விண் என்பதே ஆகாயம். இதைப் பண்டைத் தமிழர் ஆ என்ற முன்னொட்டு இன்றிக் காயமென்றனர். இதற்குக் காரணம் எல்லோன் என்னும் சூரியன் முதல் உடுக்களுடன் நிலவுவரை விண்ணில் காய்பவை. காய்தல் என்றால் சூட்டில் நீர்வற்றுதல் மட்டுமன்று, ஒளி வீசுதலும் ஆகும். ஒளி வீசுதலின் அது காயமெனப்பட்டது. அது பின் காசம் என்று திரிந்தது. இது யகர சகரத் திரிபு. இத்தகைய யகர சகரத் திரிபு தமிழில்மட்டுமின்றிப் பிறமொழிகளிலும் காணலாகும். புறத்தே காய்தலே புறக் காயம் > புறக்காசம் > பிறகாசம் என்று திரிந்தது. இன்னும் மெருகேற்றப்பட்டு பிரகாஷ் ஆனது.
விண் என்பதே திரிந்து விஷ்ணு ஆனது. இன்றும் நீலவண்ணன், மேகவண்ணன் என்றெல்லாம் ஏத்தி ஓதப்படும் விஷ்ணு நிறத்தால் கருமையே. எல்லும் மதியும் தோன்றாக் காலத்து விண் கருமையே. ஆகவே இயற்கையில் கருமையே நிறமாகும். வெண்மை என்பது பகலோன் வந்து தரும் நிறமாகும். கருமையை நீலமென்பதும் பெருவழக்கு.
இருளே இயற்கையில் காணக்கிடக்கும் நிறமாதலின் நம் தெய்வங்கள் பலவும் கருமை நிறமே தம் நிறமாய்க் கொண்டன. நம் பண்டைக் கடவுட் கொள்கையில் தெய்வங்கள் இயற்கை நிறத்தில் தோன்றுமாறு நம் முன்னோர் கவனித்துக்கொண்டனர்.
கருமை விலகத் தோன்றும் ஒளி சிவமாகும். சிவமெனின் செவ்வொளி. செம்மையைச் சே என்ற ஓரெழுத்துச் சொல் உணர்த்தும். சேவடி எனின் செவ்வடி அல்லது சிவந்த அடிகள். சேயோன் என்பது சிவப்பு நிறத்தன் என்றும் மாயோன் என்பது கருப்பு நிறத்தன் என்று பொருள்படும். மா என்பது கருப்பு ஆகும்.
நமது அடிப்படைத் தேவு அல்லது தெய்வங்கள் சிவப்பும் கருப்புமாம்.
இது இயற்கை வண்ணம் பிறழாமை ஆகும்.
என்றும் இருப்பது இருள். அது ஒளி தோன்றுங்கால் விலகும்.
இருப்பது இருள். அடிப்படை.
இரு+ உள் = இருள் ஆகும். உள் என்பது தொழிற்பெயர் விகுதி.
கட > கடவுள் என்றது போலும்.
ஒட்டுதல் என்ற சொல்லின் அடி ஒள். அதனோடு ஒள்+ து = ஒட்டு என்று இணைத்து வினையானது. ஒளி என்பது இருளொடு ஒட்டுகின்றபோது இருள் விலகி நிற்பதை உணர்வீர். ஆக ஒள் என்பது பின்வந்து ஒட்டிய நிலையைத் தெரியக்காட்டும். இதுபின் வெளிச்சத்தையும் குறித்தது.
ஒள் > ஒடு; ஒள் > ஒட்டு. ஒட்டு> ஒட்டுதல்.
இருளென்னும் அடிப்படைமேல் வெளிச்சம் என்னும் ஒளி ஒட்டப்படுகிறது,
ஒளி மேல் ஒட்டு ஆக, இருள் உள் இருப்பதாகி இரு+ உள் ஆயிற்று.
இருளும் ஒளியுமே உலகு ஆகும். அவையே இறைமையின் வெளிப்பாடுகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக