புதன், 7 நவம்பர், 2018

உதவி உதடு உதாரணம்

அது :   அங்கிருப்பது

இது :    இங்கிருப்பது

உது :  முன்னிருப்பது.


தமிழ் மொழியில் இவை மூன்றும்  சுட்டு ச் சொற்கள்.  சுட்டுதல் என்றால் விரலாலோ அல்லது வேறு செய்கையாலோ   ( சைகையாலோ ) குறித்துக் காட்டுதல்.

இவற்றுள் உது என்பதை எடுத்துக்கொள்வோம்.


உது +  அ + வி  =  உதவி.

முன்சென்று ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு வேண்டியாங்கு வேண்டியன செய்திடுதல்.

இதில் அகரம் இடைநிலை.
வி என்பது ஒரு சொல் விகுதி. ( மிகுதி > விகுதி)

உதடு :  உ =  முன்னாகவும்,   அடு =: இரண்டாகப் பிளவுபட்டதுபோல் அடுத்தடுத்து இருப்பது உதடு.,

உது + அடு.


உதை :   உது = முன்னாக,  ஐ =  மேலெழும்படியாகக்  (காலால்)   மெல்லவோ கடுமையாகவோ தொடுதல்.

ஐ என்பது மேலெழுச்சி காட்டும் சொல்.  ஐயன் என்ற  சொல்லில் இது மேலானவன் என்ற பொருளில் வருகிறது.

செய்தனை, கண்டனை, பேசினை என்ற வினை முற்றுக்களிலும் இந்த ஐ
வினைமுற்று விகுதியாக வந்து உயர்வு குறித்தாலும் நாளடைவில் இவ் வுயர்வுப் பொருள் இழக்கப்பட்டது.   வெறும் முன்னிலை விகுதியாகிவிட்டது,

ஐ என்பது ஆய் என்று நீண்டது.    வந்தாய்.

இதிலும் இதன் உயர்வுப் பொருள் இழக்கப்பட்டது.


உதாரணம்:

உது : முன்னிருப்பது.

ஆர்:   நிறைவாக

அணம் : விகுதி.   இது அண்+ அம் என்ற இரு சிறு துண்டு விகுதிகளில் இணைப்பு.   அண் :   அடுத்து.   அதாவது அண்மை.   அம் :  அமைதல் . ஆனால் இவை பின் பொருளிழந்து விகுதிகளாகக் கொள்ளப்பட்டன,

நிறைவாக அடுத்து முன்னிருப்பதே உதாரணம்.  அப்படி இருப்பதே இன்னொன்றுக்கு எடுத்துக்காட்டாக முடியும்.

இதில் அயல் ஒன்றுமில்லை.

அணம் விகுதி வந்த இன்னொரு சொல்:  கட்டணம்.   பட்டணமும் ஆம்.

உதையம் > உதயம் (  இதில் ஐகாரம் குறுகிற்று )

உது:  முன்னாகவும் ஐ: மேலாகவும் எழுவது.

அறிந்து மகிழ்க.

கருத்துகள் இல்லை: