புதன், 19 ஜனவரி, 2022

சொந்தரவு - திரிசொல்.

 தகர முதலெழுத்தாக வரும் சொற்கள்,  சகர முதலாகவும் திரியும் என்ற கருத்தை பலவிடங்களில் முன் வைத்துள்ளோம்.  சில சொற்களை அதற்கு எடுத்துக்காட்டுக்களாகக்  காட்டினோம்.

மலையாளம் பேசுகின்ற  நிலப்பகுதி முன்னர் சேரநாடாக இருந்தது.  இங்குத்தான் செங்குட்டுவன் என்ற அரசன் ஆண்டான்.  அவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்தான் என்பது நீங்கள் அறிந்தது.  அவன் இளவல் இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் பாடினார்.

சேரன் என்ற சொல், வழக்குக்கு அல்லது பயன்பாட்டுக்கு வருவதன்முன் அது "சேரல்"  என்று இருந்தது.    இச்சொல்லின் இறுதி லகர ஒற்று,  பின் 0னகர ஒற்றாக மாறியே, சேரன் என்று பின்னாளில் அமைந்தது. "  மாந்தரஞ்சேரல் இரும்பொறை" என்ற பழைய தொடரில்,  சேரன் என்பது சேரல் என்றே வருகிறது.  இது மிக்கத் தெளிவாகவே உள்ளது.  அல் என்னும் விகுதி பெற்ற பல சொற்கள், பல உள்ளன.  தலைவன் என்று பொருள்படும் "தோன்றல்" என்னும் சொல் அல்விகுதியில் முடிந்திருத்தல் காணலாம்.  வள்ளல் என்ற சொல், அல் விகுதியிலே முடிந்தாலும், அது மனிதனைக் குறிக்கும் சொல்லே. இதை இக்காலத்தில் நாம் "வள்ளன்" என்று புனைந்திருப்போம்.  ஏனென்றால் புதிய சொற்களில், அன் விகுதிக்குப் பதில் அல் விகுதி வருவதில்லை.

சேரல் என்னும் சொல்,  பின் சேரன் ஆனது என்றோம்.  சேரல் என்பது மேலொரு அன் விகுதி பெற்றுச் சேரலன் என்றும் வரும்.  சேரமான் என்று வரும்.  :"சேரமான் பெருமாள்" என்ற அரசப் பெயரைக் காண்க.

சேரன் ஆண்ட நிலப்பகுதி, சேரலம் ஆனது.  இச்சொல்லே பின்னர் "கேரளம்" என்று திரிந்தது. இதில் "~லம்" என்பது "ளம்" என்று முடிந்தது காண்க.  இது மங்கலம் என்பது மங்களம் என்று பெண்ணின் பெயராய் வருவது காண்க.

இங்கு நாம்  காட்டவிழைந்தது சொல்லின் முதெலெழுத்துத் திரிபையே.

இதைப் போலவே,  தனி என்ற சொல்லும் சனி என்று ஒரு கோளின் பெயராய் வந்தது.  இக்கோள் தனித்தன்மைகள் வாய்ந்தது.  அதனால் தனி என்பது அவ்வாறு திரிந்து கோளைக் குறிந்தது.  இனித் தங்கு > சங்கு,  மற்றும் சங்கம் என்ற பெயரும் காண்க.

இவ்விதி, சகர வருக்க  முழுமைக்கும் பொருந்தும்.

அதனால்,

தொந்தரவு என்பது சொந்தரவு என்றும்  வரும்.  மூலச்சொல் தொந்தரவு என்பதே.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.




கருத்துகள் இல்லை: