திங்கள், 12 நவம்பர், 2018

சிங்கம் சொற்பொருள்.

மிகப் பழங்காலத்திலே அரிமாக்கள் என்னும் சிங்கங்கள் அருகிவிட்டன.
அதாவது அவை எண்ணிக்கையில் உலகில் சுருங்கிவிட்டன.  பல நாடுகளில் அவை அழிந்துவிட்டன.

அவற்றைக் காத்து இன அழிவினைப் போக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழில் சிங்குதல் என்பது ஒரு வினைச்சொல்.  இது பழைய சொல்.  இது குறைந்துகொண்டு வருதல் என்னும் பொருளுடையதாகும்.  நல்ல வேளையாக இச்சொல் போன்றவை  இன்னும் நிகண்டுகளில் பாதுகாத்து  வைக்கப்பட்டுள்ளன

சிங்கு + அம் =  சிங்கம்

அப்படியென்றால் எண்ணிக்கையில் குறைந்துவரும் விலங்கு.

பிற விலங்குகளை அரித்து அழிக்கும் விலங்கு என்ற பொருளில் அது அரிமா எனப்பட்டது.  அதாவது பிற விலங்குகளை வேட்டையாடி அழிக்கும் திறம் கொண்ட விலங்கு என்று பொருள்.  அரி என்பது ஒலியையும் குறிக்கும்.  அரற்று என்ற சொல்லில் வரும் அர் என்ற அடிச்சொல்லிலிருந்தே  அரி என்பதையும்   அர்+ இ  என்று விளக்கலாம்.   கர்ச்சனை செய்யும் விலங்கு என்று பொருள்.  கர்ர் என்பது ஒலிக்குறிப்பு.  கர்> கர்ச்சி > கர்ச்சித்தல்.  இது கர்ஜித்தல் என்றும் உருப்பெறும்.  அர்ர் > கர்ர் ஒலிக்குறிப்புகள்.

மனிதரிலிருந்து விலக்கித் தனியாக வைக்கப்பட்டவை விலங்கு,   வில > விலகு;  வில > விலங்கு.  விலக்கு என்பது விலங்கு என்று மெலித்துச் சொல் அமைந்தது,

மக என்பது பிறப்பைக் குறிக்கும்.  எடுத்துக்காட்டு:  மகப்பேறு.   மகன், மகள் , மக்கள் என்பனவும் மாக்கள் என்பதும் காண்க.  மக என்பது ம்ருக என்று அயலில் திரிந்து மிருக என்ற சொல் அமைந்தது, குறிலையடுத்து ஒரு ககரம் வர இடையில் ஒரு ருகரம் தோன்றுவது அயல்திரிபு.

மக >  மிருக > மிருகம்.   பிறப்பு உடையது என்று பொருள்.

மனிதரல்லாத பிற அணியிலுள்ளவை  பிற அணி -  பிறாணி -  பிராணி ஆயின. இங்கு பிற என்பது  மற்ற என்றும் பிறப்பது என்றும் இருபொருளும் தரும் இருபிறப்பிச் சொல் ஆகும்.  பிராணி உயிருள்ளதாகையினால் பிராணன் என்ற சொல் அமைந்து உயிரைக் குறித்தது. பல சொற்களில் றகரம் ரகரமாகிச் சொல் அமைந்திருத்தல் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது அறிக.

விலகு > விலங்கு என்பதும் பிற அணி > பிராணி என்பதும் மனிதரிலிருந்து வேறுபட்டவை என்ற பொதுக்கருத்தினடிப்படையில் ஏற்பட்ட சொற்களே.

பிறப்புடையது,  வேறானது என்ற கருத்துகள் எளிய கருத்துகளே ஆம்.

கருத்துகள் இல்லை: