புதன், 14 நவம்பர், 2018

தெருப்பாவலனின் உணர்ச்சிக் கவிகள்.

கவிதை என்பது ஒருவித மனமயக்கில் ஏற்படுவதாகும்.  முற்றத் தெளிந்த உள்ளத்தினனுக்குக் கவிதை பிறப்பது அரிதே ஆகும். அவன் சில சொற்களை  வரிசைப் படுத்தி இணைத்து ஒருவாறு பொருண்மை தோன்றும்படி அமைத்துவிட்டால் அது கவிதை ஆகிவிடாது.  கவிநோட்டம் செய்யும் அறிஞர்கள் கவிதையில் உணர்ச்சி இருக்கவேண்டும் என்று உரைப்பர். உணர்ச்சி அற்ற கவியானது வெறும் சொல்லடுக்கே ஆகும்.

நாம் எழுதும் கவிதைகள் இந்த வகையில் கவிதைகள் என்ற பெயர்ப்பலகைக்கு ஏற்புடையவல்ல என்று யாரேனும் சொன்னால் அதற்காக நாம் அவர்பால் சினம் கொள்ளாமல் இருப்போம். உணர்ச்சியைக் கண்டுகொள்வதில் கவிதையைக் கேட்போனுக்கும் பங்கு இருக்கிறது.  பாடியவனின் உணர்ச்சிநிலையைக் கேட்போனும் எட்டிப்பிடிக்க வேண்டுமே.  இல்லாவிட்டால்  கேட்போன் பாவலனின் உணர்ச்சிப்பதிவினை மீட்டெடுக்கத் தவறியவன் ஆகிவிடுவான்.  பாடியோன் எத்தகைய உணர்ச்சி நிலையில் நின்று பாடினானோ அதே நிலைக்குக் கேட்போனும் உயரவேண்டும். இப்படி உயர இயலாதவன் எத்துணை அளவிற்குப் பண்டிதன்மை உடையவனாய் இருப்பினும்  கேள்வித் தகுதி உடையவன் அல்லன். இந்நிலையில் அவன் நீருக்குள் இல்லாத மீனே ஆவான்.  இன்னொரு மீனை யவன் உணர்ந்துகொள்ளல் இயலாதது ஆகிவிடும்.

நீர் என்பது உணர்வலைத் தொகுப்பு.  மீன் என்போன் அதிற் கிடக்கும் கவிஞன். கேட்போனும் அந்நீருக்குள்ளேயே குதித்துவிடவேண்டும்; மீனோடு மீனாகிவிட  வேண்டும்,  பாவலனின் நீராழத்தை எட்ட இயலாதவனாய் இருக்கலாம். உணர்வாழம் ஏற்புடைய மூழ்களவினை எட்டிவிடவேண்டும்.

காமத்தின் அளவு மிஞ்சியதால்  இடுப்பு உடுக்கை மார்பு படுக்கை என்று எழுதுகிறவனும் கூடக் கவிஞனே ஆனாலும் இவன் காமவிகாரக் கடலில் வீழ்ந்து தத்தளிப்பவன்.  அவன் கவிதையால் நன்மை விளைதல் இல்லை. இவனை ஒதுக்குவது நமக்கு நன்மை ஆகும்.

மயங்குவதை விளைப்பதே மது   ஆகும். இச்சொல்லே இடைக்குறைந்து மது என்று வழங்கத் தொடங்கியது. ,மயக்குவது >  ம~து = மது.  குடிப்போரிடை உருவாகிய இந்தக் குழூஉக் குறி நாளடைவில் பரவி உயர்ந்து மொழியில் ஒரு சொல்லாகியது.

ஓர் உண்மை நிகழ்வில்  மதுமயக்கில் ஒருவன் இப்படிப் பாடினான்.  இவன்பெயர் சின்னத்தம்பி என்று இவனே பாடிச் சொல்வான்:

" அடடா இந்தச்
சிங்கப்பூரு பதினாறு கல்லுக்குள்ளே --- இந்தச்
சின்னத்தம்பி கால் படாத    இடமும் இல்லே ----  நானும்
பார்க்காத ஆளும் இல்லே."

என்று பாடிக்கொண்டிருப்பான்.  இவன் நிற்குமிடத்தைக் கடந்து சென்றால் இவன் பாடத் தொடங்கிவிடுவான்.  உலகறியப் பெயர் விளங்கியவன் மட்டுமா கவிஞன்?  இவனும்கூட ஒரு கணிப்பில் கவிஞனே  ஆனான்.

இன்னொரு சமயம் இவனிடமிருந்து ஒரு வெறுப்புக் கவிதை வெளியானது.
அது இப்படி உருக்கொண்டது:

" அண்டமா முனிவரெல்லாம்
அடங்கினார்  ...............க்குள்ளே
தொண்டு செய்யும் தோழரெல்லாம்
தொங்கினார் ...............க்குள்ளே"

என்று இடக்கர்ச் சொற்களைப் புகுத்திப் பாடினான்.  உலக வெறுப்பின்  உச்ச நிலைக்குச் சென்றுவிட்டான் இந்தத் தெருப்பாவலன்.

இவைகளெல்லாம் இவன்தன் "கையெழுத்து வெளிப்பாடுகள்." signature outpourings  அல்லது அடையாள ஒளித்தட்டுகள் luminous identification plates என்னலாம்.  இவன் வேறுபாடல்களும் பாடிக்கொண்டிருப்பான் ஆனாலும் கிறுக்கில் தாக்கினாலும் தாக்குவான் என்று அஞ்சி இவனிருக்கு மிடத்தை விரைவில் கடந்து செல்லுதல் எமது  வாடிக்கையாய் இருந்தது.

கவி என்றாலே அது உணர்ச்சிகளின் குவி   ஆகும்.   குவி என்றால் குவிப்பு, கொட்டிவைப்பு.  அகர முதற் சொற்கள் உகர முதலாகவும் அவ்வழியிலே அம்முதல்களே முறைமாற்றாகவும் வருதல் சொல்லியல் இயல்பு ஆகும்.
கவிதல் என்பது குவிதல்.  கவிகை என்பது குவிந்த நிலையினதான குடைக்குப் பெயர்.

ஒரு பொருண்மேல் எண்ணங்கள் கவிந்து நிற்க வெளிப்படும் பாடலே கவி.
இதன் வினைச்சொல் கவிதல் ஆகும்.

இவன் கவியில் உணர்ச்சிகள் குவிந்து கிடப்பனவான நிலை காணலாம். பா என்பது பொருட்பொதிவு உடையது;  கவி என்பது உணர்ச்சிக்குவியல். அது உணர்வுக் குவியல் என்ற நிலையில் தெளிநிலை கடந்து நிற்பது ஆகும்.
ஒளிமழுக்கில் ஓடிவரும் நெளிவலை அதுவாம்.

பிழைகள் பின்னர் சரிசெய்யப்படும்.
ஒருமுறை திருத்திய நாள்:  16.11.2018 
தன் திருத்த மெல்லியும் கள்ளப் புகவர்களும்
புதிய பிழைகளை ஏற்படுத்தக்கூடும்.





கருத்துகள் இல்லை: