வெள்ளி, 15 டிசம்பர், 2017

பரிந்து இடும் பரிச்சை (பரீக்ஷா)


இன்று பரீட்சை என்ற சொல்லின் அமைப்புக் காண்போம்.
இப்போது இச்சொல்லின் பயன்பாடு குறைந்துவருகிறது. இதற்கு நல்ல இணையான சொல்லாகத் தேர்வு என்ற சொல் வழங்குகிறது.

பரிதல் என்றால் யாது பொருளென்று முதலில் காண்போம். இது தமிழ்ச் சொல். அன்பு, அறுத்தல், இரங்குதல்,ஒடித்தல், ஒழுகல், தறித்தல், பங்கிடல், பரிந்து பேசுதல், வெட்டுதல், பற்று வைத்தல்,  பகுத்தறிதல் என்பன இச்சொல்லின் பொருளாகும்.

இற்றைத் தமிழன் இதனெல்லாப் பொருள்களிலும் இதைப் பயன்படுத்த அறிந்திராவிட்டாலும், பரிந்துரை என்ற சொல்லையாவது அறிந்து பயன்படுத்தவல்லனாம். “ரெக்கமண்ட்” என்ற ஆங்கிலத்துக்கு ஈடாக இதைப் பயன்படுத்துவான்.

இதனை இதற்கு ஏற்றுக்கொள்க, அல்லது இவனை இச்செயலுக்கு அல்லது பதவிக்கு ஏற்றுக்கொள்க என்ற பொருளில் பரிந்துரை என்பது வரும்.

பரீட்சை என்பது இரு சொற்களைக் கொண்டு அமைந்ததாகும்.  பரிதலும் இடுதலும் அவை.

ஒரு கேள்வியைத் தேர்ந்து எடுக்கிறார் ஒருவர். பல கேள்விகள் உலகில் உள்ளன. அவற்றுள் ஒன்றை அவர் எடுக்கிறார்.  இந்த ஒன்றை அவர் வெட்டி எடுக்கிறார். இதற்குப் பதில் சொல் என்`கிறார். அதாவது நீங்கள் பதிலுரைக்க உங்கள்முன் இடுகிறார்.  இப்படி வெட்டி முன் இடுவதுதான் பரிந்து இடுதலாகும்.  பகுத்தறிந்து இடுகிறார் எனலும் ஆகும்.    பரிதல் சொல்லின் ஏனைப் பரிமாணங்களையும் விரித்துப் பொருத்தலாம். கேள்விக்குப்  பதில் ஒரு மரத்துண்டை உங்கள் முன் வைத்து இதைத் தூக்கு பார்க்கலாம் என்றும் கேட்கலாம்.  பரீட்சை என்பது கேள்வி பதில் பொருந்தியதாக மட்டும் உலகில் இருப்பதில்லை.

இடு  என்பது சை விகுதி பெற்று இடுச்சை ஆனது. பின் இது “ இட்சை” என்று திரிந்துவிட்டது.  இச்சை எனினும் அதுவே.  பரி + இடு + சை >  பரி+ இ(டு)+ சை > பரிச்சை > பரீச்சை> பரீட்சை.

பரிச்சை என்ற ஊர்ப்பேச்சுச் சொல் டுகரத்தை முற்றிலும் விலக்கி நிற்க, அதன் திருத்தமாகிய பரீட்சை என்பது டகர மெய்யெழுத்தையாவது உள்ளடக்கி நிற்பது மகிழ்ச்சிக்குரியதே எனலாம். டுகரத்தின் சுவடாவது தெரிகிறதே.

இச்சை என்ற விருப்பம் குறிக்கும் சொல், இடுச்சை என்று தோன்றி டுகரத்தை முற்றிலும் கெடுத்து இச்சை என்றானது காண்க.  நம் மனத்தை எதில் இடுகிறோமோ அதன்பால் நாம் இச்சை கொள்கிறோம்.

இட்டம் என்ற சொல்லும் இடு+ அம் = / என்று புணர்ந்து இட்டமாகிப் பின் இஷ்டமான கதையை முன்பு ஓர் இடுகையில் விரித்து வரிசெய்ததுண்டு. அதாவது விவரித்ததுண்டு.

இடை டுகரம் மறைதலை இங்குக் காண்க.

கேடு > கே > கேது.  ( கெடுதல் செய்யும் கோள்)
கேடு > கேதம்.  (துக்கம்).  அதாவது உயிர்க்கேடு.

 ஊர்ப்பேச்சுச் சொல் பரிச்சை  தான்.

விரும்பி இடப்படுவது பரிச்சை அல்லது பரீச்சை.இதன் கொடுந்திரிபு பரீக்ஷா.


பின் சந்தித்து உரையாடுவோம்.


 

கருத்துகள் இல்லை: