வெள்ளி, 11 மே, 2018

தொண்ணூறு அகவைக்கு அப்பாலும் - மகாதீர்.

இன்னிசைப் பஃறொடை வெண்பா.
 (பன்னிரண்டு அடிகள்)

------------------------------------------

தொண்ணூற்றுக் கப்பாலும் தோன்றும் அரசியல்
பண்ணூறும் தேனிலவு மாமேதை;   அன்னவர்க்குக்

கண்ணூ  றழகு கழிந்திடாக் கங்கினிலும்
எண்ணூறும் சிந்தனைச் சிற்பி-   மகாத்தீரே!

நாட்டுநலம் மக்களே  நாடும் நலமனைத்தும்
கேட்டுவரு முன்னரே கிட்டிடச் செய்கையர்.

கள்ளம் இழைத்திட்ட காழ்ச்சொல்  கழுதைகளை
வெள்ளம் எனவந்து வீழ்த்திப் புரட்டியவர்.

விள்ளும் அனைத்திலும் வேண்டும் நகைச்சுவையர்;
கொள்ளும் ஒழுங்கோடு சட்டம் திகைபவரே.

மூலவ நல்லமைச்சாய் முன்னிருந்து மேல்நடத்தி
நாளும் நயம்தருக நன்கு.





குறிப்புகள்:


மூலவ நல்லமைச்சாய் =  பிரதமராய்.
அவர்க்கு அரசியலுடன் இப்போது ஒரு தேனிலவு
என்பது கவிதை.
வாழ்க்கையின் இறுதிக்கு  வந்துவிட்டேன் என்று 
அவர் சொன்னாலும் அழகு இன்னும் உள்ளது.

கண்ணூறு அழகு ----  அவர் பார்வையிலிருந்து கிளர்ச்சி தோன்ற
ஊறிவரும் அழகு.

கங்கு -  முடியும் இடம்.  ஓரம்.

எண்ணூறும் - எண்மை ஊறும்.  எளிமை மேலிடும்.

அகவை எண்கள் கூடும் என்றும் கொள்ளலாம்.

எல்லையிலும் : இது கங்கினிலும் என வந்தது.

செய் கையர் -  செய்யும் கையை உடையவர்.

திகைபவர் -  உறுதி செய்பவர்.

கழுதைகளை -  தை என்பது குறுகி ஒலிக்கும்
ஐகாரக் குறுக்கம்.

பிழைத்திருத்தம் வேண்டின் பின் 

புள்ளி  மறைந்த ஓர் எழுத்து  புள்ளி இடப்பெற்றது.









கருத்துகள் இல்லை: