தமிழ் மொழி சொல்வளம் மிக்கது. ஒரு பொருளுக்குப்
பல பெயர்கள் இருந்தால் அதைச் சொல்வளம் என்னாமல் வேறே என்னவென்பது!
கஞ்சா என்பது ஒரு போதைப்பொருள். ஆனால்
இன்று போதைப்பொருள் மிகுந்த கட்டுக்குள் இருப்பது தெரிகிறதென்றாலும் வெளியுலகில் பல்வேறு
போதைப்பொருள்கள் உள்ளன. அவற்றைத் தூய தமிழில் சுட்டவேண்டிய தேவை நமக்கு ஏற்படவில்லை.
நாம் இத்தகு பொருள்களைப் பற்றிக் கருதுவதும் எழுதுவதும் மிகவும் குறைவே.
தமிழில் கஞ்சாவுக்கு மட்டும் 33 அல்லது
அதற்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன. இப்பொருட்கு
இத்துணைப் பெயர்கள் இருப்பது இது தமிழர்களிடையே
நன்’கு புழங்கிய பொருள் என்று தெரிகிறது.
கஞ்சா என்பது இந்திமொழியிலும் சமஸ்கிருதத்திலும்
உள்ள சொல் என்று தெரிகிறது. இது பிரிட்டீஷ் அரசின் காலத்தில் இந்தியாவில் ந ன் கு கிடைத்தது
என்றும் தெரிகிறது. தம் ஊரை வேறு நாட்டினர் ஆள்கின்றனர் என்பதைப் பற்றி மக்கள் கவலை
கொள்ளாமல் இருக்கவேண்டுமென்றால் அவர்கள் நன்றாகக் கஞ்சாப் புகைப்பிடிக்க வேண்டும் என்பது
தெளிவு. அந்த மயக்கில் இருக்கும் போது ஆர்ப்பாட்டம்
முதலியவை குறைந்துவிடும். ஆனால் மக்களின் உழைப்பு,
சிந்தனை முயற்சி முதலியன கெட்டுப் பொருளியல் கல்வி முதலியவையும் கெடுதல் கூடும். இவற்றை
நாம் இங்கு ஆய்வு செய்யவில்லை.
முப்பதின் மேற்பட்ட எல்லாச் சொற்களையும்
ஆய்வு செய்தல் கடின வேலையே. சிலவற்றைப் பார்ப்போம்.
குவலை என்பதும் கஞ்சாவைக் குறிக்கும்.
இது குவித்தல் என்பதிலிருந்து வருவது. குவித்தல் என்பதற்கு ஒடுங்கும்படி செய்தல் என்றும்
பொருளுண்டு. மனிதனை ஒடுங்குவித்தலால், குவி+அல்+ஐ எனப்புணர்ந்து, குவி என்பதில் இகரம்
கெட்டுச் சொல் அமைகிறது. இது இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் வழக்கிலிருந்து, இப்போது
பயன்பாடு குன்றிவிட்டதென்று தெரிகிறது. இனிக் குவலை என்பது குல்லை என்றும் திரிந்து
வழங்கியுள்ளது.
புளிச்சை, புளிக்சநார் என்பவையும் கஞ்சாவுக்குப்
பெயராய் வழங்கின. புளிச்சை என்பது ஒரு கீரைக்கும்
பெயர். இது ஒரு பல்பொருள் ஒருசொல்.
விசையை என்ற பெயருமிருந்தது. உடலுக்கு விசைகொடுத்தது போன்ற திறனுடையது என்று
நினைத்தனர் போலும். ஐ என்பது விகுதி.
காய்ச்சிரக்கு, காய்ச்சுறுக்கு என்பனவும்
பெயர்கள். சிரங்கு என்பது புண்.. காய் என்பது
மனிதன் காய்ந்துவிட்டதுபோலாவதைக் குறிக்கும். சிற்றூர்களில் “காய்ஞ்சான்” என்றும் “வற்றல்”
என்றும் சிலரைக் குறித்தலுண்டு. போதைப்பொருளால்
காய்ந்து புண்பட்ட நிலையைக் குறிக்கிறது. காய்+ சிரங்கு = காய்ச்சிரக்கு. வலித்தல் விகாரம். காய்ச்சுறுக்கு
என்பது விரைந்து காய்ந்துபோவதைக் குறிக்கிறது. சரக்கு என்பது சிரக்கு எனத் திரிந்ததெனினுமாம்.
கஞ்சா வென்பதும் காய்ந்த பொருளே.
கற்பம் என்பதும் பெயர். இது காயகற்பம்
என்பதன் முதற்குறையாய்த் தெரிகிறது. ஒப்பீட்டில் அமைந்துள்ளது.
மற்றவை பின் வாய்ப்பின்போது ஆய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக