சனி, 20 செப்டம்பர், 2014

வாகை ஒரு பாலை மலர்........


http://sivamaalaa.blogspot.com/2014/09/blog-post_20.html

மேற்கண்ட (முன்) இடுகையிலிருந்து  தொடர்கிறோம்:

வாகை என்பது பாலை நிலத்திற்குரிய ஒரு மலர்.  அங்கு கிடைக்கும் ஒரு மலரையே சூடிக்கொண்டனர் வெற்றித் தமிழ் வேந்தர்.  எதிரி எங்கெங்கு  எதிர் படுகின்றானோ அங்கெல்லாம் பொருதுவர்  என்றாலும் பாடல்கள் பெரிதும் பாலையையே போருக்குரிய நிலனாகக் கொள்ளல் சிறப்பு.  அன்றெனினும் அஃது  இழுக்காது. எனினும் பாலைப்பூவே (வாகை) சூடினர்.

வாகை சூடிக் கொள்ளல் எம்மரபினரும் மேற் கொள்ளலாம்  எனினும் அஃது அரசர்க்கே சிறப்பாம்.  ஏனையோர்க்கும் உரித்து.  (தொல் . புறத்.2)

இப்போது ஒரு பாடலைப் பார்ப்போம்:

சூடினான் வாகை சுடர்த்தெரியல் சூடுதலும் 
பாடினார் வெல்புகழைப்  பல்புலவர் --------கூடார் 
உடல்வேல் அழுவத்து ஒளிதிகழும் பைம்பூண் 
அடல்வேந்தன் அட்டார்த் தரசு.

சுடர் -  ஒளி யுடைய ; தெரியல் -  மாலை.  கூடார் =  பகைவர்.
வேல் அழுவத்து = வேல்களின்  நடுவே.(வேல் படையின்  நடுவே )
ஒளிதிகழும் பைம்பூண் -  (இவை அரசரின் )பசும்பொன்  அணிகலன்கள்.
அடல் -  ( இங்கு போர் மேற்கொண்ட அரசற்கு அடையாக வந்தது. )
அட்டு - கொன்று வென்று.   ஆர்த்து = ஆர்ப்பரித்து.   

அதாவது வெற்றி வேந்தன் வாகை சூடிக்கொண்டவுடன்  புலவர் புகழ் பாடினர்.
இது வாகைத்திணைக்கு எடுத்துக்காட்டு. 165

வேந்தன் வேல் அழுவத்து,     கூடார்  அரசு  உடல் அட்டு,   ஆர்த்துச்  சுடர்த் தெரியல்   வாகை சூடினான் ,   சுடுதலும் வெல்புகழைப் புலவர் பாடினார்   
என்று மாற்றிக்கொள்க.

இது பெரும்புலவர் ஐயனாரிதனார் இயற்றிய பாடல். இவர் தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியராற் போற்றப்பட்டவர். பன்னிருபடலமென்னும் இலக்கண நூலின் வழி நூலாக இப்பாடல் காணப்படும் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் பொருளிலக்கண நூலை இயற்றியுள்ளார். இவர் ஐயப்ப பற்றர் (பக்தர்) போல் தெரிகிறது. ஐயனாருக்கு இதமானவர் என்பது இவர் பெயரின் பொருள்.

வேந்தனின் வேற்படை பகை அரசர்களைக் குத்திக் கொன்று  ( உடல் அட்டு) 
கொடி  நாட்டியது; வேந்தன் வாகை சூட, புலவர் பாடலாயினர்  எனற்பாலது வகைத்திணை.

கருத்துகள் இல்லை: