சனி, 30 டிசம்பர், 2017

எழுதுகோல் தமிழ்ப் பெயர்கள்.

பேனா என்ற ஆங்கிலச் சொல்லே எழுத எண்ணும்
போதெல்லாம் எப்போதும் நம் தலைக்குள் தவழ்ந்து
உட்சென்றுவிடுகிறது.  அதை எழுதுகோல் என்று
நாம் சொல்வதும் எழுதுவதும் குறைவு.

எழுதுகோல் என்ற சொல்லைப் பார்க்குங்கால்
பேனாவுக்கு இன்னொரு சொல் தமிழில் கிடைக்கும்
என்று உங்களுக்குக் தோன்ற வில்லையல்லவா?

எழுதுகோலுக்குப் புதிய சொல் ஏதாவது
சொல்லலாம் என்று எண்ணுகிறீர்களா?  எழுத்தாணி
என்பது ஓலைச்சுவடிகளில் எழுதும் காலத்தில்
 பயன்பட்ட சொல்.

இறகி என்ற ஒரு சொல்லைத் தமிழாசிரியர்கள்
பயன்படுத்த முனைந்தனர்.  அப்போது  ஆங்கிலத்திற்கு
 நிகரான தமிழ்ச் சொற்களை முன்வைத்த சில
நல்லதமிழ் ஏடுகள் " இறகி"யைப் பரிந்துரை
செய்தபோதும் சில ஆர்வலர்களே அதனைப்
பயன்படுத்தி மகிழும் நற்பேறு பெற்றனர்.

இறகி என்பது  பேனா என்ற இலத்தீன்
மொழிச் சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பில்
இகரம் சேர்த்து அமைக்கப்பட்ட சொல்.
பென்னா என்ற கோழியிறகு  அல்லது அது
போல்வதோர் ஏனைப் பறவை இறகு.

தனித்தமிழாசிரியர் சிலரும் அதனைப்
புழங்கி மகிழ்ந்தனர். எழுதுகோல்கள் ஒருபுறம்
 கூரான எழுதுமுனை உடையவை.
இருபுறமும் எழுதுமுனைகளை உடைய
கோல்களும் வந்தன. அவை மிகுதியாகப்
பரவவில்லை.

மையை அடைத்துவைத்து எழுதும் மைந்நிலை
இறகிகளும் வந்தன.  பந்துமுனை
எழுதுகோல்களே இதுகாலை
மிகவும் பயன்படுபவை.

இப்போதெல்லாம் நான் எழுதுகோல்
 எடுத்துச் செல்வதில்லை. எதையும் குறித்துக்
கொள்ள  வேண்டுமென்றால் கைப்பேசியின்
உதவிகொண்டு அதை முடித்துக்கொள்வேன்.

எழுதுகோல்கள் முனை கூரானவை.
இதனால் பத்தொன்பதாம் நூற்றாண்டுத்
தமிழர்கள் "கூர்ச்சிகை" என்ற சொல்லை
எழுதுகோலுக்குப் பயன்படுத்தினர்.


இச்சொல்லின் சி என்பதும் கை என்பதும்
விகுதிகள். இது நல்ல தமிழானாலும், இந்த
நூற்றாண்டில் நாம் அதை முற்றிலும்
மறந்துவிட்டோமே.

ஆனால் இச்சொல் ஊசியையும் குறிக்கும்
என்பதும் இடம் நோக்கிப்
பொருளறிய வேண்டுமென்பதும்
நினைவில் வைக்கவேண்டும்.

என்றாலும் இந்த நூற்றாண்டில் ஊசிக்கு
நாம் கூர்ச்சிகை என்று சொல்வதில்லை
ஆகையால், அச்சமின்றி அதைப்
பயன்படுத்தலாம்.

பென்சிலுக்கு "  மைக்கோல் " என்பது
பொருத்தமான் பெயர்.

இறகியும் நன்று.

கருத்துகள் இல்லை: