ஒரு ஈராயிரம் ஆண்டுகட்குமுன் மனிதன் காகிதம் என்னும் தாளை அறிந்திருக்கவில்லை, அதைச் செய்து பயன்படுத்தவும் தெரிந்திருக்கவில்லை. மரம் செடி கொடிகளை அரைத்துத் தாள்செய்யும் கலையைச் சீனர்கள் கண்டுபிடித்தனர் என்று சொல்வர். "பேபிரஸ்" என்ற தாவரத்திலிருந்து "பேப்பர்" என்னும் தாளைச் செய்துகொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளவும் எகிப்தியர்கள் அறிந்தனர். தமிழர்கள் அறிந்துகொண்டது, ஓலைகளில் எழுதுவதற்குத்தான்.
ஓலைகள் குறிப்பிட்ட காலத்துக்குப்பின் தம் திட்பத்தினை இழந்துவிடும் ஆதலின் புதிய ஓலைகளைத் தயார்செய்து முன் எழுதியிருந்ததைப் பெயர்த்தெழுதி வைக்கவேண்டும். இப்படி எழுதும்போது எழுதிக்கொடுப்போர் செய்த தவறுகளாலும் சொற்களில் மாற்றங்கள் நிகழ்ந்ததுண்டு. சில ஓலை நூற்படிகளை ஒப்புநோக்கி உண்மையான சொல் வடிவம் எது என்று அறிந்துகொள்ளும் வாய்ப்பு இருத்தல் கூடும்.
ஒரு தவறான வடிவம் வழக்குப் பெற்றுவிட்டால், அது பல நூல்களிலும் இடம்பிடித்துக்கொண் டிருக்குமாதலால், இது போல்வனவற்றைத் திருத்தி அமைத்துக்கொள்வது எளிதன்று. தவறான வடிவமே தொடரட்டும் என்று விட்டுவைத்தலே அறிவுடைய செயலென்பர். இத் தவறுகள் வழுவமைதிகளாய் விடும்.
மரக்குழம்பை தாளாகச் செய்வது ஒரு மாற்றுருத்தம். ஆகும் . ( அதாவது ஓர் ஓலையைத் தாளாக மாற்றுருவில் தருதல்.)
உரு என்பது உருவம் எனவும் படும். உருத்தல் - தோன்றுதல்.
உருத்துதல் - உருவிலமைத்தல். அதாவது இன்னொரு தோற்றமுடையதாக்குதல்.
"ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பதும்
சூழ்வினைச் சிலம்பு காரணமாக "
என்ற சிலப்பதிகார வரிகளில், உருத்து என்ற சொல்வடிவம் வந்திருப்பதை அறிக. நல்லவேளையாக தமிழுக்கு இச்சொல் காணாமற் போகாமல் இன்னும் கிடைக்கிறது. நமக்கும் மகிழ்ச்சிதான்.
உருத்தல் - தன்வினை.
உருத்துதல் - பிறவினை.
ஆகவே, மாற்றுருத்தம் ( மாற்று உருத்து அம் ) என்பது processing என்ற சொல்லுக்கு ஈடானது.
மாற்றுறுத்தம் - வேறு உருவில் அமைத்தல் என்றும் பொருள்காணும்படியாகக் கையாளலாம். மாற்றுறுத்தினர் எனின் மாற்றுருவினது ஆக்கினர் என்பது.
எனவே, மாற்றுருத்தம், மாற்றுறுத்தம் என்பன இரு வடிவிலும் ஏற்கத்தக்க வடிவங்களாய் உள்ளன.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக