சடுதி என்ற சொல்லை இப்போது ஆய்வு செய்வோம்.
சொல் திரிபு என்பது ஒரு குறிப்பிட்ட பாணியில் நடைபெறுகிறதென்பதை
நம் சொல்லாய்வு இடுகைகளை வாசித்துக்கொண்டு வருவோர்க்கு நன்.கு விளங்கும்.
அகர வருக்க முதலாகத் தொடங்கும் சொற்கள் சகர வருக்கங்களாகத் திரியும்
என்பதைப் பல இடுகைகளில் எடுத்தியம்பியுள்ளோம். இதன் தொடர்பில் சடுதி என்னும் சொல்லையும்
ஆய்வு செய்வோம்.
அடுத்தடுத்துக் குறைவான நேர இடையீட்டில் ஒரு நிகழ்வு நடைபெறுமானால்
அதுவே சடுதி என்று பொருள் அறியலாம். இங்கு அடு என்னும் சொல்லே முன் நிற்கின்றது.
அடு பின்பு சடு என்று மாறுகிறது.
அடு > சடு
அடு > சடு > சட்டு.
சட்டு என்பது விரைவுக்குறிப்பு.
இதுபோலும் திரிந்த இன்னொரு சொல்: பிடு > பிட்டு. பேச்சில் இதைப்
புட்டு என்பார்கள்.
பிட்டு என்பது எச்சவினையாகவும் வரும். பிட்டு என்பது உணவுப்பொருளைக் குறிக்குங்கால் பெயர்ச்சொல் ஆகும். தமிழ் இலக்கணியர் இதனைத் தொழிற்பெயர் என்பர்.
சட்டென்று அந்தப் பையை அவன் பிடுங்கிக்கொண்டான் என்ற வாக்கியத்தில்
விரைவுக் குறிப்பாக இச்சொல் வருகிறது.
சடு என்பது தி என்னும் விகுதி பெற்று, சடுதி ஆகும்.
ஆகும்போது விரைவு குறிக்கும்.
சடுதி என்பது ஜல்தி என்றும் திரியும். ஜல்தி என்பது வட இந்தியத்
திரிபு. ( தமிழ் > தெக்காணி > இந்தி)
அடுத்தடுத்து வரும் ஒலியை சடசட என்பர். மழை சடசட என்று பெய்து சட்டையை நனைத்துவிட்டது என்ற
வாக்கியம் காண்க. இது ஒலிக்குறிப்புடன் விரைவுக்
குறிப்பையும் உள்ளடக்கிய இரட்டைக் கிளவி.
இனி 'சடு' என்பது சாடுதல் என்று முதனிலை நீண்டு வினையாகவும் வரும்.
ஒருவனுக்கு அடுத்துச் சென்று உதைத்தல் சாடுதல்.
அடு > சடு > சாடு.
அடுத்துச் சென்று தொடும் விளையாட்டு : சடுகுடு.
குடு என்பது அழுத்தித் தொடுதல். இதிலிருந்து குட்டுதல் என்ற சொல்
பிறந்தது
இதுகாறும் உரைத்தவற்றால்
சடுதி என்ற சொல்லின் பொருள்
புரிந்திருக்கும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக