செவ்வாய், 6 நவம்பர், 2018

வில் என்னும் அடிச்சொல்.

ஒன்றிலிருந்து இன்னொன்று அகன்று செல்வதையே "விலகு" என்னும் தமிழ்ச்சொல் குறிக்கிறது.

இதில் கு என்பது ஒரு வினையாக்க விகுதி.  இதைத் தெரிந்துகொள்வதற்கு ஒரு வாய்த்தி அதைச் சொல்லித்தர வேண்டும்.  அதாவது வாய்ப்பாடமாகச் சொல்லிக்கொடுப்போனே வாய்த்தி.  அது பின் தன் யகர ஒற்றினை இழந்து வாத்தி ஆகி, பணிவு கருதி வாத்தியார் ஆயிற்று.   உப அத்தியாயி என்ற சொல் உபாத்தியாய என்றானது வேறு. குழப்படி பண்ணாமல் கு என்ற விகுதியை அறிவோம்.

விலகு என்பதில் வில்+ அ + கு என்று மூன்று துண்டுகள் உள்ளன.  கு என்பது சேர்விடம் குறிக்கும்.   கோலாலம்பூருக்கு,  அமெரிக்காவிற்கு என்று நாம் போமிடம் குறிப்பது.   வேற்றுமை உருபு ஆனாலும் அங்குமட்டும்தான் வருமென்று தடையேதும் இல்லை.  ஆகையினால் சொல்லாக்கத்திலும் பயன்பட்டு அது மொழியை வளர்த்துள்ளது.

பழ -   பழகு
உரு  -  உருகு
பெரு - பெருகு.
இள -  இளகு

என்பவை போதும்.

இடைநிலையாக நிற்பது   அ என்ற சுட்டுச்சொல் ஆகும்.  ஒரே எழுத்து,   அதற்குப் பொருளிருக்குமானால் அது ஒரு சொல்லுமாகும்.  இங்கு இடையுற்று  முழுச்சொல்லை ஆக்குவதனால் சொல்லிடைநிலை.   இந்த அகரம் சுட்டுச்சொல் ஆதலால் இதற்கு அங்கு என்று பொருள். இடத்தைக் காட்டுகிறது.

ஓர் இடக்குறியினின்று அங்கு சென்று சேர்வது  "  விலகு"  என்ற சொல்லால்
குறிக்கப்பெறுகிறது. அங்கு என்பது எவ்விடத்துப் போகுமோ அவ்விடம், அது ஒரு விரற்கடையாகவும் இருக்கலாம்.  நூற்றுக்கணக்கான கல் தொலைவாகவுமிருக்கக்கூடும்.

விலகு என்பது வேறிடம் மாறிச்செல்வது ஆகும்.

இதை அறிந்துகொள்ளுங்கள்.  தொடர்வோம்.


பார்க்கவும்:
29.6.18 விற்றலும் வாங்குதலும்.:https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_67.html

கருத்துகள் இல்லை: