வியாழன், 7 டிசம்பர், 2017

நீலத் திரைக்கடல் ஓரத்திலே என் எஸ் கிருஷ்ணன்

Thursday, August 30, 2012

கலைவாணர் விளக்க வரிகள்



பாரதியாரின் கவிதை பற்றி எடுத்தியம்பத் தனித் திரிகள்  உண்டு. ஆனாலும் பலசுவைக் கவிதைகளையும் நாம் நுகர்ந்து வருவதனால், அவருடைய கவிதை ஒன்றிரண்டை அவ்வப்போது தொட்டிணைத்துக்கொள்வதில் தவறொன்றும் இல்லையென்றே கருதுகின்றேன்.

நாம் இன்று படித்தின்புறும் அவர் வரிகள் இவை:

நீலத் திரைக்கடல் ஓரத்திலே -- நின்று
நித்தம்  தவம்செய்த குமரிஎல்லை -- வட
மாலவன் குன்றம் இவற்றிடையே -- புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு.

இந்த வரிகளுக்கு நகைச்சுவை அரசு என்று பெரும்புகழ் வாய்ந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் வரைந்திருந்த சில விளக்க வரிகள்,இலக்கிய நோட்டம் (திறனாய்வு )  என்னும் தகுதிக்கு நன்கு ஏற்புடையன என்னலாம்.

அவ்வரிகள் இவை:

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் யோகசாலிகள்தான். தமிழென்றாலே இனிமை என்பது பொருள். தமிழில் சில வார்த்தைகளுக்கு இரும்பைக் காந்தம் இழுக்கும் தன்மைபோன்ற சக்தியுண்டு. இது கற்பனையல்ல. கடைந்தெடுத்த அனுபவ உண்மை.

"மண்டி" என்ற சாதாரண வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வார்த்தையில் விசேஷமாக ஒரு சக்தியோ கவர்ச்சியோ இருப்பதாகத் தோன்ற வில்லை அல்லவா? சிறந்த கலைஞர்கள் இவ்வார்த்தையைக் கையாண்டு எத்தனை ஆச்சர்யகரமான அற்புத சக்தியை ஏற்படுத்தி விடுகிறார்களென்பதைப் பாருங்கள்.

பாரதியார் பாடலொன்றில் ("புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு" {என்கிறார் } )1...... புகழ் மண்டிக் கிடக்கிறதாம். புகழானது கொழித்து, கொப்பளித்து, உறைந்து, ஊறித் ததும்பி எங்கும் பரந்து நிரம்பிக் கிடக்கிறதாம். இந்த ஒரு வார்த்தை கவிதையில் ஜீவகளையைப் படம்பிடித்துப் படிப்போர் கருத்தைப் பரவசமாக்குகிறது. இன்னும் பல உதாரணங்கள் காட்டலாம்.

என். எஸ். கிருஷ்ணன். கட்டுரை. ஜூன் 1952,


1 பிறை க்கோட்டுக்குள் உள்ளவை என் இணைப்புச் சொற்கள். 

கருத்துகள் இல்லை: