புதன், 21 நவம்பர், 2018

காலம் மற்றும் தொடர்புடைய சொற்கள்.

காலம் என்ற சொல்லை இன்று அறிவோம்.

உடலினின்றும் வெளிப்பட்டு  கீழாக நீண்டு நாம் தரையில் நிற்க உதவுவது நம் கால்கள்.  இதன் அடிப்படைக் கருத்து நீட்சியே என்பதைக் கால்வாய், வாய்க்கால், பந்தல் கால்  என்றுவரும் சொல்லாட்சிகளால் நாமுணரலாம். காலத்தை உருவகம் செய்யுங்கால் காலன் என்பது மரபு. மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டவன் -  பட்டது,  காலம் ஆதலின் காலத்தைக் "காலதேவன்" என்றும் கூறுவதுண்டு.

நாம் வாழும் இப்பூவுலகு வானில் தொங்கிக்கொண்டிருப்பதாகப் பண்டையாசிரியன்மார் சிலர் உணர்ந்தனர். நிலவு, சில கோள்கள் முதலியன வானிலிருத்தலைப் போலவே இப்பூவுலகும் இருப்பதாக எண்ணியே அவர்கள் அவ்வாறு முடிவுக்கு வந்தனர்.  இவர்கள் அமைத்த சொல் "ஞாலம்" என்பது.  இச்சொல்லில் உள்ள "ஞால்" என்பது தொங்குதலைக் குறித்தது. இஃது பழந்தமிழ்ச் சொல் என்பதை நோக்க, பண்டைக் காலத்திலே அவர்கள் அறிவியற் கருத்துகளில் முன்னோடிகள் என்று துணிந்து கூறலாம். இச்சொல் அம் விகுதி பெற்று அழகாய் அமைந்துள்ளது.

ஒப்பிடுங்கால்:

ஞால் -  ஞாலம்;
கால் -  காலம்

என்று ஓரமைப்பில் வருகின்றன இரு சொற்களும்.

இதனோடு கூலம் என்ற சொல்லையும் சேர்த்து நோக்கலாம்.  குல் என்ற அடிச்சொல்லில் விளைந்தது கூலம் என்ற சொல். குல்: குலை; குல் : குலம் முதலியன சேர்ந்திருத்தல், சேர்த்துவைத்தல் முதலிய கருத்துகளை உள்ளடக்கிய சொற்கள்.  கூலம் என்பதும் குல்+அம் = கூலம் என்று அமைந்து தானியங்களைக் குறித்தது. (முதனிலை நீண்டு விகுதி பெற்ற சொல் ).  தான் விளைத்துத் தனக்குரியதாய் விவசாயி கருதியதால் கூலம் என்பது தானியம் (  தான்+ இ + அம்)  என்றும் அமைவுற்றது.  தானி =  தனக்குரியது;  தானி+ அம் = தானியம். வரிக்கு ஒரு பகுதியைச் செலுத்தியபின் மிச்சமெல்லாம் குடியானவனுக்   குரியதே ஆகும். தனக்கு உரியதென்று அவன் வைத்துக்கொள்ளும் விளைச்சல் பகுதி தானியம்.  இதில் "ய்" (ய் + அ) --  யகர உடம்படு மெய்.

இப்போது ஆட்டோ என்னும் வண்டி "தானி" எனப்படுகிறது.  தானே இயங்குவது என்று பொருள்.  ஆட்டோ என்பதற்கும் அதுவே பொருள்.

ஒவ்வொருவரும் ஒரு விலையை ஏற்பு விலையாகக் கூறி, பொருள் கைமாறுவது ஏலம் என்னும் ஒருவகை விற்பனையிலாகும்,  ஏற்புறும் விலை என்னும் பொருள் இந்நடவடிக்கை :  " ஏல் + அம் = ஏலம்" எனப்பட்டது.  வானத்தின் நிற்கும் நிறம் = நிலையான நிறம் என்னும் பொருளில் நீலம் என்ற சொல்லும் முதனிலை திரிந்தே அமைந்தது காண்க.

ஆதலின் காலம் என்ற சொல் அதன் ஓசைகாரணமாக தமிழன்று என்பது ஒரு பிறழ்வுணர்ச்சி என்பதை அறிந்துகொள்ளலாம்.

சூரியன் தோற்றம் தொடங்கி ஏற்படும் பொழுதினைக் காலை என்று சொல்வோம்.  இதுவும்  நீண்ட நேரம் என்னும் பொருளுடையதேயாம்.

கால் > காலை.

நீட்சியான கால அளவையே காலம் என்று சொல்கிறோம். குறுங்காலத்தை "நேரம்" என்றே  குறிப்போம். ஏதேனும் ஒன்று நேரும் பொழுது   ( குறும் காலம்) அது நேரமாகும்; நீண்டு செல்லும் பொழுது காலமாகும். காலும் வாய்க்காலும் நீண்டனபோல.

சால அமைந்து மக்களைப் பெருமிக்க வைப்பது:  சாலம்  ஆகும். பின் அச்சொல் ஜாலம் என்று மெருகூட்டப்பட்டது. சாலவும் வியக்கத்தக்க நிகழ்வு ஜாலம்.
இதன் வினையடி சாலுதல் என்பதே. அடிப்படைக் கருத்து நிறைவு என்பதாகும்.

காலம் என்ற சொல் தொடர்பில் அதற்கு எதுகையாய் ஒலிப்பனவும் கவனத்தில் கொள்ளப்பட்டன. அறிந்து மகிழ்க.

கருத்துகள் இல்லை: