சனி, 19 மே, 2018

ஆள், முட்டாள்.

முதலில் முட்டாள் என்ற சொல்லிலிருது தொடங்குவோம்.
 இரண்டு நபர்கள் 1  வாய்ச்சண்டையில் ஈடுபட்டுக்
கொண்டிருந்தனர், அப்போது ஒருவர் இன்னொருவரைப்
 பார்த்து  "முட்டாள்" என்றார். அதற்கு இன்னொருவர்:
"முட்டாள் என்றாலென்ன தெரியுமா.நான்  முட்டு
முடுக்குகளையாவது  ஆள்பவன்; நீ   ஒன்று
மில்லாதவன் " என்றார்.   அப்போது யாம் இவர்
சொல்வதைக் கேட்டு  வியப்பிலாழ்ந்தோம்.
சொல்லாராய்ச்சி  என்பது மக்களிடம் இயற்கையாகவே
அமைந்து   கிடக்கிறது என்பதை உணர்ந்தேம்.

இவர்கள் பேசிக்கொண்டபடி  முட்டாள்
என்ற சொல்லில் இறுதியில் நிற்பது  "ஆள்"  என்ற
சொல்தான்.  அது  சரியானால்  இந்தக்  கூட்டுச்
சொல்லில்  முன்னிருப்பது  "மூடு"   அல்லது
"முட்டு"  அல்லது  "முடு"  ஆக இருக்கவேண்டும்.

இன்னொரு சொல் இருக்கின்ற தே:   "மூடன்"   என்பது..  
 அது    கூட்டுச்சொல் அன்று. இறுதியில் இருப்பது  அன்
என்ற  ஆண்பால் விகுதி.   எனவே  முன்னிருப்பது
 "மூடு"  என்பதுதான்.

இப்போது முட்டுதல் என்பதன்  அர்த்தங்களைக்
கவனிப்போம்.

எதிர்த்தல்
குத்துதல்
குறைதல்
மோதுதல்
தடைப்படுதல்
போரிடுதல்
வழுவுதல்.

முட்டு என்பதும்  பொருந்திய பொருள் உடையதாய்
உள்ளது.  குறைதல் என்பது  அதுலுமுள்ளது.

மூடம்  என்பது     அறிவின்மை என்று பொருள்
படுவதால்  மூடன் என்பது மூடமுடையவனைக்
 குறிக்கிறது.

முடு >   முடை:   பணத்தட்டுப்பாடு குறிப்பது.
இது  குறைவுப்பொருள். முடு >    முடம்:
உடற்குறை ஆகையால்  இதுவும்  குறைவுப்
பொருள்.

முடு,   முட்டு,   மூடு யாவும்  குறைவுப் பொருள்
உள்ள அடிச்சொற்கள் ஆதலால்   மனிதனுக்குள்ள
 ஏதேனும்   ஒரு குறையை உணர்த்தும்.

ஆனால்  முட்டாள் என்பதில்  உள்ள  ஆள் என்பது
ஆட்சிசெய்வோன்  என்று
பொருள்படாமல் நபர்   என்றே பொருள்படும்.

அடிச்சொல்:

முடு.

திரிபுகள்:

முடு > முட்டு>   முட்டாள்.
முடு > மூடு>  மூடம்>  மூடன்.





---------------------------------------------------
அடிக்குறிப்புகள்:

1.  நபர்:  ந(ண்)பர்.  இடைக்குறை     .தமிழிலிருந்து
உருது  இதை மேற்கொண்டது.

கருத்துகள் இல்லை: