செவ்வாய், 27 நவம்பர், 2018

கடாட்சம் என்ற சொல் அமைப்பு.

அம்மையின் அருளை வணங்கி வந்த பற்றர்கள் ( பக்தர்கள் )  எவ்வாறாயினும்  அம்மையே இறுதியில் ஆள்பவள் என்ற  உணர்நிலையை எய்தினர்.   இக்கருத்து  எந்தக் காலத்தில் வளர்ச்சி பெற்று  பெரும்பாலான மக்களைப் பிணித்து நின்றதோ அக்காலத்திற்றான் கடாட்சம் என்ற சொல்லும் அமைந்திருத்தல் வேண்டும் என்பது எடுத்துச்சொல்லாமலே புரிந்துகொள்ளக்கூடியது ஆகும்.

வரலாற்றுத் தெளிபதிவுகள் இல்லாத இந்தியரிடத்தும் குறிப்பாகத் தமிழரிடத்தும் இதனை ( வரலாற்றை) ஆய்ந்தே காணல்வேண்டும்;  மற்றும் உரையும் எதிருரையும் இன்றி முடிவினை எட்டிவிடுதலும் எளிதன்று.

ஆனால் யாம் இங்கு உரைப்பது சொல்லமைவே; சொல் வரலாறு அன்று.

கடைசியில் ஆள்பவள் அம்மை.

இக்கருத்தைச் சொல்லாக்குவோம்.

கடை + ஆட்சி + அம்
அம் என்பது விகுதி.
கடை என்பதில் ஐகாரம் விலக்கப்படுகிறது:  மீதம் கட அல்லது கட்.

இனி  ஆட்சி என்பதில்  இகரம் விலக்கப்படுகின்றது:   ஆட்ச் என்பது மீதம்.

கட + ஆட்ச் + அம் =  கடாட்சம். புணர்ச்சியில்  கட என்பது கட் என்றேமாறி,  கட்+ ஆ = கடா என்றாகும்.   அகரத்தை முதலிலே விலக்கினும் அப்புறம் விலக்கினும் காணுமொரு வேறுபாடின்மை உணர்க. இறுதிவிளைவு கடாட்சம் என்பதே.

இறுதியாட்சியில் அம்மை அருள்மழை பொழிவாள். என்றலின் இஃது இறுதியருள்,  பேரருள் என்று பொருள்புகட்டும் சொல்லாயிற்று. 

தமிழிலும் வழக்குடைய சொல்லே.  ஆனால் சங்கதத்தில் சொலிக்கும் சொல்லாம்.




கருத்துகள் இல்லை: