செவ்வாய், 13 நவம்பர், 2018

அப்பாவும் கப்பாவும் அருமன் > வருமா, வர்மா

ஒரு நல்ல நண்பரின் இனிய பெயர் முருகப்பா.  இவர் பெயரை நினைக்கும்போதெல்லாம் என் அப்பன் முருகனை நினைத்துக்கொள்வேன்.

அப்பன் முருகனே  முருகு+ அப்பன்.   இரண்டு சொற்கள் கூடிய பெயர் என்பது உங்களுக்குத் தெரியும்.   இவற்றுள்  முருகு என்றால் அழகு;  அப்பன் என்பது தெரிந்த சொல்லே.

அப்பனை அழைக்கும் போது அது அப்பா ஆகிறது.  அப்பா என்பது விளி வடிவம்.   இச்சொல்  அத்தன் ( அத்தா) என்றும்  அச்சன் ( அச்சா) என்று வேறுவடிவங்கள் உள்ள சொல் ஆகும்.  விளி வடிவம் என்றால் அழைக்கும்போது ஒரு சொல் ஏற்கும் அல்லது அடையும் வடிவமாற்றம் ஆகும்.

விளிவடிவத்தையே தன் பெயராகக் கொண்டவர் அந்த நண்பர்.  இப்படி விளியே எழுவாய் நிலையில் நிற்பதும் அப்புறம் உருபு ஏற்பதும் இலக்கண நூல்களில் விரிக்கப்படவில்லை என்றாலும், அது உலக வழக்கில் உள்ளது.

படித்த இலக்கணத்தைக் கொண்டு படிக்காதவற்றையும் அறிந்து இன்புறுவோனே அறிவாளி.  இதை என் வாத்தி (வாய்த்தி :  வாய்ப்பாடம் சொல்வோன்)  சொல்லிக்கொடுக்கவில்லை என்றோ  என் பாடபுத்தகத்தில் இல்லை என்றோ சொல்வது கல்விக்கும் கேள்விக்கும் நேர்ந்த ஒரு கொடுமையே ஆகும்.

உலக வழக்கில் விளிவடிவமும் உருபு ஏற்கும்.  எடுத்துக்காட்டு:

"முருகப்பாவைக் கடையில் பார்த்தேன். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன்."

பெயர் முருகப்பன் அன்று.  முருகப்பாதான்.  அச்சொல்லே உருபு ஏற்று மாற்றம் அடைந்தது.

ஆகவே முருகப்பா என்பது விளிவடிவத்திலிருந்தாலும்,  எழுவாய் வடிவம்போல் உருபு ஏற்றது.  முருகப்பாவை என்பதில் ஐ வேற்றுமை உருபு ஆகும்.

முருகப்பாவை :  இது செயப்படுபொருளாகிறது.

சில மொழிகளில் சொல் வடிவம் மாறுவதில்லை.  உருபுகளும் இல்லை.

முருகப்பா என்ற பெயர் ஆங்கில எழுத்துக்களால் எழுதப்பெறின் நீண்டுவிடுகிறது.  இதனை பிறமொழிக்காரர்கள் சுருக்கியே அழைப்பர். நண்பர் முருகப்பாவை அவர்கள் "மிஸ்டர் கப்பா"  என்று அழைத்ததுமட்டுமின்றி பெயர் அருமையான பெயர் என்றும் பேசிக்கொண்டனர்.  நாமும் ஒப்புவோம்.
கப்பா என்பது நல்ல பெயர்தான்.

இவர் பெயர் நல்ல வேளையாக வேங்கடப்பா  என்று இல்லை. இருந்திருப்பின் கடப்பா என்றோ டப்பா என்றோ இவர்பெயர் உருமாறியிருக்கும்.

ஆனால் பெரியசாமி மிஸ்டர் பெரி என்று விளிபெறும் போது மிக்க நன்றாகவே இருக்கிறது.

இப்போது முருகப்பா மீதில் ஒரு வெண்பா பாடுவோம்.

நல்லமுரு  கப்பாவே  நாளைக்கு நீவாவா
வெல்லமிட்டு நான் தரு வேன் தேனீரை ----- நில்லாதே
சம்பளம் இன்றில்லை சாற்றிவிட்டார் நம்காணி
கொம்புமடித் துக்கொண்டு போ.

காணி:  கங்காணி என்பதன் முதற்குறை. ( "சுப்பர்வைசர்")

எனது இந்த வெண்பாவில்  முரு என்பது முதற்சீரிலும்  கப்பாவே என்பது இரண்டாம் சீரிலும் வந்துவிட்டது.  பிரிந்து நிற்கின்றன இத்துண்டுகள்.
பாடல்களில் நாமும் இப்படி பிரித்துப்  பாடுவதுண்டு என்றாலும்  பாடும்போது அது முருகப்பா என்ற ஒரு பெயர் என்று நினைவில் இருத்திக்கொண்டு அதற்குப் பங்கமின்றிப் பாடுவோம்,

குருவிக்காரி  வண்டிக்காரன் என்ற சொற்களில் காரன் என்பது பிறழ்பிரிப்பில் வந்த சொல்.  இது உண்மையில்  குருவிக்கு + ஆர் + அன், என்பதுதான்.  ஆர்தல் என்பது  உரிமை என்று அல்லது உடைமை என்றும் பொருள்தரும்,  இந்தக் காரன் காரி வேற்று மொழிகளிலும் பரவிய சொல் ஆகும்.   ஆர் = அவர் என்றும் அமைதற்குரியது.   எடுத்துக்காட்டு:  கண்டார் =  கண்டவர்.

ஆர்தல்:  பல்பொருளொரு சொல்.

அருமை + மன்னன் =   அரு + மன்  =  அர்மன்.
நந்தி + அருமன் =  நந்திவருமன் =  நந்தி வர்மன் =  நந்தி வர்மா.

தி + அ =  திவ  ( நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் )

அருமை மன்னன் என்பதில்  மை பண்புப்பெயர் விகுதி.   அன் என்பது  ஆண்பால்.

பிறழ்பிரிப்பால் வர்மா போதரும் என்பது உணர்க.

அருமன் என்ற சொல் மறைந்தது,  ஆனால் அருமை, மன்னன் என்ற சொற்களின் இணைப்பில் அது மீண்டும் வெளிப்படுவதாகும்,

கருத்துகள் இல்லை: