வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

வான்மீதிலே இன்பத் தேன்மாரி: இராமராவின் மெல்லிசை.

நாம் இன்னும் தமிழ்மொழியைப் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறோம். ஆனால் எம் போன்றோர் வெளிநாட்டினர்.  தமிழைத் தாய்மொழியாகப் போற்றும் நாட்டில் அல்லது மாநிலத்தில் வாழவில்லை. வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் சீரகம் சோம்பு பட்டமிளகாய் தாளிப்பு வகையறாக்கள் விற்கும் கடைக்குப் போனால்தான் தமிழ்ப் பேச வாய்ப்புக் கிட்டுகின்றது. மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் நாம் வெளியில் சந்திப்பவர்கள் 99 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள் அல்லது சீனர்கள்.  ஆங்கிலம்,  சீனம்,  மலாய் முதலிய மொழிகள் பெரிதும் பயன்படுகின்றன.

நம்மில் பலர் தமிழை அறிந்து வைத்திருப்பதற்குக் காரணம் பேரளவில் திரைப்படங்களையே சாரும். திரையரங்குகட்குச் சென்று படங்களைப் பார்க்காவிட்டாலும் தமிழ்த் திரைப்பாடல்களை ஆங்காங்கு வானொலி தொலைக்காட்சி வாயிலாகக் கேட்க முடிகிறது. இது ஊட்டச்சத்தினை உட்கொண்டது போலாகும். சற்றுத் தரம் தாழ்ந்த திரைப்படங்கள் வருவதைக் கருத்தில்கொண்டு  அவற்றில் நாம் விரும்பும் பண்பாட்டுக் கூறுகள் குறைந்துகொண்டு செல்வதனால் பரத நாட்டியம் பழைய இசை (கர்நாடக சங்கீதம் ) முதலியவற்றைக் கற்றறிய ஒரு சாரார் செல்வதும் வரவேற்றற்குரியதே ஆகும். கோவில்களிலும் ஓரளவு தமிழ் வழங்குகிறது. கிறித்தவ தேவாலயங்களிலும் தமிழ் போற்றப்பட்டு வருகிறது.

திரைப்பாடல்களில் பல இனிய மெட்டுகளிலமைந்த மெல்லிசைப் பாடல்கள் நம் மனத்தைவிட்டகலா இடத்தினைப் பிடித்துக்கொண்டுள்ளன. அத்தகைய பாடல்களிலொன்றுதான் "வான்மீதிலே' என்ற பாடல்.  பானுமதி ஆண்பாடகருடன் இனிமையாக வழங்கியது இப்பாடல்.

அண்மையில் இரண்டு குருசாமிகள் எம்மைக் காண வந்தனர்.  தேநீர் (கொழுந்துநீர்)  முறுக்கு முதலியவை கொண்டு பணிவன்பு தெரிவிக்கப்பட்ட பின்பு அவர்கள் இந்தப்பாடலைப் பற்றிப் பேசி அதை எம்மைப் பாடும்படி கேட்டனர். யாமும் இயன்றவரை இதைப் பாடினோம்.

வான்மீதிலே இன்பத்
தேன்மாரி பெய்யுதே;
வண்ணம்சேர் கலாமதி
வீசும் வெண்ணிலாவினில்   (வான்)

சுகாதீத மேவும்
அனுராக கீதம்
சுதியோடு பாடும்
மதுவண்டு கேளாய்.
சதாநந்த ஜீவிய கானம் இதே (வான்)

வசந்தத்தில் ஆடும்
புனர்ஜென்மம் நீயே
மையல்கொண்டு நாடும்
தமிழ்த் தென்றல் நானே

மனம் ஒன்று சேர்ந்தே
உறவாடும் போது ( I stopped here)
நிஜம்தான் என் ஆருயிர்)
மெய்வாழ்வு நான்)
எனை ஈன்ற ? போகமும்)
மோகமும் மாறாது.)

BRACKETED LINES  IN DOUBT. supplied by the swamis
I tried to elicit the lines from youtube but owing to
frequent reloading unable to retrieve them.

இதை அவர்களுக்காகப் பாடினேம். இதை யாம் கேட்டிருக்கிறோமே அன்றிப் பாடிப் பயிற்சி செயததோ அடிக்கடி பாடியதோ இல்லை;  வரிகளும் சரியாகத்
தெரியவில்லை என்றேம். இருந்தாலும் நன்றாகப் பாடியதாகத் தெரிவித்தனர்,
மணிப்பவழ நடையில் (  மணிப்பிரவாளம் ) அமைந்த நல்ல பாடல். பலரையும் கவர்ந்தது ஆகும்.  ( நீங்கள் அறிந்திருந்தால்,  இப்பாடலின் வரிகளை இங்கு பின்னூட்டம் இடுங்கள். மேலே தரப்பட்ட வரிகளில் தவறுகள் சில இருக்கலாம் என்று நினைக்கிறேம்  ).

இந்தப் பாடலுக்குத் திரையில் பானுமதியும் மறைந்த ஆந்திர முதல்வர் ராமராவும் நடித்திருந்தனர்.  அண்மையில் அவர் மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் காலமானது நம்மைச்  சோகத்துள் உய்த்தது. அவர்கள் குடும்பத்தாருக்கு நம் இரங்கல் உரித்தாகுக,  இருவரின் நினைவாகவும் இப்பாடல் உள்ளது.

திருத்தம் பின்


புகார் என்றால் நுழையமாட்டார் என்பது! என்ன புகார்?



மன்னர்கள் ஆட்சிகாலத்தில் அவர்களும் குடிமக்களிடமிருந்து புகார்களைப் பெற்றுக்கொண்டனர். ஒரு மன்னர்முன் நேரடியாகத் தோன்றி ஒருவன் தன்வருத்தக் கூற்றுகளை முன்வைப்பதானால் அப்போது அரசவையில் மன்னன் அமர்ந்து ஆய்வு செய்வதில் ஈடுபட்டுக்கொண்டுள்ள நேரமாக இருக்க வேண்டும். அரண்மனைக்கு வருவோருள் இருவகையர். இருந்தனர்.  ஒருவகையினர் “புகுவார்”.  புகுவார் என்போர் அனுமதி என்னும் நுழைவிணக்கம் பெற்றவர்கள்.  இவர்கள் அரசனுக்கு அணுக்கமானவர்கள்.  அரசு அதிகாரிகளும் கவிஞரும் பாவலரும் அறிஞர் பெருமக்களும் இவர்களில் அடங்குவர்.  இன்னொரு வகையினர் புகார்.  புகாரைப் படைஞரும் காவலதிகாரிகளும்  உள்ளே விடமாட்டார்கள். அரசரிடம் காவலாளி சென்று கேட்டுச் சரி வரச்சொல் என்றபின் இவர்கள் புகுந்தனர்.

மு(த)ன்மை வாய்ந்த ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கும்போது புகார் ஆனவர்கள் தங்கள் வருத்தக் கூற்றுகளை யார்மூலமாவது சொல்லி அனுப்பி ஓர் அதிகாரியின் வாயிலாக  அரசர்  அவற்றைப் பெற்றுக்கொண்டிருக்கலாம்.  வாய்மொழியாக இல்லாமல் ஓர் ஓலையில் தம் வருத்தங்களையும் குறைபாடுகளையும் சுருக்கமாக எழுதி அனுப்பிவைத்தோரும் உண்டு. இவை ஒரு வகையில் நிலையான கூற்றுமுன்வைப்புகள் ஆயின.  மன்னுதல் என்றால் நிலையானது என்று பொருள். இவையே “ மனுக்கள்’ ஆயின.  மன்+உ – மனு.  உ விகுதி.  உ என்பது முன் என்றும் பொருள்படும். இருவகையிலும் பொருள் கூறலாம்.

சிலர் முன் கூட்டியே தாம் கருதியவற்றை எழுதி ஓலையைக் கொண்டுபோய் அதிகாரிகளிடம் நீட்டினர். இவை நீட்டோலைகள் எனப்பட்டன.  . தக்க தருணத்தில் இவர்கள் உள்ளே வரவழைக்கப்பட்டு அவர்களின் நீட்டோலைகளை அவர்களே வாசித்தனர். தானே வாசிக்க இயலாதவன்  “நல்ல மரம்” எனப்பட்டான். அவனுக்குப் பிறர் உதவி தேவைப்பட்டது.

அரண்மனையுள் புகார் (புக இயலாமல் நிறுத்தப்பட்டவர்கள் )  அனுப்பிய மனுக்களே நீட்டோலைகள் அல்லது புகார்மனுக்கள் ஆயின.  இவை பின்னர் வாசிப்புப் பெற்றன.
புகார் மனு என்பது இப்போது வெறும் புகார் என்று குறுகி ஆங்கிலத்தில் கம்பிளைன்ட் என்ற சொல்லுக்கு நிகராக வழங்கிவருகிறது. புகார் என்றால் அரசவைக்குள் புகாதவர்கள் என்று பொருள்.  புக என்றால் உள்ளே போக அனுமதி அல்லது அதிகார இணக்கம் என்பதுதான். இவ்விணக்கம் பெறாதோர் உள்ளே புகார் (புகமாட்டார் அல்லது நுழையமாட்டார்). நுழையாரின் மனுவே புகார்மனு. மன்னியிருப்பது மனு.  எழுத்தில் இருந்தால் அது மன்னும். (  மன்னும் இமயமலை எங்கள் மலையே, மாநில மீதிது போல் பிறி திலையே என்ற பாரதி பாட்டில் மன்னும் என்றால் நிலைபெற்ற என்று பொருள்.  அந்த மலை அங்கேதான் இருக்கும். நிலையானது. யாரே  திருடவல்லார்?).  எழுத்தில் வரும் வருத்தக்கூற்றுக்கள் ஓரளவுக்கு நிலையானனவையே.  நீர்மேல் எழுதியிருந்தால் அது மனு இல்லை என்று நம் பாட்டி முன்பே சொல்லியிருக்கிறாள்.  உணர்க..  ஓலையில் எழுதி அரசரிடம் சேர்த்தது கல்மேல் எழுத்துப் போலும் கடினமான பொருளாதலின் மனு ஆகிறது.

மனு என்பது உருது கிருது என்பார்கள்.  எப்படி உருது?  தமிழில் பொருளிருக்கிறதே. உருது உருது என்று கத்திக்கொண்டு இருப்பதை உருதுப் பேராசிரியன் கேட்டால் ஆமாம் என்னது தான் என்று எடுத்துக்கொண்டு அவனது அகரவரிசையில் புகுத்திக்கொள்வான். அப்புறம் என்ன? நம்ம வீட்டுக் கறவைப் பசுவை அடையாளம் தெரியாமல் அடுத்தவீட்டுப் பசு என்று சொல்லிக்கொண்டிருந்தால் அடுத்தவீட்டான் எடுத்துக்கொள்வது அவன் குற்றமன்று.  என்னது அன்று என்று ஒரு பத்து வெள்ளியை கீழே போட்டுவிட்டுப் போனால் வருகிறவன்  எடுத்துக்கொண்டு நன்றிசொல்கையில் அது அவன் குற்றமன்று. ஆக  அதன்பிறகு அவன் எடுத்துக்கொண்டானே அது அவனுடையதாக இருக்கும் என்று இளிவாயுடன் களிகொள்வதே சாலும்.

முற்காலத்தில் ஓலைகள் எழுத அமைத்தவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவிலேதான் அதை அமைத்தனர். நீட்டோலை என்றால் ரொம்ப (  நிரம்ப) நீட்டமான ஓலை என்று சொல்லிக்கொடுப்பார்கள்.  நீட்டமான ஓலை ஓலையின் அளவைக் குறிக்காது.  அதிகாரி யிடத்து நீட்டி அதை அவர் வாங்கிக் கொண்டதைக் குறிக்கும்.  Submitted by extending a copy of whatever complaint in writing to an officer who received it with royal permission. Extending does not mean that the “olai” or palm leaf is long.  The complaint in it may be not short and may have consumed several leaves. That is not the matter. The leaves must be of a certain standard length and must be tied. All such things are basic. Standard cut and prepared leaves could not be that long to call it long. 

 இந்தியர்கள் எதையும் சுருக்கமாகச் சொல்லாமல் சுற்றிவளைப்பவர்கள் என்று சீனர் மலைக்காரர்கள் சொல்வதுண்டு. வள்ளுவர் சொன்னார்:  பல சொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற…….தவர்'  என்று. சீனமொழியைப் படியுங்கள். அப்போது எப்படிச் சுருக்கிவிட்டார்கள் என்று தெரியும்.

அவ்வளவுதான் புகார். மந்திரி வரும்போது நீட்டிய ஓலைகளை இனி நீட்டோலை என்னலாம். குற்றமில்லை. நீங்களேபோய் வாசிக்கவேண்டா. எண்ணிய அனைத்தும் எழுதாமல் மன்னிய புகார்களை முன்வைக்கவும்,
மந்திரியின் அதிகாரிகள் வாசித்துக்கொள்ளுவார்கள்.

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

வாபஸ் எப்படிப் பரவியது?

வாபஸ் : இந்தச் சொல் தமிழர் எல்லோரும் அறிந்தது.  பெரும்பாலான தமிழ்நாட்டு வாசிகள் உருது மொழியைப் பேசவில்லை. இவர்கள் முஸ்லிம் அரசு அதிகாரிகளுடன் எத்தகைய தொடர்பு வைத்திருந்தனர் என்பதும் அறியோம். முஸ்லிம் அரசு நடைபெறாத தமிழ் நாட்டின் பல பகுதிகள் இருந்தனபோல் தெரிகிறது. இத்தகைய சொற்கள் எப்படி வேகமாகப் பரவி எல்லாத் தமிழ்நாட்டு மக்களும் அறியுமளவிற்கு விரிந்தது என்பது தெரியவில்லை.

அந்தக் காலத்தில் எதையேனும் செய்துவிட்டு அடிக்கடி வாபஸ் பெற்றுக்கொண்டு இருந்தனர் போலும். இல்லையேல் வாபஸ் எப்படிப் பரவிற்று? முஸ்லிம் மக்கள் ஏனையோருடன் பேசும்போதிலெல்லாம் இதைப் பயன்படுத்திக்கொண்டிருந்தனரோ? வாபசுக்கு உரியதாய் இருந்தது எது?

எப்படியோ வாபஸ் என்ற சொல் நன்`கு பரவிவிட்டது.  காளமேகப் புலவர் இருந்திருந்தால் வாபஸ் என்பதைப் பிரித்து  பஸ் என்னும் பேருந்தை வாவென்று அழைப்பதுபோல் எந்தக் கவியாவது எழுதியிருப்பாரோ என்னவோ?

தமிழ்வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட எத்தனையோ புதிய சொற்கள் வழக்குக்கு வராமலே கிடக்க, வாபஸ் மட்டும் வெற்றிநடை போட்டுள்ளதே!

இவை இருக்கட்டும்.   இப்போது இச்சொல்லின் அமைப்பை அறிவோம்.

எதையும் பின்வாங்கப் பெறுதலையே வாபஸ் என்ற சொல் குறிக்கிறது.

பெறுதல் என்பதில் பெறு என்பதை வடவெழுத்துக்கள் எனப்படும் அயல் ஒலி எழுத்துக்களை வைத்து மறு அமைப்புச்செய்வதானால்:

பெறு > பெஸ் என்று புனையவேண்டும்.

று என்பதை மெருகேற்ற எப்போதும்  ஸ் அல்லது ஷ் பயன்பட்டுள்ளது.


எடுத்துக்காட்டு:  இறைவர் > இஷ்வர் > ஈஷ்வர். 
இறைவர் > இஸ்வர் > ஈஸ்வர் > ஈஸ்வரன்.

ற வுக்கும் அதன் வருக்கத்துக்கும் ஷ் அல்லது ஸ் வரவேண்டும்.
று வுக்கும் ஸ் போடவேண்டும்.

பெறு > பெஸ்.

பின்வாங்கு என்பதில் வாங்கு என்பதை வைத்துக்கொண்டால்:
இதற்கு ஓர் எழுத்துப் போதுமானது. அது  -வா-  என்பது.

வா+ பெஸ்  என்று இரண்டையும் இணைத்தால்  வாபெஸ் ஆகும். இதில் பெஸ் என்பது பஸ் என்றிருத்தலே சொல்லுக்கு எளிமை கூட்டும். இனிமையும் இருக்கும்.

வாபெஸ் >  வாபஸ்  ஆகிறது.
எகரம் அகரமாவது இயல்பே.

பின் என்பதை எப்படி விடலாம்?  அதையும் இணைத்தால்

பிவாபஸ்:  இது சரியில்லை. பி என்னும் பின் என்பதன் முதலெழுத்தை நீக்கி விடுதலே சரி.  பிவாபஸ் என்பது நீண்டதுடன் ஒலித்தடையும் உண்டுபண்ணும்.

வாபஸ்.

ஓர் உருதுச்சொல் உருவெடுக்கிறது.

உருவெடுத்த சொற்கள் இருந்தாலே உருது அமையும்.

வருவாயில் தா என்பதற்கு வாய்தா போல.

மிக்க மகிழ்ச்சி.

எல்லாமும் தமிழ் தானா? இது வெறியன்றோ ?

தமிழே இல்லாத கோடிக்கணக்கான சொற்கள் உலகிலே உண்டு.  அவற்றை நாம் தமிழ் என்றுசொல்லவில்லை.  எடுத்துக்காட்டு: மேகன்மார்க்கல். இதில் தமிழ் எதுவும் இல்லை.

----------------------------

இச்சொல் முன் வாபீசு என்றும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இன்றுஇவ்வடிவம் வழங்கவில்லை.


புதன், 29 ஆகஸ்ட், 2018

ரோகம் தமிழா?

ரோகம் -  தமிழா?

வாசித்து மகிழ்க.  இங்கு சொடுக்கவும்,


https://bishyamala.wordpress.com

https://bishyamala.wordpress.com/2018/08/30/

நியாயம் ஞாயம் எதிர்மறை ?

ஞாயம் என்ற சொல் தமிழ்மொழியில் சிற்றூர்களிலும் வழங்குவதாகும். தமிழ் கற்பிப்போர் இது நியாயம் என்ற சொல்லின் பேச்சுத் திரிபு என்று கூறுவர். 

இப்படிச் சொல்வதே சரி என்று பட்டால் இவ்வாறே கொள்ளலாம் அதனால் ஆவதொரு நட்டமில்லை. எது எதன் திரிபாக இருந்தாலென்ன என்று விட்டுவிடலாம்.

நியாயம் என்பது இந்தோ ஐரோப்பியத்தில் இல்லை என்று சொல்கிறார்கள். எனவே அது தமிழிலிருந்து புறப்பட்ட சொல் என்று கொள்ளவேண்டியுள்ளது. சில ஆசிரியர்கள் நியாயம் என்பதன் பகுதி நில் என்பதே என்றனர். அதாவது அவர்கள் கூறுவது:  எது நிற்கும் திறமுடைத்தோ அது நியாயம். எது நில்லாதோ அது நியாயம் அன்று என்பது. உண்மை காண்பதற்குக் கூடிப் பேசுவோர் எதை ஏற்பரோ அதுவே நியாயம் அஃதல்லாதது நியாயம் அன்று என்றே விளக்குவதற்குரியதாகிறது. இவற்றில் எதுவும் நியாயத்தின் உள்ளீடு எது என்பதைத் தெரிவிக்கவில்லை.

சொற்கள் ஏற்படும்போது இதுபோலும் வரையறைகளைக் கண்டபின் ஏற்படுவதில்லை ஆதலால் நாம் இதை முன்வைக்கத் தேவையில்லை. மேலும் பேச்சு வழக்கில் உண்டான சொற்களில் புலவர் திறத்தை அறிய முற்படுவதும் ஏற்புடைத்து என்று கொள்வதற்கில்லை.

பேச்சில் இன்னும் இச்சொல் ஞாயம் என்றே வழங்குகிறது.   எழுதுவோர்தாம் நியாயம் என்று சொல்கின்றனர்.

நியாயம் என்பதன் எதிர்மறை அநியாயம். ஞாயம் என்பதற்கும் அதுவே எதிர்மறையாகக் கொள்ளப்படுகின்றது.

மூலச்சொல் ஞாயம் என்பதே என்று வைத்துக்கொண்டால் அதன் எதிர்மறை அன்ஞாயம் என்பதே சரியென்று தோன்றுகிறது.  அன் என்பதும் அல் என்பதன் திரிபாக எதிர்மறை முன்னொட்டு ஆக வல்லது.  மொழி -  அன்மொழி ( அன்மொழித்தொகை )  என்ற இலக்கணக் குறியீட்டைக் காண்க..

மேலும் ஞாயம் என்பதும் ஞயம் என்பதன் திரிபாகக் கொள்ளவேண்டும்.  இது நயம் நல்லது என்பதன் பொருளும் ஆகும்.  ஆதலின் ஞாயம் எதிர்மறை அன் ஞாயம் என்பதே பொருத்தமுடைத்தாகிறது,



 இரண்டுமே சிற்றூர்ச்சொற்கள்;  பொருளும் பொருத்தமாக உள்ளது,

அன்ஞாயம் (பேச்சு மொழிச் சொல் ) என்பதே பிற்காலத்து "அநியாயம்" என்று மறுபிறவி எடுத்துள்ளது  என்பது தெளிவு.  மூலச் சொற்கள் ஞாயம் -  அன்ஞாயம் என்பனவே .

நில் என்பதன் அடியாகத் தோன்றியதே நியாயம் என்று முடிப்பது நன்`கு சிந்திக்கப்பட்டதே என்றாலும் பேசுவோரின் கற்பனைக்கு ஏற்ப ஞாயம் மாறுவதுடைத்து என்பதை அது மேற்கொள்வதாகிறது . ஆனால் ஞாயம் என்ற சிற்றுரார் அமைத்த வடிவம் நயம் என்ற மூலத்தின் அடிப்பிறந்து நலம் உடையதே ஞாயம் என்று உள்ளீடு  காட்டிச் சொற்றிரிபுக்கும் பொருத்தம்  ஊட்டி அமைகிறது . இவ்வாறு உருவானதே  ஞாயம் என்னும் சொல். 
-------------------------------------------------------
Posting as B.I Sivamala
An error occurred while trying to save or publish your post. Please try again. Dismiss



செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

குணங்கள் ஏதுமற்ற கடவுளாகச் சிவபெருமான்

கடவுள் பற்றிப் பேசும்போது அவனைப் பற்றர்கள் பலவாறு புகழ்வதுண்டு.  அவனைத் தீன தயாபரன் என்று வருணிப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.   இஃது என்னவென்றால் அவன் எளியோர்க்கு இரங்கி அன்பு காட்டுகிறவன் என்று பொருள். தயாநிதி என்றும்  காக்கும் தெய்வம் கருணாநிதி என்றும் புகழ்வதும்  பெருவரவுடைய வருணனையாகும். பொதுமக்களும் ஆண்டவனே படியளக்கிறான் என்றும் சொல்வது யாவரும் அறிந்ததே ஆகும்.

கருணை தெய்வம், கற்பகம், பொற்பதமுடையான், எனப் பற்பல வருணனைகள்.

இறைவனை இங்ஙனம் புகழ்ந்துரைப்பது பிற மதங்களிலும் பெரும்பான்மை ஆகும்.

எண்குணத்தான் என்று திருக்குறள் கூறுகிறது. எண்குணம் எனில் எட்டுக் குணங்கள் என்பது ஓர் உரை;  எளிய குணங்கள் என்பது இன்னொரு சார் உரையாகும்;

ஆனால் நம் முன்னோருள் ஒரு சாரார் இறைவனுக்கு எந்தக் குணங்களும் இல்லை என்ற கொள்கை உடையோராய் இருந்தனர்.   நல்லதென்பதும் இல்லை; கெட்டதென்பதும் இல்லை.  ஆகவே குணங்கள் அல்லது பண்புகளைக் கொண்டு அவனை அறியவும் தொழவும் முடியாது.  அவனை அடைய எந்த  அடைமொழிகளும் இல்லாமல் எவ்விதப் புகழுரையும் கூறாமல் தியானிக்க (ஊழ்குதல்)  வேண்டும் என்ற கொள்கையைக் கடைப்பிடித்தனர்.

அவனோ சுத்த நிர்க்குணன். குணங்கள் பண்புகள் என்ற எதுவும் அவனுக்கில்லை.

நன்`கு சிந்தித்தால் இதிலும் ஓருண்மை இருப்பது புலப்படும்.  அன்பு இரக்கம் கருணை கோபம் ஆன எல்லாமும் மனிதர்க்குரியவை.  மனிதரால் அவர்களின் நீண்ட நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை. இவற்றுக்கும் கடவுளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

ஒரு பெண்ணை வன்புணர்வு செய்வோனுக்கும் அவளிடத்தில் கருப்பம் (கர்ப்பம்)  தங்குகிறது;  அன்புடன் திருமணம் செய்துகொண்டு  சேர்வோனுக்கும் அவ்வாறே கருப்பம் தங்குகிறது,  இவற்றில் எதற்கும் கடவுள் தடை விதிப்பதில்லை.  எது எப்படி நடந்தாலும் அவர் அப்படியேதான் இருக்கிறார்.  மனோன்மணியம் சுந்தரனார் கூறியது போல் : அவர் இருந்தபடி இருக்கிறார்.  அவரிடம் நாமறிந்த மாற்றம் யாதுமில்லை.

எப்படியும் இப்பிறவியிலிருந்து விடுபட நாம் இறைவனைத் தியானிக்க வேண்டும்,  சைவக் கொள்கைகள் பதினாறு என்பர்.  அதிலொன்று அவன் நிர்க்குணன் என்பது.  அதாவது அவனது தன்மை பண்பின்மையாகிய தூய்மையே. அதனை முன்னிறுத்தியே தியானிக்கவேண்டும்.

இதுவே நிர்க்குணசைவம் ஆகும்,  அவன் குணாதீதன் ஆவான்.

முதிர்ந்த ஞானியான தாயுமான சுவாமிகள் :  " சுத்த நிர்க்குணமான பர தெய்வமே " என்று இறைவனை விளிக்கின்றார். சிவஞான போதமும் இவ்வாறு கூறும்.

ஒருகாலத்தில் தமிழ் நாட்டில் நிர்க்குண சைவக் கோட்பாட்டினர் இருந்தனர்.
இப்போது -  தெரியவில்லை.


திங்கள், 27 ஆகஸ்ட், 2018

கேளிக்கையும் சவையலும்





இன்று கேளிக்கை என்ற சொல்லின் திரிந்தமைவு பற்றித் தெரிந்தின்புறும் நெறியில் அதற்கு இன்னொரு சொல்லையும் கண்டு மகிழ்வோம்,

கேளிக்கை என்பதன் முன்வடிவம் களிக்கை என்பதே. சில சொற்கள் அகரத் தொடக்கமாய் இருக்கும்போது மெல்லத் திரிந்து ஏகாரத் தொடக்கமாகவோ ஈகாரத் தொடக்கமாகவோ திரிந்துவிடும். இப்படித் திரிந்தமைந்த சொற்களைக் கண்டுபிடித்துப் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள்.

கதம் என்ற சொல் ஒலியைக் குறிப்பது. கத்துதல் என்பது மிக்க எடுப்பாக ஒலித்தலாகும். இது கத்து > கது > கது + அம் = கதம் என்று அமையும். கத்து + அம் = கத்தம் என்று அமையாமல் ஓரெழுத்து இடைக்குறைந்த பின்னர் விகுதிபெற்றது செந்தமிழ் இயற்கை பிழைபட்டது என்று சொல்லிவிடக் கூடியதன்று. காரணம் யாதெனின் சொற்கள் இடைக்குறை யாவது தமிழிலக்கணத்தில் பண்டை நாட்களிலே கண்டுரைக்கப்பட்டுள்ளது. . மொழியில் அதற்கு இலக்கணம் இல்லாதிருந்தால் அப்படி ஒரு வேளை சொல்ல முயற்சி செய்யலாம். பெருவரவு உடையதாயின் சொல்வது கடினமாகும்.

கதம் என்பது பின் கீதம் என்று திரிந்தமைந்தது. கீதம் என்பது இனிய ஒலியைக் குறிக்கிறது. இது வழக்கில் உண்டான பொருள்விரிவு ஆகும். சொல்லின் உள்ளில் இனிமை குறிக்கும் ஏதுமில்லை. அடிப்படைப் பொருள் ஒலி என்பதுதான். கத்துதல், கீதங்கள், பாட்டுகள் எல்லாம் செவிகளால் உணரப்படும் ஒலிகளே அல்லாமல் பிறவல்ல. இனிக் கத்து என்பது கது என்று இடைக்குறைந்த பின் கது என்பது முதலெழுத்து நீண்டு காது என்று மாறிச் செவிகளைக் குறிக்கின்றது. இதுவும் தமிழியற்கைக்கு ஏற்புடையதே ஆகும். எனவே கத்து என்பது கது என்று திரிந்து குறைச்சொல் ஆனதை மறுக்கும் திடமிருந்தால் அது காது என்ற சொல்லின் அமைப்பை அறியக் குலைந்து விடுகின்றது.

கது > கதம் > கீதம்: இங்கு அகரத் தொடக்கம் ஈகாரத் தொடக்கமாகிறது. இது செந்தமிழுக்கு ஏற்புடைய திரிபா என்று வாதிடலாம். காரணம் மிகப் பழமை வாய்ந்த சங்க நூலகளில் இத் திரிபைக் காணமுடியவில்லையே என்ற மனத்தடையாக விருக்கலாம். அகம் புற நானூறுகளில் இல்லை என்பது கவலையாக இருக்கலாம். யாம் தேடிப் பார்க்கவில்லை. நீங்கள் தேடிக் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால் கவலையோடிருங்கள். க்+அ என்பது க்+ஏ என்று ஏகாரமாகிவிட்டது என்பதே யாம் கூறுவது. அப்புறம் "செந்தமிழியற்கை சிவணிய நிலத்தினில் முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி " முடிவு செய்யுங்கள்.

கதம் என்பது கீதமென்று ஈகாரத் தொடக்கமானது போலவே களிக்கை என்ற சொல்லும் அகரத் தொடக்கம் ஏகாரத் தொடக்கமாகிவிட்டது. களிக்கை என்பது கேளிக்கை என்று ஆகிவிட்டது. கேள் என்ற சொல் காதுகளாற் கேட்டலையும் உறவு என்னும் பொருளையும் தரவல்லது. கேள் > கேளிர் என்ற சொல்லமைப்பில் உறவினர் என்ற பொருள் போதருகின்றது. இன்னொரு சொல்லாய்வாளர் வந்து கேள் உறவு என்று பொருளிருப்பதால் கேளிக்கை என்பது உறவினருடன் ஆடுதலைக் குறிக்குமென்று சொல்லலாம்; மற்றொருவர் வந்து : காதுகளால் கேட்டு மகிழ்தல் என்னும் பொருள் சரியானது என்று சொல்லக்கூடும்.

என்றாலும் அகர முதல் சொற்கள் சில ஆகார ஈகாரங்களாகத் திரிதல் மேற்கூறப்பட்டுள்ளபடி களிக்கை > கேளிக்கை என்பதே பொருந்துகிறது. இதற்குக் காரணம் கேளிக்கை என்பதன் பொருள் களிக்கையில் காணப்படுவதுதான். கேட்டல் என்னும் பொருளதான கேள் என்பதில் மகிழ்வு கொள்ளற்கான உட்பொருள் ஒன்றுமில்லை. கேட்கும் பொருளின் பெற்றிக்கு ஏற்ப மகிழ்வோ துன்பமோ ஏற்படலாம் என்றுணர்க. எனவே கேளிக்கையை எங்கு வைப்பது என்றால் அதனை களிக்கையின் பாற் படுத்துவதே சரியானதாகும்.

கேளிக்கை என்பதற்கு வேறு சொற்கள் உள்ளனவா என்று தேடினால் தமாஷா தமாஷ் என்ற சொற்கள் கிடைக்கின்றன. இவை  உருது என்று முன்னர் கூறினோர் உளர். உருது என்பது முஸ்லீம் மக்களால் பிற்காலத்தில் உண்டாக்கப்பட்ட மொழி. இதை இவர்கள் திறமையாகவே படைத்துள்ளனர். தம் ஆசைப்படி, சிலர் - பலருடன் கூடிமகிழ்வது "தம் ஆஷா" என்ற கோட்பாட்டுத் தரவில் (கோ - தா- வில்) இவர்கள் இச்சொல்லை அமைத்துள்ளனர். தம் என்பது தமிழ்; ஆஷா என்பது ஆசை, அது வடமொழித் திரிபு. தம் ஆசைப்படி ஈடுபடுதலே தாமாஷா என்று சரியாக ஏற்படுத்தியுள்ளமை அறிந்து மகிழத்தக்கதாகும். காலைத் தூக்கக்கூடாது, கையை உயர்த்தக்கூடாது, கடுமையாகச் சிரிக்கக்கூடாது, வளைந்து ஆடக்கூடாது, பதுமைபோல் அமைதி காக்கவேண்டும், தாவக்கூடாது என்றெல்லாம் விதிகளுக்கிடையில் சோர்ந்துவிடாமல் குதித்து ஆடி மகிழ்ந்து புரள விடுதலையுண்டு என்பதைத்தான் "ஆஷா" அல்லது ஆசைப்படி என்ற பொருள் நமக்குக் காட்டுகின்றது. எவ்வளவு தொலைவு பயணித்தால் தாமாஷ் எப்போது அது சோதனை வேதனை என்பது அதில் ஈடுபடுவோருக்குத் தெரியும். சில வேளைகளில் ஒரு படத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதும் தாமாஷா தான். கீழெல்லை மேலெல்லைகளை யாம் கூறோம்.

"பப்ளிக் என்டர்டெய்ன்மன்ட்" (public entertainment) என்பதைத்   "தாமாஷா" என்றும்,  "என்டர்டெய்ன்ட் மென்ட் டியூட்டி ஆஃபீசர்" (entertainment duty officer)  என்பதைத்  தமாஷா வரி அதிகாரி அல்லது மேலதிகாரி என்றும் முன்னர்ச்  சுங்க இலாகாவினர்3 ( துறையினர் )  மொழிபெயர்ப்புச் செய்திருந்தனர்.

இதற்கு இன்னொரு செந்தமிழ்ச் சொல்லும் உள்ளது. அதுதான் சவையல் என்பது. அது மென்மை குறிக்கும் "சவ்வு"4 போலும் சொல்லினோடு  உறவுடைய சொல். சவையல் என்றால் கேளிக்கை. ஒருகாலத்தில் வழக்கிலிருந்து இன்று மறக்கப்பட்டது போலும். மென்மையான செய்கையும் பேச்சும் கூட்டுகின்ற மகிழ்வு என்று பொருள்தருவதால் அதைப் பயன்படுத்தலாமே

பிழைத்திருத்தம் பின்.

-----------------------------------------------------------

1.  சங்கதம் என்பது சமஸ்கிருதத்துக்கு இன்னொரு பெயர்.  இப்பெயரில்  "கதம்"
என்ற சொல் இருப்பதைக் கண்டுகொள்வீர்.

2.   கதம் > கிருதம்.   க> க்ரு.அல்லது கிரு.

3    இலாகா:  https://sivamaalaa.blogspot.com/2017/03/how.html
       இஃது ஒரு பின்னடைப்புனைவு.

4 சவ்வு  -  அழுத்தமில்லாத மெல்லிய தோலைக் குறிப்பது.  இது வகர ஒற்று    மென்மையைக் குறிக்கிறது. "சவச்சவ"  "சவ்வு சவ்வு" என்பவை இம் மென்மையைக் குறிக்கும் ஒலிக்குறிப்புகளு மாகும்.

 


மாந்தன் மனிதன் மானிடன் மந்தி

மனிதன், மாந்தன் என்ற சொற்களை நாம் முன் விளக்கி எழுதியதுண்டு.

மன் என்ற அடிச்சொல், பல் பொருளுடையது. அவற்றுள் மன்னன் என்பதுமொன்று.

முன்னு (முன்னுதல், சிந்தித்தல் ) என்ற சொல்லும் மன் என்று திரியுமென்பர்.

மன் -  நிலைபெற்றது என்ற பொருளும் இவ்வடிச்சொல்லுக்கு உள்ளது,

மாந்தன் அல்லது மனிதன்  ஒரு நிலைபெற்ற உயிர் ஆவான்,  மேலும் அவன் சிந்திக்கும் ஆற்றலும் உள்ளவன்.  எனவே மன் என்ற அடிச்சொல் பொருத்தமானது ஆகும்.

மன் > மான்.

மன்+ இது + அன் =  மனிதன்.

மன்> மான்+த் + அன் =  மாந்தன்.

இது என்பதும் த் என்பதும் இடைநிலையாக வருவதில் மாறுபாடு காண்பதற்கில்லை,

இது > இத்  > த்  என்று எப்படியும் தோன்றும்.

வெவ்வேறு சொல்லமைப்பாளர்கள் வெவ்வேறு இடைநிலைகளைக் கையாண்டுள்ளனர்.

மன் > மன் + தி >  மந்தி  ( மனிதன் போன்ற குரங்கு.)

மான் + இடு + அன் =  மானிடன்.  ( நிலைபெற்ற இடத்தினன்).

இது,  இடு என்பன இஷ், உஷ் என்று பிறமொழிகளில் பலவாறு உருக்கொள்ளும்.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

நவீனம் அடிப்படைப் பொருள்.

நவீனம் என்ற சொல்   தமிழிலும் வழங்கும் சொல். இச்சொல் சிதறிப் பரந்து மேலை நாடுகளிலும் வழங்கும் சொல்லென்பதை அறிந்திருப்பீர்கள்.

தமிழில் புது என்ற சொல் தோன்றுதற் கருத்தில் அமைந்தது ஆகும். அடி வினை பூத்தல் என்பதே.  எது பூத்ததோ அது புதியது.   பூ > புது.. நெடில் குறைந்து சொல் தோன்றியுள்ளது.

பூ(த்தல்) >  புது ( து விகுதி).           பெரு> பெரிது என்பதுபோல்.
ஆனால் சில சொற்களில்போல் நெடில் இங்கு குறிலாகிவிட்டது.

நவ்வுதல் என்றால் ஆசையுடன் எதிர்பார்த்திருத்தல்.  இதனடி ந ( நல்ல) என்பதனுடன் சொல்லியல் தொடர்பும் உடையது ஆகும்.

ஒன்று புதியதாயின் அதைப் பலரும் விரும்பி எதிர்பார்த்திருப்பர். புதுப்பெண்ணை (  மணமகளை )  எல்லோரும் பார்க்க விரும்புவது போல.

நவ்வு + ஈனு + அம் =  நவீனம்.
வகர ஒற்று கெட்டது - இடைக்குறை.
ஈனுதல் -  உண்டாக்குதல்.
அம் விகுதி.

எடுத்துக்காட்டு:

நவீன சாரங்கதாரா.   

ஆசையுடன் எதிர்பார்த்திருந்த புதியதாகிய (  நாடகம் ).

அந்தக் காலத்தில் புதியவை அத்துணை தோன்றவில்லை. அவற்றை எதிர்பார்த்தமைக்கு  இதுவுமொரு காரணம்.

பழையது  பழுது என்பதனுடன் தொடர்புடைய சொல். 
புதுமை -  நவீனம்.  பழுதற்றது என்பதுமாம்.

நவ்வுதலை ஈனும் ( புதியது ) :  நவு+ ஈனு + அம்.

வடமொழி என்ற மரத்தடி மொழியானது எழுத்தின்றி  ஒருகாலத்தில் ஒருங்கு வழங்கிய மொழி.  அப்போது தமிழுக்கு எழுத்திருந்தது.  எழுத்தில் அமைத்தால் மொழி பலுக்குதல் தவறாகிவிடும் என்னும் அச்சத்தில்  அஃது வடமொழிக்கு அமைக்கப்படவில்லை.  மற்றபடி வீட்டுச்சொற்கள் மரத்தடிக்கும் வந்து நிறைவிக்கும். இதனால்தான் 1/3 பங்கு சொற்கள் திராவிடச் சொற்களாய் உள்ளன.

எழுத்தில் உள்ள வடமொழியை இன்றும் பலரால் சரியாக உச்சரிக்க முடியாது. அதற்குப் பயிற்சி தேவையாதலின்.


சனி, 25 ஆகஸ்ட், 2018

தமையந்தியும் ஆதிமந்தியும்.

இன்று நாம் இரு சொற்களை அறிந்தின்புறுவோம்.

ஒன்று :  தமையந்தி;   மற்றொன்று   "ஆதிமந்தி "  என்பது.

நாம் இரண்டாவது சொல்லை எடுத்துக்கொள்வோம்.   இது சோழன் கரிகால் வளவனின் மகள் பெயர்.   சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற பெயராகும்.

இச்சொல்லின் இறுதியில் இருப்பது தி என்னும் பெண்பால் விகுதியாகும். இதைக் கண்டுபிடித்துவிட்டால் முன் நிற்பது ஆதிமன் என்ற  சொல் என்பது எளிதில் புரிந்துவிடும்.

ஆதி:  இது உங்களுக்குத் தெரிந்த சொல். ஆக்க காலம் என்று பொருள்தருவது. ஒன்று ஆக்கப்பட்ட அல்லது அமைக்கப்பட்ட காலமே  ஆதி ஆகும்,   இங்கு தி என்பது தொழிற்பெயர் விகுதி. ஆ என்பது ஆதல் ஆக்கம் என்பன குறிக்கும் சொல்.

அடுத்திருப்பது:  மன்.  இது மன்னன் என்பதன் அடிச்சொல். மன் என்பது பால் அறியப்படாத சொல். அதற்கு " அரசு  "  என்று பொருள்கொள்க. அஃது அரசனையும் குறிக்கும்:  " சிறியகள் பெறினே எமக்கீயும் மன்னே" என்ற கையறு நிலைத்துறைப் பாடலை நினைவு கூர்ந்துகொள்க.

எனவே ஆதி மன் தி எனில் ஆதி அரசி என்று பொருள் பெறப்படுவது காண்க.
புணர்ச்சியில் ஆதிமந்தி ஆயிற்று.

இனித் தமையந்தி என்ற சொல். இதில் தி என்பது பெண்பால் விகுதியே. இதை அறிய, முன் நிற்பது தம் ஐயந்(தி) என்ற தொடராகும்.   தம் என்பது தன் என்பதன் பன்மை.

தம் =  தமது;
ஐய =  வியக்கத்தக்க;
அம் =  அழகிய;
தி =  பெண்ணாள்,

இதற்குத் தமிழ்மொழியின் வாயிலாகப்  பொருளுரைக்க.

தமையன் என்ற சொல் தம் ஐயன் என்று தெரிய நிற்கும்.

என் ஐமுன் நில்லன்மிர் தெவ்விர் என்பது காண்க.

அறிந்து இன்புறுக.



சாமி படங்களும் பதிமைகளும்



படங்கள் எனினும் பதிமை எனினும்
திடமாய் மனத்தைநிற் பிக்க---உடன்நிற்கும்;
ஒவ்வோர் சிலையும் ஒருகடவுள் என்னாதீர்
இவ்வுலகத் தொன்றுகட வுள்.


பொருள்:
பதிமை - சிலை.
நிற்பிக்க -  நிலைப்படுத்த;
உடன் நிற்கும் - துணையாகுபவை.
ஒவ்வோர் - ஒவ்வொரு. கவிதையில் இவ்வாறு வரலாம்.






வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

கவியை வாழ்த்தாத புவி

தாழிசைகள்:


அழுத்துகின்ற ஆசையினால் அலர்கள் தோறும்
அலுப்பென்று காட்டாமல்  தாவும்  வண்டு;
எழுத்தனைத்தும் இன்பமென்றே அயர்ச்சி இன்றி
எழில்கூட்டும் கைவினையை மேவும் பெண்டு;

தேனடைபோல் யானடைந்த தித்திப்  பெல்லாம்
தேயத்தார்   ஞாலத்தார் தெவிட்ட லின்றிக்
காணட்டும் என் கின்ற கரவா உள்ளம்
கவியாகிக் குவிகின்ற நவைதீர் வெள்ளம்.

குண்டைத்தான் வீசிடினும் குலைதல் இல்லாக்
கூடிவரும் நாடோறும் கோலத் திண்மை;
வண்டைப்போல் வாழ்நாளைக் கழிக்கும் தன்மை
வாழ்த்திசைகள் யாதுமின்றி ஓடும் உண்மை.

அரும்பொருள்:

அலர்கள் -   மலர்கள்;
எழில் -  அழகு;
தேனடை - தேன்`கூட்டின் அடை;
கரவா :  ஒளிவு மறைவு இல்லாத;
நவைதீர் -  குற்றமற்ற;
கோலம் - அழகு;
திண்மை - திடம்;
வாழ்த்திசைகள் - பல்வேறு வகை வாழ்த்துப் பாடல்கள்
யாதும் இன்றி - ( அவற்றில் ) ஒன்றும் இல்லாமல்.

எஜமான்

எஜமான் என்ற சொல் எப்படி அமைந்தது என்று உங்களுக்குத் தெரிந்தால்
இங்கு பின்னூட்டமிடலாம்.பின் நாம் உரையாடுவோம்.

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

விடைதெரியாத சொற்கள்.

சில சொற்கள் குழூஉக்குறிகளாகத் தொடங்கி  அதன்பின் மொழியில் பலரால் பேச்சில் பயன் கொள்ளுவன ஆகிவிட்டால் அப்புறம் அவற்றைக் குழூஉ க்குறிகள் என்ற நிலையில் அழுத்தி வைத்திருப்பதி   லொரு பொருளில்லை.  அவைபோல்வனவும் மக்கள் சொற்றொகுதியில்  (vocabulary, that is "community vocabulary") இடம்பிடித்துக் கொள்ளுமாறு  விட்டுவிடவேண்டும்.

உலகம் ஒருமுறை அழியும்.  அப்புறம் எல்லா உயிர்களும் அழியும். பின்னர் அழிந்தோரும் உயிர் பெற்று எழுவர்.  இப்போது அழிந்தோரும்  இதற்குமுன் அழிந்து கல்லறை வாசஞ்செய்வோரும் ஒன்றித்து எழுவர்.  அப்புறம்  கடவுள் நீதியை வழங்குவார்.

உலகம் அழியும். அழிந்தபின் அப்படியே போய்விடாது,  மீண்டும் மறு உருவாக்கம் பெற்று உயிர்கள் மீண்டும் உறபத்தி ஆகும்.

உலகம் அழிந்து மீண்டும் எழுமோ இல்லையோ நீதி விசாரணை வருவது நல்லதுதான்.  என்னிடம் கடன் வாங்கிக் கொண்டு இல்லையென்று சொன்னவர்களுக்கு இறைவன் நல்ல தண்டனை கொடுப்பார். என் காசு எனக்குத் திருப்பிக் கிடைத்துவிடும்.  அட பைத்தியமே

செகுத்தல் என்றால் அழித்தல்.  இதனுடன் உலகம் என்ற சொல்லின் இறுதியை இணைத்தால் செகு+ கம் என்று வந்து,  இதில் வந்துள்ள வினையாக்க விகுதியாகிய கு வெட்டுப்பட்டு,   செ+கம் = செகம் ஆகிவிடும்.    ஏன் கு என்பதை வெட்டவேண்டும் என்று கொஞ்சம் ஆர்ப்பட்டம் செய்யமாட்டீரோ?  ஏனென்றால் கு என்பது ஒரு வினையாக்க விகுதி. ஒரு சொல்லைப் புனையும்போது விகுதிகளை வீசிவிட்டு  அப்புறம் புதிய விகுதிகளைப் போட்டுக்கொள்ளலாம்;  விகுதி இல்லாமலே சொல் நன்றாக அமைந்துவிட்டால் அப்புறம் விகுதி எதற்கு?

விகுதி சேர்ப்பதே ஒரு  புதிய பொருண்மையை உண்டாக்குவதற்குத்தான். அதை  வேறு வழியில் புகுத்தற்கு வசதி ஏற்படும்போது பழைய விகுதி தேவை இல்லை. பழைய விகுதியால் கருத்தோட்டம் தடைபடலாம். ஒலி நயம் கெடலாம்.

மிகுதி >  விகுதி .  ஓ.நோ: மிஞ்சு > விஞ்சு .

அமைப்புச் சொல்:

செகு+ கம் =  செ + கம் =  செகம்=  ஜெகம்.

அழிந்து அழிந்து தோன்றுவது இந்த உலகம்.  அழியும் தோன்றும் அழியும் தோன்றும்  அப்பப்பா!

சாதல் என்பது அழிதல்.  இது செத்துப்போதல் என்றும் சொல்லப்படும்.  சா செ சீ ஸி.    இந்தக் கடைச் சொல் சீன மொழியில் இறந்துவிடுதலைக் குறிக்கும். இதிலோர் ஒற்றுமை பாருங்கள்.

இந்த ஜெகம் செகம் என்ற சொல் ஒரு போர்ட்மென்டோ ( portmanteau) ஆகும்.  பகவொட்டுச் சொல். இப்போது தமிழ்த் தட்டச்சு செய்துகொண்டிருப்பதால் ஆங்கில எழுத்துக்களில் முன் குறித்த சொல்லைக் காட்ட இயல்வில்லை. பின்பு குறிப்பேம் யாம். (done).

இகபரம் இரண்டிலும் எங்கும் நிறைவான ஜோதியே
இணையில்லா இன்ப ரசமான சேதியே
செம்பொன்னணி நவமணியே
செல்வமெனும் திருவுருவே
சேம நலம் யாவும் உந்தன் செயலாலே.

இது உடுமலை நாராயணக் கவியின் பாடற் பகுதி.

இகபரம்.  இகம் என்பது   இந்த உலகம்,    இ=  இந்த;   கம்=  உலகம்.  இவற்றை இணைக்க இகம் என்ற சொல் கிடைக்கிறது. இது ஒரு பகவொட்டு.  போர்ட்மென்டோ ஆகும்.

காலையில் பிரக்ஃபஸ்ட் breakfast எடுத்து அப்புறம் ஒரு மணிக்கு லஞ்ச் lunch எடுத்தால் காசு நட்டம், ஒரு பிரஞ்ச்  brunch  எடுங்கள்.  காசு மிச்சம்.  ஆங்கிலத்தில் பிரஞ்ச் என்பது ஒரு போர்ட்மென்டோ.  பகவொட்டு.    

கடையில் போய்  துப்பரு கப்பரு உப்பரு மூன்றையும் வாங்கி வைத்துவிடுங்கள், ஞாயிற்றுக்கிழமை தோசை போட்டுச் சாம்பார் சட்டினி எல்லாம் போட்டுப் பசியாறலாம் ( பசி ஆரலாம்).  நீரினும் ஆரளவில்லா காதற் கணவனிடம் மனைவி இப்படிச் சொல்கிறாள்.

அடு+இன் +இ =  அட்டினி > சட்டினி > சட்னி !! அடுதற் கருத்து மாறியுள்ளது. இப்போது அட்டுச் செய்யாத சட்டினியும் உண்டு . 


துப்பரு கப்பரு உப்பரு மூன்றையும் கண்டுபிடியுங்கள்.  நிலத்துக்கு வாய்தா அப்புறம் கட்டலாம்.

விடை தெரிந்தால் பின்னூட்டம் செய்யவும். வணக்கம்.