வியாழன், 8 நவம்பர், 2018

குறுக்கி வழங்கும் ஆங்கிலச்சொற்கள். டிவி முதலிய

பொதுவாக மக்கள் தம் பேச்சில் வழங்கும் சொற்களை எப்படிக் கையாளுகிறார்கள் என்பதைப் பொறுத்தேஅவர்கள் பேச்சின் இயல்பு அமைகின்றது. இப்போது சில ஆங்கில மொழிச் சொற்களை எப்படி யவர்கள் பயன்படுத்துகின்றனர் என்று பார்ப்போம்.

இப்போது நாம் சினிமா என்று வழங்கும் சொல் "சினிமாட்டோகிராப்" என்ற சொல்லின் பாதி ஆகும்.  இங்கு முதல்பாதியை எடுத்துக்கொண்டுள்ளனர்.  ஆனால் டெலிபோன் என்ற சொல்லில் முதல்பாதியை எடுத்துக்கொள்ளவில்லை.  இப்படி மேற்கொள்ளாமைக்குக் காரணத்தை நாம் ஊகிக்கலாம்.  டெலி என்னும் போது டெலி என்று தொடங்கும் பல சொற்கள் ஆங்கிலமொழியில் உள்ளன. குழப்பம் ஏற்படக்கூடும் என்பதுதான் காரணமா என்று அறுதியிட்டுச் சொல்வதற்கில்லை.  இதில் போன் என்ற இறுதிப்பாதியையே மேற்கொண்டுள்ளனர்.

கார் (from c 1300 ) என்ற சொல் இப்போது பெரிதும் வழங்குவதாகும். தமிழில் உந்து என்று சொல்கிறோம்.  இது (கார்) ஆங்கிலத்திலிருந்து  நாம் பெற்றுக்கொண்ட சொல். இது ஆங்கிலோ பிரஞ்சு மொழியில் வழங்கியது.  இதற்குமுன் இலத்தீனில் இருந்துள்ளது.  செல்டிக் மொழியில் இரு சக்கரங்கள் உள்ள போர் வண்டியை இது குறித்தது.  இப்போது நாலு சக்கரமாகிவிட்டாலும் மற்றும் போருக்கு உரியதாக இல்லாவிட்டாலும் இதைக் கார் என்றே எல்லோரும் சொல்கிறார்கள்.

cart  என்பதோ தொட்டிலையும் ஒரு காலத்தில் குறித்தது,  மரண தண்டனைக்கு கொண்டுசெல்லப்படும் கைதிகளின் வண்டியையும் குறித்துள்ளதாம்.  கூடையையும் குறித்துள்ளதாகக் கூறுவர்,  இதற்கும் கார் என்பதற்குமுள்ள உறவு புரியவில்லை.

வண்டிகள் இருவகை:  இழுவை வண்டிகள்  தள்ளுவண்டிகள் என்பனவாம்.
லோர், லாரி என்பன இழு(வண்டி)  என்று பொருட்படும்  லரி என்ற சொல்லினின்று பெறப்பட்டிருக்கலாம் என்பர். போக்குவரத்துச் சட்ட நூல்களில் மோட்டோர் ( மோட்டார்) என்ற அடைமொழியுடன் தான் இதுபோலும் சொற்கள் கையாளப்பட்டிருக்கும்  லாரி என்பது பிற்காலத்தில் தொடர்வண்டித் துறையில்தான் முந்துவழக்குடையதாய் இருந்ததென்பர். பிற்காலத்தில் சாலைகளில் செல்வன குறிக்கப்பட்டன.

டெலி விஷன் ( தொலைக்காட்சி ) என்பதை இப்போது டிவி என்றுதான் பலரும் சொல்வர். டெலிபோனை போன் என்றதுபோல டெலிவிஷனை விஷன் என்று யாரும் சொல்வதில்லை.  இதற்கு எழுத்துக்குறுக்கச் சொல்லே  பயன்பட்டுவருகிறது. போனுக்குத் தொலைபேசி என்பது முழுதும் வழங்காவிட்டாலும் ஓரளவு வெற்றி கண்டுள்ளது.  கைப்பேசி என்பது கடைகளின் விளம்பரங்களில் கையாளப்படுகின்றது.

சொற்களைக் குறுக்காமல் மக்கள் வழங்குவதில்லை. இதை அறிஞர் வரதராசனார் முயற்சிச்சிக்கனம் என்பார்.

சில சொற்களைக் குறுக்கமுடிவதில்லை.  இயர் ரிங்க் என்பதை இயர் என்றோ ரிங்க்  என்றோ குறுக்கினால் பொருள்மாறாட்டம் ஏற்படும். காதணி என்பதைக் காது என்றோ அணி என்றோ குறுக்க இயலவில்லை.

கணினி என்பதை இப்போது கணக்கு இயந்திரமாக நாம் பயன்படுத்துவதில்லை.  முன் கால வழக்கை ஒட்டிய பெயர் இதுவாகும்,  கல்குலேட்டர் என்ற கணக்கி தனியாக பயன்பாட்டில் உள்ளது.  கணக்குப் பார்பவர்கள் முன்பு "கணக்கப்பிள்ளைக" எனப்பட்டனர்.  இப்போது கணக்கர்கள் என்பது இவர்களுக்குப் பொருத்தமே. கணிதர்கள் என்பதும் அமையும்,   பழங்காலத்தில் கல்லைக் குலுக்கிக் கணக்குப் பார்த்தபடியால் "கல்குலஸ்" என்ற இலத்தீன்சொல் அமைந்தது. இதனைப் பலர் அறிந்ததில்லை.

மறுபார்வை செய்யப்படும்.
பிழைத் திருத்தம் பின்

புதன், 7 நவம்பர், 2018

உதவி உதடு உதாரணம்

அது :   அங்கிருப்பது

இது :    இங்கிருப்பது

உது :  முன்னிருப்பது.


தமிழ் மொழியில் இவை மூன்றும்  சுட்டு ச் சொற்கள்.  சுட்டுதல் என்றால் விரலாலோ அல்லது வேறு செய்கையாலோ   ( சைகையாலோ ) குறித்துக் காட்டுதல்.

இவற்றுள் உது என்பதை எடுத்துக்கொள்வோம்.


உது +  அ + வி  =  உதவி.

முன்சென்று ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு வேண்டியாங்கு வேண்டியன செய்திடுதல்.

இதில் அகரம் இடைநிலை.
வி என்பது ஒரு சொல் விகுதி. ( மிகுதி > விகுதி)

உதடு :  உ =  முன்னாகவும்,   அடு =: இரண்டாகப் பிளவுபட்டதுபோல் அடுத்தடுத்து இருப்பது உதடு.,

உது + அடு.


உதை :   உது = முன்னாக,  ஐ =  மேலெழும்படியாகக்  (காலால்)   மெல்லவோ கடுமையாகவோ தொடுதல்.

ஐ என்பது மேலெழுச்சி காட்டும் சொல்.  ஐயன் என்ற  சொல்லில் இது மேலானவன் என்ற பொருளில் வருகிறது.

செய்தனை, கண்டனை, பேசினை என்ற வினை முற்றுக்களிலும் இந்த ஐ
வினைமுற்று விகுதியாக வந்து உயர்வு குறித்தாலும் நாளடைவில் இவ் வுயர்வுப் பொருள் இழக்கப்பட்டது.   வெறும் முன்னிலை விகுதியாகிவிட்டது,

ஐ என்பது ஆய் என்று நீண்டது.    வந்தாய்.

இதிலும் இதன் உயர்வுப் பொருள் இழக்கப்பட்டது.


உதாரணம்:

உது : முன்னிருப்பது.

ஆர்:   நிறைவாக

அணம் : விகுதி.   இது அண்+ அம் என்ற இரு சிறு துண்டு விகுதிகளில் இணைப்பு.   அண் :   அடுத்து.   அதாவது அண்மை.   அம் :  அமைதல் . ஆனால் இவை பின் பொருளிழந்து விகுதிகளாகக் கொள்ளப்பட்டன,

நிறைவாக அடுத்து முன்னிருப்பதே உதாரணம்.  அப்படி இருப்பதே இன்னொன்றுக்கு எடுத்துக்காட்டாக முடியும்.

இதில் அயல் ஒன்றுமில்லை.

அணம் விகுதி வந்த இன்னொரு சொல்:  கட்டணம்.   பட்டணமும் ஆம்.

உதையம் > உதயம் (  இதில் ஐகாரம் குறுகிற்று )

உது:  முன்னாகவும் ஐ: மேலாகவும் எழுவது.

அறிந்து மகிழ்க.

விற்பனை, விற்பன்னர், நிபுணர். நிபுணத்துவம்.

வில் என்பது நீக்கப்பொருள் உணர்த்தும் சொல்லாகும்.  இது சென்ற இடுகையில் விளக்கப்பட்டது.  பொருளானது ஒருவனிடத்திருந்து  நீங்கி இன்னொருவன்பால் செல்வதை வில் என்பது குறிக்கும்.  அம்பு எய்யும் வில் என்றாலும் வில்லில் இருந்து அம்பு நீங்கிச் செல்லும்படியான ஒரு பொறியே அது வாகும்.  நீக்கப் பொருளே அதுவாகும்.

இனி இவற்றைக் காண்க:

வில் >  விலை  ( வில் + ஐ)    ஐ என்பது விகுதி.   ( மிகுதி > விகுதி).

சொல்லை மிகுத்து வேறுபடுத்துவதும் புதுப்பொருள் தருவதும் விகுதி.

வில்+ பு + அன் + ஐ  =  விற்பனை.

பு :  விகுதி.
அன்:  இடைநிலை.
ஐ:  விகுதி.

இதேபோல் அமைந்ததே கற்பனை என்பதும்.

கல் + பு + அன் + ஐ =  கற்பனை.

விற்பன்னர்

பலருக்கு ஒன்றை நேர்வழியாகச் சொல்லவே தெரியும்,  ஆனால் விற்பன்னர் என்பவரோ ஒன்றை வளைத்துச் சொல்லி  வெற்றியை ஈட்டுபவர் ஆவார்.
பன்னர் -   பன்னுபவர்.  பன்னுதல்:  பலமுறை எடுத்துச்சொல்லுதல்.  வில் என்பது நீக்கப்பொருட் சொல் ஆதலின் இவர் ஒன்றிலிருந்து  இன்னொன்றைக் கண்டுபிடித்துச் சொல்வார்.  ஒன்றினின்று இன்னொன்று வருதலே இதில் நீக்கம்  ஆகும். வில் என்பது நீக்கத்தில் வெற்றி அல்லது அடைவைக் குறிக்கின்றது.  வில் போலும் குறிவைத்துப் பன்னுபவர் எனினும் ஆகும்.

நிபுணர்

நிபுணர் என்பவர்   ஒன்றன் நிலையை முழுதுமுணர்ந்தவர்.  நிற்பு  உணர் என்ற இருசொற்கள் கூடிய சொல் இதுவாகும்.   நிற்பு -  நிலை;  உணர் =  உணர்தல்.
இது முதனிலைத் தொழிற்பெயர்.  ஆகுபெயராய் உணர்ந்தவரைக் குறித்தது.  நிற்பு என்பதில் றகர ஒற்று குறைந்து  நிபு ஆன
 து.  இது தப்புதல் என்னும் சொல்லில் பகர ஒற்று வீழ்ந்து தபு ஆகி,  தபம், தவம் என்ற சொற்களைப் பிறப்பித்தல் போலுமே ஆகும்.

உலகத் துயர்களிலிருந்து தப்புபவரே தவமுனிவர்.    தப்பு > தபு > தபம்.

நிற்புணர்த்துவர்>  நிற்புணர்த்துவம் >  நிபுணத்துவம்

திருத்தம் பின்

செவ்வாய், 6 நவம்பர், 2018

வில் என்னும் அடிச்சொல்.

ஒன்றிலிருந்து இன்னொன்று அகன்று செல்வதையே "விலகு" என்னும் தமிழ்ச்சொல் குறிக்கிறது.

இதில் கு என்பது ஒரு வினையாக்க விகுதி.  இதைத் தெரிந்துகொள்வதற்கு ஒரு வாய்த்தி அதைச் சொல்லித்தர வேண்டும்.  அதாவது வாய்ப்பாடமாகச் சொல்லிக்கொடுப்போனே வாய்த்தி.  அது பின் தன் யகர ஒற்றினை இழந்து வாத்தி ஆகி, பணிவு கருதி வாத்தியார் ஆயிற்று.   உப அத்தியாயி என்ற சொல் உபாத்தியாய என்றானது வேறு. குழப்படி பண்ணாமல் கு என்ற விகுதியை அறிவோம்.

விலகு என்பதில் வில்+ அ + கு என்று மூன்று துண்டுகள் உள்ளன.  கு என்பது சேர்விடம் குறிக்கும்.   கோலாலம்பூருக்கு,  அமெரிக்காவிற்கு என்று நாம் போமிடம் குறிப்பது.   வேற்றுமை உருபு ஆனாலும் அங்குமட்டும்தான் வருமென்று தடையேதும் இல்லை.  ஆகையினால் சொல்லாக்கத்திலும் பயன்பட்டு அது மொழியை வளர்த்துள்ளது.

பழ -   பழகு
உரு  -  உருகு
பெரு - பெருகு.
இள -  இளகு

என்பவை போதும்.

இடைநிலையாக நிற்பது   அ என்ற சுட்டுச்சொல் ஆகும்.  ஒரே எழுத்து,   அதற்குப் பொருளிருக்குமானால் அது ஒரு சொல்லுமாகும்.  இங்கு இடையுற்று  முழுச்சொல்லை ஆக்குவதனால் சொல்லிடைநிலை.   இந்த அகரம் சுட்டுச்சொல் ஆதலால் இதற்கு அங்கு என்று பொருள். இடத்தைக் காட்டுகிறது.

ஓர் இடக்குறியினின்று அங்கு சென்று சேர்வது  "  விலகு"  என்ற சொல்லால்
குறிக்கப்பெறுகிறது. அங்கு என்பது எவ்விடத்துப் போகுமோ அவ்விடம், அது ஒரு விரற்கடையாகவும் இருக்கலாம்.  நூற்றுக்கணக்கான கல் தொலைவாகவுமிருக்கக்கூடும்.

விலகு என்பது வேறிடம் மாறிச்செல்வது ஆகும்.

இதை அறிந்துகொள்ளுங்கள்.  தொடர்வோம்.


பார்க்கவும்:
29.6.18 விற்றலும் வாங்குதலும்.:https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_67.html

சாப்பாட்டு ராமர்களைக் காணவில்லை

ஓருசீமை நல்லிலந்தை  ஒற்றடியாய்த் தின்னத்
திருவமை ஐவராலும் ஆமோ ---- அருந்திறலீர்!
தன்னொரு வன்மை இழந்ததோ இவ்வுலகம்
முன்னிரு உண்ணுலகே மேல்.

புரிந்துகொள்ள:

சீமை இலந்தை:   ஆப்பிள் பழம்.
ஒற்றடியாய் -  சளைக்காமல்
திருவமை -  உயர்வு பொருந்திய
ஐவர் - ஐந்து நபர்கள்.
ஆமோ :  ஆகாதோ - முடியவில்லையோ
அருந்திறலீர் -  அரிய வலிமை உடையவர்களே!
தன்னொரு வன்மை - தனது ஒன்றான வலிமையை;
முன்னிரு =  முன்பு இருந்த; அல்லது முன்னைப் பெரிய;
உண்ணுலகே -  சாப்பாடுராமர்கள் உலகமே
மேல் -  உயர்ந்தது போலும் என்றபடி.

நபர் :  இது ந(ண்)பர் என்பதன் இடைக்குறை,
உருது அன்று,

யாப்பியற் குறிப்புகள்

ஒரே அடியினுள்:

தன்னொரு வன்மை:  எதுகைத் தொடர்.
இழந்ததோ இவ்வுலகம் : மோனைத் தொடர்
முன்னிரு உண்ணுலகே: எதுகைத் தொடர்.

தீபாவளி முடிந்ததா? பொங்கல் வந்துவிடும்........

கவலை வேண்டாமே..!


ஒருதிகதி  ஓடியிற்ற தீபா- வளி
ஓராண்டில் இனிவருமே தீர்வ-- திலை;
மறுபடியும் மறுபடியும் பலகா- ரமே.
மாந்தமிலை மகிழ்வுகொளீர் மாலை -- வரை;
இருவரிங்கு விருந்தோம்பி மகிழ்வு-- கொள
இனிப்பொங்கல் தனிவசதி மாறாப்--- புகழ்!
ஒருபடியாய் நாளனைத்தும் ஒடுங்கி-- நிலை
உற்றுவிடின் வாழ்விதுவும் வெற்றுக்--குழை

அரும்பொருள்:
திகதி:  தேதி, நாள்.
ஓடியிற்ற :  சென்றுமுடிந்த.
கொளீர் : கொள்ளீர் = கொள்வீர்
கொள -  கொள்வதற்கு
மாறாப் புகழ் -  வயிறார உண்டு மகிழ்ந்து
வாழ்த்துவதால் வரும் கீர்த்தி.
ஒருபடியாய் =  ஒரே மாதிரியாய்  வேறுபாடுகள்
இல்லாமல்;
ஒடுங்கி -  விரிவு இழந்து;
நிலை உற்று =  மாறாமல் அமைந்துவிட்டால்
வெற்றுக்குழை = பயனற்ற துளைத்தண்டு.
அணிகலன் இல்லாத கூந்தல் என்பதுமாம்..

உரை:

தீபாவளி ஒரே நாளில் ஓடிவிட்டதே என்று கவலைப்
படவேண்டாம், அது மீண்டும் வந்துவிடும் - அதுவும்
ஒரே ஆண்டிற்குள்ளாகவே.  அப்போதும் அடுத்தடுத்து
பல இனிப்புணவுகளை உண்டபடியே நீங்கள் மகிழலாம்.
காலையிலிருந்து மாலை வரும்வரை அப்போதும்
மகிழுறுவீர்கள். ஓராண்டா காத்திருக்கவேண்டும் என்று
அயர்வு கொள்ளாதீர். அதற்குமுன்பே பொங்கல்
வந்துகொண்டே இருக்கிறது! குடும்பத்தில் கணவன் மனைவி
இருவருமே விருந்தோம்புதலில் ஈடுபட்டு எல்லையில்லாப்
புகழை அடைந்துவிடலாம். அதுவும் வசதியான பண்டிகைதான்.
இவ்வாறு இல்லாதபடி ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாய்
மாற்றமொன்று மில்லாமல் இருந்தால் அதுவோ அணிகலன்கள்
அணிந்து அழகுகாட்டாத பெண்ணின் கூந்தல் போலும்
கிளர்ச்சிதராத வெறுமை வாழ்க்கை ஆகிவிடுமே. அத்தகை
உணர்வு அற்ற வாழ்க்கையோ நமக்கு வேண்டாம்,,



யாப்பியற் குறிப்புகள்

ஒவ்வோர் அடியிலும் இறுதிச்சீர் நிரையசையில்
முடியுமாறு தொடுக்கப்பட்டது.  பாடிமகிழ்க.

ஆக்கியோன் தனிக்குறிப்பு:

காலை ஐந்திலிருந்து வேலையாய்ப் போய்விட்டபடியால்.
வாயில்வந்த கவிதையை எழுதிவிட்டு ஓய்வு கொள்வேன்.

தன்-திருத்தப் பிழைகள் முளைப்பின் திருத்தம் பின்.

திங்கள், 5 நவம்பர், 2018

கண்ணதாசன்: " வந்த வழி மறந்தேனே!"

நாம் எல்லோருமே ஒருவகையில் வந்த வழியை மறந்தவர்கள் தாம்.

காதல் வயப்பட்டுவிட்ட ஒரு கதைநாயகிக்கு ஒரு பாட்டு எழுதவேண்டிய சூழலில் கண்ணதாசன் இப்படிச் சிந்தித்தார்.  அவள் யாருக்கோ மகளாய்ப் பிறந்தவள்.  எங்கோ உலகின் ஒரு மூலையில் வளர்ந்தவள். கொஞ்சம் பெரியளானவுடன் இங்கு வந்து சேர்ந்து விட்டாள். ஓர் ஆண்மகனைக் கண்டாள். மனத்தைப் பறிகொடுத்துவிட்டாள்.

வந்த வழி மறந்தேனே--- புது
மனந்தனைக் கொண்டேனே---  புது
வாழ்வதனைக் கண்டேன்   ( வந்த)

சிங்கப்பூரில் ஒவ்வோர் அடுக்குமாடிக் கட்டிடத்திலும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன.  அங்கு வாழும் பலர் வந்த வழியை மறந்தவர்கள்தாம்.  புதிய வாழ்வினைக் கண்டு மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.  இவ்வாறே உலகனைத்தையும் சிந்தித்து உணர்ந்துகொள்ளலாம்.

மொழியில் வழங்கும் ஒவ்வொரு சொல்லும் தான் வந்த வழியை மறந்துவிட்ட சொல்தான். சொல் எப்படி அது அமைந்த வழியினை மறந்துவிடும்?  அதற்கென்ன மனமா இருக்கிறது?

" உயர்ந்த மலையும் உனது அன்பின்
உயர்வைக் காட்டுதே!:"

"இதயம் அந்த மலைக்கு ஏது
அன்பைக் காட்டவே?"

என்று இன்னொரு கவிஞர்  ( கவி கா.மு.ஷெரிப் )  காதலன் கேட்பது போன்ற வரியை எழுதினார்.  மொழியில் இருக்கும் சொல்லுக்கும் மனம் இல்லையாதலால் தான் வந்த வழியைச் சொல் அறிவதில்லை.  தான் வந்த வழியை அது அறிந்ததோ இல்லையோ,  வந்த வழியை அது காட்டிக்கொண்டு நிற்கிறது.  சொல்லைக் காணும்போது நாமதனை யுணர்ந்துகொள்கின்றோமே.

இதயம் என்பது குருதியை உள்ளிழுத்தும் வெளிக்கொணர்ந்து உடலின் எப்பகுதிக்கும் செலுத்தியும் கொண்டிருக்கும் ஓர் உறுப்புதான்.  அதற்குள் மனம் என்பதொன்றில்லை.   முன்னுதல் > மன்னுதல்:  மன்னுதல் >  மன்: மன்+ அம் = மனம் ஆகும். உடலில் சிந்திப்பது நடக்கிறது; ஆனால் அஃது இருதயத்தில் இல்லை.  ஈர் என்றால் ஈர்த்தல்:  இழுத்தல். ஈர்  +  து + அ + அம் = ஈர்தயம் > இருதயம்.  (  முதனிலைக் குறுக்கம் ).  தோண்டிய தோடு போன்ற குரல்வளைப் பகுதி  தோண்டு+ ஐ =  தொண்டை என்று குறுகியதுபோலவே இதுவும். பல சொற்கள் இப்படித் திரிகின்றன. இதன் மறுபக்கம் என்னவென்றால்:   இழு> இரு> இரு + து + அ + அம்=  இருதயம் என்பதே.    இரு என்பதே பின் ஈர் > ஈர்த்தல் என்று திரிந்ததென்னலாம். எவ்வாறாயினும் இரு என்பதும் ஈர் என்பதும் தொடர்புடை சொற்கள்.  இரு என்ற வடிவில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன.   எடுத்துக்காட்டு:  இரு1=  பெரிய;   இரு2:  ஓரிடத்து அசைவின்றி அமைதல்.  இரு3:  இழு என்பது.   இரை என்ற சொல்லில் சிதறியபின் ஓரிடத்துப் பறவைகளோ விலங்குகளோ உண்ணும்படியாகக் கிடத்தல்; பொதுவாக உயிரிகளின் உணவு.  அது இரு> இரை என ஆனதே ஆகும்.  இரைத்தல் என்று வினையுமாயிற்று,  ஈர்த்தலில் தொடர்பு உள்ளபடியால் இரு என்பது இரை என்று மாறி உண்டற்குரியதையும் காட்டும்.

அயல் என்ற சொல் அருமையாய் அமைந்தது,  அங்கும் அல்லாத அப்பாலிடத்தைக் குறிப்பது அயல் ஆகும்,  இவ்வாறே அப்பால் கண்டு பயன்பாட்டுக்கு வந்தது அயம் என்ற இரும்பு ஆகும்,  அயச் செந்தூரம் என்ற மருந்து இரும்பினால் அல்லது இரும்புத் தூளால் செய்யப்பட்டது ஆகும்.  செந்தூரம் என்பதே செந்தூளம் என்பதன் திரிபு ஆகும்,  நன்றாக பூசப்பட்ட சாயம், சாயலையும் காட்டவல்லது.  சாயலாவது நிழல்.

அயல் > அயம்
சாயல் > சாயம்.

வேறு புதுச் சொற்களைத் தேடி அலையாமல்  லகர ஒற்றினையே மகர ஒற்றாக மாற்றியமைத்துச் சொற்புனைவு செய்தமை மிகுந்த திறன் ஆகும். பூசிய இடத்தில் சார்ந்திருப்பதால் சார் > சாய் > சாயம் எனினுமாம்,

அந்தச் சொற்களுக்கு வந்த வழி தெரியாவிட்டாலும் ஆய்வாருக்குத் தெரிகிறது,

ஆக வந்த வழி அறியக்கூடியதாய் உள்ளது.

தீபாவளி நடப்புக்கு வந்து மக்கள் கொண்டாடுமுன் தீபங்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். அதன்பின்னரே அவற்றை வரிசையாய் வைத்து ஆடவோ பாடவோ மக்கள் தொடங்கியிருக்கவேண்டும்,  ஆகவே தீபம் + ஆவலி (/ளி)  என்று சொல்லமைந்திருக்கலாம். ஆனால் வட இந்திய வழக்கில் தீ+ வளி  (தீ-வாளி)   என்று வருதலின்  தீபம் என்பதிலுள்ள பகர முதலியவை காணப்படவில்லை.   தீப (தீபா) என்ற சொல் அங்கும் உள்ளது.  ஆக தீவாளி என்று வந்து தீவளி   என்பதனுடன் ஒற்றுமைப்படுவது  ஆய்வுக்குரித்தாய் அதை ஆக்குகிறது,  படிக்க அறியாதார் இன்னும் தீவளி என்றே தெற்கிலும் கூறுகின்றனர் என்பதால்  தீயையும் வளியாகிய காற்றையும் குறிக்கின்றதா என்பதை அறிதல் வேண்டும்,  அப்படியானால் தீபத்தைக் காணுமுன் தீயும் வளியும் கண்டு உவந்த காலத்தது என்றாகலாம்,
அது இன்னும் பழையது என்றாகிவிடும்.

பிழை -  திருத்தம் பின்



 



ஞாயிறு, 4 நவம்பர், 2018

எமக்குத் தீங்கு எண்ணும் கேடு புரிவோர்

தாழிசை 

எழுத்தழுத்துப் பலகைதனைத் தட்டி  னாலும்
எழுத்துச்சில திரைதன்னில் தோன்றா வண்ணம்
கொழுத்தசிலர் இயற்றிவிட்ட புழுத்த மெல்லி
கூடிவந்த  தெங்கணினிக் கோவை நீக்க!

இத்தகையில் மெத்தஅழி வூட்டும் கேடர்
இப்புவியில் இருத்தற்கோ ஏதோ ஊட்டம்?
சித்தரொடு சீர்பெரியோர் உற்ற  பூமி
பித்தரொடும்  எத்தனைநாள் ஒத்தி லங்கும்?

 இதன்பொருள்:

எழுத்தழுத்துப் பலகை:  தட்டச்சு செய்யும் எழுத்துப் பலகை.
computer keyboard
திரை:  கணினித் திரை  computer screen
கொழுத்த -   திமிரினால் கெடுதல் செய்ய முயல்கின்ற

சிலர் -   சிறு எண்ணிக்கையினர்
புழுத்த -  பரவும் கெடுதல் உள்ள  infectious
மெல்லி  -கணினி   மென்பொருள்  software
கோவை =  பல திறமும் இணைக்கப்பட்ட கணினியின் நிலை.
integrity of our machines

தகையில் =  தகைமை இல்லாத;
மெத்த  :   அதிகம்
கேடர் -  கேடு புரிவோர்
ஊட்டம் = விளைவித்த காரணம் causation
சித்தர் =  சிந்தனையாளர் நல்லோர்
பித்தர் =  தீமைசெய்யும் பைத்தியக்காரர்கள்
ஒத்திலங்கும்  =  ஏற்றுக்கொண்டு தாங்கி நிற்கும்

கவிதை 

சனி, 3 நவம்பர், 2018

காசு என்ற சொல்.

சென்ற இடுகையில் காத்தல் (கா) என்பதனடிப் பிறந்த  சில சொற்களைக் கவனித்தோம்.

காசு என்பது ஒரு விலைப்பொருளுக்கு ஒத்தீடாக வழங்குவது ஆகும். ஒரு மாட்டுக்கு ஐயாயிரம் உரூபாய் என்றால் அதுவும் நல்ல விலை என்று மனநிறைவு கொண்டு மாட்டைக் கொடுத்துவிட்டுப் பணத்தைக் கொள்வோம்.

ஐயாயிரம் வந்தவுடன்,  மாடு அதுவேயாக மாற்றப்பட்டுள்ளதால் மாட்டைக் காத்தது போலவே இந்த ஐயாயிரத்தையும் காத்து வைப்பில் இருத்துவோம்.

காத்து வைப்பதால் கா என்ற அடியினின்றே காசு என்னும் சொல்லும் உருவெடுத்தது.  சு என்பது விகுதி அல்லது இறுதிநிலை ஆகும்.

சு விகுதி பெற்ற சொல்:

ஆ -  ஆதல்.

ஆ >  ஆசு.  ( மனிதற்குப் பலவும் ஆவது பற்றுக்கோட்டினால்தான்,  ஆதலின் ஆ என்ற வினையடிச் சொல் அமைந்தது.)

தா > தாசு.  ( உழைப்பினைத் தந்து ஊதியம் பெறுபவர். அல்லது சோறு கஞ்சி முதலிய பெறுபவர் ).   இது அயலிலும் பரவி வேற்றுமொழியினது என்று எண்ணப்பட்ட சொல்).

பாவி > பவிசு    தன்னை  நலம் உள்ளவள்போல் பாவித்து நடந்துகொள்ளுதல்.
இது முதனிலை குறுகி அமைந்த தொழிற்பெயர்.  இப்படிக் குறுகி அமைந்த இன்னொரு சொல்:  தோண்டு > தொண்டை. பிற இடுகைகளில் காண்க.

இவ்வறு காசு என்பது காத்துவைக்கப்படுவது என்னும் பொருளில் அமைந்த சொல்லே.கா

pavisu from paavi

mUsu

காமியம் காமுகன் காமித்தல்

"கலகம் மூலம் காமினி மூலம் "

என் கின்றது ஒரு மலையாளச் செய்யுள். கலகங்கள் எல்லாம் காதலி மனைவி போன்றவர்களால்தாம் வருமாம்.  கணவர்களால் வரும் கலகங்கள் பற்றி மனைவிமார் யாதும்  செய்யுள் இயற்றவில்லை போலும்.

காம் காதல் என்ற சொற்கள் முன்னர் எம்மால் விளக்கப்பட்டன.

மனிதன் குகைகளில் வாழ்ந்த காலங்களிலும் காடுகளில் திரிந்த காலங்களிலும் அவன் வேட்டையில் வென்றுவந்த ஊனையும் பழங்களையும் காத்துக்கொள்ள வேண்டியிருந்தது.  கடினப்பட்டுக் கொணர்ந்த இவைதம்மைப் பிறர் முயற்சி யாதுமின்றி எடுத்துச் செல்வதை விரும்பவில்லை. பொருட்களைக் காத்தல் தொடங்கவே  தனியுடைமை தொடங்கிற்று.  அவன் கொணர்ந்தவற்றை அவனும் அவனுக்கு வேண்டியவர்களும் உண்டனர். மிச்சம் மீதாரியைப் பக்கலில் வாழ்ந்தோர்க்குக் கொடுத்திருப்பான். வைத்திருக்க இயலாதவை பல. கெட்டழிந்திடுவன ஆம். இப்படிப் பொருட்பகிர்வு அடிகோலப்பட்டது.

வைத்துப் போற்றத்தக்க வைத்து > வத்து ஆனது.  பின் அது வஸ்து என்று உருமாறி வழங்கியது. பொருட்களை மட்டுமின்றித்  தம் பெண்டிரையும் காத்தனன். அடுத்தவன் அதே பெண்ணை விரும்பிய காலை அவனும் அவளுக்குக் காவலை வழங்கினான்.  காதல் என்ற சொல் அப்படிக் காப்பதையே குறித்தது.  கா என்ற அடிச்சொல்லில் அமைந்த காம், காமம் (காம்+அம்) என்பவும் அதே காத்தலடியாக அமைந்த சொற்களே. தம் குகையினரோ வீட்டினரோ வழங்கிய காத்தல் ஆகிய காவல் விரிவுற்றுப் பிறனும் விரும்பி வந்து காக்கத் தொடங்கிய ஞான்று  அதுவே பிற ஏம் >  பிறஏமை > பிறேமை > பிரேமை ஆனது. பிற என்பது அடுத்துவந்தவனையும் ஏம் என்பது காவலையும் குறித்தது. இவன் தான் இன்று காதலன் கணவன் என்று அறியப்படுகின்றான்.   அகர வருக்கச் சொற்கள் ( அதாவது அ, ஆ, இ , ஈ என்று தொடர்வனவாகிய எழுத்துகள் அல்லது ஒலிகளை யுடைய சொற்கள் ) பின்னர் சகர வருக்கமாகின என்பதைப் பலமுறை கூறியும் கூவியும் உள்ளோம் என்பதை மறவாதீர்.  அதன்படியே  ஏ என்று  தொடங்கியவை சே என்று திரியும். திரியவே,  ஏமம் என்ற காவற் பொருட் சொல்  சேமம் என்று திரியலாயிற்று. இதுவே பிற்காலத்து  க்ஷேம என்று மெருகு பூசிக்கொண்டதென்பதை அறிவீர்.

காமினி என்றது காம் என்ற அடிச்சொல்லிலிருந்து தோன்றியது.  காம்+இன்+இ என்பதே இதிற் புனைவு.  ஒரு பொருள்மேல் ஆசை யுறுதல்  காமியம் எனப்படும்.

நமது நூல்கள் :

யாமெனும் அகங்காரம்
காமியம் வெல்க

என்று பறைசாற்றும்.  காமம் இதில் அமையுமாயின் இதுவே காமியம்.

காம்:  விழைதல்.  (  அடி )
இ   - இங்கு. சுட்டு இடைநிலை.
அம் - அமைதல், அல்லது இறுதிநிலை (விகுதி).

ஒன்றை நோக்கி மனம் அசையுறுவதே  அசை > ஆசை என்று வருவது.  ஆசை என்பது மன அசைவு என்று பொருள்படும்.

காமுகன் என்போன் காமத்தை உகந்து நிற்போன்.  உகத்தல் விரும்புதல்.
காம் + உக + அன் என்று புணர்க்க.    காமத்தையே முகமாய்க் கொண்டவன் என்று அணியியல் முறையிலும் சொல்ல இப்பதம் வழிவைத்துள்ளது.

நம் சைவ நூல்கள் காமியத்தைக் குற்றமாகக் கூறும். யாமெனலையும் காமியமும் வெல்வீர்.  வெல்லான் கீழ்த்தரத்து உள்ளான்.

காம் + ஈ என்பது காமீ என்று வந்து காமம் ஈதல் என்று பொருடரும்,  ஆயின் அது பிறப்புக்கணிப்புகளில் ஏழாமிடம் குறிக்கும்.

காம் > காமி > காமித்தல் என்பது வினைச்சொல். விரும்புதல்.

பின் சந்திப்போம். அளவளாவுவோம்.

திருத்தம் பின்.



வெள்ளி, 2 நவம்பர், 2018

ரொக்கம்

இன்று "ரொக்கம்"  சொல் எங்ஙனம் அமைந்தது என்பதைப் பார்ப்போம்.

இச்சொல் உரு + ஒக்கு + அம் என்ற மூன்று துண்டுகளில் சேர்க்கை ஆகும்.

இதில் உரு என்ற சொல் மதிப்பின் உருவை முன்வைக்கிறது.  இது வெளி உருவோ வெற்றுருவோ அன்று.  இதை இப்போது விரித்து அறிந்துகொள்வோம்.

ஒரு மாணவன்  தன் பாடங்களைப் படிக்காமல் ஆடிக்கொண்டும் அலைந்துகொண்டு மிருக்கின்றான் என்று வைத்துக்கொள்வோம்.  ஊரார் இவன் உருப்பட மாட்டான்  என்று குறிப்பிடுவார்கள்.  முன்னரே அவர் நல்ல உருவத்துடன் தானே இருக்கிறான்,  இனி என்ன உருப்படுவது.    உருப்படுவதற்கு ஒன்றுமில்லை.  உலகில் உள்ள அனைத்துக் காணத்தக்க பொருள்களும் ஒவ்வொன்றும்  ஓர் உருவில்தான் உள்ளன. புதிதான ஓர் உரு ஏற்படப்போவதில்லை.  அப்படியானால் உருப்படுதல் அல்லது உருவு கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?

பண்டமாற்று விற்பனை பொருள்தரவு  வரவு முதலியவற்றில் பொருள் ஒவ்வொன்றுக்கும் ஓர் உரு இருக்கின்றது.  இவ்வுரு கண்காணாத உரு ஆகும்.   இந்த ஆட்டுக்கு ஐம்பது வெள்ளி விலை என்றால் அது ஓர் உரு,  சடப்பொருள் கொள்ளும் உருவன்று;  மதிப்புரு ஆகும்.   ஐம்பது வெள்ளி என்பது ஆட்டுக்கு ஈடாக வைக்கப்படுகின்றது.  அத்தகைய மதிப்பீட்டினால்தான் வணிகம் நடைபெறுகின்றது.  ஆட்டுக்கு உரு உள்ளது;  மதிப்புக்கு ஓர் உருத்தந்து அதனை ஆட்டுக்கு ஈடாக வைத்து  விற்பனை அல்லது வாங்குதல் செய்ய வேண்டும்.   ரொக்கம் என்ற சொல்லில் முன்னிற்கும் நிலைமொழி அல்லது நிலைப்பகவு:  மதிப்புருவே  என்று உணர்தல் வேண்டும்.

மனிதர்களுகும் ஓர் உரு உள்ளது.  இதை இமேஜ் என்ற ஆங்கிலச் சொல்லும் ஒருவாறு உணர்த்தவல்லது.   உண்மையில் விற்பனைப் பொருள்களில் அல்லது பண்டங்களில்இது  மதிப்பு உரு  ஆகும்.

உரு ஒக்க வேண்டும் அல்லது பண்டமாற்றுக்கு மதிப்பு ஒப்புமை வேண்டும். இதையே விலை என்று சொல்கின்றோம்.  ஒக்குதலாவது ஒத்திருத்தல்.  ஊரில் எங்கு பார்த்தாலும் ஆட்டுக்குட்டிகளாக இருந்தால் ஆட்டு விலை வீழ்ச்சி அடைந்துவிடும்.  எவ்வளவுக்கு  எவ்வளவு ஆடு தேடப்படும் பொருளாகவும் எளிதில் கிட்டாத பொருளாகவும் உள்ளதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது  விலையாக்கம் பெறும். அப்போது பெறும் பணமே ரொக்கம் ஆகும்.  இது பின் பணத்தாள்களின் சேர்க்கை அல்லது கட்டினைக் குறித்தது இயற்கையான அடைவே ஆகும்.

உரு ஒக்கு அம் என்பது பொருள்மதிப்பு ஒக்கும் அமைப்பே ஆகும்.  விலை ஐம்பது உரூபாயாக இருந்தால் உரொக்கம் என்பது அதைக் குறித்துப் பணத்தின் கட்டினைக் குறிக்க வழங்கிற்று.

உரு ஒக்கு என்பன சொல்பகவுகள் அல்லது துண்டுகள். அம் என்பது ஈண்டு விகுதி எனக் கொள்க.

நாளடைவில் இச்சொல் தன் தலையிழந்து,  அரங்க சாமி ரங்க சாமி ஆனது போல  உரொக்கத்திலிருந்து ரொக்கமாயிற்று.
 ஆகவே இங்கு உரு என்பது மனக்காட்சி  ஆனது. மதிப்பீடு என்றும் கொள்க.


இவ்விடுகைக்கான முற்பார்வை  ( ப்ரிவியூ)  கிட்டவில்லை.
திருத்தம் பின்,







புதன், 31 அக்டோபர், 2018

கடை வடையை நிறுத்து.

கடை தினம்தந்த வடை
காசுச் செலவினை உடை;
வடை தினம்வாங்கி நானும்
வாழ்வில் நொடித்தது காணும்

இனியேது செய்வேன் என்று
நான் ஏக்கம்கொண்டது முண்டு.
தனியாக நான்படு துயரைத்
தடுத்திட வேண்டேன் வடையை.

என்னினும் அவனுழைப் பாளி
எடுத்த வேலையில்பப் பாளி;
தன்னுள் பலவிதை வைத்தான்
தன்னையே மேல்வர உய்த்தான்.

மாலைதொறும் இனிப் பிசைவேன்
மாவொடு வடைசெய இசைவேன்;
காலையும் மாலையும் உழைத்தே
காசுச்செலவினைப் பிழைப்பேன்.

கடை என்பது  சீனா.  நான் என்பது அமெரிக்கா.
சீனாவின் பொருள்களை மிகுதியாக வரவழைத்து
அமெரிக்கா கடனாளி யாகிப் பலர் வேலையில்லாது
துன்புறுகின்றனர்.  அதைமாற்ற இப்போது வணிகப் போர்
நடைபெற்றுக்கொண்டு உள்ளது. கடனை அல்லது
கட்டவேண்டியதை எப்படிச் சமன்செய்வது. அந்தக் கேள்விக்கு
இந்தக் கவி பதில்தருகிறதா என்று பாருங்கள்.

இல்லையென்றால் உங்கள் பதிலைத் தாருங்கள்.

பிழைத்தல்:  இதன் பொருள் வேறுபடுதல் என்பதே.
அறிஞர் க.ப, மகிழ்நன் இதை விளக்கியுள்ளார்.
நூல்: தமிழ்களஞ்சியம் (1945 வெளியீடு). இங்கு மாற்றுவேன்
என்பது பொருள்.

உலகில் பிழைப்பதென்பதும் வறுமையை மாற்றிக்கொள்வதுதான்.

செவ்வாய், 30 அக்டோபர், 2018

தீபாவளி வாழ்த்துக் கவி

வருக வருக  தீ(பா)  வளியே
வருகவந்  தேற்றுக ஒளியே
மெருகு தரும் மனக் களியே----அருள்
மேனிலை வாழ்வெமக் களியே.

அன்புடன் யாவரும் இணைவோம்
அடுத்தவர் பண்பொடும் பிணைவோம்
அன்பு  மழைதனில் நனைவோம்
ஆழ்நண் புக்கலம் வனைவோம்,

பிரித்தியங்  கறாத தேவி----எமைப்
பேணி வளர்த்திடும்  துர்க்கை
உரித்தாம் நலமிகத் தருவாள்  ----- நாம்
ஓமெனக் காத்திட வருவாள்.

இனிப்புறு நற்பல காரம் ---- பல
ஏந்திப் பிறர்க்களித் திடுவோம்
கனிச்சுவை தன்னொடு தேறல்----மரக்
கறியுண வேமிசைந்   திடுவோம்.

ஆடைகள் பட்டென யாவும் --- நாம்
அணிந்து மகிழ்ந்திடு வோமே.
வீடெங்கிலும் ஒளி விளக்கு --- வைத்து
விழைந்து வணங்கிடு வோமே.

மக்கள் அனைவரும் தீமை --- அண்டா
மாகலைச் சீர்தனை மேவித்
தக்க பொருள்புக ழோடு ---தம்
தாய்மனை ஓங்கிட,   வாழ்வோம்

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் உரியவாகுக.




சனி, 27 அக்டோபர், 2018

நித்தியமும் பத்தியமும்

இற்று என்ற ஒலியுடன் உலவிய சொற்கள் பல இத்து என்று மாறிவிட்டனவென்பது இட்டுக்கட்டு  அன்று:   சொல்லாய்வில் ஓர் உண்மையாகுமென்றறிக.

சிற்றம்பலம் என்ற சொல் சித்தம்பரம் என்று திரிந்தது.   இற்று என்பது இத்து என்றானது மட்டுமின்றி  லகரமும் ரகரமாய்  அழகாக வேறு சொற்களில்போலவே திரிந்தமையைப்  பலரும் உணர்ந்துள்ளனர்.  பின் அது ஒரு தகர ஒற்றினையும் இழந்து சிதம்பரம் என்றானது.  இற்றை நிலையில் சிற்றம்பலம் வேறு, சிதம்பரம் வேறு என்று நினைக்கின்ற அளவிற்கு மக்கள் முந்து வடிவினை மறந்தனர்.  வேறு சிலர் மாற்றமான சொல்லமைப்புகளையும் உரைத்தனர்.

மொழிகளில் புதிய சொற்கள் தோன்றுதற்குத் திரிபுகளே உதவியாய் உள்ளன. இல்லையென்றால் ஆதிமனிதன்  பிள்ளை  நாலு சொற்களுடனே தாம் நானிலத்தை வலம்வந்திருப்பான். இதை உணர்ந்த தொல்காப்பிய முனிவர் இயற்சொற்களுக்கு அடுத்துத் திரிசொற்களைச் செய்யுளீட்டச் சொற்களாய் அறிவித்துச் சூத்திரம் செய்தார்

நித்தியம்:

நித்தியமென்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது.  உலகில் நிற்பதும் நில்லாததுமென இருவகை உண்டு. நில்லாமல் ஓடிவிடுவதில் நித்தியம் எதுவுமில்லை.  காலம் கடந்தவுடன் உயிர் ஓடிப்போகிறது.   எங்கே போயிருக்கிறது என்பதுகூட நாமறியாததாய் உள்ளது.  "குடம்பை தனித்தொழியப் புள் பறந்தற்றே"  என்று வள்ளுவனார் கூறுகிறபடி உயிர் பறந்தோடிவிடுகிறது. நிலை நில்லாதது இவ்வுலக வாழ்வு.    நித்தியம் இல்லை.

நில்+ து >  நிற்று + இ + அம் = நிற்றியம்  >  நித்தியம்.

நித்திய ஜீவன் என்ற தொடரில்  ஜீவனென்பது  யிர் > ஜிர் > ஜீ;     ஜீ + அன்= ஜீவன் என்று இலங்கை ஞானப்பிரகாச அடிகளார் விளக்கியுள்ளார்.  யிர் என்பது உயிர் என்பதில் உகரம் நீங்கிய தலைக்குறை ஆகும்.

உயிர் என்பதே மிக்க அழகுற அமைந்த சொல்லாகுமே!   உ =  உள்ளே;  இர் = இருப்பது,  உடலுக்குள் இருப்பது உயிர்.  ஆகவே,  யிர்> ஜிர் என்று எடுக்காமல் இர் > ஜிர் என்றே விளக்கலாம்.   இரு என்பதன் அடியே இர் என்பது.  ய  -  ச  - ஜ என்பதோ வழக்கமான திரிபுவகை.  பல உலகமொழிகளில் காணப்படுவது ஆகும்.   யூலியுஸ்  சீசர்  > ஜூலியஸ் சீசர்.    யேசுதாஸ் > ஜேசுதாஸ்.  யமுனா - ஜமூனா.  ஜாஸ்மின் - யாஸ்மின்.  இதைப் பல்கலையிற் சென்று படிக்கவேண்டுமோ!  காய்கறி வெட்டும்போதே கற்றறியலாம்.  எத்தனை வேண்டும் இப்படி?  யி என்பதில் இ என்பதையும் இணைக்கலாம்.

பத்தியம்.

தமிழ் உலக முதல்மொழி என்று வாதாடவரவில்லை. முதல்மொழியாகவும் இருக்கலாம். நேற்றைய மொழியாகவும் இருக்கட்டும். நேற்றுவந்தவனிடமிருந்து எடுத்துக்கொள்வதும் ஓர் எடுத்தலே ஆகும்.

நோய் தீரவேண்டுமென்றால் பத்தியம் பிடிக்கவேண்டும்.  பிடிப்பது என்று ஏன் கூறுகிறோம் என்றால் அது பற்றி ஒழுகுதற்குரிய ஒன்றாக இருப்பதனால்.

பற்று > பத்து > பத்து+ இ + அம் =  பத்தியம்.

பற்றுதற்குரிய ஒழுகலாறு என்பதே சொல்லமைப்புப் பொருள்.  வாத்துமுட்டை, கோழிக்கறி, கருவாடு, பச்சைமிளகாய், பாகல்  இவையெல்லாம் விலக்கவேண்டும் என்பதைப் பத்தியமென்ற சொல்லில் எதிர்பார்த்தல் கூடாது.  எத்தனை விடையங்களைத்தாம் ஒரு சொல்லுக்குள் அடைத்துவிட முடியும்? 

வெள்ளி, 26 அக்டோபர், 2018

துரு ஓங்கிய நிலை துரோகம்.

இரும்பில் பிடிப்பது துரு.

இரும்பு என்பதைத் தமிழர் பிற்காலத்து அறிந்துகொண்டனர்.  உந்துவண்டிகள் வந்தபின்பு,  சிலர் ஒட்டுநர்களாகப் பயிற்சி பெற்று  ஓட்டி ஊதியம் பெற்று வாழ்க்கை நடாத்துகின்றனர்.  அதுபோல இரும்பு வந்தபின்பு அதை உருக்கவும் அதனால் ஆயுதங்கள் செய்யவும் தமிழர் அறிந்துகொண்டனர்.

இரும்பு பொன் என்ற இரண்டிலும்  பொன்னையே அவர்கள் முதலில் அறிந்திருந்தனர்.  இரும்பு பின் வந்தது,   ஆகவே அதை இரும்பொன் என்றனர். இரும்பொன் என்றால் பொன்னை விடப் பெரியது என்று பொருள்.  இப்படி ஒப்பாய்ந்து பெயரிடுவதென்றால் பொன் முன் வந்தது என்ற பொருள்  சொல்லாமல்  விளங்கும்.

இரும்பொன் என்பது பின் இரும்பு என்று திரிந்தது   - நல்லபடி சொல்லானது.

துரு என்பது இரும்பைத் துருவிச் செல்வது. முதனிலைத் தொழிற்பெயர்.  எண்ணெய் சாயம்  போலும் பொருள்களால் தடையேதும்  ஏற்படாவிட்டால் துரு இரும்பைத் தின்றுவிடும்.  ஆனால் நாளாகலாம்.

இரும்பு நல்லது;  துரு கெட்டது என்று மக்கள் அறிந்துகொண்டனர்.  எளிதில் அப்போது கிட்டாத இரும்பை  அருந்துபொருள் துருவும் துருவாகும். இதிலிருந்து  துரு துர் என்று குறுகிக் கெடுதலை அறிவித்தது.

எடுத்துக்காட்டு:  துரு > துர்.     பலன் -   துர்ப்பலன்.
அதிருட்டம்  -   துரதிருட்டம்.

துரோகம் என்பதென்ன?  துரு ஓங்கிய நிலையே துரோகம் ஆகும்.

துரு =  கெடுதல். (பெறப்பட்ட பொருள்)
ஓகம் =  ஓங்கிய நிலை.

ஓ > ஓங்கு
இடைக்குறைந்து :  ஓகு.     பின்:  ஓகு+ அம் -  ஓகம்.

துரு+ ஓகம் =  துரோகம்:  கெடுதல் ஓங்கிய செயல்.

சொல்லமைப்பை ஆய்ந்து பெறப்படும் பொருள் இன்றைய வரையறவுக்கு ஏற்றதாய் முழுமையானதாய் இருக்கும் என்று எதிர்பார்க்க இயலாது. இதனைப் புரிந்துகொள்ளாத கற்போன் எவனும் ஓர் அறிந்த ஆசிரியனிடம் மேலும் விளக்கம் பெற்றாலே முடியும். இங்கு சொல்லமைப்புப் பொருள் சொற்பொருளினை நோக்கச் சற்றுப் பொதுமை வாய்ந்ததாய் உள்ளது. சரி, ஸ்பீக்கர் (  நாடாளுமன்றத் தலைவர் )  என்ற சொல் பேசுவோன் என்றுதானே  பொருள்படுகிறது.  அதன் சொற்பொருளுடன் அது ஒத்து நிற்கவில்லை அன்றோ?  அதனை நன்கு அறிந்துகொள்ளச் சொல்லியல் அறிவுடன் வரலாற்றறிவும் தேவைப்படுகிறதே!

இங்கிலாந்தில் மக்கள் பதிலாளர்கள்  வைத்த கோரிக்கைகளை, தெரிவித்த கருத்துக்களை அரசரிடம் அல்லது அரசியிடம் சென்று தெரிவித்தவரே  பேசுவோனாகிய ஸ்பீக்கர். மற்ற பொதுவர்கள் (காமன்ஸ்)  அரச அரசிகளைக் காணற்கு "அருகதை" அற்றவர்கள். இப்படியே ஸ்பீக்கர் என்ற சொற்பொருள் உருப்பெற்றது.  சில சொற்கள் கால ஓட்டத்தாலும் வரலாற்றுப் பின்னணியாலும் தம் பொருளைப் பெறுகின்றன.  இத்தகைய பொருளைப் பெறுபொருள் என்று குறித்துள்ளேம்.  புகார்மனு, புகார் என்ற சொற்களின் பொருளை விளக்கியுள்ளேம்.  உருது கிருது ஒன்றுமில்லை. இப்போது புகார் என்ற சொல்லை எந்த மொழியினரும் பயன்படுத்தலாம்.

அறிந்து மகிழ்க.

சில எழுத்துப்பிழைகள் சரிசெய்யப்பட்டன.
பிற தோன்றின் (  மென்பொருள் தன்- திருத்தத்தால் ) உரிய நேரத்தில்
செம்மையுறும்.
 

சிறுமி கொலை - குற்றவாளி பிடிபடுவானா?

நோக்குங்கால் யாவரும்  கால்களுடன் கைகளுடன்
பார்க்கவிரு கண்களுடன் பண்பமை  ----  நீக்கமுடன்
ஞாலமேல்  உள்ளார்   ஞயமுடையார்  யார்யாரோ
காலமும் சொல்லா விடை.


விராலிமலை புதுக்கோட்டை வீட்டின்  முன்னே
விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தன்னை
வராதவொரு வன்னெஞ்சன் வந்து கண்டு
வளைத்தாழ்த்திப் பிடித்திட்டான்  கொண்டு சென்றான்
உறாததுயர் உறப்போவ தறிந்தி   டாத
ஒண்சிறுமி கண்டமதை அறுத்து க் கொன்றான்
இராதுவெளித் துணையுமிலர் சிறார்கள் சற்றும்
ஏற்பிலாத  தெருக்களியில் தவிர்ப்பீர் ஆட்டம்!


( இந்த வழக்கில் காவல்துறை குற்றவாளியைப்
பிடித்துவிட முடியுமா --  என்பது தெரியவில்லை. )


இராது - வீட்டுக்குள் இருக்க மாட்டாமல்.

வியாழன், 25 அக்டோபர், 2018

விகுதி விகாரம்

இன்று விகாரம் என்ற சொல்லை நோக்குவோம்.


இதன்  முந்துவடிவம் மிகாரம் என்பது.


இச்சொல் இப்போது இல்லை. மொழியின் நெடிய ஓட்டத்தில் இறந்துவிட்ட சொற்களில் இதுவுமொன்று.   (இது மீட்டுருவாக்கம்.)


இது மிகு+ ஆர் + அம் என்று பிரியும்.


மிகுதல் என்பதன் பொருளாவன:


அதிகமாதல்
மிஞ்சுதல்
பொங்குதல்
சிறத்தல்
பூரித்தல்.


ஆர்தல் என்பதன் பொருளாவன:


நிறைதல்
புசித்தல்
பொருந்துதல்
அடைதல்
ஒத்தல்
தங்குதல்
அணிதல்.


மிகரத்தில் தொடங்கும் சொல் விகரமாதல் உண்டு. இது வருக்க எழுத்துக்களுக்கும் பொருந்துவது.


எடுத்துக்காட்டுமிஞ்சுதல் விஞ்சுதல்மினவுதல் வினவுதல்.
வானம் என்பதைச் சிற்றுரார் மானம் என்று சொல்வர்.   >< .
விழித்தல் என்பதை முழித்தல் என்றும் பேச்சில் கூறுவர்
( இகரம் ஏறிய மகர(ஓற்று)த் தொடக்கத்துச் சொல் உகரமேறிய மகர(ஓற்று)த் தொடக்கமாக வருவது   மிண்டுதல்  - முண்டுதல் என்பதிற் காண்க ). 
மகரத்துக்கு வகரம் பாட்டில் மோனையாகவும் வரும்.


மிரட்டு என்பதும் வெருட்டு என்று திரியும்விரட்டு என்றும் திரியும்.


மிகு + ஆரம்  எனின்   அதிகமாகி, அல்லது மிஞ்சி அல்லது சிறப்படைந்து  பொருந்தும் சொல் என்று பொருள்மிகு என்பது விகு என்று திரியவே, விகு+ ஆரம் என்பது விகாரம் ஆயிற்று.

அதிகமாகி:    விகுதிபெற்று நீட்சி பெறுதல்.
மிஞ்சிஎழுத்துக்கள் குறைந்து, அதன் காரணமாக மிஞ்சி இருக்கும் சொல். இவை பெரும்பாலும் குறைச்சொற்கள்-டுமயங்குவது (யங்குவ)து = மதுஇதில் நாலெழுத்துக்கள் குறைந்தன.   கபோதி:   கண் போன திக்கற்றவன். இதில் மூன்று பதங்களில் எழுத்துக்கள் குறைந்தன
சிறப்படைந்த நிலைதப்பு + அம் தபு அம் தபம் > தவம்உலகியல் துன்பங்களிலிருந்து தப்புவதற்காகச் செய்வதே தபம் அல்லது தவம்தப்புதல் என்பது இடைக்குறைந்து தபுதல் ஆனதுபின் தபம் > தவம் என்ற சொல் அமைந்தது.


இவ்வாறு ஆகும் சொல் மூலத்துடன் வேறுபடும்ஆகவே விகாரம் என்பது
வேறுபாடு என்றும் பொருள்படும். பல்வேறு விகாரங்களை இலக்கண நூல்களிற் காண்க.


வி என்ற ஓரெழுத்துச் சொல்லும் வேறு என்ற பொருளுடையதே.


வி + கு + ஆரம் என்றாலும்வேறுபாட்டில் பொருந்துவது என்பதே. இங்கு வந்த
கு என்பது அப்போது சொல்லாக்க இடைநிலை ஆகும்.


மிகுதி > விகுதி என்றாலும்வி + (கு) + தி விகுதி,   வி +( கு ) + ஆரம் = விகாரம் என்றாலும் ,   மிகு + ஆரம் = மிகாரம் > விகாரம் என்றாலும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வேறுபாடு என்பதே பொருள்முடிபாகும். இங்குச் சொல்லாக்க இடைநிலைகளைப் பிறைக்கோடுகளுள் இட்டுள்ளேம்.


மி என்ற அடிச்சொல்லும்   வி என்ற ( விண் முதலிய சொற்களைப் பிறப்பித்த ) அடிச்சொல்லும் மி > வி என்ற திரிபு வசதியும்  மேல் என்ற அடிச்சொற்பொருளும்  விகாரம் என்பது தமிழே என்பதை உறுதிசெய்கின்றன.
மி- (மிசை) = மேல்வி (விண் ) = மேல்.அடிச்சொற்கள் : மி வி.


வேறு என்ற  சொல் மேலை மொழிகட்கும் பரவியதுஅது  வேரி   (vary ) என்ற ஆங்கிலச் சொல்லில் தெரிகிறதன்றோ?  Also consider: prevaricate,  meaning speak or act evasively.  (Actually means speaking of something different instead of going to the point raised ).  pre-vari-cate. You may have other examples.


வேறு  வேற்று வேத்து > வேத்தியாசம்  >   வித்தியாசம்  என்பதை இன்னொருகால் விளக்குவோம். வே வி.  Please see closeness in meaning: வே(ண்டு) :  வி(ழை).  வே - வி.    இதைப் பின் விளக்குவோம், எழுதி முடிக்கவேண்டியிருப்பதால்.


வேதம் என்பதற்குத் தரப்படும் சொல்லமைப்பையும் காண்க:   வித் > வேதம்வி >வே.


எனவே வேத்தியாசம் - வித்தியாசம் என்று யாம் காட்டியதில் வியப்படைவீரோ?


விகாரம் என்பதில் வி என்றாலே  வேறுபாடுதான்.   பிற விளக்கங்கள் அதன் திரிபயணம் விளக்குபவையே ஆகும்.


பதி + அம் = பதம்பொருள் பதிந்தது; பொதிந்தது.


அறிவோம்; மகிழ்வோம்.

திருத்தம் பின்.







விகாரம் என்ற பதம் தமிழ்

இன்று விகாரம் என்ற சொல்லை நோக்குவோம்.

இதன்  முந்துவடிவம் :  மிகாரம் என்பது.

இச்சொல் இப்போது இல்லை. மொழியின் நெடிய ஓட்டத்தில் இறந்துவிட்ட சொற்களில் இதுவுமொன்று.   (இது மீட்டுருவாக்கம்.)

இது மிகு+ ஆர் + அம் என்று பிரியும்.

மிகுதல் என்பதன் பொருளாவன:

அதிகமாதல்
மிஞ்சுதல்
பொங்குதல்
சிறத்தல்
பூரித்தல்.

ஆர்தல் என்பதன் பொருளாவன:

நிறைதல்
புசித்தல்
பொருந்துதல்
அடைதல்
ஒத்தல்
தங்குதல்
அணிதல்.

மிகரத்தில் தொடங்கும் சொல் விகரமாதல் உண்டு. இது வருக்க எழுத்துக்களுக்கும் பொருந்துவது.

எடுத்துக்காட்டு:  மிஞ்சுதல் -  விஞ்சுதல்.  மினவுதல் -  வினவுதல்.
வானம் என்பதைச் சிற்றுரார் மானம் என்று சொல்வர்.   வ>< ம.
விழித்தல் என்பதை முழித்தல் என்றும் பேச்சில் கூறுவர்;
மகரத்துக்கு வகரம் பாட்டில் மோனையாகவும் வரும்.

மிரட்டு என்பதும் வெருட்டு என்று திரியும்.  விரட்டு என்றும் திரியும்.

மிகு + ஆரம்  எனின்   அதிகமாகி, அல்லது மிஞ்சி அல்லது சிறப்படைந்து  பொருந்தும் சொல் என்று பொருள்.  மிகு என்பது விகு என்று திரியவே, விகு+ ஆரம் என்பது விகாரம் ஆயிற்று.

அதிகமாகி:    விகுதிபெற்று நீட்சி பெறுதல்.
மிஞ்சி:  எழுத்துக்கள் குறைந்து, அதன் காரணமாக மிஞ்சி இருக்கும் சொற்கள். இவை பெரும்பாலும் குறைச்சொற்கள்.  எ-டு:  மயங்குவது >  ம(யங்குவ)து = மது.  இதில் நாலெழுத்துக்கள் குறைந்தன.   கபோதி:   கண் போன திக்கற்றவன். இதில் மூன்று பதங்களில் எழுத்துக்கள் குறைந்தன. 
சிறப்படைந்த நிலை:  தப்பு + அம் >  தபு அம் >  தபம் > தவம்.  உலகியல் துன்பங்களிலிருந்து தப்புவதற்காகச் செய்வதே தபம் அல்லது தவம்.  தப்புதல் என்பது இடைக்குறைந்து தபுதல் ஆனது,  பின் தபம் > தவம் என்ற சொல் அமைந்தது.

விபுலானந்தம் :  விழு புலம் ஆனந்தம்:   வி + புல + ஆனந்தம்;  இது விழுமிய அதாவது சிறப்பான;  புலம் -  புல.  மகர ஒற்று கெட்டது. நிலப்பகுதி அல்லது பாங்கு என்பது பொருள்.  சிறப்பான இடத்து ஆனந்தமாய் இருத்தல்.  இதில் விழுபுலம் என்பது விபுல என்று இரு கடைக்குறைகள் வர,  வருமொழியாகிய ஆனந்தம் இயல்பாய் நின்றது.

ஓரிரண்டு எழுத்துக்களை எடுத்துவிட்டாலே படிப்போன் அல்லது கேட்போன் தடுமாறிவிடுவான்.

இந்தோனேசிய மொழியில் அபாங்  சொகர்னோ என்ற பெயர் புங் கர்னோ என்று சிறப்பெய்தியது காண்க.  முகம்மது சாலே என்ற பெயர் மாட்சாலே என வருதலும் கொள்க.  பிறகு வெள்ளைக்காரர்களுக்குப் பொதுப்பெயர் ஆனது.

இவ்வாறு ஆகும் சொல் மூலத்துடன் வேறுபடும்;  ஆகவே விகாரம் என்பது
வேறுபாடு என்றும் பொருள்படலாயிற்று. பல்வேறு விகாரங்களை இலக்கண நூல்களிற் காண்க.

வி என்ற ஓரெழுத்துச் சொல்லும் வேறு என்ற பொருளுடையதே.

வி + கு + ஆரம் என்றாலும்.  வேறுபாட்டில் பொருந்துவது என்பதே. இங்கு வந்த
கு என்பது அப்போது சொல்லாக்க இடைநிலை ஆகும்.

மிகுதி > விகுதி என்றாலும்,  வி + (கு) + தி =  விகுதி,   வி +( கு ) + ஆரம் = விகாரம் என்றாலும் ,   மிகு + ஆரம் = மிகாரம் > விகாரம் என்றாலும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வேறுபாடு என்பதே பொருள்முடிபாகும். இங்குச் சொல்லாக்க இடைநிலைகளைப் பிறைக்கோடுகளுள் இட்டுள்ளேம்.

மி என்ற அடிச்சொல்லும்   வி என்ற ( விண் முதலிய சொற்களைப் பிறப்பித்த ) அடிச்சொல்லும் ,  மி > வி என்ற திரிபு வசதியும்  மேல் என்ற அடிச்சொற்பொருளும்  விகாரம் என்பது தமிழே என்பதை உறுதிசெய்கின்றன.
மி- (மிசை) = மேல்;  வி (விண் ) = மேல்.அடிச்சொற்கள் : மி வி.

வேறு என்ற  சொல் மேலை மொழிகட்கும் பரவியது;  அது  வேரி   (vary ) என்ற ஆங்கிலச் சொல்லில் தெரிகிறதன்றோ?  Also consider: prevaricate,  meaning speak or act evasively.  (Actually means speaking of something different instead of going to the point raised ).  pre-vari-cate. You may have other examples.

cf MEng variance, variaunce, fr OFr  variance  Anglo-Latin variaunce, veriaunce, wariaunce; Latin variantia.

வேறு  >  வேற்று >  வேத்து > வேத்தியாசம்  >   வித்தியாசம்  என்பதை இன்னொருகால் விளக்குவோம். வே >  வி.  Please see closeness in meaning: வே(ண்டு) :  வி(ழை).  வே - வி.    இதைப் பின் விளக்குவோம், எழுதி முடிக்கவேண்டியிருப்பதால்.

வேதம் என்பதற்குத் தரப்படும் சொல்லமைப்பையும் காண்க:   வித் > வேதம்,  வி >வே.

எனவே வேத்தியாசம் - வித்தியாசம் என்று யாம் காட்டியதில் வியப்படைவீரோ?

விகாரம் என்பதில் வி என்றாலே  வேறுபாடுதான்.   பிற விளக்கங்கள் அதன் திரிபயணம் விளக்குபவையே ஆகும்.

பதி + அம் = பதம்:  பொருள் பதிந்தது; பொதிந்தது.

அறிவோம்; மகிழ்வோம்.

------------------------------------------------------------

Notes:

1.   Latin discordes  Eng.  discord.   cf   Tam.  kOduthal -  (bending.)


திருத்தம் பின்.



புதன், 24 அக்டோபர், 2018

A COMMENT BY SIVAMALA ON INDIAN GOVT PROCEDURE:


Your comment on the article 'Top CBI officers sent on leave to maintain agency's integrity: Arun Jaitley' is now displayed on timesofindia.com.

'Since this matter occurred in the Home Ministry and both officers are known to the HM, it is good governance for another responsible minister to deal with the matter. Arun Jaitley did right. HM should not deal. One should not be judge of his own cause. Here HM has rightly referred it to Jaitley. Correct procedure.'

மசகு என்ற சொல். மசாலாவும்

மசகு என்ற சொல்லை மஷ்கு என்று எழுதுவதால்மட்டும் அது சங்கதச் சொல் ஆகிவிடாது.  அயல் ஒலி புகுத்தினாலும்  அது தவறான எழுத்து புணர்க்கப்பட்ட தமிழ்ச்சொல்லே ஆகும்.  இதற்குச் சில காரணங்கள் உள. அதிலொன்று அது எந்தப் பழைய சங்கத நூலிலும் காணப்படவில்லை என்பதுதான்.  பேச்சு மொழியில் காணப்பட்டால் அப்போது ஒருவேளை அம்மொழியாய் இருக்கலாம் என்று சொல்லக் காரணம் உண்டு. அதுவும் முடிந்த காரணமாய் இல்லாமல் ஆய்வுக்குரிய ஒன்றாகக் கருதலாம். இதுபோலவே பிறமொழிகட்கும் தமிழுக்கும் அமையும்.

மசித்தல் என்பது ஒரு வினைச்சொல்.

மசி என்ற பகுதியுடன் கு என்ற தொழிற்பெயர் விகுதியைச் சேர்ப்போம். இங்கு இது தொழிற்பெயர் விகுதி;  பிறவிடங்களில் அது வேறு வேலையைச் செய்வதால் வேறு பெயர்பெறும்.  இதையும் மறக்கலாகாது.

மசி + கு.

இஃது புணர்க்கப்பட்டால்   :

மசிகு  என்றாகி சிகரத்தில் நின்ற இகரம் நீங்கி அகரம் ஏறி

மசகு என்று ஆகும்.

மசித்தலாவது இடித்துக் குழப்பப் பட்டது என்று பொருள்.

மசிகு என்று ஒலிபெறுதல் தமிழியல்பு அன்று.

மசித்தலால் ஆக்கப்படுவது மாசாலை.  இது மசாலா என்று வழங்குவதும் உண்டு.

மசி +  ஆல் + ஐ   = மசாலை.

சற்றே மசிக்கப்பட்ட பருப்பினால் பிடிக்கப்பட்ட வடை:

மாசால் வடை.  மசி+ அல் = மசால்.   இகரம் கெட்டு  அகரம் நீண்டது காணலாம்.

மசி + ஆல் என்பதே மாசால் எனினும் ஆகும்.

மசி என்பதன் அடிச்சொல் மய என்பதே.  மயக்கம் என்ற சொல்லிலும் அது
உள்ளது.   உணர்வும் உணர்விழப்பும் கலந்த  ஒரு நிலையே மயக்கம். முழுவதும் உணர்விழந்தான் இறந்தவனாகிவிடுவான்.  இது  பாதி நிலை ஆகும்,

பருப்பு மிளகு முதலியன நைபடும் பொழுது ஏற்படும் கலப்பையே மசி என்ற வினைச்சொல் காட்டுகிறது.    மய > மயி > மசி எனக்காண்க.

மயக்கு > மசக்கு > மசக்கை என்பதும் காண்க.

நிலம் தீ விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

என்பது தொல்காப்பிய நூற்பாவாகும்.

இதையும் அறியுங்கள்:  https://sivamaalaa.blogspot.com/2012/07/blog-post_23.html
பாசாணம்   என்ற சொல்.


திருத்தம்பின்

செவ்வாய், 23 அக்டோபர், 2018

அதரம் என்ற சொல் இதழில் தொடங்கி,.....

பெரும்பாலும் கவிதை எழுதும் கவிகள் தம் சொந்த உணர்வுகளையே எழுதி  மகிழ்கின்றனர்.   திரைப்படத்துக்கோ நாடகத்துக்கோ எழுதுகிற கவிஞரானால் நாயகன் நாயகியை மனத்துள் வைத்துக்கொண்டு கற்பனை மேடையில் நின்றுகொண்டு எழுதவேண்டும்.  தாம் நுகர்ந்து உணர இயலாத, பிறர் நுகர்வு பற்றிய கற்பனைக்குள் தம்மை வீழ்த்திக்கொண்டு பாடலை எழுதவேண்டும்.

என் அதர மீது வைப்பேன் ---  ஒரு
அன்பு முத்தம் கொடுப்பேன்
இன்பம் இன்பம் 

என்று ஒரு கவி எழுதினார்.  இது உடல் தொடர்பைக் குறித்து எழுகின்றது. பணத்துக்காகப் பாடவரும் பின்னணிப்பாடகியைத் திடீரென்று கட்டிப் பிடித்துவிட்டால் இன்பத்துக்குப் பதில் துன்பமே விளையும்.


உன்னை நயந்துநான் வேண்டியும் ஓர் முத்தம்
தந்தால் குறைந்     திடுமோ
ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை
பாய்ந்துஅல்லல்    படுமோ

பாபநாசம் சிவன் என்ற பெருங்கவிஞரின் பாடலில் வரும் இவ்வரிகளும்
நன்றாகவே அமைந்துள்ளன.  முத்தம்  என்பதையும் இதில் புகுத்த 
இவரும் தயங்கவில்லை.  ஆண்மகன் நயந்து வேண்டுவது இம்முத்தம்.  இத்தகைய வேண்டுதலுக்கு உடன்பாடு உண்டாகிவிட்டால் வழக்குமன்றம் செல்லாமல் இருக்கலாம்.  இல்லையேல் அதுவும் துன்பம்தான்.

இந்திர லோகமும் சொர்க்கமும் நாம் பெறும்
இன்பத்தின்முன் நிற்குமோ?
மலரும் மணமும் போல்
நகமும் சதையும் போல்
இணைபிரியோம் நம் காதல் வானில் 
வானம் பாடி போல
பிரேம கீதம் பாடி மகிழ்ந்திடுவோம்

முத்துடன் ரத்தினம் வைத்துப்ப   தித்தவி
சித்திர சப்பிர மஞ்சம் ----  அதில்
நித்தமு மெத்தத  னத்தில்தி   ளைத்தொரு
மித்தம  னத்துடன் வாழ்ந்திடுவோம் 



என்ற கே.டி. சந்தானம் என்னும் கவியின் வரிகளும் காதலையே சொன்னாலும்  வானம் இந்திரலோகம் மலர் மணம் நகம் சதை என எல்லாவிடத்திலும் உலாவுவதாலும் இறுதியில் பிரேம கீதத்தில் திளைப்பதாலும் உடலைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை.  கவிதை திரைப்  பாடலாயினும் எதுகைகளை அள்ளித் தெளித்திருக்கிறார்.  கவியில் வலிபு வண்ணம் பயில்கிறது. உடல்பற்றிய எதுவும் புகுத்தப்படவில்லை.

அதரம் என்ற சொல்லைப் பற்றியே விளக்க முற்பட்டோம்.  அதரம் என்றால்
உதடுகள்.  உதடுகள் என்பவை மந்திரித்த தகடுகள் என்று இன்னொரு கவி எழுதியிருந்தாலும் அவை உடலின்  பகுதிகளே.  அவற்றில் ஒன்றும் இல்லை. மயக்குறுவதும் மலைவீழ்வதும் மனமே அன்றிப் பிறிதில்லை. மனத்தையே கட்டுப்படுத்த வேண்டும்.

சொல்லமைப்பின்படி  இதழ் என்ற உதடு குறிக்கும் சொல் பூவிதழ்களையும் குறிக்கும்,   பூவிதழ் என்பதே அதன் ஆதிப் பொருள். மனித இதழ்களைப் பூவுடன் ஒப்பிட்டு இதழ் என்பது மனித உதட்டையும் குறிக்கவேண்டிய நிலை உண்டாயிற்று.  முத்தமிடுவதால் பல நோய்கள் பரவுதலால் கவனமாகவே இருக்கவேண்டும்.  தூய்மை முன்மை வாய்ந்ததாகும்.

இதழ் என்பது பின் அதழ் என்று திரிந்தது.  இகரத்தில் வரும் சொற்களில் பல அகரத்திலும் வருதல் காணலாம்.  அதழ் என்று திரிந்தபின்

அதழ் >  அதழம் > அதரம் என்று திரிந்தது.

ழகரம்  டகரமாகத் திரியும்:  வாழகை : வாடகை;  பாழை > பாடை.
டகரம் ரகரமாகும்:    மடி ( மடிதல் =  மரித்தல் )  விடு> விடதம் > விரதம் (சில உணவுகளை விடுதல் ).

திராவிட மொழிகள் சங்கதம் என்று பல மொழிகள் நாட்டில் உலவுதலுக்குக் காரணமே திரிபுகள் தாம்.  இவற்றைத் தொல்காப்பியனாரே உணர்ந்திருந்ததால்,  பொருள் ஒன்றாகச் சொல் ஒன்றாகவும் மற்றும் சொல் ஒன்றாகப் பொருள் ஒன்றாகவும் இருந்த பல சொற்களை அவர் கண்டு அவற்றைப் பற்றியும் சூத்திரம் செய்தார்.  இப்படி உலகின் முதல் சொல்லாய்வையும் மொழியாய்வையும் அவரே தொடக்கிவைத்தார்.  77 திராவிட மொழிகள் இருப்பதாக 50 ஆண்டுகட்கு முன்பே ஓர் ஆய்வுக்குழு சொல்லியது. இசின் என்ற தொல்காப்பியச் சொல்லைக் கங்கையாற்றுப் பகுதியில் வழங்கக் கண்டதாகவும் குழு சொல்லியது. இற்றைக்கு அவற்றுள் பல மறைந்திருக்கக் கூடும். பல எழுத்தில்லாதவை. எழுத்து உள்ளவை ஐந்துதான்.  இவையும் திரிபுகளால் தோன்றியவை.  தமிழினுள்ளும் எத்துணை திரிபுகள்.  ஒரே மாவைப் பல்வேறு பலகாரங்களாகப் பண்ணிவிட்ட நாடகமே இம்மொழிகள் எல்லாம்!!  ஒன்றுக்கொன்று தொடர்பின்றி  மக்கள் கூட்டம் வாழ்ந்தமையே மூலகாரணமானது. வானொலி தொலைக்காட்சி ஏதுமில்லை.

இவ்வாறு திரிபுகள் பல.

எ-டு:  ஆ+ இடை :  ஆயிடை;   அ+ இடை: அவ்விடை.    
அவ்விடை > அவிடை > அவிடா. இதை விரிக்கவில்லை.

இழு என்பதும் ஈர் என்பதும் தொடர்புடையவை.  இவ்விரு வினைகளில் இகரம் நீண்டு ழுகரம் ரகர ஒற்றானது.  இ என்பதும் ஈ என்பதும் ஒன்றுக்கு ஒன்று நிற்பதுண்டு:  எடுத்துக்காட்டு:  இங்கு > ஈங்கு;    அங்கு என்பதும் ஆங்கு என்று திரியும்.  இ > இர் > இருதயம்;  இரத்தத்தை ஈர்த்துக்கொள்ளும் உறுப்பு.   இழு> இர் > இரு;   இரு> ஈர். ( எண்ணிக்கைச் சொல்லாகிய இன்னோர் இரு என்பதும் ஈர் என்றே திரியும்.  ஈராறு கரங்கள் என்பது காண்க.  இர் > ஈர் > ஈரல்: மூச்சு இழுத்தல். ( நுரை ஈரல் ). பிற உடல் ஊறுசாறுகளை இழுத்தல்  (கல்லீரல் ).. ஆதலின்  ஈரல் எனப்பட்டது


ஈர்த்தல் :  ஈர் > ஈர் + து +  அயம்  (அ + அம்).  அங்கு அல்லது அயலில் இயங்கி  ஈர்த்துக்கொள்வது ).  அயம்:   ஏனை உறுப்புகட்குப் பக்கலில் இருப்பது என்பதாம்.   ஈர்தயம் > இருதயம் எனினும் பொருள் போதரும். காண்க.

தமிழ் விரிந்த பரவுதலை உணர்ந்து மகிழ்க..

குறிப்பு: 

 சில சொற்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்குறலாம். இதை முன்பே சொல்லியிருக்கிறோம்.  
அதரம் :  அ = அங்கிருக்கும்;  து = பொருள் /   அது;   அரு =  அருகிலே;  அம் = அமைந்துவிட்டது.    உதடுகள் ஒன்றுக்கு ஒன்று வேறாக நின்றாலும் வேண்டியபோது ஒன்றுபட்டு மூடிக்கொள்பவை.  இது இதையே காட்டுகிறது. இச்சொல்லமைப்பு.  உதடுகள் இறுதிகள் இணைந்து இடைவெளிகொண்டு இருப்பவை. ஒன்றினருகில் இன்னொன்று  இணைப்பில் இருத்தல். பூவிதழ்களும் இத்தகையவே.

ழகரம் -  ரகரம்:   அழ் = அர் = அரு ( இடநெருக்கம்; அடுத்திருத்தல் .) 
அதழ்  ( அழ் );  அதர் (அர் - அரு ).> அதரம்.

 திருத்தம் பின்.

மீண்டும் பார்த்த திகதி:  21.4.2020.


கொரனா என்னும் மகுடமுகி நோய்நுண்மி உலவும் இந்நாளில் யாரிடமிருந்தும் தொலைவிலேயே இருக்கவும்.  வந்துவிட்டால்  யார் பிழைப்பார், யார் இறப்பார் என்று முன் கூட்டியே அறியும் வழி ஒன்றுமில்லை.  "பத்திரமாக இருங்கள்".

திங்கள், 22 அக்டோபர், 2018

தீனர் என்ற சொல். (திரிசொல்)

தின்,   தீன் என்ற சொற்களை இன்று அறிந்துகொள்வோம்.

மக்கள் சாப்பிடுவது, " உண்பது"  என்று  சொல்லப் படும்.  பெரும்பாலும் விலங்குகளின் உட்கொள்ளுதலே தின்பது என்ற சொல்லால் குறிக்கப்பெறும்.என்றாலும்  சில வேளைகளில் மனிதனையும் "தின்னு" என்று ஏவுதல் உண்டு  .

ஏழைகளின் உணவு இரங்கத் தக்க தரத்தினதாய் உலகெங்கும் இருப்பதனால் அதற்கு ஏழ்மை என்ற பொருள் ஏற்பட்டது.

தின் + அம் =  தீனம்.  எளிமை, வறுமை இன்ன பிற.

இது முதனிலை திரிந்து அம் என்னும் விகுதி பெற்ற பெயர்ச்சொல் ஆகும்.  இது தின்னுதல் (  விலங்குபோல் உட்கொள்ளுதல் )  என்னும் கருத்தினின்று  அமைந்ததே ஆம். இதைப் போல முதனிலை நீண்டு அமைந்த இன்னொரு சொல்:

படு >  பாடு. (  இது விகுதி பெறவில்லை.)

விகுதி பெற்றது:

நடி  +  அகம் =  நாடகம்.  ( இங்கு ந  என்பது  நா என்று நீண்டது.   அகம் என்ற
விகுதி பெற்றது.   நடி என்பதன் இறுதி    இகரம் கெட்டது , அல்லது வீழ்ந்தது ).

இவை போல்வன பழைய இடுகைகளில் ஆங்காங்கு காட்டப்பெற்றுள்ளன.

இவற்றையும் அறிக:

தின் + இ =  தீனி.   (முதனிலைத் திரிபு;  இகரம் விகுதி ).
தின் + இ  =  தின்னி.   ( ஒருனகர ஒற்று தோன்றல்;  இகரம் விகுதி. முதனிலை  இயல்பு ஆனது ).   "இவன் ஒரு பலகாரம் தின்னி." (  வாக்கியம் )
தின் + அர் =  தீனர்.  ( முதனிலை நீட்சித் திரிபு;  அர் விகுதி).  ஏழைகள்.
தின் > தீன்:   உட்கொள்பொருள்.

தின் > தீனன்:  விலங்குட்கொள்வது போன்றவை  உட்கொள்ளும் ஏழை,
பின் பொதுப்பொருள்:  ஏழை, வறியோன்.

தீனி

மக்கள் என்பது உயர்திணையாகவும் மாக்கள் அஃறிணையாகவும் கொள்ளப்படும்.  மாக்களாவர்,  மக்கள் போல் உருவில் மக்கள் அல்லாதவர்.   தீனி என்பது மாக்கள் உட்கொள்வதும் விலங்குகள் உட்கொள்வதும் ஆகிய தாழ்ந்த பொருள்.  இம்மாக்கள் பலர் ஏழைகளும் ஆவர். இவர்களே தீனரும் ஆவார்கள்.
.

இறைவன்முன் தன்னைத்  " தீனன்" என்று பற்றன் சொல்லிக்கொள்வது  ஓர்
அடக்கமாகும்

அடிக்குறிப்புகள்:

1.   தீனரைத் தியக்கறுத்த திருவுடையார்:  தேவாரம், 477.
2.    தீனன் : மிகுதியாய் உண்போன் என்பதுமாம்.
3.   தீனம்:  நோய்.( என்பதுமாகும்)
4     தீனவத்சல, எளியோர்க்கிரங்குதல்;  தீனநுகம்பன.
5.   தின்பண்டம் - தீன்பண்டம் என்பதும் ஆகும்.
6     உணவு என்ற அடிப்படையில் எழுந்து பின்னர் பொருள்மாற்றமடைந்து  ஏழை என்று பொருள்கொண்டதனால் இது திரிசொல் ஆகிறது.  (  இயற்சொல் அன்று ).

7. "ஞானகுருபரன் தீனர்க்கருள் குகன்"   ( இசைப்பாடல்)

8 தீன தயா பரனே தேவனே (பாட்டு ) :  விலங்குணவுபோலும் உட்கொள்ளும் ஏழையர்க்கு அருள் தந்து  காப்பாற்றும் தீபோலும் தூயவனே - இறைவனே என்று விரிந்த பொருளைச் சொல்லாய்வின் மூலமே கூறலாம்.  பிறவழிகளிட் பொருள் குறுக்கம் பெறும்.

தீ > தே > தேவன்:   தீ என்ற சொல்லினின்று தே என்று திரிபு ஏற்பட்டதால் தேவன் என்பதற்கு இவ்வாறு விரித்துப் பொருள் கூற இயல்கின்றது. தே எனற்பாலதற்கு தீ போலும் தூயவன் என்றே பிறரும் கோடி காட்டுவர்.





   

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

ஆறுமோ ஆவல் ஆறுமுகனைக் காணாமல் (பாட்டு)

இது ஓர் அழகிய கர்நாடக சங்கீதப் பாடல்:

பாடலை முழுமையாகத் தருகிறேன். இசைவட்டில் உள்ள பாடல்தான்:


ஆறுமோ  ஆவல்
ஆறுமுகனை நேரில் ----  காணாமல்   (ஆறு)

ஏறுமயில் ஏறிக் குன்று
தோறும் நின்றாடியவன்
பேரும் புகழும் தெரிந்தும் அவன்
பேரழகைப் பருகாமல்                               (ஆறு)

ஞான குருபரன்
தீனர்க் கருள் குகன்
வானவரும் தொழும்
ஆனந்த வைபோகன்

காணக் கிடைக்குமோ
கூறுதற் கில்லாத
அற்புத தரிசனம்
கற்பனை செய்தால் மட்டும்                   (ஆறு )

இதை  அமரர் எம். எல். வசந்தகுமாரி கச்சேரிகளிலும் பாடியுள்ளார்.
கேட்டு மகிழவும்.

இயற்கை எல்லாம் அழகுதான்.  அதுவே அழகு.  அதுவே முருகு என்பார்
திரு வி.க.    "பேரழகைப் பருகாமல்"  என்ற வரியை  நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  இயற்கை அழகெல்லாம் காணுங்கள்.  முருகு என்றால் அழகு,    பின்  முருகு நிலைகொள்ளும் முருகனையும் காணுங்கள்.  அதுவே "ஆனந்தம்" என்பது.  அவன் ஆனந்த வைபோகன்.  மகிழ்வனைத்தையும் ஒருசேர ஆங்குக் காணலாம்.  நுகரலாம்.   அற்புத தெரிசனமே அது. வானின் அனைத்தும் அவ்வழகைத் தொழுகின்றது.  அதைக் கற்பனை செய்து கொண்டிருந்தால்மட்டும் காணுதற் கியலாது.  சென்று வணங்க வேண்டும்.

அழகைப் பெண்ணாக உருவகம் செய்கிறார் பாரதிதாசன். 

காலை இளம் பரிதியிலே அவளைக் கண்டேன்
கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன் அந்தச்
சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில்
தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்
மாலையிலே மேற்றிசையில் இலங்கு கின்ற
மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்  ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டம்
தனிலந்த அழகென்பாள் கவிதை தந்தாள்

எங்கெங்கு காணினும் சக்தியடா -- தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா!

பின் சொந்தமாகப் பாடி  உவகை கொள்ளுங்கள்.

அம்மையும் ஆறுமுகனும் ஒன்றே,  எல்லாம் அழகுதான். தூணிலும்
துரும்பிலும் இருப்பது இறைமை ஆகும்.  சிவம் வேறு முருகன் வேறன்று என்பார் அருணகிரிநாதர்.

சனி, 20 அக்டோபர், 2018

சற்றிருப்பதும் வைத்திருப்பதும்.

இக்காலத்தவர் வேலையிலிருந்து விடுப்பு எடுத்தமகிழ்வுடன் பயணச்சீட்டையும் வாங்கிக்கொண்டு தாம் எங்கு சென்று ஓய்வெடுக்க முடியுமோ அங்கு பறந்து சென்றுவிடுகின்றனர். வானூர்திகள் இல்லாத பழங்காலத்தில் எங்காவது போகவேண்டுமென்றால் இவ்வளவு வசதிகள் இல்லை. யாரிடமும் பயணச்சீட்டுகள் வேண்டிப் பெறவேண்டியதுமில்லை; அவர்கள் இல்லையென்று சொல்லி அதனால் மனம் தொல்லைப் பட வேண்டியதும் இல்லை. இப்போது கிடைப்பவைபோல் தூக்குப் பெட்டிகளும் அப்போது இல்லை.  மாட்டு வண்டிகள் மட்டும் இருந்தன. அவற்றுள்ளும் பல சொந்தப் பயன்பாட்டுக்கே கிட்டின.

ஔவையார் போன்ற புலவர்கள் பாவம். பயணம் செல்கையில் தங்குவதற்கு இடமின்றி, கேட்டறிந்துகொண்டு, ஒரு பாழடைந்த வீட்டில் சென்று தங்கினார்.  இரவில் முதல் யாமம்,  இரண்டாம் யாமம், மூன்றாம் யாமம் என்று ஒவ்வொரு யாமத்துக்கும் பேய் வந்து தொல்லைகொடுக்க,  "எற்றோமற் றெற்றோமற் றெற்று" என்று முடியும் சில அழகிய வெண்பாக்களைக் கொண்டு பேயினிடத்தும் பேசினார்.   அந்த வெண்பாக்கள் இன்னும் நம்மிடை உள்ளன. இவை சுவையான வெண்பாக்கள். 

யாமம் என்ற சொல் யாத்தல் என்ற சொல்லினின்று வருகிறது.  யாத்தலாவது கட்டுதல்; பிணித்தல்; இறுக்கித் தொடர்புறுத்தல் ஆகும்.  இந்த யாமங்களில் உயிர்கள் உறக்கத்தில் இறுகப் பிணிக்கப்பட்டுக் கிடக்குமாதலால் , யாமம் என்ற சொல் அதைக் காட்டப் பிறப்பிக்கப்பட்டது.   யா (பகுதி) + ம்+ அம் =  யாமம் ஆனது.   அது பின்னர் அயல்திரிபுகளும் அடைந்தது.  உங்கள் வீட்டு ஆட்டுக்குட்டி அடுத்தவீட்டில் கட்டிக் கிடந்தால் -  அவ்வீட்டானும் கொடுக்க மறுத்தால் -  நீங்களும் காவல்துறையிற் புகார் கொடுத்தால் -  அவர்கள் எப்படி முடிவு செய்வார்கள்.  இருவருக்கும் பொதுவான ஒரு நடு இடத்தில் ஆட்டுக் குட்டியை விட்டு அது எங்கு போகிறது என்று பார்த்து அப்புறம் அந்த வீட்டில் ஒப்படைத்தார்களாம்!!  அதுவே சொல்லாக இருந்தால்....?

யாமம் என்பதில் ம் ஒற்று ஓர் உடம்படு மெய் என்றே சொல்லவேண்டும், இது எப்படித் தோன்றி   உள்வந்தது?   யாக்கும் + அம் =  யா(பகுதி மட்டும் எடுக்கப்பட்டது ) + ( உ ) ம் + அம் =  யா+ ம் + அம் = யாமம்.  மகர ஒற்று இப்படிச் சிந்தித்துத்தான் பெறப்பட்டது.   உம்மையில் (  உம் இடைச்சொல்லில்) பெற்றதே இந்த மகர உடம்படு மெய் ஆகும்.  அம் என்பது அமைப்பு என்பதன் தரவு,   அல்  அன் என்பனவும் அம் என்று திரியும். எல்லாம் தமிழில் உள்ளனவே.

 புகார் என்ற சொல்:  https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_31.html
அரண்மனைக்குள் புகுவார் அனுமதி உடையவர்.  அரசன் வீற்றிருக்கும்போது உள்ளுக்குப் போகலாம்.  புகார் -  அனுமதி கிட்டினன்றிப் போக முடியாதவர்கள்.  அவர்கள் கொடுக்கும் மனு புகார்மனு.  நாளடைவில் புகார் என்பதற்கு நடவடிக்கை கோரும் மனு என்ற பொருள் ஏற்பட்டுவிட்டது.

இவை நிற்க.

பயணம் போகும் போது  ஓர் இரவு அல்லது கொஞ்ச காலம் தங்கிச் செல்லுமிடமே சத்திரம்.  இது சற்று இரம் என்பதன் திரிபு.  சற்று :  சத்து. இரு என்பது அம் விகுதி பெற்று  இரம் ஆகிற்று.   சத்து இரம் --  சத்திரம்.

இவர்கள் பெரும்பாலும் ஒரு சிறு மூட்டை துணியுடன் சென்றனர்.  அவர்கள் வைத்திருந்தது அந்தத் துணிமூட்டைதான்.  அதையே தலைக்கு வைத்துக்கொண்டு தூங்கினர்.  அதுவே வைத்திரம் எனப்பட்டது.   வைத்து இருப்பது வைத்திரம்.  வைத்திரம் >  வத்திரம் > வஸ்திரம்.

இந்த வத்திரம் என்பது இப்போது இலத்தீன் மொழிமுதல் பல மொழிகளிலும் பரவி மருட்டுகிறது.    vest. invest. investiture. divest.  இன்னும் பல.  பெரும்பாலும் இந்தப் பயணிகள் சிறிய துணிமூட்டையே வைத்திருந்ததால் உலக மொழிகள் அடைந்த ஊதியம் பெரிதே.

உலகம் வாழ்க!




வெள்ளி, 19 அக்டோபர், 2018

தானியம் அல்லது பயிர்விளைச்சல்கள்

தானியம் என்ற சொல்லைக் கவனிப்போம்.

இச்சொல்லுக்கு நேரான தனித்தமிழ்ச் சொல்:  கூலம் என்பது.

கூலம் என்பது சேர்த்து வைத்தல், குவித்து வைத்தல் என்ற சொற்பொருளடியாகத் தோன்றும் சொல். இவற்றை நோக்குக:

குல் -    குலை  ( பழங்கள் சேர்ந்திருப்பது.  )  வாழைக்குலை.
குல் -    குலம்  (  மக்கள் ஒன்றாக வாழ்வது ).
குல் -     குலக்கு  ( குலையாய் இருப்பது )
குல் -     குலரி  (குலை)
குல் -     குலவு  ( சேர்ந்து உறவு அல்லது நட்புக் கொண்டாடுவது )
குல் -     குலவை> குரவை:  சேர்ந்தாடிப் பாடுவது.   லகர ரகரப் போலி
குல் -     குலாயம் : பறவைகள் கூடியிருக்குமிடம்.
குல் -     குலா -  குலாட்டு:  சேர்ந்து மகிழ்வு கொள்ளுதல்.
குல் -     குலி:  கணவனுடன் சேர்ந்திருப்பவளாகிய மனைவி
குல் -     குலுக்குதல்:  பெரும்பாலும் ஒன்றாகச் சேர்த்து ஆட்டுதல்.
குல் -     குலுங்குதல்:   சேர்ந்து ஆடுதல்.
குல் -     குலைக்கல்  (ஆட்டுக்கல் )
குல் -     குலைத்தல்.  (கலைத்தலுமாம் )
குல்-      குலைதல். (பல்வேறு பகுதிகளும் வீழ்தல் )
குல் -     கூல்  -  கூலம்.  நெல் முதலியவை சேர்த்துவைத்தல்  
(முதனிலை நீண்டு விகுதி பெறல் )

தானியமென்பது இருக்கு வேதத்திலும் அதர்வண வேதத்திலும் உள்ள வழக்கு என்று தெரிகிறது.  ஆகவே சங்கதத்திலும் இது தொன்றுதொட்டு வழங்கிவரும் சொல்லாகும். இச்சொல்தவிர தானியம் என்பதனுடன் தொடர்புபட்ட சொற்கள்மட்டும் அறுபதிற்கு மேற்பட்டவை உள்ளன.  ஐயத்திற்கு இடமின்றி சங்கதம் மிக்கச் சொல்வளமுடன் உருவாக்கப்பட்டு வழக்கிற்குக் கொணரப்பட்டது என்பது சொல்லாமலே விளங்கும்.

சங்கதம் இறைவணக்க மொழியாக நாவலந்தீவு முழுமையும் வலம்வந்தது ஆதலின்,  அதன்சொற்கள் தமிழிலிருந்து மட்டுமின்றி ஏனைப் பாகதங்களிலிருந்தும் பெறப்பட்டவை என்பதைச் சொல்லத் தேவையில்லை. பாகதங்கள் என்பவை சங்கதத்துக்கு முன்வழங்கிய முன்னோடி மொழிகள். சங்கதத்தின் பின்னும் பரவலாக வழங்கிய மக்கள் மொழிகளும் பாகதங்கள் என்றே குறிக்கப்பட்டமையின், பாகதம் என்ற சொல் சற்றுப் பொருள்மாறாட்டத்தைத் தரக்கூடியதாகும்.  நாம் இதைத் தெளிவிக்க முன்னைப் பாகதங்கள், பின்னைப் பாகதங்கள் என்று குறிக்கலாம்.

பர> பார் > பா:  (பரவலாக).  கதங்கள்:  (வழங்கிய)  ஒலிப்பொதிவுகள்.   கத்து > கது : (   இடைக்குறை;  பொருள் ஒலி ). கது > கதம்.   கத்து > கது என்பதுபற்றி ஒரு தனி இடுகையுமுளது.  காண்க.  ஒலிகளாவது : மொழிகள்.  இவை பரவலாக வழங்கிய மொழிகளாம்.  சங்கதம் = சமஸ்கிருதம்.  சம்: ஒன்றாகக் கூட்டப்பட்டவை; கதம்: ஒலிகள் அல்லது மொழிகள்.   கதம் > கிருதம்.  கிருதம் என்பது அயல்திரிபு. ப என்பது ப்ர என்றும் க என்பது க்ர என்றும் திரிவது சங்கத இயல்பு.   தமிழ் க -- சங்கதத்தில் கிரு என்றும் திரியும்.

உருக்கு வேதப்   (Rig Veda )  பாடல்களைப் பாடிய பாடகர்கள் எல்லோரும் பிராமணர்கள் அல்லர். பலதரப்பட்டவர்களும் இருந்தனர்.  வீட்டுக்கு  வீடு போய்ப் பாடித் தக்கிணை (  தக்க இணை அல்லது தட்சிணை)1  பெற்ற பாணர்கள் அல்லது பாடலர்களும் இருந்தனர். பலர் ஏழைகளே. கடவுட் சிந்தனை என்பது ஏழ்மையில்தான் நல்லபடி வெளிப்படுவது.

சங்கத வேதங்களில் ஏறத்தாழ ஆயிரம் சொற்கள் தமிழ் ஆகும்.  எண்ணூறு உள்ளன என்று அடையாளம் கண்டிருக்கிறார் கமில் சுவலபல்.

மூன்றிலொருபகுதி திராவிட மூலத்தன என்கிறார் பிரஞ்சு மொழி ஆய்வாளர் டாக்டர் லகோவரி.

இனி தானியத்துக்கு வருவோம்.

தானே பாடுபட்டு அல்லது வேலையாட்களை வைத்து விளைச்சலை உண்டாக்கித் தான் பெற்ற கூலங்களே "தானியங்கள்"  என்பவை. விளைந்தது பூமியில்தான் என்றாலும், தன் நிலத்தில் தான் பாடுபட்டு விளவித்ததனால் தானியம் ஆயிற்று..   தான்+ இ + அம்:  தான் இங்கு விளவித்தது அல்லது விளைத்தபின் வைத்திருப்பது.

நிலத்துக்கு உறழ்வாகத்( contrast ) தானியம் உணரப்பட்டது. இதை ஆங்கிலச் சட்டங்கள் நன் கு வெளிக்கொணருகின்றன.  நிலம் "ரியல்டி" ( ரிய :  நிலம் ) என்றும்  தானியங்கள் "பெர்சனால்டி"  ( பெர்சன்:  தான் எனற்பொருட்டு )  என்றும் பெயர் பெறும்.   பெர்சனாலிட்டி என்பது வேறுசொல்.  பெர்சனல் சட்டல்ஸ் என்றும் கூறுவர். இதுபின் "மூவபல் ப்ராப்பர்டி"  என்று மெக்காலேயினால் விளக்கப்பட்டது.  ஆங்கிலத்தில் பெர்சனால்டி என்பது தானியம் என்பதினும் விரிந்தது எனினும், தானியம் என்பது தனக்குரியது என்ற பொருளில் அமைந்தது என்பதே நாம் இங்கு சொல்வதாகும்.  நிலம் என்பது உரிபொருள் ஆயதுபோல தானியமும் உரிபொருள் ஆனது என்பதே இங்கு போதரும் உடமைக்கருத்து ஆகும்.

தானியம் என்ற சொல் தன்னவை, தன்னது என்று பொருள்படும் சொல் ஆகும். இது வேதங்களில் சென்று வழங்குவது நம் மொழிப்பெருமையே. நாம் மகிழ்வோம்.  தான் இ அம் > தானியம்:  தான் இங்கு உரிமைப்பொருளாய் வைத்திருப்பது.   வஸ்து என்பது வைத்து என்பதன் திரிபே.  வைத்து > வத்து > வஸ்து.  எச்சங்களிலிருந்து பல சொல்லாக்கங்கள் சமஸ்கிருதத்திலும் பாலியிலும் காட்டப்பெறுகின்றன  அறிக.

சம்+ கதம் =  சங்கதம்
சம் + கதம் =  சம் கதம் > சம் க்ருதம் >  சம்ஸ் கிருதம்  > சமஸ்கிருதம்.  ( இங்கு வந்த ஸ் என்பது ஒரு புகுத்தொலி அல்லது தோன்றல்).  மேல்கூறியவாறு,  கிருதம் என்பது கதம் என்பதன் அயல்திரிபு.

சிற்றூர்ச் சொல்லாகிய தானியம்  எங்கும் பரவியது  சிற்றூரைப் பெருமிதப் படுத்துமென்ப தறிக. பல சிற்றூர்ச் சொற்கள்  பண்டைத் தமிழிலக்கியங்களில் ஒதுக்கப்பட்டிருந்தாலும் பிறமொழிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது சிற்றூரார் சொல்லமைப்புத் திறத்தையும் வெளிக்கொணர்வது ஆகும். இறப்புத் தொழுகைகளில்போது தானியமிடுவது சிற்றூரில் இன்னும் நடைபெறுகிறது.   தொண்கூலங்களையும் நவதானிய மென்பர்.  தொண்கூலம் -  ஒன்பது கூலம்.

இதை அறிஞர் முன்னரே விளக்கியுள்ளனர்.  வேலைமுடிவில் கூலமாகக் கொடுத்த ஊதியம் =  கூலி ஆனது. சம்பா நெல்லும் உப்புமாகக் கொடுத்தது:
சம்பளம் ஆனது.  சம்பு:  நெல், சம்பா.  அளம்:  உப்பு,


Realty:  from rea meaning land.
Personalty:
Lord Macaulay a framer of Penal laws of India.
Dr Lahovary
Kamil Svellabel. of Czek

1.  பக்கம் > பட்சம்;  பிக்குணி > பிக்ஷு அல்லது பிட்சு. பட்சி -  பக்கி.

பிழைகள் மாற்றங்கள் தோன்றின் பின் திருத்தப்பெறும்

வியாழன், 18 அக்டோபர், 2018

போலிகளின் பட்டியலில் கவிஞன்

நாமிணைவோம் வருவாயா என்றான் போலிச்
சாமியார்கள் பட்டியலில் கவிஞன் சேர்ந்தான்!

தேமதுரம் தமிழாமே  என்றான்  ஆர்ந்த
தெருக்கூட்டம் தமைஈர்க்கும் திறமே தேர்ந்தான்.


புதன், 17 அக்டோபர், 2018

சில வினைமுற்றுக்களின் சிறப்புகள் ( ஒரு வினா)

இன்று சில வினைமுற்றுக்களை ஆய்ந்தறிவோம்.

தமிழில் நிகழ்கால வினைமுற்றுக்களில் இன்று என்ற சொல் பயன்பட்டுள்ளது இப்போது காண்போம்.

வருகின்றான் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்.

வரு+ கு + இன்று + ஆன்  = வருகின்றான்.
செய் + கு + இன்று + ஆன் =  செய்கின்றான்.

இப்போது  இவ்வினை வினைமுற்று வடிவங்களில் இன்று என்ற சொல்
பயன்படுத்தப்பட்டதென்பதை உணர்ந்துகொள்ளலாம்.

இதை வேறு விதமாகச் சொல்வோம்.

வருகின்றனன்    -  இதில் அன் என்று ஓர் இடைநிலையும் அன் என்ற
ஓர் ஆண்பால் விகுதியும் இணைந்துள்ளன காண்பீர்.

வரு + கு+ இன்று + அன் + அன்
செய் + கு + இன்று + அன் + அன்.

இன்று என்பதே இப்போது செயல் நடைபெறுகிறது என்பதைக் காட்டுகிறது.
காலம்  நிகழ்காலம் எனப்படும்.

இனி,  இறந்த காலத்தில் இதைக் கூறுவதானால் இன்றுக்குப் பதிலாக
அன்று என்பதை இடவேண்டும்.

வ  +  து +  அன்று.
செய் + து + அன்று.

இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால் இன்றுக்கு எதிர்மறையான அன்று என்பதே இறந்தகாலம் காட்டுவது.  நாளடைவில் அன்று என்ற விகுதி களைவுற்றது.  பயன்பாட்டு வழக்கின் காரணமாக வந்து என்பதே இறந்தகாலத்தைக் காட்டத் தொடங்கியது. இற்றைக்கு வந்து என்பதே இறந்தகால எச்சமாகவும் வந்தான் என்ற ஆன் விகுதி இணைப்பு உள்ள முற்று  இறந்தகால வினைமுற்றாகவும் இயல்கின்றது.

ஆகவே பழம்பாடல்களில் வந்தன்று எனின் இன்றைய வழக்கில் வந்தது என்பதாகும்.

அன்று என்பது  அன்+து என்று அமைந்த சொல்.   அன் என்பது இறந்தகாலச் சுட்டுச்சொல்.  அ என்பது அதனடி. ஆகும்.

எனவே வந்தன்று என்பதைப் பிரித்தால்:

வ+ து + அன் + து  என்று பிரியும்.   இதில் து இருமுறை வந்துள்ளது.

இதில் புலவர்கள் புகுந்து,  வந்து என்பதில் வ+த் +உ என்று  உறுப்புகள் சேர்ந்து  த் என்பதே இறந்தகாலம் காட்டிற்று என்றனர்.  அன்று என்பது விகுதியாக இல்லாதுபோயின் த் என்பதுதான் இறந்தகாலம் காட்டவேண்டிவரும். வந்~ என்பதில் நகர ஒற்று புணர்ச்சியினால் உண்டானது எனக்கொள்க. கால உணர்வு ஏதாவதொன்றில் தொற்றிக்கொள்வதே உண்மையாகும்.

பொழிப்பாக:

வருகின்று என்பது  நிகழ்காலம்.
வந்தன்று என்பது இறந்தகாலம்.

வருகின்று  என்பது  வருன்னு என்று  நிகழ்விலும்  வந்தது என்பது வன்னு என்று இறப்பிலும் மலையாளத்தில் திரிதல் காண்க.

 இன்று என்பது இன்னு என்று திரிய,  அன்று என்பது அன்னு என்று திரியும்.

வருன்னு என்பது வரு என்ற பகுதியில் காலம் இல்லை.
வன்னு என்பதில் 0ன்  எனற்பாலதில் காலம் இல்லை.
ஈரிடத்தும் உகர இறுதி சாரியை.

இதற்கு மாறாகக் காலம் வரு என்பதில் நிகழ்வு;  வன் என்பதில் இறப்பு எனலாமோ?
அல்லது  வருகின்று என்பதில் இன்று எனல் காலம்;  ஆயின் வந்தன்று என்பதில் அன்று என்பது காலப் பொருள் பொதிந்திருக்கவில்லை என்னலாமோ?

மறுதலித்துப் பின்னூட்டம் செய்க.

வந்தன்று, மகிழ்ந்தன்று என்பன சங்ககால வடிவங்கள்.

நினைவிலிருந்து:

"இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே"

யாதுமூரே என்ற கணியன் பூங்குன்றனார் புறநானூற்றுப் பாட்டு,

காலச்சுவடுகள் யாங்குள கூறுக.

-----------------------------------------------

அடிக்குறிப்புகள்:




நன்னூல்: எழுத்ததிகாரம்: பதவியல்.

143. ஆநின்று கின்று கிறு மூ இடத்தின்
ஐம்பால் நிகழ்பொழுது அறை வினை இடைநிலை


கு+ இன்று என்பதை கின்று என்று பிரித்து வகைப்படுத்தும் நன்னூல்.
இன்று என்பதும் முன் நிற்கும் கு அல்லது க் என்னும் ஒற்றும் தனித்தியங்காமல் இடைநின்றமையின் அவற்றுக்குத் தனிப்பொருள்
நன்னூலார் கூறிற்றிலர். இது பிறழ்பிரிப்பென்பார் அறிஞர் மு.வரதராசனார்.

கிறு என்பது கின்று என்பதன் இடைக்குறை.

ஆநின்று:   செய்யாநின்றான் =  செய்துநின்றான்.
இது செய்யாமல் நின்றான் என்று பொருடருதலும் உண்டு. கவனமுடன்
காண்க.

142. த ட ற ஒற்று இன்னே ஐம்பால் மூ இடத்து
இறந்தகாலம் தரும் தொழில் இடைநிலை   ( நன்.)






செவ்வாய், 16 அக்டோபர், 2018

ஒரு கவிஞனின் வீழ்ச்சி.

திரைத்துறையில் பாட்டெழுதத் தேடினான் வாய்ப்பதனை;
மறைத்தனனே ஆட்டிவைத்த மாயிருள் ஆசைகளை!
குரைத்ததுபோல் சத்தமிடும் கோத்தளி பாடல்களால்
நிறைத்தபல நீள்படங்கள் அன்னாற்   கறிமுகமே.

இசையறிஞர்  நெஞ்சிரக்கம்  ஏற்பதனால்  ஊதியமாய்ப்
பசைவரவும்  கேட்டவர்கள்  தந்தபுகழ் உந்திடவும்
மிசையுறுகா மப்பசியால் மெல்லியலார் பாடுநரின்
தசையுறவும் வன்புணர்வும்  கொண்டுவிழ லாயினனே.

தகுதிதன தெத்தகைத்தோ தானறியாக் காரணத்தால்
மிகுதியுறச் சிந்தித்தான் மேலுலகோர்  தாம்பழித்தான்;
அகதியெனச் சாய்ந்திடுவன் தண்டனையன் னாற்கினியே
தொகுதியிழந்  தான்புரையத் தோல்வியிலே வீழ்படுமே.


அரும்பொருள்:

மாயிருள்:  பேரிருளில் அல்லது இடர்களில் புகுத்தும்.
கோத்தளி :  கோத்து அளி -  பழம்பாடல்களில் வரும் சொற்களைப்
பொறுக்கிக் கோத்துத் தந்த.
அறிமுகம்:  மக்களிடையே அறியத்தக்கவன் ஆன நிலை.
ஏற்பதனால்:  ஏற்பட்ட இரக்க உணர்வை முன்னிறுத்தி முனைந்ததனால்.
பசை வரவு :  ஊதியம் செலவு போக அதிக மிருத்தல். ஒட்டாதது -
செலவிடப்பட்டது;  ஒட்டியது: பசை; மீதப்பட்டது,
கேட்டவர்கள்:  பாடல்களைக் கேட்டவர்கள்,
மிசை:  மேலாகிய;  ( அதிகமான )
மேலுலகோர்:  முன் காலத்து வாழ்ந்து மக்களிடை வணக்கத்திற்கு
உரியோர் ஆனவர்கள்.
அகதி:  கதியற்றோன்.
தொகுதி :  தேர்தலில் வெற்றி பெற்ற இடம்.
இழந்தான்:  மறு தேர்தலில் அடைந்த தோல்வியாளன்.
புரைய  -  ஒத்த.
வீழ்படும் :  வீழ்ச்சி அடைவான் . 

யாப்பியற் குறிப்பு:

தொடக்கச் சீர்கள் ஒவ்வோர் அடியிலும் கருவிளங்காய்ச் சீர்களாய்
வருமாறு தொடுக்கப்பட்டுள்ளன.

முதல்பா தவிர பிற எல்லாச் சீர்களும் நிரைநடுவாகிய சீர்களான் இயன்றுள்ளன.

ஒவ்வொரு பாவும்  ஏகாரத்தில் இறுகின்றது.

முதல்பா தவிர அடிதோறும் தளை வெண்சீர் வெண்டளையாய் யாவுமியன்றன.பின்வருமடி கலித்தளை.

ஆகவே முதல்பா தவிர  ,  சந்தம்:  தனதனதாம்  தாந்தனதாம் தாந்தனதாம் தாந்தனதாம் என்பதாகும்.

படித்து மகிழ்க.