது
விட்டா என்று வருகிறது.

போனால் போகட்டுமென்பது போனாப் போகட்டும் என்று வரும்,

கருத்துகள் இல்லை: