ஞாயிறு, 10 டிசம்பர், 2017

பல் > பனுவல் ( நூல் )



இன்று பனுவல் என்ற சொல் அறிந்து இன்புறுவோம்.
“பத்தி செய்து பனுவலால்
வைத்த தென்ன வாரமே”
என்ற தாயுமானவர் பாடல் நினைவுக்கு வருகிறது.

“விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு  என்பது குறளில் இருந்து நினைவகலா வரிகள்.

“ஆயிர முகத்தான் அகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லனறே” என்பது பவணந்தியார் திருவாய் மலர்ச்சி.
நூலைக்  குறிக்கும் இச்சொல் ஓர் இன்  கிளவியாம்.

இச்சொல்லினுட்புகுந்து காண்போம்.

பன்> பன்னு > பன்னுதல்.

இதன் பொருள்:
ஆராய்தல்.
புகழ்தல்.
கொய்தல்.
சொல்லுதல்
நேர்தல்
நெருங்குதல்.
பேசுதல்.
பாடுதல்.
நின்று நின்று சொல்லுதல்.

இவைமட்டுமின்றிப் பின்னுதல் என்னும் இகர முதற் சொல்லும் பன்னுதல் என்று திரியும்.  இ > அ திரிபுமுறை.

பல் > பன் > பன்னல்:

பன்னல் என்ற சொல்லுக்கு மேற்கண்ட சிலவற்றுடன் பருத்தி என்றும் பொருளிருக்கிறது.

1.
பல் > பரு > பருத்தி.
பல் > பன் > பன்னல்.
இங்கனம் திரிந்தவை பல. ஒன்றிரண்டை மட்டும் இங்குக் காண்க.  ஒப்பு  நோக்குக.

நில் > நிரு:  மற்றும்:  நில் > நிறு> நிறுவு > நிறுவாகம்
நிருவாகம்,  நிறு> நிறு > நிறுவாகம்.

தெல் > தெள் > தெளி.
தெல் > தெரி.     தெல் > தெர் > தெருள்.  தெருட்டுதல்.
தெருள் > தெருட்டி > திருட்டி > திருஷ்டி.

மெல் > மெரு > மெருகு. (மெல்லழகு. மென்பூச்சு.)

2

பல் > பன் >பன்னுதல்.
பலமுறை சொல்லுதல்.
பல் > பன்மை.

பல் > பன் > பனுவு (வினைச்சொல்) > பனுவுதல் :  சொல்லுதல்.

3
பல்> பன் > பனுவல்.
பன் > பன்+வு +அல்
சொல்லப்படுவதாகிய நூல்.  பன்வல் என அமையாமல் பனுவல் என்றோர் உகரச் சாரியை பெற்றமைந்தது  செந்தமிழியற்கை சிவணிய நிலையே என்றுணர்க.

அறியவேண்டிய கருத்து: இந்திய மொழிகள் பலவினிலும் நூல்கள் பல
வாய்மொழியாக உலவி, பின் எழுத்திலமைந்தன என்பதைப் பனுவல் என்ற சொல் நமக்கு உணர்த்துகிறது. தமிழில் பழங்காலத்திலேயே எழுத்துக்கள் உண்டாயின.  சமஸ்கிருத்த்தை எழுத்திலமைக்க எதிர்ப்பு ஆதிகாலத்தில் இருந்தது, காரணம் மந்திர ஒலிகளை எழுத்துக்கள் துல்லியமாக வெளிப்படுத்த இயலா  என்ற அச்சம் ஆகும். இன்றும் மந்திர ஒலியை ஆசான் அல்லது குருவின்வழியே அறியவேண்டும்.

நேரம்  கருதி விரித்தெழுத வில்லை. இனி வாய்ப்புக்கேற்ப அவ்வப்போது விளக்கப்படும்.

கருத்துகள் இல்லை: